இந்த உலகம் முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற தலைக்கனத்தில், பேராசையில், சுயநலத்தில், அறியாமையில் தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறான் மனிதன். எல்லா உயிர்களைப் போலவும் மனிதனும் இந்த பூமி உருண்டையில் வாழப்பிறந்தவன். அவ்வளவுதான்! இந்த நினைப்பு அவனிடம் இருந் திருந்தால், ஓசோனின் ஓட்டை விழுந்திருக்காது. ஜீவ நதிகள் வறண்டிருக்காது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். பஞ்சம் ஏற்பட்டிருக்காது. குடிநீருக்காகக் குடங்களைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாகத் திரிய வேண்டிய நிலைமை வந்திருக்காது.

தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை... தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர் களும் இல்லை. ஐந்து வகை நிலங்களைப் பிரித்து அங்கு உயிர் வாழும் பறவைகள். விலங்குகள், தாவரங்கள், பருவ காலங்கள் என்று மனிதன் வாழ்வதற்குத் தேவையான இயற்கையைக் ‘கருப் பொருள்’ பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர். முல்லைக்குத் தேர் கொடுத்ததும், மயிலுக்குப் போர்வை தந்ததும் இயற்கையை நேசிப் பதன் அடையாளமன்றி வேறென்ன? இன்று தமிழகத்தின் இயற்கை வனத்தைத் தொலைத்து விட்டு ஏதிலிகளாக அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டுமென்று கையேந்திநிற்கிறோம். முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக் கூட நாம் மறந்து விட்டோம். அரணைக்கும், ஓணானுக்கும் வித்தி யாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப்பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள்.

மனிதன் வாழ்வதற்கு அடித்தளமான சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, இயற்கை சூழ்ந்த கூடு போன்றவைதான் நம் சுற்றுப்புறச் சூழ்நிலைகள். சுத்தமான காற்றுக்கு மரங்கள் அடர்ந்திருக்க வேண்டும். ஆறுகளின் வறட்சிக்கும், மணல் கொள்ளைக்கும் நேரடிச் சம்பந்தம் உண்டு. ஆற்றில் மணலைக் கொள்ளை யடிப்பதற்கும் தாய்ப்பாலைத் திருடி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது” என்றார் பறவையியலாளர் சலீம் அலி. பறவைகளற்ற ஒரே நாளில் பூச்சிகள் இந்த உலகில் மனிதர்களை இல்லாமல் செய்து விடும். இந்த இயற்கை சமநிலை தெரிந்துதான் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ பற்றிய அவசியத்தை வலியுறுத்து கிறது திருக்குறள். ‘பல்லுயிரியம்’ என்பதுதான் உலகம் தழைப்பதற்கான தத்துவம். ஒவ்வொரு உயிருக்கும் இங்கே தேவை இருக்கிறது. கையில் அரிப்பெடுக்கிறது என்பதற்காக, கையை யாரும் வெட்டுவதில்லை. ஆனால், இலைகள் உதிர்ந்து குப்பைகள் வருவதாக மரங்களைக் கூசாமல் வெட்டுகிற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒரு யானையைக் கொன்று தந்தம் பிடுங்கி யானை பொம்மை செய்து அலங்காரமாக ஷோகேஸில் வைக்கிற ‘மேதை’களை இயற்கை எப்படி மன்னிக்கும்?

தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்சமாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இயற்கை வளம் என்பது, வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக் கொள்வதுதான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது. மரம் என்பது மனிதனைப் போல பூமிக்கு பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள், பறவைகளும், விலங்குகளும் இன்றும் ஒவ்வொரு உயிருமே அப்படித்தான்.

கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் ‘தலைப்பிட்டை’களைப் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கொன்று விட்டோம். மலேரியா காட்டுத் தீ போன்று பரவி, ‘மலேரியா ஒழிப்பு’ பிரச்சாரம் நடத்த வேண்டியதாகிவிட்டது. இன்று பெரிய ஏரிகளிலும் குளங்களிலும் பறவைகள் தென்படாமல் போனால், அந்த நீர் அருந்து வதற்குத் தகுதியற்றது என்று பொருள். சாயக் கழிவுகளையும், தொழற்சாலைக் குப்பைகளையும் ஆற்றில் கொட்டினால் எப்படிப் பறவைகள் வரும்? இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.

வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லு யிரியம் என்கிற’பயோடைவர்சிட்டிதான். மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன. நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது. சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் மட்டும் 110 வகை தாவரங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை, பொதிகை மலை போன்ற மலைப் பிரதேசங்கள், புதர்க்காடுகள், ஏரிகள், ஆறுகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் என்கிற தம் விதவிதமான புவியியல் அமைப்பு எண்ணிலடங்கா உயிர்கள் வாழும் உறைவிடம். நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கிடைப்பதற்கரிய இயற்கையை சர்வநாசம் செய்து விட்டோம் தமிழர்களே! இன்னும் கூட நாம் வெறி தீராமல் இருப்பதுதான் வேதனை.

தேயிலை, காபித் தோட்டங்களுக்காக, காகித உற்பத்திக் காக, அணைத் திட்டங்களுக்காக, தோல் பதனிடும் தொழிலுக் காக, வெட்டு மரத் தொழிலுக்காக நாம் காடுகளை அழித்து விட்டோம். நதிகளில் ரசாயன நச்சுப் பொருள்களின் கலப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீய விளைவு, நில வேட்டையால் ஏரிகளின் சூறையாடல், உயிரற்ற அலங்காரப் பொருட்களுக்காகக் காட்டு உயிரினங் களைக் கொல்லுதல் என நம் அறியாமையும், சுயநலமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. சத்தியமங்கலம் புதர்காடுகளில் காணப்பட்ட சிவிங்கிப்புலியும், ஒகேனக்கல்லில் இருந்த வாருக்கோழியும், கழிமுகங்களில் வாழ்ந்த உப்புநீர் முதலையும், காவிரியில் இருந்த கறுப்புக் கெண்டை மீனும் அற்றுப் போய்விட்டன.

பிடி, கயிறு, வேழம், கொம்பன் என்று யானைகளின் விதவிதமான வகைகளைக் கண்டறிந்து ஒன்பது பெயர்களை வைத்த தமிழனின் பிள்ளைகள் அந்த மரபுச் செல்வம் பற்றி ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மொழியில் இங்கிலாந்தில் இல்லாத உயிரி னமாக யானைகளைக் குறிக்க ‘எலிஃபென்ட்’ என்ற ஒற்றைச் சொல்தான் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. நூறுக்கும் அதிகமாக பூச்சிகளின் பெயர்களை பட்டியலிட்டு குறிஞ்சிப்பாட்டு எழுதியவர்களுக்கு இன்று சுற்றுப்புறச் சூழலைத் தெரிந்து கொள்ள ‘துறைச் சொற்கள்’ இல்லாமல் ஆங்கிலத்திடம் கடனாளியாகக் கடன் வாங்குகிறோம். அறிவியல் பூர்வமாக இயற்கையைப் போற்றிய தமிழரின் பிள்ளைகள் இன்று ஷாப்பிங் காம்ப்ளெஸ்களுக்கும், தீம் பார்க்குகளுக்கும், பள்ளிச் சுற்றுலா போகும் அவலத்தை எங்கே போய் முறை யிடுவது? இயற்கையை அறிந்து கொள்ளாமல் இயந்திரங்களோடு வாழ்வதால் ‘உற்சாக பானங்கள்’ ஏராளமாக விற்பனை ஆகின்றன.

அடுத்த தலைமுறைக்கு உயிரினங்களை நேசிக்கக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் உயிரினங்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்தால் கூடப் போதும். இன்று குழந்தைகளுக்கான படங்களாக வருகிற ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மனித இனத்துக்கு எதிரானதாகவே சித்தரிக்கின்றன. மதிய சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, தமிழகப் பல்லிகளுக்கு விஷம் இருநத்தில்லை.

பல்லி இனத்தின் பெரிய அண்ணனான உடும்பைச் சாப்பிடு கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அழுகிய கற்களிகள், வெட்டுப்போன முட்டைகள் என குப்பைகளைக் கொட்டி ஈயமில்லாத பாத்திரங்களில் சமைத்து குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறும் பேராசைக் கான்ட்ராக்டர்கள்தான் குழந்தைகள் மயங்கி விழக்காரணமேயன்றி, பல்லிகள் அல்ல! பல்லிக்கு விஷமில்லை என்பது அறிவியல் பூர்வமான விஷயம். பல்லியின் மொழியை வைத்து ‘கௌலி சாஸ்திரம்’ படைத்திருக்கின்றனர் நம் முன்னோர். இன்று அதே பல்லி நமக்கு எதிரி! இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் ‘ஆம்லெட்’ என்று சிரிக்கிறது. முட்டை, ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை ‘ஓங்கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விபரம தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும் போது ‘கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப் படுத்தப்பட்டால் எப்படி குழந்தைகளுக்கு விலங்கு கள் மேல் நேசம் வரும்? ‘கொடூரக்காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதாசிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந்து போனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அடர்ந்த நாடுகளில் பத்திரமாக, பாதுகாப்பாகச் சென்று திரும்ப முடியும். நம் மாநகரங்களைவிட ஆபத்தானவை அல்ல காடுகள்.

நாம் வீடுகள் கட்டுகிறோம் என்கிற பெயரில் சுவர்களையே கட்டுகிறோம். பல்வேறு உயிர்கள் வாழும் இடத்துக்குப் பெயர்தான் வீடு. ஒரு பறவை வந்து அமர மரம் இல்லாத வீடும், பட்டாம்பூச்சி வந்து தேனருந்த இல்லாத வீடும் எப்படி வீடாகும்? ஒரு நாடு அதன் மக்களால் கட்டடங்களால், தொழிற்சாலைகளால் மட்டும் ஆவதல்ல. அதன் ஆறுகள், குளங்கள், காடுகள், மலைகள், பாலை வனங்கள், பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன உயிரினங்களாலும் ஆனது அடுத்த தலை முறைக்கு நம் சுற்றுப்புறச் சூழல் குறித்த அறிவை. இயற்கையின் மீதான அன்பே, ஆரோக்கிய வாழ்வு குறித்தான அக்கறையை உருவாக்குவதே உடனடித் தேவை. அதற்கு பள்ளிக்கூடங்களின் பொறுப்பு உணர்வே போதுமானது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் சரியான பாடநூல்களோ, ஆசிரியர்களோ பள்ளிகளில் இல்லை.

சுற்றுச் சூழல் சட்டங்கள் வெறும் சட்டப் புத்தகங்களில் மட்டும் தூங்காமல், அதனை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இயற்கையைச் சுரண்டுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மரம் வளர்ப்பதை ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும். அதை மாணவர் களுக்கு மதிப்பெண் பாடமாக மாற்ற வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடும். ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ எனும் திருக்குறள் காடும் உடையது அரண் எனும் திருக்குறள் மேற்கோளுக்காகப் பயன் படுத்தப்படாமல் குறிக்கோளாக மாற வேண்டும். இதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது நண்பர்களே! காரணம். இயற்கையை அழித்ததில் நம் எல்லோருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருக்கிறது.

நன்றி:- சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம், தவுட்டுப் பாளையம் அந்தியூர்.

(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)

Pin It