“கவுந்து அடிச்சு படுத்தா என்ன அர்த்தம்?”

வழக்கத்திற்கு மாறாக மனைவியின் குரல். இரவு 12 நெருங்கிவிட்டது. அவளுக்கு வேலை முடித்து வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவளுக்குத் தூக்கம் வரும். கண்களைச் சுற்றிப் பார்த்தேன். இரண்டு மகள்களும் ஒரே பாயில் கிழக்கு நோக்கிப் படுத்து உறங்கி விட்டனர். பெரியவள் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுத வேண்டும். அடுத்தவள் ஏழாம் வகுப்பு.

மூத்தவள் இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளிக்கூடத்தில் ஏதோ விழாவாம். விழாவிற்குச் சிறப்பு விருந்தினர் வரவுள்ளனராம். அவர்களின் முன்பு 12 வெண்புறாக்களை உலக அமைதிக்காகப் பறக்கவிட வேண்டுமாம். அதற்கு வெண்மை நிறத்தில் உடைகள், காலணிகள், தொப்பி என பள்ளி ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட கடையைத் தேர்வுசெய்து அங்குதான் வாங்கவேண்டும். வேறு எங்கும் கிடைக்காது என அச்சமூட்டி, அவ்விழாவில் என் மூத்த மகளின் பெயரையும் சேர்த்துவிட்டு, விழாவில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தல். எங்களின் நிலைமையை யாரிடமும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. கூலிக்காரன் மகன் கூலிக்காரனாகத்தான் ஆக வேண்டும் என்பது பலரது வாழ்க்கையின் நிதர்சனம். யாரிடம் என் குறைகளைச் சொல்வது.

மனைவியிடம் சொன்னால் “துப்புக்கெட்ட மனுஷன். பெத்த பிள்ளைக்கு ஒரு டிரஸ் வாங்கிக் கொடுக்க முடியாதா? ஆனா பாரு. காலையில் 8 மணிக்கு வேலைக்கு கிளம்பினா.. ராத்திரி பதினோரு மணிக்குத்தான் வீட்டுக்கு வர்றது. என்னா உழைச்சு என்னா பெரிய...? உனக்கு வாக்கப்பட்டு வந்து என்ன சுகத்தைக் கண்டேன்” அவள் புலம்பல் அளவு மீறும்.

எனக்கு மிகப் பெரும் செல்வந்தரின் மருத்துவமனையில் அட்டெண்டர் வேலை. மாதம் பத்தாயிரம் சம்பளம். பேருக்குதான் மாத சம்பளம். தவிர லீவும் கிடையாது. மேல் வருமானமும் கிடையாது. பணிபுரியும் இடத்தில் ஏற்கனவே 40 ஆயிரம் கடன். பிள்ளைகள் படிப்புக்காக வாங்கியது. மாதாமாதம் கரெக்ட்டாகச் சம்பளத்தில் பிடித்தம் செய்து விடுவார்கள். எப்போதாவது யாராவது 50, 100 கொடுப்பார்கள். அதுவும் ஏதாவது ஒரு வகையில் செலவாகிவிடும்.

இன்று காலை நன்கு பழக்கமான ஆட்டோ தொழில் செய்வதோடு, வட்டிக்குவிடும் நண்பரிடம் கடனாகக் கேட்க,

“உனக்குத் தெரியாதது ஒன்னும் இல்ல. ரெண்டு வருஷமா பொழப்பே சரியில்ல. பணமும் சரியாக வரவில்லை. அடுத்தமுறை பார்க்கலாம்“ என்று கையை விரித்து விட்டான். அதுவும் டீக்கடையில் 4 பேர் எதிரில் சொன்னபோது மிகவும் அவமானமாகி விட்டது. என் கையாலாகாதத்தனத்தை எண்ணி நொந்து கொண்டேன்.

வழக்கமாக மருத்துவமனையின் உடைகளை மாற்றிவிட்டு, முகம் கழுவிக்கொண்டு சாப்பிடுபவன், இன்று வந்ததும் தலையணை எடுத்து துக்கம் மனதை நோகடிக்க தலையணையில் முகம் புதைத்துக் கொண்டேன். என் மனைவிக்கு வேலை முடிந்து வந்தவுடன் பேசாமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட வேண்டும். இல்லை என்றால் பேச்சுவாக்கில் சண்டை வரும். உடைகளை மாற்றிக் கொண்டு லைட்டை அணைத்துவிட்டுப் படுத்தேன்.

வீட்டு வாடகை, மளிகைச் சாமான்கள், தண்ணீர்க் கட்டணம் என கணக்கு எங்கெங்கோ இழுத்துச் சென்றாலும், என் மனைவியின் சாமர்த்தியம் மற்றும் நியாய விலைக்கடை மூலம் ஓரளவு சரி செய்து வந்தாள்.

பெரிய மருத்துவ ரிடம்தான் பணம் கேட்க வேண்டும். அவரிடம் விழாவிற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொண்டு, மூத்தவளுக்கு உடையும், பள்ளிக்கு நன்கொடையும் அளிக்க வேண்டும். உடல் அசதியால் படுத்தவன் அசந்துவிட்டேன்,

மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து வீட்டில் மனைவிக்குச் சிறிது உதவிகள் செய்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு பணிபுரியும் மருத்துவமனைக்குச் சென்று, அங்கு பணிபுரிபவர்களிடம் வழக்கமாகச் சொல்லும் வணக்கம் இன்றுமட்டும் நான் சொன்னது எனக்கே புரியவில்லை.

வேலைக்குச் செல்லும் முன்பு சொல்லி அனுப்பினார்கள்.

“இன்னும் நாலு நாள்ல டிரஸ் வாங்கி டீச்சர் கிட்டக் காட்டணும்“.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காலை உணவு கேன்டீனில் மூன்று இட்லி இலவசம். சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. எப்போதும் பத்து மணிக்கு வரும் மூத்த டாக்டர் இன்று வரவில்லை. எங்கோ அவசரம் என்று வெளியூர் சென்று விட்டாராம். என் தலையில் சம்மட்டியால் அடித்தது போன்ற வலி உணர்வு. அப்பா, மகன், மருமகள் என அனைவரும் மருத்துவர்கள். பெரியவர்தான் எனக்கு உதவி செய்வார். அன்பைப் பொழிவார். மகனுக்கும் மருமகளுக்கும் நான் வேண்டாதவன். யாரிடம் கேட்பது? உடைகளை வாங்குவது? துணிக்கடையின் போன் நம்பரில் விசாரித்ததில் இரண்டு ஆயிரம் ரூபாய் என்றதும் அமைதியாக போனை வைத்து விட்டேன்.

அன்று முழுவதும் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். புரியவில்லை. தடுமாற்றம். என் நிலையை எண்ணி மிகுந்த வருத்தம். என்ன செய்வது? யோசிக்க யோசிக்க... கதறவேண்டும். அழ வேண்டும் போல் இருந்தது. மருத்துவமனையில் ஊழியன் என்ற பெயரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

மருத்துவமனையின் வாசலில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து நின்றது. வயதான முதியவர் ஒருவர் மிகுந்த உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைக் கவனித்துக் கொள்ள யாருமில்லை. அவரின் மகனும், மகளும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டில் உயர்ந்த பணியில் உள்ளனராம். மருத்துவருக்கு உறவினராம். வேறு வழியில்லாமல் இரவும் பகலும் அவரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது.

மூன்றுநாள் இரவு பகல் பார்க்காமல், உறக்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். முதியவர் குணமடைந்து வீடு திரும்பும்போது, என் கையில் பணத்தைத் திணித்தார். அவரின் கண்களில் இருந்த பார்வை என்னிடம் பல விஷயங்கள் பேசின. முதியவரை அனுப்பிவிட்டு அவர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தேன். இரண்டாயிரம் ரூபாய் இருந்தது. மருத்துவமனையில் இருந்து குறிப்பிட்ட அந்தத் துணிக்கடைக்குச் சென்று உடைகளை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தேன். நடுஇரவில் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் உடைகளை கொடுத்துவிட்டு சாப்பிட்டுப் படுத்தேன். சந்தோசமாக இருந்தது.

அன்று விழா காலை 11 மணிக்கு. எனக்கு விடுப்பு இல்லை. பெரிய மருத்துவருக்கு உதவியாக அன்று அதிகமான பணிச் சுமைகள். அவரின் தயவால் மதிய உணவு இலவசம். மாலை காப்பி. அவருக்கும் சுகர் ஆம். அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவியின் முகத்தில் வாட்டம். மகள்களின் உறக்கம். சாப்பிட உட்கார்ந்த போது,

“11 மணிக்கு விழான்னு சொல்லிட்டு மதியம் 2 மணிக்குத்தான் ஆரம்பிச்சாங்க. மொத்தம் 12 புறா வாங்கி வச்சிருந்தாங்க. அதில் ஒன்னு மட்டும் நோவோ நொடியோ என்னமோ தெரியல... “

என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன ஆச்சு?...”

“ஒரு புறா செத்துப் போச்சு. அதுனால நம்ம மகளை ஓரமா இருன்னு சொல்லிட்டு மத்தவங்கள வச்சு உலக சமாதானம் என்கிற பேர்ல புறாவைப் பறக்க விட்டாங்க. அவ பாவம் ஏமாந்துட்டா...”

ஏமாந்தது மகள் மட்டுமா? என் மனம் மகளையும் புறாவையும் எண்ணி... எண்ணிக் கனத்தது.

- சிந்து சீனு

Pin It