பாட்டாளி வர்க்கத்தின் அரசுகளை தவிர, அரசு என்பது அதன் அடிப்படை இலக்கணத்தின்படி ஒருபோதும் மக்கள் நல அரசாக இருக்க முடியாது. உலக முதலாளித்துவத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே எழும் முரண்பாடுகளின் நடுவில் நின்று கட்டப்பஞ்சாயத்து செய்யும் அமைப்பே அரசு என்று பாட்டாளி வர்க்க தத்துவம் சொல்கிறது. அது சில நேரங்களில் பாட்டாளிகள் பக்கம் நிற்பது போல முதலாளிகளிடம் பேசும், சில நேரங்களில் தன் அடக்குமுறை கருவிகளை பாட்டாளிகளின் மீது ஏவும். முதலாளித்துவத்தின் லாப நட்ட கணக்குகளின் அடிப்படையிலும் தனக்கு கிடைக்கும் பிரதிபலனுக்காகவும் அரசு அதிகார வர்க்கம் வேடமிடுமே தவிர ஒருபோதும் மக்கள் நலன் அரசாக அது செயல்பட முடியாது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் இந்த அடிப்படையில் தான் ஊழியர்களுக்கு சோவியத் பாணியில் சில நல திட்டங்களை செயல்படுத்தி தங்களை பாட்டாளிகளுக்கானவர்களாகவும், ஊழியர் நலன் அரசாகவும் (Employee Welfare State) காட்டிக் கொள்ளும் வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களை இந்த இடத்திற்கு தள்ளியது சோவியத்தின் சோசலிச ஆட்சிமுறை தான்.

tn pensionersதோழர் லெனின் தலைமையிலான சோவியத் அரசு 1917-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக தன் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்தது. இதற்கு முன்னரே 1890-களில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏன், கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சி செய்த காலனிய இந்தியாவில் கூட வருவாய், பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினருக்கு கருணை அடிப்படையில் காலனிய சுரண்டல் லாப நோக்கத்துடன் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனால் தோழர் லெனின் நடைமுறைப்படுத்திய ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் சோசலிச கோட்பாட்டின் அடிப்படையில் தொழிலாளர் நலன் சார்ந்ததாக மாறியது. இது ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளித்துவ தன்மையை அசைத்து பார்த்தது. முதலாளித்துவ நாடுகளின் மக்கள், சோவியத்தின் மக்கள் நல அரசை வியந்து பார்க்கும் சூழல் உருவானது. இது உலகம் முழுவதிலும் பரவினால் அது முதலாளித்துவ விரிவாதிக்கத்திற்கு தடையாக இருக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

1871-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவிற்கான ஓய்வூதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தில் ‘ஓய்வூதியம் என்பது அரசு வழங்கும் கருணை தொகை அது அரசு ஊழியர் அடிப்படை உரிமை இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. The Royal Commission on Civil Establishments 1881-ஆம் ஆண்டு முதல் காலனிய இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கியது. இந்திய அரசு சட்டம் 1919 மற்றும் 1935 ஆகியவை அதில் மேலும் மாற்றங்களை செய்தது.

இதனைத் தொடர்ந்து காலனிய விடுதலைக்கு பின்னர் இந்தியாவில் 1950 ஏப்ரல் 17-ல் முதலாவது மத்திய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், விரிவாக்கப்பட்ட ஓய்வூதிய விதிகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒன்றிய குடிமையியல் பணிக்கான சட்டம் 1972 (Central Civil Service Act 1972) மூலம் சில மாறுதல்களோடு ஒன்றிய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 1979 சனவரி 1-ஆம் தேதி முதல் தான் தமிழ் நாட்டில் அனைத்து அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது (தமிழ் நாடு அரசு ஓய்வூதிய விதிகள் 1978). அதோடு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு தான் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களான மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இப்படி இந்தியாவில் ஓய்வூதிய திட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல வகைகளில் நடைமுறைப் படுத்தப்பட்டது.

புதிய ஓய்வூதிய சட்டம்

2003-ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஓய்வூதிய திட்ட விதிகளில் மாற்றங்களை கொண்டு வரவிருப்பதாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதாவது, அதுவரை நடைமுறையில் இருந்த வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் (Defined Benefit Pension System) என்பது வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக (Defined Contributory Pension Scheme) மாற்றம் செய்யப்பட்டது. அது 01-01-2004 முதல் புதிதாக ஒன்றிய அரசு பணிகளில் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு நடைமுறை படுத்த பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) தான் தற்போது புதிய பென்சன் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. ஆனால் பெயரில் உள்ளது போல் அந்த திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பென்சன் என்பது வழங்கப்படாது என்பது தான் இதன் சிறப்பு அம்சம்.

இப்படிப்பட்ட இந்த திட்டத்தில் 01-04-2003-லேயே, அதாவது இந்திய அரசு இந்த திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்னரே நாட்டிலேயே முதலாவது மாநிலமாக அன்றைய முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தில் இணைந்து கொள்வதாக அறிவித்தது.

இந்திய பென்சன் துறைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கும் அதன் சந்தையை விரிவுபடுத்தவும் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory Development Authority -PFRDA) என்கிற தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு பாஜக அரசால் உருவாக்கப்பட்டது.

நவதாராள மைய கொள்கைகளின் அடிப்படையில் உலக வங்கி அனைத்து விதமான மானியங்களையும் குறைக்க சொல்லி தன்னிடம் கடன் கேட்கும் நாடுகளை கட்டாயப்படுத்தியது. ஓய்வூதியம் உள்ளிட்ட ஊழியர் நலன் சார்ந்த திட்டங்கள் அரசிற்கு சுமை என்றும் அதை அரசு ஏற்கக் கூடாது என்றும் உலகவங்கி கூறியது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் அரசின் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் அவர்கள் நாடாளுமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் சட்டத்தை (Pension Fund Regulatory Development Authority) பண மசோதாவாக நிறைவேற்றினார். நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஓய்வூதிய திட்டங்கள் PFRDA-வின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் PFRDA-வின் பணம் மற்றும் சொத்துக்களை பராமரிப்பதற்கு NPS (National Pension System) என்கிற அறக்கட்டளை (Trust) ஒன்று உருவாக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடு (FDI) 26% அளவிற்கு பென்சன் துறைகளில் தனியார்களுக்கு திறந்து விடப்பட்டது.

பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் வேறுபாடுகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவருடைய அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப் படியில் (Dearness Allowance) குறைந்தபட்சமாக 12% பொது சேமநல சந்தாவாக (General Provident Fund Subscription) கட்டாயம் பிடித்தம் செய்யப்படும். 12%-க்கு மேலதிகமாகவும் பிடித்துக் கொள்ள ஊழியர் விருப்பம் தெரிவிக்கலாம். இதற்கு அரசு வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் படி ஊழியர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை தங்களுடைய GPF கணக்கில் இருந்து கடன் பெற்று கொள்ளலாம். அதனை ஊழியர்களின் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து மீண்டும் அவர்களின் GPF கணக்கில் செலுத்தப்படும். இப்படி சேரும் பணத்தை அரசு தன்னுடைய பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பு இருந்தது. அரசு ஊழியரின் இந்த பிடித்தங்களில் மூலம் அரசுக்கு கிடைத்த பணத்தினை தான் ஓய்வூதியமாக ஊழியர்களுக்கு அரசு வழங்கியது.

மாறாக புதிய பென்சன் திட்டம் என்று சொல்லப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப் படியில் 10% சந்தாவாக கட்டாயம் பிடிக்க வேண்டும். 10%-க்கு குறைவாகவோ அதிகமாகவோ பிடித்தம் செய்யக்கூடாது. இந்த சந்தாவிற்கு அரசு வட்டி கிடைக்கும். இப்படி பிடித்தம் செய்யப்படும் ஊழியரின் சந்தா பங்களிப்பிற்கு சமமான பங்கை அரசானது ஊழியரின் கணக்கில் மாதாமாதம் செலுத்த வேண்டும். ஊழியரின் பணிக்காலம் நிறைவடைந்த பின்னர் அவர் கணக்கில் சேர்ந்த தொகை (சந்தா, அரசு பங்களிப்பு மற்றும் வட்டி தொகை) அவருக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் ஒரு ஊழியர் GPF-ல் உள்ளது போல் தன் பணத்தை பணிக்காலத்தில் எடுக்க முடியாது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்(CPS) செயல்படும் விதம்.

இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளும் மாநில அரசுகள் தங்கள் ஊழியரை பங்களிப்பு ஓய்வூதிய சந்தாதாரராக மேலே சொல்லப்பட்ட PFRDA-வில் இணைத்து அதற்கு உண்டான ஊழியரின் சந்தா மற்றும் அரசின் பங்களிப்பு தொகையை PFRDA-விற்கு செலுத்த வேண்டும். அப்படி செலுத்தப்பட்டால் தான் அந்த மாநிலம் CPS திட்டத்தில் இணைந்து கொண்டதாக கருதப்படும். இந்த தொகை அரசால் பங்கு சந்தை என்கிற சூதாட்ட கிணற்றில் போடப்பட்டு அதில் கிடைக்கும் (?) லாபம் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் என்பது திட்டம். தற்போதைய ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் PFRDA-வின் அதிகாரங்களை குறைத்து அதிலிருந்து NPS-யை பிரிக்கும் சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருப்பதாக தகவல் வந்தது.

அதாவது ‘ஒரே நாடு ஒரே பென்சன்’ என்கிற ஏகவாத அடிப்படையில் அரசு ஊழியர்கள், குடிமக்கள் என்று யாவருக்கும் ஓய்வூதியம் உண்டு என்று NPS-க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் மார்ச் 2021-ல் காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீடு (FDI) 49% இருந்து 74% ஆக உயர்த்தப்பட்டது என்பதை இதனோடு பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. வெளிநாடு வங்கிகள் இங்கு வந்து முதலீடு செய்யும் போது அவர்களுக்கு தேவையான அதிகப்படியான ஓய்வூதிய சந்தாதாரர்களை உருவாக்க தான் இந்த ஒரே நாடு ஒரே பென்சன் திட்டம் மோடி அரசால் முன்னிறுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் பங்களிப்பு ஓய்வூதியதில் இருக்கும் மாநில அரசுகள் தங்களை National Pension System (NPS)-ல் இணைத்துக் கொண்டு வருகின்றன.

தமிழ் நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

01-04-2003 முதல் வேலையில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி 01-04-2003 முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் படி 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் முறைப்படி தமிழ் நாடு அரசு தன்னை PFRDA வில் உறுப்பினராக இந்த கட்டுரை வெளிவரும் இந்த நொடி வரை இணைந்துக் கொள்ளவில்லை. நாட்டிலேயே மேற்கு வங்கம் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டத்தில் நீடித்து வரும் மாநிலம் மற்ற அனைத்து மாநிலங்களும் CPS-ல் இணைந்து தற்போது NPS-க்கும் நகர்ந்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில் தமிழ் நாட்டில் மட்டுமே பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மீண்டும் திரும்பும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

ஏன் என்றால், தமிழ் நாடு அரசு தன் ஊழியர்களிடம் பிடித்த செய்த பணத்தை PFRDA வில் செலுத்தாமல் அரசின் பொதுக் கணக்கில் வைத்துள்ளது. தமிழ் நாடு அரசின் நிதி துறை கொள்கை விளக்க குறிப்பு(கோரிக்கை எண் 50) 2022-2023 ல் 31-01-2021 படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஊழியர் சந்தா, அரசின் பங்களிப்பு தொகை மற்றும் வட்டி உட்பட ரூபாய். 50,264.72 கோடி பொதுக் கணக்கில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசில் சுமார் 6,02,377 ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளனர்.

மேலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்ந்த சந்தா தொகையானது ஆயுள் காப்பீடு ஓய்வூதிய நிதி (ரூ.41,264.63 கோடி) மற்றும் ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டி (ரூ. 12,000 கோடி) ஆகியவற்றில் முதலீடு செய்யப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலீடுகளில் இருந்து பெறப்படும் வட்டியானது பொது வருங்கால வைப்பு நிதிக்கான அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதத்தை விட குறைவாக உள்ளது என்று இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் தணிக்கை மறுப்புறையில் (Audit para) தமிழ்நாடு அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிதியமைச்சரும்

மீனவர்கள் முதல் மாணவர்களின் நீட் பிரச்சனை வரை பல்வேறு மக்கள் தொகுப்பினரின் வாழ்வாதார பிரச்சனைகளை கோடிட்டு அதற்கு அந்த மக்கள் கோரும் கோரிக்கைகள் திமுக அரசு வந்தால் நிறைவேற்றப்படும் என்று ஒரு நேர்த்தியான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டிருந்தது. துறைசார் வல்லுனர்கள் முன்னாள் அமைச்சர்களை கொண்டு உருவாக்கப்பட்டது தான் திமுகவின் தேர்தல் அறிக்கை. அந்த அறிக்கையில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய பென்சன் திட்டம் மீண்டும் நடைமுறைபடுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் சட்டமன்றத்தில் கூட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கோரிக்கை அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நடத்திய 14-ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

dmk on pension schemeஇந்நிலையில் தான் கடந்த 07-05-2022 நடைபெற்ற நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது என்பது சாத்தியமற்றது என்று முதலமைச்சர் முன்னிலையில் பேசியது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஊழியர்களின் ஊதியத்தில் மாதாமாதம் பிடித்தம் செய்து அரசின் பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து தான் ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்னும் போது ஓய்வூதியம் அரசிற்கு நிதிச் சுமை என்று அரசு சொல்வது நாணயமான செயலா?’ என்று அரச ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும் புதிய பென்சன் திட்டத்தில் தான் அரசின் பங்களிப்பாக அரசிற்கு மாதம் மாதம் செலவு ஏற்படுகிறது, பழைய பென்சன் திட்டத்தில் அத்தகைய செலவு அரசிற்கு இல்லை என்று கூறுகின்றனர்.

இதன் அடிப்படையில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தால் 09-05-2022 அன்று ஆயிரம் இடங்களில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் மு.அன்பரசு அவர்கள் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் “திராவிட பொருளாதார அரசு என்று சொல்லும் திமுக அரசின் ஆட்சியில் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மட்டும் கார்ப்பரேட் பொருளாதாரத்தை கடைப்பிடிக்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்றும் மேலும் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் எங்களுக்கு போராடுவதை தவிர வேறு வழியில்லை” என்று கூறினார்.

அதேபோல 11-05-2022 அன்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டத்தின் முடிவில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த முன்வரவில்லை என்றால் தொடர் போராட்டங்களை தவிர்க்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் சென்று சேர்க்கும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஓய்வூதியம் போன்றவை அரசு செலவீனமாக பார்க்க முடியாது. அது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட செலவீனங்களாகத்தான் பார்க்க வேண்டும். அவர்களின் உழைப்பின் முலம் அரசிற்கு கிடைக்கும் லாபத்தில் ஊழியர்களுக்கு எந்த பங்கும் வழங்கப்படுவதில்லை.

டி.எஸ்.நகரா என்னும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் தனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் சில முரண்பாடுகள் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அந்த வழக்கில் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் டி.எஸ்.நகராவுக்கு தகுதியான ஓய்வூதியம் வழங்கி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ‘ஓய்வூதியம் என்பது அரசின் கருணை தொகையோ நன்கொடையோ அல்ல; ஒரு அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசுக்கும், மக்களுக்கும் பணியாற்றியமைக்காக பெறும் உரிமை தொகையாகும்’ என்று குறிப்பிட்டதுடன் ‘அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின் அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்றும் தீர்ப்பளித்தது.(D.S. Nakara vs Uol AIR 1983, SC 130). இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட டிசம்பர் 17-ஐ ‘ஓய்வூதியர் தினமாக’ அரசு ஊழியர் சங்கங்கள் கொண்டாடுகின்றன.

ஊழியர் நலன் சார்ந்த திட்டங்கள் அரசு துறைகளில் இருப்பதை பாதுகாப்பது என்பது அரசு ஊழியர் சங்கங்களின் கடமை மட்டும் அல்ல அது நம் அனைவரின் சனநாயக கடமை. அரசு துறைகளில் உள்ள அனைத்து ஊழியர் நலன் திட்டங்களும் நாட்டில் உள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்திற்கு வந்து சேர வேண்டிய ஒன்று. அரசு என்பது ஒரு மாதிரி முதலாளியாக (Model Employer) ஆக இருக்க வேண்டும். குறைந்தபட்ச ஊழியர் நலன் சார்ந்த திட்டங்கள் அரசு துறைகளில் இருப்பதை காட்டித்தான் நாளை அதனைத் தனியார் துறையிலும் கொண்டு வர கூடிய விவாதங்களை உருவாக்க முடியும். அரசு ஊழியர்கள் என்பவர்கள் மக்கள் தொகுப்பின் அங்கத்தினரே. நாளை வேலைக்கு வரவிருக்கும் நம் தம்பி தங்கைகளுக்காகவும், நம் குழந்தைகளுக்காகவும் ஓய்வூதியம் வழங்க வேண்டி அரசு ஊழியர் ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்தை சனநாயக சக்திகள் ஆதரிக்க வேண்டும்.

இந்தியாவின் இன்றைய பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 15 செப்டம்பர் 2013 அன்று ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் (One Rank One Pension) திட்டம் தொடர்பாக அரசை வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லி ஆவேசமாக பேசினார். அதேபோல் பிஜேபி யின் 2014-ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் OROP மை உடனே நிறைவேற்றுவோம் என்று கூறப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தற்போது ஓய்வூதியத்திற்கு ஓய்வளிக்க கூடிய அக்னி பாத் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

“அக்னி பாத்” திட்டத்தினால் இன்று நாடே “அக்னி” – “பாத்” எடுத்துக் கொண்டு உள்ள சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இராணுவ பணிதான் மக்களால் உணர்வுப்பூர்வமாக மதிக்கப்படுகிற அரசுப்பணி. தன் உயிரை நாட்டிற்கு அர்பணித்து எல்லையில் ஓய்வின்றி நிற்கும் அந்த வீரர்களின் குடும்பம் அவர்களின் ஓய்வூதியத்தை நம்பிதான் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களுக்கே ஓய்வூதியத்தை மறுக்கும் விதமாக, அமர்த்தி துரத்து (Hire & Fire) என்று கார்ப்பரேட் பாணியில் நான்கு ஆண்டுகள் பணி பிறகு அவர்களுக்கு அங்கு வேலையில்லை என்பது ஓய்வூதியத்தை முற்றிலும் ஒழிக்கும் திட்டமாகத்தான் பார்க்கப்பட வேண்டும். அவர்கள் ஐந்தாண்டுகள் வேலை செய்தால் அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு (Death-Cum-Retirement Gratuity போன்ற) திட்டங்கள் கிடைத்து விடும் என்பதனாலே நான்காண்டுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது?. எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலையை மட்டும் வாங்கிவிட்டு தூக்கி எறியக் கூடிய ஒரு முதலாளித்துவ கொள்கையை தான் இந்திய அரசும் அதைப் பின்பற்றி மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன என்கிற அடிப்படையிலே இந்த கட்டுரை புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

குறிப்புகள்

  • INDIAN PENSION SYSTEM: PROBLEMS AND PROGNOSIS,Ranadev Goswami, Fellow, Indian Institute of Management Bangalore.
  • Central Civil Service (Pension) Rules,1972.Chapter-1,Preliminary.
  • The Tamil Nadu pension rules,1978,chapter-1,preliminary,third edition,2010.
  • அரசாணை (நிலை) எண்.259, நிதி (ஓய்வூதியம்) துறை, நாள். 06-08-2003.
  • S. Nakara vs Uol (AIR 1983, SC 130).
  • https://www.pfrda.org.in/index1.cshtml?lsid=4
  • தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அறிக்கைகள்.
Pin It