கீற்றில் தேட...

சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழி பசுமைவழிச் சாலை அமைப்பதற்கான வேலையை தொடங்கி உள்ளது எடப்பாடி அரசு. இச்சாலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோமீட்டர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கிலோமீட்டர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிலோமீட்டர், தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோமீட்டர் மற்றும் சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோமீட்டர் என ஆக மொத்தமாக 274 கிலோமீட்டர் நீளத்திற்கு அமையும்.

இச்சாலையில் சேலம் மற்றும் செய்யாறு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வாகனங்கள் உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் வசதி உள்ளது. மேலும் இச்சாலையில் மொத்தம் எட்டு சுங்கச்சாவடிகள் இருக்கும். இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே உள்ளதால், வழியில் உள்ள மக்கள் தங்களது வாகனத்தில் இச்சாலைக்குள் உள்ளே செல்ல முடியாது. மேலும் எட்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் கட்டிச் செல்ல வேண்டும். ஆகவே இதனை அனைத்து மக்களும் பயன்படுத்த முடியாது என்பது கண்கூடு. ஏற்கனவே சேலத்திலிருந்து சென்னை செல்ல மூன்று பாதைகள் உள்ளன. இப்பாதைகளுக்கும், புதிதாக அமைக்க உள்ள பாதைக்கும் 70 முதல் 100 கிலோமீட்டர் அளவுதான் தொலைவு வேறுபாடு.

இந்த சாலைகளை விரிவுபடுத்தினாலே மிக அதிகமான வாகனங்கள் செல்ல முடியும். நாம் விரைவாக சென்றடைய முடியும். மேலும் இருக்கும் சாலைகளில் வெறும் 40 விழுக்காடு அளவுதான் வாகனங்கள் செல்கின்றன. அரசு எடுக்கும் இந்நடவடிக்கையால் கிட்டத்தட்ட 10, 000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். இவ்விளைநிலங்களை நம்பி உள்ள 30, 000 ஏழை விவசாய குடும்பங்களும் கடுமையான பாதிப்பைச் சந்திக்கும். நூற்றுக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் அழியும், மரங்கள் லட்சக்கணக்கில் வெட்டப்படும். இச்சாலை வழியில் இருக்கும் வீடுகள், பள்ளிகள், கோயில்கள் இடிக்கப்பட உள்ளது. இச்சாலையுடன் மொத்தம் 854 கிராமங்கள் தொடர்புடையதாக உள்ளது. 159 கிராமங்கள் வழியாக செல்கிறது அல்லது இக்கிராமங்களை பிளவு படுத்துகிறது.

மேலும் மொத்தமாக 13.2 ஹெக்டர் வனப்பகுதி அழிக்கப்படும். 8 காப்புக்காடுகள் வழியாக இச்சாலை செல்கிறது. அவையாவன 1.சிறுவாஞ்சூர், 2.நம்பேடு, 3.அலியாமங்கலம், 4. அந்தவாடி, 5.ராவணவாடி, 6.பள்ளிப்பட்டு, 7.ஜருகுமலை 8.சொரக்குளத்தூர். இதுபோன்ற காப்புக்காடுகள் வழியாக செல்லும் சாலைகள் வனவளத்தை அழிப்பது மட்டுமல்லமல், உயிர்பன்மையத்தன்மை சூழலியலையும் கெடுத்து விடுகிறது. இவ்வாறு காடுகள் அழிக்கப்படுவதால் அதில் உற்பத்தியாகும் ஆறுகள், அருவிகள், ஓடைகள் காணாமல் போகும். இதுமட்டுமல்லாமல் இச்சாலை அமைக்க சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை, அறநூற்றுமலை, சேர்வராயன் மலை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மலை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுந்தி மலை, வேதிமலைகள் உடைக்கப்படும்.

இத்தனை வளங்களை அழித்து 8 வழிச் சாலை உருவாக்க காரணம் இச்சாலை போடப்படும் 5 மாவட்டங்களிலும் குவிந்து கிடைக்கும் அரிய வகை தாதுக்கள்தான்.இந்தியாவில் தமிழகத்தில்தான் அரியவகை தாதுக்கள் 2 விழுக்காடு அளவு உள்ளதாக இந்திய அரசின் அறிக்கை கூறுகிறது. (சேலம் மாவட்டத்தில் டியூனைட், பிரச்சினைட், பெல்ஸ்பர், கிரானைட், மேகின்சைட், குவார்ட்ஸ், சிலிகா, டால்க், ஸ்டைட், சோப்புகள், கால்சைட், குரோமைட், பிளாட்டினம், டோலமைட், இரும்புத்தாது (மேகனைட்) தர்மபுரி மாவட்டத்தில் கோரண்டம், தங்கம், வெர்மிகுலைட், மாலிப்பிட்டினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிரானைட், சீனக்களிமண், மேகனைடட். வேலூர் மாவட்டத்தில் கிராபைட், சுண்ணாம்புக்கல், குவார்ட்ஸ், சிலிகா, டால்க், ஸ்டைட், சோப்புக்கல், வெர்மிகுலைட், ஜிர்கோன், பாரைட்ஸ், மாலிபிட்டினம் நிக்கல் மற்றும் குரோமியம் )

Tamil Nadu Defence Corridorஇவ்வாறு கொட்டிக் கிடக்கும் வளங்களை கார்பரேட்களுக்கு தாரை வார்த்துக் கொள்ளையடிக்க துடிக்கிறது இந்திய அரசும் அதன் எடுபிடி எடப்பாடி அரசும்.

மேலும் இந்த வளங்களை கொண்டு ராணுவ தளவாட பொருட்களின் உற்பத்தியை தொடங்க உள்ளது இந்திய அரசு. இதற்கு ராணுவ தாழ்வாரம் என்று பெயர். இந்த ராணுவ தாழ்வாரம் ஐந்து நகரங்களை மையமாக கொண்டு அமைக்கப்பட உள்ளது. இந்த ஐந்து நகரங்களையும் இணைத்து ஒரு ஐங்கோண வடிவ சாலை அமைப்பை உருவாக்க உள்ளது. இந்த ஐங்கோண சாலையில் இணைக்கபட உள்ள நகரங்கள் பின்வருமாறு:

1.சென்னை 2.கோவை 3. திருச்சி 4.ஓசூர் மற்றும் 5.சேலம்.இந்த ஐந்து நகரங்களும் ஏற்கனவே ஒவ்வொரு பொருள் உற்பத்தி மையமாக விளங்குகின்றன. இதில் முதலாவதாக சேலம் தாதுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் மையமாக இருக்கும். இதில் சென்னையில் ஏற்கனவே உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் ராணுவ தளவாடப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. சென்னையில் 50 என்ஜின் தொழிற்சாலைகளும், 200 கனரக வாகன தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் கோவையில் அதிக அளவில் உள்ள வார்ப்பட தொழிற்சாலைகளில் இந்த தாதுக்களை உலோகங்களாக மாற்றிக் கொள்ள முடியும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 45, 000 தொழிற்சாலைகள் உள்ளன. உதாரணமாக கோவையில் உள்ள சிஆர்ஐ பம்பு நிறுவனத்தில் இருந்து கடற்படைக்கு தேவையான பம்புசெட்டுகளும், சாந்தி கியர் நிறுவனத்தில் இருந்து ராணுவ டாங்கிகளுக்கு தேவையான கியர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. திருச்சியில் உள்ள பெல் தொழிற்சாலை ராணுவ தளவாடங்களின் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்கிறது.

இம்மாவட்டத்தில் உள்ள 2500 சிறு, குறு நிறுவனங்கள் பெல் நிறுவனத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரிக்கிறது. இதில் கடைசியாக உள்ள நகரம் ஓசூர். இங்கு ஆட்டோமொபைல் தொழில் சிறப்பாக உள்ளது. இதனை பயன்படுத்தி ராணுவ வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த ஐந்து நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளை பயன்படுத்தி ராணுவ தளவாட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இது மட்டுமல்லாமல் இங்கு அதிக அளவில் திறன் சார்ந்த பொறியியல் பட்டதாரிகள் உள்ளனர்.இதன் மூலம் மலிவான விலைக்கு உழைப்புச் சக்தி கிடைக்கும். இதனால் ராணுவத் தளவாடப் பொருட்களை மலிவான விலையில் தயாரிக்க முடியும்.

மேலும் இந்த வளங்கள் ராணுவத் தளவாடப் பொருட்கள் உற்பத்தி செய்ய மட்டும் பயன்டுத்தப்படுவதில்லை. இவ்வுற்பத்தி அல்லாத பிற தாதுப்பொருள்களை நேரடியாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த எட்டுவழிச் சாலை திட்டத்தை தொடங்குவதற்கு முன் தமிழக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முறையான அனுமதி பெறவில்லை. மேலும் ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு செயலாக்க ஆய்வு(feasibilty study) ஒன்றை நடத்த வேண்டும். ஆனால் தமிழக அரசு எந்தவொரு செயலாக்க ஆய்வும் செய்யவில்லை. இந்திய அரசின் உத்தரவு வந்தவுடன் எந்தவொரு விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக செயல்படுத்தத் தொடங்கி உள்ளது எடப்பாடி அரசு. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வளர்மதி, பியூஸ் மனுஷ், மன்சூர் அலிகான் மற்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டபோது எதிர்ப்பு தெரிவித்த வயதான மூதாட்டியை கூட தமிழக காவல் துறை விட்டுவைக்காமல் கைது செய்துள்ளது. இத்திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல விவசாயிகள் தீக்குளிக்க முற்பட்டனர். பலர் தற்கொலை செய்ய முயன்றனர். மேலும் பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் எடப்பாடி அரசோ மூர்க்கத்தனமாக இதை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகிறது.

ஏன் இந்த அவசரம்?

டெல்லி அரசின் மக்கள் விரோத திட்டங்களை கேள்விக்கிடமின்றி செயல்படுத்தும் அடிமை அரசாகவே மாநில அரசு உள்ளது. தமிழ்நாட்டுக்கு எட்டு வழிச்சாலை வேண்டுமா? வேண்டாமா? என தீர்மானிக்க வேண்டியது யார்?

எங்கேயோ பல மைல்களுக்கு அப்பால் உள்ள டெல்லியா? காலங்காலமாக இம்மண்ணை பாதுகாத்து வரும் தமிழக மக்களா?

அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஏற்றுக்கொள்வதும் புறக்கணிப்பதும் மக்களின் உரிமை. ஒரு தேசத்தின் வளங்களை எப்படி பயன்படுத்துவது என தீர்மானிக்க வேண்டியது அத்தேசத்தின் மக்கள். அது தான் தேசிய உரிமை. ஆனால் டெல்லி அரசோ தமிழ்த்தேசியத்தின் அரசுரிமையை பறித்து ஆதிக்கம் செலுத்திவருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் அனைத்து நாசகார திட்டங்களையும் நம் மீது திணித்து வருகிறது. யாரும் இதன் மீது கேள்வி எழுப்பக் கூடாது. மீறி எழுப்பினால் அவர்கள் மீது தேச விரோதிகள், நக்சலைட்கள் என முத்திரைக் குத்துகிறது. எதிர்த்து போராடுபவர்களை மாநில அரசின் போலீசு படையை வைத்து ஒடுக்குகிறது. முந்தைய காங்கிரசு அரசை விட தற்போதைய பா.ச.க அரசு தமிழகத்தின் உரிமைகளை பறித்து ஒடுக்கும் வேலையை மிக தீவிரமாக செய்து வருகிறது.

இந்திய அரசு வீசும் எலும்பு துண்டுகளுக்காக எத்தகைய இழிசெயலையும் செய்ய தயாராக உள்ளது மாநில அரசு. எட்டுவழிச்சாலையை அம்பலப்படுத்தி துண்டறிக்கை விநியாகித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கேள்வி எழுப்பிய போராளிகள் சிறைவைக்கப் பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒடுக்கப்பட்டாலும் தமிழ்த்தேசியத்தின் மீதான பார்ப்பனிய இந்து தேசியத்தின் ஒடுக்குமுறைதான் மிக தீவிரமாக உள்ளது. அதேபோல் மாநில அரசுகள் அனைத்தும் அடிமை அரசாக இருப்பினும் தமிழக அரசுதான் டெல்லியின் சிறந்த எடுபிடி அடிமை அரசாக உள்ளது. பன்னாட்டு - தரகு முதலாளிகளின் வேட்டைக்காடாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது.

இத்தகைய அடிமை அரசை தூக்கியெறிந்து விட்டு மக்கள் கையில் அதிகாரமுள்ள தன்மானமிக்க தமிழ்தேசியத்தை உருவாக்குவதன் மூலமே இது போன்ற அழிவு திட்டங்களை முற்றிலும் தடுத்திட முடியும்.