மார்ச்-8, பெண்கள் தினம் என்பது நமக்காக போராடிய மூத்தோர்களின் வீர வரலாறு என நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது கேள்வியே. காரணம், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் பெண்கள் தினம் கொண்டாடப்படுவது என்பது, கோலப்போட்டி அழகிப்போட்டி, நடனம், சமையல் போட்டி போன்ற போட்டிகளால் பெண்கள் தினத்தின் உண்மைகளை ஊடகங்களும் முதலாளிய நிறுவன விளம்பரங்களும் திட்டமிட்டே மழுங்கடிக்கின்றன.

மார்ச்-8 என்பது வெறும் உலக மகளிர் தினமல்ல, அதனை சர்வதேச உ¬¬ழைக்கும் பெண்கள் தினம் என்றே நாம் போற்ற வேண்டும். காரணம் 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நுற்றுக்கணக்கான பஞ்சாலை, தையல் ஆடைத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் உழைத்து வந்தனர். ‘அதிகாலை முதல் அந்திசாயும் வரை‘ என்பதே அன்றைய உழைப்பு நேரம். 12 முதல் 14 மணிநேரம் வரை உழைத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம். ஒரு நிமிடம் தாமதித்தால்கூட பெண்கள் வேலையை இழக்கும் சூழல்… குழந்தைகளுக்கு பாலூட்டும் உரிமைகள்கூட அன்று கிடையாது. இத்தகைய முதலாளியத்தின் கொடுஞ்சுரண்டலுக்கு ஓர் முடிவுகட்டும் நேரத்தை தொழிலாளர்கள் உணரத் தொடங்கினர்.

ஆண்களும், பெண்களுமென உரிமைக்கான போராட்டத்தைத் தொடங்கினர். பெண் தொழிலாளர்கள் லோவெல் உழைக்கும் பெண்கள் சங்கம் மூலம் முதன் முதலில் வேலையை புறக்கணித்து வீதிக்கு வந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை, எட்டுமணி நேர வேலை, சம ஊதியம், பால் கொடுக்கும் உரிமை, குழந்தைகள் காப்பகம், வேலைக்கேற்ற ஓய்வு ஆகிய கோரிக்கைகள் ஐரோப்பிய, அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் வெடித்தெழுந்தன. அதேசமயம், முதல் உலக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், லட்சக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக அணிதிரண்டனர். “யுத்தம் வேண்டாம், ரொட்டியும், ரோசாவும் வேண்டும்“ என வீதிதோறும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.

இறுதியில் 1912ல் நியூயார்க் நகர வீதிகளில் 20,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அமெரிக்க அரசின் குண்டாந்தடிகளில் காயமுற்று பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் உச்சத்தை எட்டியது தொழிலாளர்கள் பின்வாங்காமல் தங்களது கோரிக்கையை முன்னெடுத்தனர்.. அதன்பின்தான் பிரட்டிஷ் கவுன்சில் கோரிக்கையை ஏற்று எட்டுமணி நேரத்தை சட்டமாக்கியது. (இப்போராட்டத்தை வழிநடத்திய ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சின் தலைமைத் தோழர் கிளாரா ஜெட்கின் மார்ச்-8 என்பதை உழைக்கும் பெண்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதை முன்மொழிந்தார்.) ஆக மார்ச் - 8 என்பது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல, பலரின் தியாகங்களை, நமது உரிமைகளில் வெற்றிபெற்றதை நினைவூட்டும் நாள், நாம் நமது உரிமைக்காக போராடுவதை உணர்த்தும் நாள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்து நமது சமூகத்தில் பெண்களின் நிலை என்ன? என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் சமூக உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனால் இலட்சக்கணக்கானப் பெண்களும் ஆண்களும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கொண்டு வரப்பட்டனர். நகரங்களில் வாழ்ந்த பெண்களும் சமூக உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டனர். அதே நேரத்தில், முதலாளித்துவம் ஆண்களுக்கு இணையான கூலி கொடுக்காமல் பெண்களின் உழைப்பிலிருந்து கூடுதல் சுரண்டல் நலனை அடைகின்றது. குழந்தைகளுக்கு அடுத்தபடியாக சுரண்டாலுக்கான எளிய இலக்காகப் பெண்கள் இருக்கிறார்கள். சுமங்கலித் திட்டம் போன்ற கொத்தடிமைத் திட்டங்கள் பெண்களை இலக்காகி நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது இதற்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

உழைக்கும் பெண்கள் அமைப்பாவது இன்றைய உடனடி அவசரத் தேவையாக இருக்கிறது. கல்விக்காகவும், வேலைக்காகவும் வீட்டை விட்டு வெளியில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை அன்றாட நிகழ்வாக இருக்கிறது. பாலியல் வன்முறைகளும் சீண்டல்களும் முன்னெப்போதும் இல்லாததைவிட சமூகத்தின் கவனத்தைப் பெற்றுள்ளது. சமூக உற்பத்தியில் பெண்கள் ஈடுபடும் பொழுதும்கூட குடும்ப சுமையில் இருந்து சிறிதும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். குடும்ப வன்முறையில் வரதட்சணைக் கொலை, வறட்டுக் கெளரவக் கொலை என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது. எனவே, பணியிடம், பொது வெளி, குடும்பம் என்ற மூன்று தளங்களிலும் உழைப்புச் சுரண்டலுக்கு, சமத்துவமின்மைக்கும் எதிராகப் போராட உழைக்கும் பெண்கள் நாளில் உறுதி ஏற்று ஒவ்வொரு ஆண்டும் சிறு முன்னேற்றத்தையாவது அடைய வேட்கை கொள்ள வேண்டும்.

Pin It