திராவிடர் நாடுகளில் 1750-1800 காலகட்டத்தில் தமிழகத்தின் பூலித்தேவன், ஒண்டிவீரனில் ஆரம்பித்து மருது சகோதரர்கள் உள்ளிட்ட பாளையக்காரர்கள், கேரளாவின் பழசி அரசர், கருநாடகத்தின் திப்பு சுல்தான், மராத்தியத்தின் தூந்தாஜிவாக் எழுச்சி முறியடிக்கப்பட்டு பின்னர் வேலூர் கலகமும் அழிக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின் வடகிழக்கு பகுதியான தற்போதைய வங்காளதேசத்தில் சவுகார் பழங்குடிகள் போராட்டம், சக்மா பழங்குடிகள் போராட்டம், சட்ட்டீஸ்கர்-மராத்தியத்தின் ஹல்பா பழங்குடிகள் போராட்டம், ஜார்க்கண்டின் திராவிட பழங்குடிகளான பகாரியா போரட்டம் சோட்டா நாக்பூரில் வெடித்தது. தில்கா மாஜ்ஹி எனும் மராத்தியத்தின் பழங்குடி புரட்சியாளன் 1778-இல் கிளர்ந்து போராடினார். தாமர் எனும் பழங்குடிகள் சோட்டா நாக்பூரில் போராடினார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் மீண்டும் போராட்டத்தினை துவக்கியவர்கள்.

tribes at freedom struggleஇதற்கு பின் 50 ஆண்டு காலம் கழித்து வட இந்தியாவில் சிப்பாய் கலகம் எற்பட்டது. ஆனால் அதை விட முக்கியமாக இந்திய துணைக்கண்டம் முழுவதும் எழுந்த பழங்குடி, இசுலாமிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் புரட்சி வெள்ளையர்களுக்கு எதிராக வெடித்தது. கேரளாவின் வயநாட்டில் குரிச்சியார், குரும்பர் போராட்டம், ஜார்க்கண்ட் பகுதியில் கோல் மக்களின் எழுச்சி எழுந்தது. வங்கத்தில் பூம்ஜி பழங்குடி புரட்சியை கங்கா நாராயண்சிங் நடத்தினார்.

இவர்களைப் போன்றே அந்தமானின் பழங்குடிகள் கூட ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்தினர். ஆபர்தீன் போர் எனப்படும் அந்தமான் பூர்வக்குடிகள் ஆங்கிலேயர் மீது தாக்குதல் நடத்தினர். மிசோ பழங்குடிகள் 186 ஆங்கிலேயரை 1860-ல் தாக்கிக் கொன்றனர். இதே வருடத்தில் மேகாலயாவின் செய்ந்தெங் பழங்குடிகள் கிளர்ந்தனர். கோதாவரியின், கோயா பழங்குடி, ஜார்க்கண்டின் சந்தால் பழங்குடி, 1879-ல் நாகா பழங்குடிகள், இவர்களோடு வெளியுலகோடு தொடர்பற்று இன்றும் வாழ்ந்து வரும் அந்தமான் நிகோபாரின் சென்டினல் பழங்குடிகள் ஆங்கிலேயரைத் தாக்கினர்.

தெற்கில், ஆந்திராவின் குடேம்-ரம்பாவில் 1879-80-களில் பழங்குடிகள் கிளர்ச்சி செய்தார்கள், இதற்கு முன்னதாக ரம்பா, மாப்பிளா, வஹாபி கிளர்ச்சிகள் நடந்தன. வங்கத்தில் அவுரிக் கிளர்ச்சியில் லட்சக்கணக்கான வங்காளிகள் பங்கெடுத்தனர். பஞ்சாபில் நாமதாரிகள் எனும் சீக்கியப் பிரிவு சண்டையிட்டது, பட்கே எனும் போராளி ஒரு கொரில்லா போரை இக்காலத்தில் நடத்தினார், வடகிழக்கில் மேகாலயாவில் ஜெயிண்டியாக்கள் எனும் பழங்குடிகள், கெரோக்கள், மிசோக்கள் ஆகியோர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டனர். அசாமில் நவ்கோங் (நகோன்), காம்ரூப், தரங் ஆகிய பகுதிகளில் போராடினர். ஒரிசாவின் கியோஞ்சர் பழங்குடிகள் உட்பட சட்டீஸ்கர் ஆகிய பிராந்தியத்தின் பூர்வகுடிகளும் ஆங்கிலேயருக்கு எதிராக களம் கண்டனர். இந்த நூற்றாண்டின் இறுதியில் பிர்சா முண்டாவின் தலைமையில் முண்டா பழங்குடிகள் புரட்சி செய்தனர். இக்கிளர்ச்சிகள் 1942 வரை தொடர்ந்திருக்கிறது. ஆங்கில ஏகாதிபத்திய சுரண்டலுக்கு இடையே மார்வாடிகளும் எளிய மக்களைச் சுரண்டினார்கள். 1875-ல் மராத்தியத்தில் மார்வாடி வட்டிக்காரர்களுக்கு எதிரான எழுச்சி விவசாயிகளிடத்தில் ஏற்பட்டது.

இம்மக்களின் எழுச்சியும், ஈகமும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக வெடித்தது. இதே போன்று முகலாயரின் இறுதி அரசரின் தலைமையில் பெரும் போரை ஆங்கிலேயர் 1857-58-ல் எதிர்கொண்டனர். ஆவாத் அரசின் தலைமையேற்று பேகம் ஹஷ்ரத் மகால் நடத்திய பெரும்போர் இன்றய உத்திரப்பிரதேசத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வு. கோவை நகரில் நடந்த போரில் கொல்லப்பட்ட 36 இசுலாமியர் உட்பட 42 புரட்சியாளர்களைப் போல இந்திய துணைக்கண்டமெங்கும் சாமானிய மக்களின் எழுச்சிகள் அடக்கப்பட்டன.

இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு இப்போராளிகளின் இரத்தித்திலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். காலனிய இந்தியாவின் ஆட்சியில் ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்துமத சீர்திருத்தங்கள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதில் முக்கியமானதாக 1829-ல் கொண்டுவரப்பட்ட ‘உடன்கட்டை ஏறும் பழக்கத்தைஇ ஒழித்தல் சட்டம், மற்றும் சாதி இயலாமை நீக்கம் சட்டம் எனும் சாதி, மதம் மாறுதலால் மறுக்கப்படும் உரிமைகளை நிலைநிறுத்தும் சட்டம், மேலும் உடலுறவு கொள்ள பெண்ணின் வயது வரம்பு என்பதை 10 வயதிலிருந்து 12 ஆக மாற்றிய ‘ஒப்புதல் சட்டம் 1891’ ஆகிய சட்டங்கள் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்தன. பாலகங்காதர திலகர் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

இதே போன்று இதர சீர்திருத்தச் சட்டங்களால் கோபம் கொண்ட சனதானிகள், ஆங்கிலேயரால் இந்து சமூகப் பாரம்பரியம் அழிவதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு 19ம் நூற்றாண்டின் இறுதியில் பார்ப்பனிய-பனியா சனாதனிகளின் திரட்சியாக ஆங்கிலேயருக்கு எதிராக எழுந்தது. இவர்கள் இந்திய துணைக்கண்டத்தின் விடுதலையை கோரவில்லை, மாறாக ஆங்கிலேயருடன் சமரசமான உறவுகளின் மூலமாக தங்களது சனாதனத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும், ஆங்கில ஆட்சிகளில் பங்குபெறவும் முயன்றனர். கோபாலகிருஸ்ண கோகலேவிற்கு ‘ காலனியத்தின் கீழ் தன்னாட்சியை அடைவது தான் இலக்காக இருந்தது. தாதாபாய் நவ்ரோஜி காங்கிரஸின் 1906-ம் ஆண்டு கூட்டத்தில்’ பிரிட்டன் கொடியின் கீழ் வந்த உடனே நாம் இங்கிலாந்தில் பிறந்து வாழ்ந்தவர்கள் போலவே ஆகிறோம் என்றார். வல்லபாய் படேலும் ‘பிரிட்டனுடன் இந்தியாவின் தொடர்பு இறை ஏற்பாட்டின் விளைவு’ என்றார்.

அரசியல் ஆளுமைகளின் நம்பிக்கைகள் இவ்வாறாக இருக்க, மார்வாடி பனியா முதலாளிகளில் முதன்மையானவரான ஜி.டி.பிர்லா, ’இந்தியர்கள் தம்மைத்தாமே ஆண்டுகொள்ள படிப்படியாக கற்றுக் கொள்ள வேண்டும்..’ என்றார். இந்தியாவின்பனியா மார்வாடி முதலாளிகள், பண்ணையார்கள், அரசர்கள், இளவரசர்கள், படித்த மேட்டுக்குடி அறிவுசீவிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்துடன் நெருக்கமான தொடர்புகளின் மூலமாக தமது நலன்களை பாதுகாக்க முயன்றதையே இவர்களது வார்த்தைகள் சொல்லுகின்றன. குவாலியர், பரோடா அரசர்களின் மூலதனத்தைக் கொண்டு டாடா குழுமம் இரும்பு உருக்காலை, வேதி தொழிற்சாலைகள், நீர்மின் திட்டங்களைக் கொண்டு வந்தார். இவ்வகையில் டாடா, பிர்லா, கொயாங்கா (இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமத்தின் முதலாளி), லால்பாய் (அரவிந்த் பிராண்ட்ஸ் முதலாளி), சிங்கானியா (ரேய்மெண்ட் துணி, ஜே.கே டயர் முதலாளி), வாடியாக்கள் (பாம்பே டையிங், கோ-ஏர் விமானம், பிரிட்டானியா பிஸ்கட்ஸ்), பஜாஜ் (பஜாஜ் மோட்டார்கள்) போன்ற மார்வாடி வட இந்திய தரகர்கள் ஆங்கிலேய அரசுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டார்கள்.

கல்கத்தாவில் மார்வாடிகள் யூக சந்தை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். இதனால் வளர்ந்தவர்களாக ஜமன்லால் பஜாஜ், சுராஜ்முல் நகர்முல், கோசேராம் போன்ற இன்றளவும் இத்தேசம் அறிந்த பெரும் வணிகர்கள். இந்த சந்தை சூதாட்டத்தின் மூலாக பெரும் பொருளை ஈட்டிக் கொண்ட இப்பெருமுதலாளிகளே இன்றைய இந்தியாவின் பெரும் நிறுவனங்களின் முதலாளிகள். இவர்களுக்கும் இந்தியாவின் முன்னனி காங்கிரஸ், இந்துத்துவ அமைப்புகளுக்குமான நெருக்கம் இன்றளவும் தொடர்கிறது. ஆங்கிலேயரின் சீர்திருத்தச் சட்டங்களை கண்டுகொந்தளித்த சனாதனக்கூட்டமும், ஆங்கிலேயருடன் கூட்டணி வைத்து பெரும்பொருளை ஈட்டிய மார்வாடி கூட்டமும் இணையவும், பிணையவும் காங்கிரஸ் தலைமை பயன்படுத்தப்பட்டது.

1920-களுக்கு பின்னர் இந்துமத வெறி அமைப்புகள் துவங்கப்பட்ட பின்னர் இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ் ஆகிய தளங்கள் மிகத்தீவிரமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை தடம்புரளச் செய்யும் சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பித்தனர். சமரசமற்ற போராட்டங்களை நடத்திய போராளிகளுக்கு எதிராக ஆங்கிலேயருடன் கைகோர்த்தனர். சனாதன ஆற்றல்கள் சாமானிய மக்கள் மீது ஆங்கில அரசு ஏவிய சட்டங்களைக்கூட ரத்து செய்ய மறுத்தனர் என்பதை தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தினை தடுக்கும் முடிவை கைவிட்டார் இராஜாஜி. முத்துராமலிங்கத் தேவருக்கு அளித்த வாக்குறுதியை கைவிட்டதாக அவர் குற்றம்சாட்டி காங்கிரஸில் இருந்து வெளியேறினார். இதே போல சுபாஸ் சந்திரபோஸும் காங்கிரஸிலிருந்து சூழ்ச்சிகரமாக வெளியேற்றப்பட்டார். அவர் பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் திரட்டிய படைக்கு எதிராக இந்துமகா சபை ஆங்கிலேயருக்காக படைதிரட்ட ஆரம்பித்தது. இப்பணியை முன்னின்று நடத்தியவர் சாவர்க்கர். இவரால் திரட்டப் படையைக் கொண்டே சுபாஸ் சந்திரபோசின் படையை ஆங்கிலேயர் தடுத்து நிறுத்தினர். இதே சமயம் பஞ்சத்தில் பல கோடி பேர் பலியான வங்கம், அஸ்ஸாமில் ஆர்.எஸ்.எஸ். ஆங்கில அரசிற்காக போர் வரியை வசூலித்தது. இப்படியாக ஆங்கிலேய அரசுடன் கைகோர்த்து செயல்பட்ட பார்ப்பன-பனியா கும்பல், இந்திய துணைக்கண்டத்தின் விடுதலைக்காக போராடிய பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இசுலாமிய மக்களை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க விடாமல் தடுத்தது.

இதுமட்டுமல்லாமல் இவர்கள் மீதான சுரண்டலை இன்றளவும் ஏகாதிபத்தியங்களுடன் கைகோர்த்து நடத்துகிறது. இந்திய சுதந்திரத்தின் போராட்டத்தின் வரலாறை இந்தியாவின் பார்ப்பனர்-பனியாக்கள் தமதாக்கிக் கொண்டு வரலாறை எழுதிக் கொண்டனர். இந்தியாவின் 75-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை குறிக்கும் நிகழ்வில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை நடத்திய போராளிகள், புரட்சியாளர்கள் பெயர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, சுபாஸ் சந்திரபோஸுக்கு துரோகமிழைத்த சாவர்க்கர் முன்னிலைப் படுத்தப்படுகிறார். இதன் அடிப்படைக் காரணமாக இருப்பது, இந்திய போராட்ட வரலாறு என்பது ஆங்கிலேயரின் இந்துமத சனாதனத்திற்குஎதிரான நடவடிக்கைகளுக்கு எதிரானதே இந்தியாவின் விடுதலைப் போர் என சித்தரிக்க இந்துத்துவ அமைப்புகள் எழுத விரும்புகின்றன. எளிய மக்களின் வீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை மறைத்து பார்ப்பனர்கள் கட்டி எழுப்பிய சனாதன பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்திய விடுதலைப் போராக எழுத நினைக்கும் பாசிச பார்ப்பன-மார்வாடி கும்பலின் சதிகளை முறியடிப்பதே தமிழ்நாட்டில் போரிட்டு மடிந்த பாளையக்காரர்கள் முதல் 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கொல்லப்பட்ட போராளிகள் வரையிலான வரலாறுக்கு நாம் செய்யும் மரியாதை.

- மே பதினேழு இயக்கம்

Pin It