இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி.) அம்பேத்கர்-பெரியார் மாணவர் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா வெங்கும் இடதுசாரிகளும், திராவிட, தலித் இயக்கங்களும், இன்னபிற சனநாயக சக்திகளும் ஒரு பெரும் போராட்ட அலையை ஏற்படுத்தினர். இதன் விளைவாக அதன் நிர்வாகம் இந்த தடையை நீக்கியுள்ளது.

karl ambed periyar 600இந்த போராட்டம் ஒரு வகையில் மோடி அரசின் வகுப்புவாத அலைக்கு ஒரு சிறிய பின்னடைவு என்பதையும் மறுக்க முடியாது.

இன்னும் ஆதிக்க சாதியினரின், மேல்தட்டு பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள ஐ.ஐ.டி. தொடர்ந்து இதுபோன்ற இந்துமத வெறி கருத்துகளுக்கு ஆட்பட்டு வருவது ஒரு வரலாற்று உண்மை.

சில காலத்திற்கு முன்பு இதன் இயக்குனராக இருந்த இந்திரேசன் என்ற பார்ப்பனர், இட ஒதுக்கீடு ஐஐடியில் அமுலாக்கியதால்தான் அதன் தரம் தாழ்ந்து போய்விட்டது என்று வெளிப்படையாக அறிவித்தார். அதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு சைவ உணவு சாப்பிடுபவர்கள் அசைவ உணவு சாப்பிடுபவர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட முடியாது. எனவே தனியாக சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஐ.ஐ.டி.யில் இடம் ஒதுக்க வேண்டும் என்று இதன் நிர்வாகம் அறிவித்தது. இதனை ஒட்டித்தான் ‘துக்ளக்’ ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையின் அறிவிப்பில் ‘பெரியாரைக் கண்டித்த கம்யூனிஸ்டுகள்‘ என்ற தலைப்பிலும் அந்த பத்திரிகையின் உள்ளே ‘பெரியார் பற்றி ஜீவா’ என்ற தலைப்பிலும் செய்தி வெளியாகி உள்ளது.

1957ல் பெரியார் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்தியதைக் கிண்டல் செய்து ஜீவா பேசியதாக கூறப்படும் ஒரு உரையை ஸ்ரீவைஷ்ணஸ்ரீ அ. கிருஷ்ணமாச்சாரியா என்பவர் எழுதிய ‘எனது வாழ்க்கை பாதையின் கடந்த காலச் சுவடுகள்‘ என்ற நூலிலிருந்து எடுத்து வெளியிட்டதாக செய்திக் குறிப்பில் உள்ளது.ஆசிரியரின் பெயரைப் பார்த்தாலே எந்த நோக்கத்தில் ஆசிரியர் ஒரு செய்தியை வெளியிட்டு இருப்பார் என்பது புரியும்.

நம்மைப் பொறுத்தவரை துக்ளக்கின் நோக்கத்தையும் நன்கு அறிவோம். அதற்கு இந்த செய்தியை வெளியிட ஒரே நோக்கம்தான் உள்ளது. இப்போது இந்தியாவெங்கும் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும், அம்பேத்கர்- பெரியாருக்கு ஆதரவாக போராடுகிறார்களே இவர்கள்தான் அன்று பெரியாரை தாக்கிப் பேசினார்கள் எனவே இடது சாரிகளின் இந்தப் போராட்டம் போலியானது என்று கூறவிரும்புகிறது.

தொடர்ந்து அம்பேத்கரியவாதிகள், பெரியாரிய வாதிகள், கம்யூனிஸ்டுகளுக்கு இடையில் பல முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதும் சில சமயங்களில் இதுபோன்ற சில விரும்பாத வடிவங்களை மேற்கொண்டு விடுகிறது என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவர்களுக்குள் நடக்கின்ற இந்த விவாதங்களும் இவர்கள் ஒன்றாக எதிர்க்கும் இந்துமத பாசிச வெறியர்களுக்கு எதிரான போராட்டமும் ஒன்றாகுமா?

‘‘பூணூல் அறுப்பதால் சாதி ஒழிந்து விடுமா?” என்று தோழர் ஜீவா தனக்கே உரித்தான முறையில் கிண்டலாக கேட்பது போல் துக்ளக் குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைவிட இது உண்மை என்றே விசயத்தை அணுகுவோம். சாதி ஒழிப்புக் குறித்து இன்றுவரை கம்யூனிஸ்டு களுக்கும் அம்பேத்கரியவாதிகளுக்கும், பெரியாரிய வாதிகளுக்கும் இடையில் தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அம்பேத்கரிய, பெரியாரியவாதிகள் சாதி ஒழிப்பிற்கு பிரதானமாக கருத்தியல் போராட்டத் திற்கும், அது தொடர்பான நடவடிக்கைகளுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையில் கம்யூனிஸ் டுகள் சாதியின் இருப்பிற்கான பொருளாதார அடித்தளத்தை மாற்றுவதற்கு பிரதானமாக அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இங்கே ‘‘பிரதானம், பிரதானம்” என்று இரு தரப்பிலும் எழுதுவதன் நோக்கம் அம்பேத்கரியவாதிகளும் பெரியாரியவாதிகளும் பொருளியல்  அடித்தளத்தை மாற்றுவதற்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும், கம்யூனிஸ்டுகள் கருத்தியல் முக்கியத்துவத்தை புறந்தள்ளுபவர்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டத்தான். எனவே இவர்களுக்குள் நடைபெறும் விவாதம் வேறு.

goalvakhar sarva moosu 600ஆனால், ‘‘சாதிதான் இந்து தர்மத்தின் ஆணிவேர். வர்ணாசிரம தர்மம் அழிந்தால் லோகமே அழிந்து விடும்” என்று கூக்குரலிடும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிராக இந்த மூன்று பேரும் இணைந்து நடத்தும் போராட்டம் என்பது வேறு, விவாதம் என்பது வேறு.

புலி தன் குட்டியைக் கவ்வுவதற்கும், தனது இரையைக் கவ்வுவதற்கும் இடையில் எவ்வளவு வேறுபாடு உள்ளது.

சாதி ஒழிப்பு மட்டுமல்ல இன்னும் பல முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் இந்த மூன்று நீரோட்டத்தில் உள்ளவர்களும் பேசித் தீர்க்கவேண்டியவை நிறையவே உள்ளன.

ஆனால், சூறையாடும் முதலாளிகளுக்கு ஆதரவாக சிந்துபாடும் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு எதிரான இவர்களின் போராட்டம் என்பது வேறு என்பதைத்தான் ஐ.ஐ.டி. தொடர்பாக இந்தியா வெங்கும் நடைபெற்ற இடதுசாரிகள்,  அம்பேத்கரிய,பெரியாரிய சக்திகளின் கூட்டுப் போராட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த மூன்று நீரோட்டத்தினரும் பிளவுபட மாட்டார்களா? என்று ஏங்கியவர்களும் பிளவு படுத்தியே தீரவேண்டும் என்று தீவிரமாக செயல் பட்டவர்களும் இந்தக் கூட்டுப் போராட்டத்தால் வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு இந்தக் கூட்டுப் போராட்டம் கிலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிலியை வருங்காலத்தில் நாம் இன்னும் அதிகப்படுத்துவோம்.

Pin It