திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்த மீனா என்னும் பேராசிரியர் துணைவேந்தராக அண்மையில் பொறுப்பேற்றார். உடனடியாகச் சில பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். அவர் ஆற்றியுள்ள முதல் பணி, பெரியார், அண்ணா, பாரதிதாசன், கலைஞர் பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த துறைகளின் செயல்பாட்டை நிறுத்தி வைப்பதாக உள்ளது. இந்த அதிர்ச்சியை நம்மால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற ஆட்சிமன்றக் குழுக்கூட்டத்தில் (சின்டிகேட்), பொருண்மையில் (Ajenda) இடம்பெறாத ஒரு செய்தியைத் துணைவேந்தர் முன்மொழிந்துள்ளார். அறுபது அகவையைக் கடந்தவர்களை உடனடியாகப் பணியில் இருந்து விடுவிப்பது என்பதே அவர் கொண்டுவந்த முன்மொழிவு.பொதுவாக, பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஓய்வுபெறும் அகவை என்பதும், பல்கலைக் கழக நல்கைக் குழு (யு.ஜி.சி.) பரிந்துரையின் அடிப்படையில் அமர்த்தப்படும் சிறப்பு இருக்கைகளுக்கான பேராசிரியர்களின் ஓய்வு பெறும் அகவை என்பதும் வேறுபடும் ; வேறுபட வேண்டும்.

சிறப்பு இருக்கைகளுக்கான பேராசிரியர்களின் பணி என்பது முழுக்க முழுக்க ஆய்வுத் துறை சேர்ந்ததாகும். எனவே அங்கு அகவை பற்றிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதில்லை. அறிவு, அனுபவம், வெளியிட்டுள்ள ஆய்வு நூல்கள் போன்றனவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரோ, இதுபோன்ற எக்கருத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அனைவருக்கும் ஒரே விதிதான் என்று ஆட்சிமன்றக் குழுவின் முடிவை அறிவித்துள்ளார். அன்று மாலையே 60 அகவையைத் தாண்டிய பேராசிரியர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அந்த ஆணையின் அடிப்படையில் பெரியார், அண்ணா இருக்கைகளில் இருந்த பேராசிரியர் நெடுஞ்செழியனும், பாரதிதாசன் இருக்கையில் இருந்த பேராசிரியர் இளங்கோவும் தங்கள் பணிகளை இழந்துள்ளனர். கலைஞர் வளர்தமிழ் மன்றப் பணிகளும் நின்றுபோய் உள்ளன. பெரியார், அண்ணா, பாரதிதாசன் குறித்த ஆய்வுப் பணிகள் இப்போது ஓசையில்லாமல் முடக்கப்பட்டு விட்டன.

ஒரு பேராசிரியரைப் பணியில் இருந்து நீக்குவதற்கு உரிய காரணமின்றி, உரிய கால இடைவெளியும் இன்றி செயல்கள் விரைந்து நடந்தேறி முடிந்திருக்கின்றன. திராவிட இயக்க ஆய்வுகளுக்கு மாறாகவும், ஜனநாயகத்திற்கு எதிராகவும் நடந்துள்ள இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இச்செய்தி, மாண்புமிகு தமிழக முதலமைச்சரை எட்டியுள்ளதென்றும், உரிய நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார் என்றும் செய்திகள் தெரியவருகின்றன. எனினும், இத்தலையங்கம் எழுதப்படும் வரை, அப்பேராசிரியர்கள் தத்தம் பணிகளுக்கு மீண்டும் அழைக்கப்படவில்லை என்ற நிலையே உள்ளது.

முதல்வரின் பல்வேறு பணிகளுக்கிடையே அவரது உடனடித் தலையீடு இதில் தேவைப்படுகிறது என்பதை நாம் நினைவூட்டக் கடமைப் பட்டுள்ளோம்.

Pin It