இருபத்தியேழாவது சிகரெட்டை காலால் நசுக்கிக் கொண்டே தாடியை "வரட் வரட்'டென்று சொறிந்தான் ஓவியன். முதல்கோடு தொடங்கும் புள்ளி விழவே இல்லை என்ற எரிச்சல். சொறிந்ததில் முகத்திலும் எரிச்சல். இலக்கிய இதழுக்கு அட்டைப்படம் வரைந்து அனுப்ப வேண்டும். வழக்கமாக பரணில் கிடக்கும் பழைய கோடுகளை தூசித் தட்டி அனுப்புவான். இந்த இதழாசிரியர் புதிதாக வரைந்துதான் அனுப்பவேண்டும் என்று அடம்பிடிக்கும் ஆள். என்ன வரைவது? தாடியிலிருந்து ஒவ்வொரு முடியாக பிய்த் தெறிந்தும் எதுவும் தட்டுப்படவில்லை. ஆசிரியர் சொன்ன கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவும் அவனுக்கு மனம் ஒப்ப வில்லை. ஓவியம் வருகிறதோ இல்லையோ நல்ல கலைஞனுக்கு கர்வம் வரவேண்டும். அது படைப்புலக விதி. இயல்பாகிவிட்ட சோம்பேறித்தனம் துணைவிதி. மேசை மீதிருந்த மதுக்குவளையை எடுத்து உறிஞ்சினான் திருக்குவளை ஓவியன்.

தீவிர சிந்தனை இருபத்தி யெட்டாவது சிகரெட் வேண்டுமென்றது. பற்றவைத்து ஆழமாக இழுத்தான். மெல்ல மிகமெல்ல புகையை வெளியேற்றினான். இதுவும் தியானம்தான். ருத்ராட்சக் கொட்டையையும், படிகமணியையும் எண்ணுவதற்குப் பதிலாக சிகரெட்டை எண்ண வேண்டும்.

ஒரு கட்டத்தில் எண்ணிக்கை கடந்து... எண்ணுதல் நின்று எதுவுமற்ற நிலை வாய்த்துவிடுகிறது. பேரானந்தம். நுரையீரல் நிறம் மாறுவது பற்றி அவனுக்கு கவலை இல்லை. நுரையீரல் பஞ்சு போன்று மென்மையானது என்று அடிக்குரலில் பயமுறுத்தும் முயற்சி அவனிடம் பலிக்கவில்லை.

வண்ணங்கள் மாறுவதுதான் வாழ்க்கை. வாழ்க்கை வண்ணமயமாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கறுப்பு வெள்ளையாகவும் இருக்கலாம். பழைய வண்ணங்கள் உதிர்ந்து புதிய வண்ணங்கள் புலப்டுவதும் தவிர்க்க இயலாதது. நுரையீரல் தன் நிறத்தை இழந்து கருமை படர்ந்த சாம்பல் நிறமாவதை ஏன் தடுக்க வேண்டும்? யார் பிழிந்துப் பார்க்கப் போகிறார்கள்? அதுவும் ஒரு கலைஞனின் நுரையீரலை!

சிகரெட் வெள்ளை. புகையிலை பழுப்பு. நெருப்பு சிவப்பு. விழுந்த பிறகு சாம்பல்.

வெற்றிலை பச்சை. சுண்ணாம்பு வெள்ளை. மென்றுத் துப்பினால் சிவப்பு.

கருப்பும் சிவப்பும், வெள்ளையும், பச்சையும், நீலமும் மாறிமாறி இறுதியில் நிறங்களற்ற நிலை எய்தப்படும்.

தலையை உதறிக்கொண்டான். கண்களில் பூச்சி பறக்கிறது. புத்தி எங்கெங்கோ பறக்கிறது. என்ன வரைவது? பிடிபடவில்லை. வர்க்கப்போராட்டத்துக்கு வடிவம் கொடுத்தால் என்ன? பழைய சித்தாந்தம்தான் என்றாலும் இன்னும் தீர்ந்துவிடாத தீவிரத்தோடு எங்கும் நிறைந்திருக்கிறது. எல்லாப் பிரிவினை களுக்கும் மூலாதாரமாக எல்லா இடங்களிலும் எல்லா வடிவங்களிலும் படர்ந்திருக்கிறது.

அதை ஒற்றைச் சின்னமாக வடிப்பது அதை ஒழிப்பதற்கு சமமான சவால். கிட்டதட்ட ஒரு நூலின் முனையை பிடித்துவிட்டதைப் போல தனக்குத்தானே தலையாட்டிக்கொண்டு வரைபலகையை திரும்பிப்பார்த்தான். அதுவரை அறையில் மினுக்கிக் கொண்டிருந்த ட்யூப்லைட் அணைந்தது. மின்வெட்டு. பெருமூச்சு விட்டான்.

அவனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. கண்களை சோர்வாக்கும் மங்கிப் போன வெளிச்சம்தான் இவ்வளவு நேரம்தன்னை புறஉலகுக்கும் சிந்தனை உலகுக்கும் இடையில் நிறுத்தி வைத்திருந்தது என்று நினைத்துக் கொண்டான்.

வெளிச்சம்தான் வேறுபாடுகளை உருவாக்குகிறது. ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இருள், பிரிவினை காட்டாது. அழகு தெரியாது. அழுக்கு தெரியாது. எல்லாமும் கறுப்பு. எல்லாரும் கறுப்பு. கறுப்பு சமத்துவமானது. கரைந்து காணாமல் போய்விடலாம்.

வாசகர்கள் மன்னிக்கவும். இது இந்த ஓவியனைப் பற்றிய கதையல்ல. அவன் வரையப்போகும் ஓவியத்தை குறித்ததுமானதுமல்ல. உங்களுக்கு ஓவியன் மீது கவனம். அவனுக்கு ஓவியத்தின் மீது கவனம். அவரவர்க்கு அவரவர் காரியம் முதன்மையானதாக மாறிவிட்ட நாளில் நம்மால் இவ்வுலகில், நம்மைத் தவிரவும் கவனிக்கத்தக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன, யாராலும் கவனிக்கப் படாமலே. இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. மனிதனையும் உள்ள டக்கியது.

ஓவியன் இருபத்தியொன்பதாவது சிகரெட்டை கொளுத்திய அதே தீக்குச்சியைக் கொண்டு ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றினான். துணுக்கு போல தலைதூக்கிய சுடர் மெல்ல வளர்ந்து சடாரென நிமிர்ந்து ஓவியனைப் பார்த்தது. இடதும் வலதுமாக அசைந்தது. அது என்னவோ சொல்ல நினைக்கிறது. என் வாழ்க்கையில் ஒளியேற்றியமைக்கும் நன்றி என்கிறதா? இல்லை அநியாயமாக என்னை கொளுத்தி விட்டாயே என்று அழுது புரள்கிறதா? ஓவியனுக்கு அதுபற்றி யெல்லாம் பிரக்ஞை இல்லை. இதை யெல்லாமா மேதைகள் கவனிப்பார்கள்? சக மனிதனையே கவனிக்க முடியாதவர்கள்.

சிகரெட்டை இடது கை விரலிடுக்கிலும் மெழுகுவர்த்தியை வலது கையிலும் பிடித்தபடி ஒரு கொசுவர்த்தியை எடுத்தான். சிகரெட்டை உதட்டில் பொருத்திவிட்டு மெழுகுவர்த்தியால் கொசுவர்த்திக்கு கொள்ளி வைத்தான். துடித்துத் துள்ளிய கொசுவர்த்தியின் முனை கறுத்து மெல்ல மெல்ல சிவந்து வெள்ளைப் புகையாக வெளியேறியது. அதன் உயிராக இருக்கலாம்.

ஒரு தீக்குச்சி அங்கே மூன்று கொலைகளை நிகழ்த்திவிட்டு தானும் இறந்து கிடந்தது. நான்கு துர்மரணங் களுக்கும் தான் காரணமானது தெரியாமல் புகைத்தபடி தன்வேலையில் முனைப் போடு இருந்தான் மனிதன். அவனைப் பொறுத்தவரை தீக்குச்சி மூன்று நெருப்பு வடிவங்களை பிரசவித்திருக்கிறது. சிகரெட், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி. அவை ஜடப்பொருட்கள் அவ்வளவுதான்.

ஓவியன் தன் பிரசவத்துக்கு தயாராக கால்களை அகட்டி நின்றுகொண்டு தூரிகையை அசைத்தான். மெழுகின் வெளிச்சம் ஒரு மோனநிலையை தந்து கொண்டிருந்தது. அரை வெளிச்சம் எப்போதும் கிறக்கமாக இருக்கிறது. கிறக்க நிலையில்தான் எல்லாப் பிரசவங்களும் நிகழ்கின்றன. அவன் இவ்வுலகிலிருந்து வெளியேறிவிட்டான். ஆனால் உலகம் விழித்திருக்கிறது. அறையெங்கும் கொசுவர்த்தியின் உயிர், புகையாக பரவியிருந்தது. சின்னஞ்சிறு உயிர்களை மயக்கி வீழ்த்தும் பரவல். மெழுகு மெல்ல நளினமாக அசைந்தாடிக் கொண்டிருந்தது. அதற்கு தன் மரணமே கொண்டாட்டமாக இருக்கிறது. சிகரெட் தன்னைத் தின்றுக் கொண்டிருப்பவனை தானும் தின்று கொண்டிருந்தது.

தன் அனுமதியின்றியே தன் வாழ்நாளை முடிவு செய்யும் மனிதனின் ஆணவப்போக்கும் ஆதிக்க குணமும் உண்டாக்கிய கோபத்தோடு சிவந்து கொண்டிருந்த கொசுவர்த்தி தனது குமுறலை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்போடு மெழுகு வர்த்தியைப் பார்த்தது. மெழுகு வர்த்தி இந்தப்பக்கம் திரும்புவதாக இல்லை. கொசுவர்த்தி அன்போடு அழைத்தது.

“நண்பா!''

மெல்ல அசைந்து சுற்றிலும் தேடிப் பார்த்த மெழுகுவர்த்தியின் சுடர் உற்றுக் கவனித்தது.

“யாரது?''

“நாந்தான் நண்பா! கொசுவர்த்தி! இங்க பாரு''.

சுடர், கொசுவர்த்தியை திரும்பிப் பார்த்தது.

“என்னது? நான் உனக்கு நண்பனா?''

மெழுகின் அலட்சியத்தை கவனித்த கொசுவர்த்தி பொறுமையாகச் சொன்னது.

“ஆமா, அழிவின் விளிம்பிலிருக்கும் நமக்கு வேறு யார் நட்பாகவும் உறவாகவும் இருக்க முடியும்? நம் இருவருக்குமே பொதுவான எதிரிகள் இரண்டு பேர். முதல் எதிரி மனிதன். இரண்டாவது எதிரி நெருப்பு''.

மெழுகுச்சுடர் அசையமாலிருந்தது.

“அதனால நாம் ரெண்டு பேரும் நட்பாக முடியுமா?''

“ஏன் முடியாது?'' புரியாமல் கேட்டது கொசுவர்த்தி.

கர்வத்தோடு மெழுகு சொன்னது “நான் சைவம். நீ அசைவம்!''

கொசுவர்த்தியின் முகம் கோபத்தால் மேலும் சிவந்தது. கோபம் ஏறஏற தன் ஆயுள் குறையும். வாழ்க்கை விரைந்து முடியுமென்று தெரிந்தாலும் அதனால் இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிவக்காமல் இருக்க முடியவில்லை. ஆத்திரத்தோடு கேட்டது.

“அழியப் பிறந்தவர்கள் நாம். நமக்குள்ளும் சைவம் அசைவம் என்ற பிரிவா?''

படபடப்பின்றி மெழுகு நிதான மாகச் சொன்னது.

“உன்னோடு என்னை சேர்க்காதே. நான் அழியப்பிறந்தவன் இல்லை. வாழ வைக்கப்பிறந்தவன்!''

மெழுகின் கர்வத்தை எப்படி கலைப்பது என்று புரியாமல் கொசுவர்த்தி, “உன்னை எரித்து உருக்கிக் கொள்வதால் உன் வாழ்வு முடிந்து போகிறதே, அது உனக்குப் புரியலையா?'' என்றது.

“இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு கௌரவம் இருக்கிறது. உங்களைப் போல இல்ல''.

கொசுவர்த்திக்கு தடுமாற்றம். “ஏன் நாங்கள் எந்தவிதத்தில் குறைந்தவர்கள்?''

“மெழுகுவர்த்தி என்று சொல்லும் போதே மென்மையும் தூய்மையும் எனக்கு இருக்கிறதே. உன் பெயரைச் சொல்லும் போது அப்படி மென்மை இல்லையே. உன்னை மாதிரியே கடினமும் உயிர்களைக் கொல்லும் தன்மையும் தெரிகிறதே?''

கொசுவர்த்திக்கு அதிர்ச்சி. இப்படி கூடவா யோசிக்க முடியும் என்று திகைத்தது.

“ஹ்ம். மனிதர்களோடு புழங்கியதால் வந்தவினை. உன்னை எப்படி யெல்லாம் யோசிக்க வைக்கிறது பார். அதனால்தான் அவர்கள் நம்மைக் கொண்டே நம்மை அழிக்கிறார்கள். நண்பா, எங்கள் இனம் தோன்றுவதற்கு முன்பே உனது இனம் உருவாகியிருந்தாலும் நாம் எல்லோரும் காலம்காலமாக எரிந்து கொண்டுதானிருக்கிறோம். மனிதன் நம்மை எரித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனது சுயநலம் அடங்காதது. ஒரு மரத்தை அழித்து கோடி தீக்குச்சிகள் செய்யும் மனிதன் அதிலிருந்து ஒரே ஒரு தீக்குச்சியை எடுத்து காட்டையே கொளுத்துகிறான். தனக்காக எதையும் அழிக்கத் தயங்காதவன் அவன். நாம் இருவருமே அவனால் அழிக்கப் படுகிறோம். எரிந்து அழிவதற்குள் என்ன வேறுபாடு? நம்மை எரிக்கும் நெருப்பு கூட நம்மை சமமாகத் தானே எரிக்கிறது. நாமெல்லாம் ஒரே வர்க்கம்தான் நண்பா''.

“அய்யோ அய்யோ'' என அங்குமிங்கும் அலைந்த சுடர் வேகமாக படபடத்து மறுப்பை வெளிப்படுத்தியது.

“நாம் ஒரே வர்க்கமா? நீயும் நானும் சமமாக வாய்ப்பே இல்லை. நான் உயர்ந்தவன் என்பதற்கு அடையாளமாக என் உடம்பில் நூல் இருக்கிறதே, அது உனக்குப் புரியலியா?''

கொசுவர்த்தி நொந்து நூலானது. “நாசமாப்போச்சு. அந்த நூல்தான் உன் மரண தண்டனையை நிறைவேற்றுகிறது. புரிந்துகொள் நண்பா! நூல் தூக்கி படித்தவனை நம்பலாம். நூல்தூக்கிப் பிடித்தவனை நம்பலாகாது. உன் உடம்பில் இருப்பது உன்னையே அழிக்கும் திரி. உனது எதிரி என்பதை புரிந்துகொள்''.

மெழுகுக்கு சற்றே குழப்பம். இருந்தாலும் பிடிவாதம் தளரவில்லை.

“சரி அப்படியே இருக்கட்டும். நானிருக்கும் இடத்தில் வெளிச்சம் பரவுகிறதே, பிறருக்காக எரிவது எனக்கு பெருமைதானே? அந்த ஓவியனை பார். என்னுடைய உதவியால்தானே வரைகிறான். அந்தப் படைப்புக்கே மூலகர்த்தாவாக நான் இருக்கிறேன். நீ ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் நான் உன்னைவிட உயர்ந்தவன்தான்''.

தன் ஆயுளில் பாதி தீர்ந்து விட்டாலும் அயர்ந்துவிடவில்லை கொசு வர்த்தி.

“இதுதான், நம்மிடையே நிலவும் இந்தப் போக்குதான், நம்மை பிரித்தாள் பவருக்கு சாதகமாக இருக்கிறது. நன்றாக யோசித்துப்பார் நண்பா! உன்னால் மட்டும்தான் உலகுக்கு வெளிச்சம் கிடைக்கிறதா? தன்னைவிட எதுவுமில்லை என்பது ஆணவமில்லையா? அறிவியல் உலகில் உன்னைவிட பிரகாசமான வெளிச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டன என்பது உனக்குத் தெரியாதா? ஓவியனுக்கு நீ ஒளி தரவில்லை யென்றாலும் அவனால் வரையமுடியும். நான் கொசுக்களிடமிருந்து அவனைப் பாதுகாத்து கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்கிறேனே... உன்னைப்போல் நான் பெருமை பேசவில்லையே''.

மெழுகுக்கு மெல்ல உண்மை புரியத் தொடங்கியது என்றாலும் குணம் மாறவில்லை.

“உயிர்களைக் கொல்வதில் பெருமைப்பட என்ன இருக்கிறது. கொசுவும் ஒரு பிறப்புதான். மனித ரத்தம் உறிஞ்சுவது அதன் இயல்பு வாழ்க்கை. மனிதனும் நெருப்பும் எதிரிகள் என்று சொல்லும் நீ ஏன் கொசுவை எதிரியாக நினைக்க வேண்டும்?''

மடக்கிவிட்ட பெருமையோடு பார்த்தது சுடர். கொசுவர்த்தியும் விடவில்லை.

“நல்ல கேள்விதான். நானும் ஒரு வாதத்துக்காகக் கேட்கிறேன். நீ காற்றைக் கண்டு அஞ்சி நடுங்குகிறாயே? காற்றை உன் எதிரியாகக் கருதுகிறாயே? காற்றின் இயல்பு வாழ்க்கையை நீ ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? உலகுக்கு மூச்சாக இருக்கும் காற்று உன் கதையை முடித்து விடுவதால் தானே?''

ஆடிப்போன மெழுகு, ஆடாமல் அசையாமல் மௌனமாக நேர்க்கோடாக நின்றது. சமாதானப்படுத்தும் நோக்கத் தோடு கொசுவர்த்தி,உன்னை காயப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை நண்பா. ஒளி கொடுப்பதாக நீ பெருமை கொள்கிறாய். கவனம் சிதறாமல் நான் காப்பாற்றுகிறேன்.

ஆனால் நாம் இருவரும் எங்கே இருக்கிறோம்? நல்லது செய்யும் நம்மை விலக்கி வைத்திருக்கும் மனிதன், தன்னை அழிக்கும் சிகரெட்டை எவ்வளவு நெருக்கமாக வைத்திருக்கிறான். உன்னையும் என்னையும் ஒரு மூலையில் வைப்பவன், சிறுகச்சிறுகக் கொல்லும் எமனுக்கு உயர்ந்த இடம் தருகிறான்.

மனிதன் நல்லதை அருகில் சேர்க்க மாட்டான். அழிப்பதை அணைத்துக் கொள்வான். யோசித்துச் சொல். ஒளி கொடுத்ததற்காக, என்றைக்காவது நீ எரிந்து முடிந்தபிறகு உனக்கு அஞ்சலி செலுத்தி யிருக்கிறானா? அல்லது நீ எரிந்து கொண்டிருக்கும்போதே உனக்கு நன்றி சொல்லியிருக்கிறானா? நீ கொடுத்த ஒளியை பயன்படுத்திய மனிதன் நீ இல்லாது போனதும் உனக்காக வருந்தியிருக்கிறானா? நீ இல்லையா? வேறொரு வசதி. வேறு பொருள்.

வேறு வாழ்க்கை. நாமெல்லாம் உயிரற்ற பொருட்கள் என்ற அலட்சியம் அவனுக்கு. நாமெல்லாம் அவனது வாழ்க்கையில் ஓர் அங்கம் என்பதை ஒருபோதும் அவன் நினைவில் கொள்வதே இல்லை. இந்தச் சமூகத்தில் அவனும் ஒரு துகள் என்பதைக் கூட அவன் உணர்வதில்லை''.

மெழுகுவர்த்தியின் சுடர் முதல் முறையாக மேலும் கீழும் அசைந்து ஆமோதித்தது.

“என் பெயர் மாதிரியே நானும் கடினமாக இருப்பதாகச் சொன்னாயே, என்னை தனக்காக வடிவமைத்த அதே மனிதன் எனக்குக் கொள்ளியும் வைத்தான். அதே கையால்தான் உனக்கும் கொள்ளி வைத்தான். அவனைவிடவா நான் கடினமாக இருக்கிறேன். தன்னுடைய வாழ்க்கை வசதிக்காக, பதவி சுகத்துக்காக, பிழைப்புக்காக எதிரியோடு சேர்ந்து கொண்டு சொந்த இனத்தையே கூண்டோடு அழிக்கும் துரோகக்குணம் மனிதனுக்கு மட்டும்தான் இருக்க முடியும். அந்த மனிதனைவிடவா நான் கேவலம்?''

சுடர் திகைத்துப் போய் பார்த்தது. கொசுவர்த்தி தொடர்ந்தது.

“ஒரு விஷயத்தை மறந்துவிட்டாயே நண்பா. நம்மைப் போன்று பிறருக்காக உழைத்து அழிகின்ற வர்க்கத்தில் இந்தப் பிரிவினை எப்போதும் இருப்பதால்தான் நாம் அழிபவர்களாகவே இருக்கிறோம். நம்மை அழிப்பவர்கள் நம்மை ஆள்கிறார்கள். நமக்குள் பிரிவினை இருக்கும் வரை நாம் அழிந்து கொண்டு தான் இருப்போம்''.

எரிந்து கனன்று கொண்டிருந்த கொசுவர்த்தி முழுவதுமாக வாழ்வை இழக்கப்போகும் கடைசி நேரத்தில், புகையை அதிகமாக வெளியேற்றி தவிக்கிறது.

சுடர் தடுமாற்றத்தில் ஆடுகிறது. இறுதிமூச்சு வாங்கப் பேசுகிறது கொசுவர்த்தி.

“இதோ என் வாழ்க்கை முடியப் போகிறது. என்னை விலை கொடுத்து வாங்கியவனுக்காக நான் எரிந்து முடிகிறேன்''.

“எனக்கென்று ஒரு வாழ்க்கை எப்போதும் இருந்ததில்லை. மனிதனின் சுயநல நெருப்பு என்னைத் தின்று தீர்த்து விட்டது. என்போன்று எத்தனையோ பேர் நாள்தோறும் எரிந்து சாம்பலாகிறோம். ஆனால் எங்களுக்காக வருத்தப்படவும், நன்றி கூறவும் ஒரு மனிதனும் இதுவரை நினைத்ததில்லை, நண்பா...''

மெழுகின் சுடர் அவசரமாக படபடத்தது.

“என்னை நீ கடைசி வரை நண்பனாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. நான் உன்னை “நண்பன்'' என்று அழைத்ததில் பொய்யில்லை.

உதட்டளவில் “நண்பா'' என்று அழைத்துக் கொண்டே எதிரிக்கு சைகை காட்டவும், தோளில் கை போட்டுக்கொண்டே காலை வாரி விடவும் நான் மனிதனில்லை. நண்பா, என் ஆற்றாமையை உன்னிடம் கொட்டிவிட்டேன். ஓவியன் உன் தலையில் இட்ட தீ உன்னை உருக்கிக் கொண்டிருக்கும் போதும், சூட்டை தாங்கிக் கொண்டு என் பேச்சை கேட்டாயே உனக்கு நன்றி! நான் போகிறேன்! உனக்கு நன்றி சொல்லாமல் அடங்கிவிட்டால் என் சாம்பல் காற்றில் கூட கரையாது. நானும் மனிதன் போல நன்றி மறந்தவனாவேன். நன்றி நண்பா!''

கொசுவர்த்தி இறுதியாக சிவந்து புகைக்க, வேதனையில் அலைந்து துடித்தது சுடர்.

“நண்பா, நண்பா. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல். என் அகங்காரத்தையும், அறியாமையையும் நீக்கி உண்மையான ஒளியேற்றிய என் நண்பனே... நான் என்ன செய்ய வேண்டும்?''

கொசுவர்த்தி மகிழ்ச்சிப் பெரு மூச்சில் தன் இறுதி நொடியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சொன்னது.

“நமக்குள் யார் பெரியவன் என்ற சண்டையால் நம் வர்க்கம் அழிந்தது போதும். தான் வாழ பிறரை அழிப்பவர்கள், வஞ்சிப்பவர்கள் அழிய வேண்டும். அவர்கள்தான் அழிய வேண்டும். நாம் அழிந்தது போதும். போதும்''.

முனகியபடியே கொசுவர்த்தி முழுமையாக சாம்பலாகி விழுந்தது.

சுடர் துடிதுடித்து அங்குமிங்கும் அலைபாய்ந்தது. சாம்பலைப் பார்த்து கதறியது.

“அய்யோ நண்பா... நான் உண்மையை புரிந்து கொண்டேன் என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் போய்விட்டாயே. எங்கும் இருளை அகற்றுகிறேன் என்ற திமிரோடு எனக்குள் இருந்த இருளை நீங்கி எனக்கே ஒளி கொடுத்துவிட்டு போய்விட்டாயே நண்பா''.

தானும் கரைந்து உருகி அழியப் போகும் நிலையில் இருப்பதை மறந்து அரற்றித் தவித்தது சுடர்.

“என் வாழ்க்கையும் முடியப் போகிறது நண்பா... நானாக எரிந்து முடியும் வரையில் என்னால் காத்திருக்க முடியாது. சுயநலமனிதனுக்காக எரிந்து அனைவதை விட எனக்குள் சுடர் எழுப்பிய உனக்காக நான் அணைகிறேன்''.

சுடர் படபடவென அடித்துக் கொண்டது. சட்டென்று நிமிர்ந்து நின்று யோசித்தது. கொசுவர்த்தி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

“தான் வாழப் பிறரை அழிப்பவர்கள், தனக்காக மற்றவரை வஞ்சிப்பவர்கள் அழிய வேண்டும்''.

மெழுகுவர்த்தி தன்னை திடப் படுத்திக்கொள்ள முயன்றது. முடியவில்லை. அதன் வாழ்க்கையும் இறுதி நேரத்தை எட்டிவிட்டது. உருகி வழிந்துகிடக்கும் உடல்பகுதிகளுக் குள்ளிருந்து எஞ்சிய உயிரை மிச்சப்படுத்தி பார்த்தது.

ஓவியத்தை வரைந்து முடித்த ஓவியன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏற்கனவே குடித்துவிட்டு வைத்திருந்த மதுவை கையில் எடுத்தான். ஒரு மடக்கு குடித்துவிட்டு மீதியை மேசையில் வைத்தான். நேற்று மிச்சமிருந்த உறுகாயை எடுப்பதற்காக நகர்ந்தவன் கொசுவர்த்தியின் சாம்பலை காலால் எத்தித் தள்ளினான்.

மெழுகின் சுடர் அங்குமிங்கும் அலைந்து துடித்தது. “ஏய் ஏய்... வேணாம்... அது என் நண்பனின் அஸ்தி'' உருகி உருகி அழுதது, அவனுக்குக் கேட்கவில்லை.

அழுது அழுது உருகிய மெழுகு வர்த்தி இயலாமையோடு தன் இறுதி சுவாசத்தை இழுத்து நிறுத்திக் கொண்டது. சுடர் அடங்கி வெண்புகை வெளியேறியது. ஓவியன் புகைந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை நெருங்கினான். உருகி மேசையோடு ஒட்டிக் கிடந்தவற்றைச் சுரண்டி சுவரோரம் எறிந்துவிட்டு வேறொன்றை எடுத்துக் கொளுத்தினான். துணுக்குப்போல தொடங்கி சட்டென நிமிர்ந்து ஓவியனை முறைத்தது சிவந்த சுடர். அதன் உதவியோடு கொசுவர்த்தியின் சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் ஒரு கொசுவர்த்தியை எடுத்து மெழுகுச் சுடரில் கொளுத்தி இரண்டையும் பழையபடி அதனதன் இடங்களில் வைத்தான். இடது கையில் சிகரெட்டும் வலது கையில் மதுக்கிண்ணமுமாக நின்றவன் போதையில் தடுமாறி மேசையில் இடித்துக்கொண்டான். வலி பொறுக்காமல் கீழே உட்கார்ந்தான். மேசைமீதிருந்த மது கவிழ்ந்து பரவி ஓடியது. சாய்ந்து விழுந்த மெழுகுவர்த்தியும், கொசுவர்த்தியும் குப்பென்று பற்றிக்கொள்ள, அறையெங்கும் பரவியது தீ.

Pin It