அண்மையில் பிரதமர் மோடியின் கொத்தடிமையாகச் செயல்படும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் எட்டுவழிச் சாலை நிறைவேறியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

பாஜகவுடன் ‘மெகா’ கூட்டணி வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் எடப்பாடிக்குத் தெரியாது, அவரை ஒரு கிள்ளுக் கீரையாகத்தான் பாஜக வைத்திருக்கிறது என்று. அதனால்தான் பாஜக வின் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறார் அவர் இங்கே.

தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிக் கொண்டிருக்கிறது என்றும், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில், இருந்து போக்குவரத்து, சென்னையை நோக்கி அதிகமாக இருப்பதால், எட்டுவழிச் சாலை அவசியம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இதுவரையும் இதே மாவட்டங்களில் இருந்து தொழில், வர்த்தகம் இவைகளுக்கான போக்குவரத்தில் எந்த இடையூறும் இல்லாமல் இருந்து வந்துள்ளது என்பதை ஏன் எடப்பாடி உணரவில்லை.

இப்போது போக்குவரத்து வசதிக்காக என்று சொல்லிக் கொண்டு பல ஆயிரம் மரங்களை அழித்து, ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி இந்த எட்டுவழிச் சாலை அமைப்பதின் நோக்கம் மக்களுக்குப் புரிகிறது.

கார்ப்பரேட்டுகளுக்காக, அவர்களின் நலன்களுக்காக, சேலம் இரும்பாலையை வடவர்களுக்குத் தாரை வார்க்கவும், சேலம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தாது வளங்களை, வடநாட்டுக் கார்ப்பரேட்டுகள் கொண்டு போகும் வசதிக்காகத்தான் இந்த எட்டுவழிச்சாலை அமைக்கப்படுகிறது என்றும் மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

இது எதிர்காலத் தமிழகத்துக்கு நன்மை விளைவிக்காது, மாறாக தீமையில்தான் போய் முடியும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை மற்றும் அதன் கழிவு, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம் போன்றவைகளால் தமிழகத்தின் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதித்துக் கொண்டிருக்கிறது.

 இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத எடப்பாடி எட்டுவழிச்சாலை கொண்டுவர மத்திய அரசுக்குத் துணையாக இருப்பேன் என்று சொல்லி இருப்பது மக்கள் விரோதச் செயல், கண்டனத்துக்கும் உரியது.