அது
நிகழ்ந்த பிறகு
பூமியின் சுழற்சியே
நின்று விடுமோ
காற்றின் கவலை

பூமியைக்
காவல் காக்கிற
வேலையே வேண்டாம்
உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு
ஓடியே போனது
இருட்டு

சாதிய வன்மம்
காணச் சகியாது
கண்களைக் குருடாக்கி
குப்புறப் படுத்தது
வெளிச்சம்

மனிதர்களைத்
தீண்டுவதே மகாபாவம்
சபித்து விட்டு
நச்சுப் பைகளைத்
துப்பி விட்டு
புற்றுக்குள் புகுந்தன
பாம்புகள்

அடச் சீ
எச்சமிட்டுப் போயின
குருவிகள்.
அண்மைச் செய்திகளில்
முகம்காட்டித் திரிந்த
வாக்குப் பெட்டிகள்
அடுத்தத் தெருவுக்கு
ஆயத்தமாயின

ஊனப்படுத்தப்பட்ட
உண்மை
முனகித் தீர்ந்தது-
வாய்மையே வெல்லும்
மன்னிக்கவும்
சாதியே கொல்லும்

சத்தியத்தைத் தேடுவது
சாத்தியமே இல்லை
பிணத்தைப்
பத்திரப்படுத்து
நீதிமன்றங்களின்
மரண ஓலம்.

குருதி படிந்த
தண்டவாளக் கற்கள்
கொதித்துப் போய்
குரலெழுப்பியது
காலில் பிறந்தவனைத்
தலையில் அடித்தே
தண்டித்த மரணமே !
தோளில் பிறந்தவனை
என்ன செய்யப் போகிறாய்!!!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.