மறைக்கப்பட்ட உண்மைகள்:-

மெளலானா முகமது அலி மற்றும் சவுகத் அலி ஆகியோர்களின் தியாகத்தை மறைத்துவிட்டு இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. இறுதியாக 1915இல் இந்தியா திரும்பிய காந்தி, இந்திய தேசிய இயக்கத்தில் தம்மை முழுமையாக பங்கேற்று வழி நடத்திச் சென்றார். அதற்கு பொருத்தமான காரணம் வேண்டுமல்லவா? இங்கிலாந்தில் சட்டம் பயின்று 1891இல் இந்தியா திரும்பியவர் மீண்டும் 1893இல் தென் ஆப்ரிக்கா சென்று அங்கு நிலவிய இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதும் ஒரு காரணமாக வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

gandhi 400எனவே 1917 முதல் 47 வரையிலான இந்த காலக்கட்டத்தில் காந்தி தேசிய இயக்கத்தின் தன்னிகரற்ற மற்றும் ஏகபோக தனியுரிமை பெற்ற (Monopoly) தலைவராக விளங்கினார். இந்திய துணைக்கண்டத்தின் காலங்கள் அவசியத்தினாலோ அல்லது அவசரத்தினாலோ காந்தியின் பெயரால் மட்டுமே எழுதப்படுகின்றன. என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்தியே பலமுறை குறிப்பிட்டதுண்டு ஆதலால் மெளலானா முகமது அலி மற்றும் சவுகத் அலி சகோதரர்களை தவிர்த்துவிட்டு வெறும் காந்தியின் கதைகளை எழுதுவது நேர்மையாகாது.

1917-ஆம் ஆண்டு சர் சிட்னி ரௌலட் என்பவரது தலைமையில் அரசுக்கு எதிரான சதி வேலைகளை செய்பவர்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு அது அளித்த அறிக்கையின் விளைவாக மார்ச் 1919 ஆம் ஆண்டு கருப்பு சட்டம் என்று அனைவராலும் கருதப்பட்ட அதாவது சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யலாம். இத்தகைய கைதுகளை எதிர்த்து விண்ணப்பமோ அல்லது மேல்முறையிடோ செய்ய முடியாது என்கிற "ரௌலட் சட்டம்" மத்திய சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏப்ரல் 1919 முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. டெல்லியில் காந்தியும் டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிச்லு எனும் பஞ்சாபின் முக்கிய தலைவர்கள் பஞ்சாபிலும் கைது செய்யப்பட்டனர்.

நடந்த நிகழ்வு மற்றும் நடக்கப்போகும் எதிர்கால சம்பவங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவும் தனித்து பிரிக்கமுடியாதவைகளாவும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு நன்மையும் உள்ளது. அதாவது கடந்த கால அனுபவங்களிலிருந்து நிகழ்காலத்தை சிறப்பாக்கமுடியும் அதையே இன்னும் எதிர்கால வரலாற்றில் மெருகேற்றிவிடவும் முடியும் எனில், நமக்குத்தேவை நாம் நம்முடைய சந்ததிக்கு சேர்த்துவைக்கும் உண்மை வரலாறு மட்டுமே.

முதலாளித்துவ நிலஉடமையின் மிச்சங்களிலிருந்தும், ஏகாதிபத்திய காலனியாதிக்க நாடுகளின் அடாவடிப்போக்கிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள எந்த வடிவிலும் மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சோசலிச குமுகாயத்தை உருவாக்குவதுமாகும். அதற்காக நமது சமுதாயத்தின் எதிர் காலத்திற்கான பாதையை வகுக்கவும் கடந்த காலத்தின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்களிலிருந்து பாடங்களை இன்றைய அரசியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் இன்னபிற அமைப்புகள் என எதுவாயினும் அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த வகையான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத நவீன சனநாயக குடியரசை நிறுவ வேண்டுமென முடிவெடுத்ததன் விளைவாக; ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை மறு பங்கீடு செய்வதற்காக, உலகப் போரில் பிரிட்டன் மூழ்கி இருக்கும் அந்தத் தருணத்தை ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பாக கெதர் போராளிகள் கண்டனர். இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய காலனிய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் 1915 எழுச்சி, மிகவும் புரட்சிகர அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது என்றால் மிகையல்ல.

1914இல் அமெரிக்கா, கனடா மற்றும் உலகின் மற்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கெதர் போராளிகள் இந்தியாவுக்கு வந்து அவர்கள் பல கொடுமைகளை சந்தித்தபோதிலும்; கொடுமைகளைக் கண்டு அஞ்சி கெதர் போராளிகள் பின்வாங்கவில்லை. மாறாக ஆசாத் இந்துஸ்தான் அதாவது சுதந்திர இந்தியாவை ஆப்கானிஸ்தானில் அவர்கள் அமைத்தனர். எந்த வகையான சுரண்டலும் இல்லாத புதிய இந்தியாவை உருவாக்கும் கனவிலேயே வாழ்ந்த கெதர் போராளிகள் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலையை முன்னெடுக்க தொடர் போராட்டங்களை அவர்கள் முயற்சித்தனர்.

அதே நேரத்தில் 1920இல் உருவான துருக்கி செவெரஸ் உடன்படிக்கையும் பிரிட்டன் துருக்கியை நடத்திய விதமும் உலக மற்றும் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது மற்றுமின்றி அது அவமானப்படுத்துவதாகவே இருந்தது. 1919 அக்டோபர் 19ஆம் நாள் இந்தியாவில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ. அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினர். இதைக்கண்ட நமது காந்தி நிலைமையைப் புரிந்துகொண்டு நவம்பர் 23ஆம் நாள் தமது தலைமையில்; இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாடு கூடியது. அதில் நாட்டின் விடுதலை ஒற்றுமைக்காக இந்து முஸ்லீம் ஒன்றாக பாடுபட ஏதுவாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இவ்வாறாக உருவான கிலாபத் இயக்கம் 1920இல் ஒத்துழையாமை இயக்கமாக மறுபிறவி எடுத்து உருப்பெற்றது.

எப்பொழுதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஏவலாளிகளையே நம்பிக்கொண்டிருந்த காந்தி எந்தவிதமான ஒப்பந்த உடன்படிக்கையுமின்றி மற்றும் நிபந்தனையற்ற ஆதரவாக அதாவது இவராகவே கற்பனை செய்துகொண்டு இவர் தரப்போகும் உதவியால் பிரிட்டன் மனம் மகிழ்ந்து இந்தியாவிற்கு சுயாட்சி அந்தஸ்து கிடைத்துவிடும் என்று எண்ணியதன் விளைவாக; இந்தியர்களை அணி திரட்டி பிரிட்டிஷ் யுத்த நடவடிக்கைகளுக்கு அனுப்புவித்தார். இதனால் கொத்துக்கொத்தாக இறந்தவர்கள்தான் மிச்சம். அந்தஸ்தும் வரவில்லை அதிகாரமும் கிடைக்கவில்லை என்பதை நாடறியும்.

இவர் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை எனலாம் ஆனால் இவர் செய்த பிழையால் மதசார்பற்ற இந்திய நிலப்பரப்பின் சுயாட்சி சிந்தனைகளுக்கு இந்த இயக்கத்தினருடைய கொள்கைகள் மிகப்பெரிய சவாலாக அமைந்தத்துடன் இதனால் இந்து-முஸ்லீம் மதச்சண்டைகள் தலைதூக்கின. பிற்போக்கு கொள்கைகளையும், தேசிய சுதந்திரத்திற்கு எதிரான மனநிலையையும் கொண்டிருந்த கிலாபத் இயக்கம் தோல்வியை நோக்கி பயணிப்பதை அறிந்துகொண்ட காந்தி எவ்வளவு முயன்றும் இவரது தவறான பிழையால் கிலாபத் இயக்கத்திடம் இருந்து காந்திய மக்கள் இயக்கத்தை பிரித்தெடுத்து வெளிக்கொண்டு வர, பயங்கரமாக மதச் சண்டைகளை கட்டவிழ்த்தது கிலாபத் இயக்கம். இரு மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் காந்தியின் பிழைக்கு பலியாகின என்பது ஒரு தனி வரலாறு.

வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறைமுகமாக நிறைவேற்றுவதற்காக ஒப்புக்கொண்ட காரணத்திற்காக 1910களின் மத்தியில் இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு தொடங்கப்பட வெள்ளையர்களால் அனுமதிக்கப்படுகிறது. 1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்கள் மற்றும் அதை தொடர்ந்த மனம் குளிர்ந்த வெள்ளையர்களால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முஸ்லீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து.

அதே நேரத்தில் 30ஆம் தேதி அக்டோபர் 1920இல் லாலா லஜபதிராய் தலைமை தாங்க AITUC ( All India Trade Union Congress) பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சியின் வெற்றியும் - அங்கு அமைந்த தொழிலாளர் நல அரசும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 1921இல் அகமதாபாத்திலும், 1922இல் கயாவிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. தேயிலை தோட்ட நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை எதிர்த்துத் அசாமில் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தியதால் அங்குள்ள கூர்க்கா சிப்பாய்களால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அசாம் மற்றும் வங்காளத்தில் உள்ள ரெயில்வே தொழிலாளர்களும், துறைமுகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர் எனினும்; நம்முடைய காந்தி மட்டும் எவ்வளவு குருதியைக் கண்டாலும் எவ்வளவு நேர்மையான காரணங்களுக்காகப் போராடி மக்கள் தம்முடைய உயிரையே கொத்துக்கொத்தாகக் கொடுத்தாலும்; வன்முறை வேண்டாம் அகிம்சை முறையில் மட்டுமே போராட்டம் இருக்கவேண்டும் என்று சொல்வதிலிருந்து நாம் இவரைப்பற்றி எப்படி அல்லது என்ன புரிந்துகொள்ளவேண்டும் என்பதை தோழமைகளாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

காவல்துறையின் கடின தாக்குதல்களை பொருட்படுத்தாமல் மக்கள் அநீதிக்கு எதிரான இயல்பான ஆவேசத்தோடு கடுமையான போர் செய்தார்கள் ஆகையால்; இதை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சௌரி- சௌராவில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புக் குரலை ஆர்ப்பட்டங்கள் நடத்தித் தெரிவித்தார்கள். இதனால் கோபமடைந்த காவல் துறையினர் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தாக்குண்ட மக்கள் காலம் காலமாய் உறைந்து போன கோபத்தின் வெளிப்பாடாய் காவல் நிலையங்களுக்கு தீ வைத்ததுடன் 22 காவலர்களையும் கொன்றார்கள். இதனால் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது ஒருபுறமிருந்தாலும்; எந்த காங்கிரஸ் தலைவரும் பாதிக்கப்பட்ட சௌரி சௌரா மக்களுக்கு ஆதரவாக தங்கள் வாயைத் திறக்கவில்லை என்பதுதான் மாபெரும் அதிர்ச்சியே. இதனால் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து தன்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெறுகிறார் காந்தி.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலானவர்கள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, காவிப்பயங்கரவாதிகள் வெள்ளைக்காரராகளுடன் அவர்களது கொடையோடு மைதானத்தில் விளையாடிக்கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டுமிருந்தார்கள்!

அதே நேரத்தில் இங்கே இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடியில் என்ன நடந்தது? தெரிந்துகொள்ளவேண்டாமா? இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து என மொத்தமாக நான்கு பகுதிகளை உள்ளடக்கிய பிரித்தானியா என்று அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். பிரித்தானிய ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு அதாவது 1800களில் கிழக்கிந்திய கம்பெனிகளின் வருவாய் மற்றும் வர்த்தக வாரியங்கள் வலுபெறவேண்டியும் நிர்வாக வசதிகளுக்காகவும் அய்ரோப்பிய காலனிய ஆட்சியினால் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது.

உத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளில் செய்த அதாவது இந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குள் சண்டையையும் வன்முறைகளையும் உருவாக்கிய பிரித்தாளும் சூழ்ச்சியை இங்கே குறிப்பாக சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயே ஏகாதிபத்திய காலனியாதிக்க அரசுகளால் செய்ய இயலவில்லை காரணம் இங்கே பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதார் விகிதமே என்க. இதனால் இங்கே மாற்று முறையை தெரிவு செய்தது ஆங்கிலேயே அரசு. வட்டார வழக்கில் கைநாட்டுச் சட்டம், கைரேகைச் சட்டம் என அழைக்கப்பட்ட குற்றப்பரம்பரை எனும் சட்டத்தை 1911இல் ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட சாதிகளின் மேல் இந்தியா முழுமைக்கும் பாய்ச்சியது எனினும் பார்ப்பனர் அல்லாதோர் அதிக அளவில் இருக்கும் சென்னை மாகாணத்தில் மட்டும் 89 சாதிகள் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட ஏதுவாக இப்பட்டியலில் இருந்தன. அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாரி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

சில பழங்குடிகள்மீது மட்டும் இந்த குற்றவியல் பரம்பரைச் சட்டத்தை திணித்ததற்குக் காரணம், பல்வேறு சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு முதலியவற்றைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தை தமது ஆட்சி வளையத்திற்குள் கொண்டுவருவதற்காக செய்யப்பட்ட பல தந்திரங்களில் பிரிட்டிஷார் அதிர்ந்த விடயங்கள் என்பதற்கு சில இனக் குழுக்கள் தங்களது நலனுக்கு எதிரானவர்கள் என்பதுமட்டுமன்றி 1885இல் சந்தால் இன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வங்காளத்திலும், பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திலிருந்து இரண்டாண்டுகள் பின்வாங்கும் அளவுக்குப் போர்க்குணத்துடன் நடைபெற்றதை, திலீப் டிசௌசாவின் ‘குற்றமுத்திரை’ நூல்வழியே நமக்கு ஆதாரம். எனவே, தொடர்ச்சியான வலுவான ஆட்சியை நிலைநிறுத்தச் சில தொல்குடிகளைச் ‘சட்டம்& ஒழுங்கு’ என்னும் அதிகாரத்துக்குள் பிரிட்டிஷார் ஒடுக்கி வைத்தனர் எனலாம்.

நாம் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் மேலே சொல்லப்பட்ட சென்னை மாகாணத்தின் சாதிகள் அனைத்தும் ஒருவேளை கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்களேயானால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் இரண்டரை கோடிப் பேர் தினமும் சென்று அந்தந்த சாதிய தலைவர்களிடம் இருக்கும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் ஆதலால்; அப்படியேதும் நடக்கவில்லை. மாறாக இந்தச் சிக்கலை தவிர்க்கவும் அந்தந்தச் சாதிகளுக்குள்ளாகவே கலவரத்தைத் தூண்ட ஏதுவாகவும் ஒரு சில சாதிகளை தவிர்த்துவிட்டார்கள். அதாவது விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை. இந்தக் கொடூரச் சட்டத்தை 1911இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தொடரும்

Pin It