தொகுதி மறு வரையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று மோடியே கூறிவிட்டார் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த எடப்பாடி, இப்போது தமிழ்நாட்டின் உரிமையையும் வெட்கப்படாமல் அடகு வைக்கிறார். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மிக மோசமாக பாதிக்கப்படுவதை கவலையோடு சுட்டிக்காட்டி கண்டனக் குரலை எழுப்பி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.unfair delimitationஆனால் தமிழ்நாட்டு மக்கள் உரிமைகளையே அடகு வைத்துவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் உட்கார துடிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் ஆதாயத்திற்காக ஏற்கனவே அறிவித்த தனது கொள்கைகளை திடீரென்று மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வர ஒன்றிய ஆட்சி துடிக்கிறது.

2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும் 106 ஆவது சட்டத் திருத்தத்தை மோடி ஆட்சி கொண்டு வந்தது. அப்போது இதை அமல்படுத்தும் காலத்தை தள்ளிப் போட்டது. 2006 ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்போடு மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததற்குப் பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்து முடித்து இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய ஆட்சி கூறியது. இப்போது திடீரென முடிவை மாற்றிக் கொண்டு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் அடிப்படையிலேயே கொண்டு வர திட்டமிடுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை எந்த ஆய்வோ; ஆலோசனைகளோ இல்லாமல் உத்தேசமாக 50 சதவீதம் உயர்த்தப் போவதாக முடிவெடுத்திருக்கிறது; அதுவும் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த மக்கள் தொகையின் அடிப்படையில்! இதனால் இந்தி பேசும் உ.பி,பீகார் என்ற இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் 180 நாடாளுமன்ற இடங்கள் கிடைக்கின்றன. 5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து 195 நாடாளுமன்ற இடங்கள் தான்!

தென் மாநிலங்கள் 66 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கின்றன; வட மாநிலங்களுக்கு 142 இடங்கள் கூடுதலாக கிடைக்கின்றன . ஒன்றியத்தின் பிரதமராக வரும் கட்சிக்கு தென் மாநிலங்களின் ஆதரவே தேவையில்லை என்ற நிலை வந்துவிடும். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஏற்கனவே அனைத்து கட்சியினர் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாட்டின் ஒருமித்த எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் தனது முடிவை பாஜக ஆட்சி திடீரென்று மாற்றிக் கொண்டது ஏன்? அடுத்தடுத்து வர இருக்கும் தேர்தல் ஆதாயங்களுக்காகத் தான்! பெண்களுக்கான இட ஒதுக்கீடும் இதனால் பாதிக்கப்படுகிறது; ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் பெண்களுக்கான உள் இட ஒதுக்கீடுகளை எப்படி நிர்ணயிக்கப் போகிறார்கள்? சுழற்சி முறையில் ரிசர்வ் தொகுதிகளை நிர்ணயிப்பதற்கும் 2026 -27 இல் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் அடிப்படையாக கொள்ளப்படுவதால் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய தென் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை பின்பற்றாத வட மாநிலங்கள் கூடுதல் பெறுகின்றன. இந்தியாவின் ஆட்சி அதிகார அமைப்பிலிருந்து தென் மாநிலங்களை ஒதுக்கி வைக்கும் மிகப்பெரும் ஆபத்து இதில் அடங்கி இருக்கிறது. இந்த ஆபத்துகளை உருவாக்கும் முதலாளி மோடியே இதை சரி செய்து விடுவார் என்ற எடப்பாடியின் துரோகக் குரலை கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை இந்த துரோகத்தை மன்னிக்கவே முடியாது! தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் போராட்டம் தான் இந்த தேர்தல் களம் என்று முதல்வர் மு.க ஸ்டாலினின் முழக்கம் மேலும் மேலும் உறுதியாகிறது!

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.