"ஊடகங்கள் நமது சிந்தனையை முனைமழுங்கச் செய்து கொண்டிருக்கின்றன. உலகமயமாகி வரும் சூழலில் அனைத்தும் வணிகமயமாகிக்கொண்டிருக்கின்றன. கலை இலக்கியங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. நம் மொழி குறித்தும், இனம் குறித்தும், அதன் விடுதலை குறித்தும், அறம் சார்ந்த வாழ்க்கை குறித்தும் நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. சமகாலச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தவும் விவாதிக்கவும் நமக்கொரு களம் தேவை. போதி அதைச் செம்மையுறச் செய்யும். தமிழின் முன்னணிப் படைப்பாளிகள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், திறனாய்வாளர்கள் அனைவரையும் இது அறிமுகப்படுத்தும். இளம் படைப்பாளிகளைக் கூர்மைப்படுத்தும். சாதி, சமய, பொருளாதார, பாலின வேறுபாடுகளைக் களைந்து மனித நேயத்தைக் கட்டிக்காப்பதே போதியின் இலக்கு" எனத் தெளிவான வரையறையுடனும் கூர்மையான பார்வையுடனும் முன்னேறிச் செல்லும் ஒரு அமைப்பாக "போதி" தமிழ்ப் படைப்பாளர் சந்திப்பை 14-06-2008 காரிக் கிழமை அந்திப்பொழுதில் பள்ளத்தூர், பாணர்குடிலில் இயற்கைச் சூழலின் அழகு தவழ, மொட்டை மாடியில் நிகழ்த்தியது.
எழுத்தாளர் குமரன்தாஸ், கவிஞர் தமிழினியன், முனைவர் த.சித்ரா ஆகியோர் ஒருங்கிணைக்க, கவிஞர்-பேராசிரியர்-முனைவர் அரசமுருகு பாண்டியன் தலைமைதாங்கி விரிவான உரை நிகழ்த்தினார். அம்பேத்கரியம், பெரியாரியம் இவற்றின் பங்களிப்பு மேலும் கூர்மையாகப் பயன்படுத்தப்பட வேண்டிய காலகட்டத்திலும், மதவாத, ஏகாதிபத்திய கள்ள உறவால் நிகழும் ஒடுக்குமுறைகளிலிலிருந்து விழிப்பு பெற வேண்டிய நெருக்கடியிலும் சமூகம் பயணித்து வருவதை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. படைப்பாளிகள் "வெற்று நவீனத்தின்" முகத்திரை போர்த்தி வாளாவிருக்கும் நிலை மாறி, ஆதிக்கத்தின் முகத்திரை கிழிக்கும் அரும்பணியைத் தமது இலக்கியப் பங்களிப்பின் மூலம் நிகழ்த்த வேண்டியிருப்பதை வலியுறுத்தினார்.
பேராசிரியர் கோச்சடை, "கருத்துத் தளத்தில் மட்டுமல்லாது நிகழ்வுத்தளத்திலும் உண்மையான போர்க்குணத்துடன் செயலாற்றி வரும் பேராசிரியர் அரசமுருகுபாண்டியனின் இந்தப் "போதி"யமைப்பு மென்மேலும் வளரத் துணை நிற்போம்" என்று வாழ்த்தினார்.
"போதி", சமூக- இலக்கிய - அரசியல் தளங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பங்குப் பணியைச் செய்ய வேண்டும் என ஆலோசனைகளையும் வாழ்த்துதல்களையும் பரிமாறினார்கள் தோழர்கள் சிம்சன், குருசாமி மயில்வாகனன், மங்கை, பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர் முடியரசனின் புதல்வர் கவிஞர் பாரிமுடியரசன் ஆகியோர். குரூரமான யதார்த்தத்தை அப்படியே படம் பிடித்தார் எழுத்தாளர் பாலா அவரது உரையில். அம்பேத்கர் குறித்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கக்கூடிய சிறந்த சிந்தனையாளர் எக்ஸ்ரே மாணிக்கம் போன்றவர்கள் "போதி" அமைப்பு நகர வேண்டிய திசைவழி குறித்துச் சுட்டிக் காட்டினார்.
ஒரே நேரத்தில் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பரிமளிக்கக் கூடியதாயிருக்கிறது "போதி". எனவே, சொல்- செயல் இரண்டு களங்களையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செவ்வனே போதி நிகழ்த்த வேண்டும். மொழி குறித்த காத்திரமான பார்வையும் சமூகம் குறித்த தீவிரமான புரிதல்களும் இன்றைய படைப்பாளிகளுக்குப் "போதி" கொண்டு சேர்க்க வேண்டிய தேவையை வலியுறுத்தி நம்பிக்கை வெளியிட்டார் கவிஞர் தெ.வெற்றிச்செல்வன்.
இறுதியாக, தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வறிஞரும் தூய தமிழ்ச் சொல்லாக்க அகரமுதலிகள் துறைத் தலைவருமாகிய அருளியார் மிக விரிவான தமிழாய்வுரை நிகழ்த்தினார். சொல்லுக்குள்ளும் சொல்கடந்த நிலையிலும் தமிழ்க் குமுகாயம் மீது சுமத்தப்பட்ட அரசியலை அம்பலப்படுத்தினார்.
"மாந்த இனத்தின் அறிவுநிலை என்னென்ன கூறுகளிலெல்லாம் படிப்படியே வளர்ச்சியுற்றுள்ளது என்னும் தொல் பழங்கால வரலாற்றுப் படிவுகள் யாவற்றையும், நம் தமிழர்களால் இத்தமிழ்மொழியுள் உருவாக்கப்பெற்றுள்ள சொற்குவியல்கள் அழிக்கவே முடியாத ஆவணப் பதிவுகள் போலச் சுமந்துவைத்துக் கொண்டுள்ளன. சொற்களின் கருப்பகுதிகளில் அவை மிகத் துலக்கமாக விளங்குகின்றன. அறிவு ஆராய்ச்சிஇயலின் (Epistemology) ஒட்டுமொத்த பாடங்களும் தமிழ் மொழியுள் அமைந்துள்ள சொற்களின் அகப்பகுதிகளில் அடங்கிக் கிடக்கின்றன. மிகமிகப் பிந்தித் தோன்றிய மூவாயிரம் மொழிகளுள் ஓர் இருபத்தேழு மொழிகளினின்று சற்றேறக்குறைய ஓர் இருபத்திரண்டாயிரம் சொற்றொகுதிக் கணைகள், பல்வேறு அரசியல்-குமுகச் சூழல் அடிப்படைகளில் கடந்தியன்ற ஓர் ஈராயிரம் ஆண்டுக்கால அளவிடையில் இத்தமிழுடம்பில் தொடர்ந்து தைப்பெய்தின எனினும், அவற்றின் தாக்குரவுகளால் சாம்பாதும் கூம்பாதும் உயிர்த்தன்மையில் சற்றுஞ் சாறு குறையாதும் உள்ளது உள்ளபடியே உயிர்ப்புற்று நின்று, நிமிர்ந்து, நீடி, நிலவி வருவதற்கு இதன் இயற்கைத்தன்மையிலான உருவாக்கமும் கட்டமைப்புமே அடிப்படைக் காரணக் கருக்களாகுவன. தமிழ்ச் சொற்களின் அகப்பகுதிகளுள் ஓர் அறிவுமாந்தன் எப்படியெல்லாம் படிப்படியே தொடர் உழைப் பெடுத்துத் தன்னை நிறைவுபடுத்திக்கொண்டான் எனும் முழு வரலாறும் பதிவாகியுள்ளது," என மிக விரிவாக அமைந்தது அருளியின் உரை.
முதல் நிகழ்விலேயே "போதி" பார்வையாளர்களை ஈர்த்து ஓர் அசைவை ஏற்படுத்தியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தொடரும் "போதி"யின் பணிகள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
போதி - தமிழ்ப் படைப்பாளிகள் சந்திப்பு
- விவரங்கள்
- தெ.வெற்றிச்செல்வன்
- பிரிவு: கவிதாசரண் - ஆகஸ்டு 2008