எங்கள் முன்னத்திஏர் கி.ரா. குறித்து விரல்சுட்டிப் பேசுவது சங்கடமாகத்தான் இருக்கிறது. எவர் எங்களின் ரசனையை மேம்படுத்தினாரோ, எவர் எங்களின் பார்வைக்கு விசாலம் தந்தாரோ, எவர் எங்களின் வாசிப்பை அர்த்தப்படுத்தினாரோ அவர் குறித்துப் பேசுவது அவ்வளவுக்கு சுலபமானதாக இல்லை. ஆயினும் கி.ரா.வின் சமீப காலத்து எழுத்து சங்கடப் படுத்துகிறதே, என்ன செய்ய? கண்டும் காணாது சாடையாகப் போக முடிய வில்லை... கி.ரா. மன்னிக்கவும்.

                27.03.13 நாளிட்ட குமுதம் வார இதழில் கி.ரா. ஒரு சிறுகதை எழுதி யிருக்கிறார். ஆம், அதனை சிறுகதை என்று தான் இதழில் குறிப்பிட்டிருக்கிறார்கள். கட்டுரைகளெல்லாம் சிறுகதைகள் என்று ஆனதன் பின்னர் இதனையும் சிறுகதை என்றுதான் ஒப்பவேண்டும். “பொம்மை களும் கிளர்ந்தெழட்டும்” இதுதான் சிறுகதையின் தலைப்பு.

                ஒரு கைம்பெண், அவளின் இரண்டாம் பசி. (இரண்டாம் பசி என்று தான் கி.ரா. குறிப்பிடுவார். இந்த, இரண்டாம் பசி குறித்து கி.ரா. சமீப காலமாக நிறைய பேசுகிறார். அது இருக்கட்டும்) ஒரு கைம்பெண் குறித்து எந்த இரக்கத்தையும் ஏற்படுத்தாத, அவளின் பசி குறித்த வர்ணனையான எழுத்து எந்த மாதிரியான எழுத்து என்று புரியவில்லை.

                கதையின் ஆரம்பத்தில் சவரம் செய்யும் இளைஞன் ஒருவன் வருகிறான். எதற்கு வருகிறான், ஏன் வருகிறான் என்று புரியவில்லை. இதழாசிரியர், கி.ரா. எழுத்தில் ஏதும் கத்தரி போட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. அவன் வருகிறான்... போகிறான்... மொட்டையாக அந்த நிகழ்வு நிற்கிறது. புரியுது... ஆனா புரியல.

                அவன் உடலின் வீச்சம் அவள் நாசியை ஈர்க்கிறது. “பருவ வயசின் உடம்பிலிருந்து ஆணானாலும் பெண்ணா னாலும் அப்படி ஒரு வாடை இருக்கும். பருவ வயசைக் கடந்துவிட்டவர்களிட மிருந்து கெட்டவாடை இருக்கும்” என்றெல்லாம் எழுதுவது இப்போதைய இலக்கிய முறையும் கடப்பாடும் கோட்பாடும் ஆகிவிட்டது. இந்த வலைக்குள் கி.ரா.வும் எப்படி விழுந்தார் என்று தெரியவில்லை. கதவு, கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் என எழுதிய கைகளா இப்படியெல்லாம் கதை பண்ணுவது? வயசாக ஆக உடலின் செல்கள் செத்துப்போவதால் உடல் வீச்சம் அடிப்பது மட்டுமல்ல சொல்லும் கூட வீச்சம் அடிக்கும் போலிருக்கிறது.

                “கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே - இங்கு வேரிற் பழுத்த பலா” “பாடாத தேனீ, பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ” என மனித நேயத்துடன் எழுதும் பாரதிதாசன் நினைவுக்கு வருகிறார். அவள் குளிப்பது எதற்கு, அவள் கவிழ்ந்து படுத்துக் கொண்டு இடுப்புப் பகுதியில் மிதிக்கச் சொல்வது எதற்கு என்று எழுதுவது... இப்படியெல்லாம் பார்வை போகுமா? என்று நினைக்கத் தோன்றுகிறது. “முன்னாடி ஏரு ஒழுங்காப் போனா பின்னாடி ஏரும் ஒழுங்காய் போவும்” எங்கள் பக்கம் புழக்கத்தில் உள்ள பழமொழி இது.

                ஒரு பெண் இருந்தாள். பிராமண விதவை. மண் கலரில் காவி கலரில் பார்டர் போட்ட புடவை அணிந்திருப்பாள். ரவிக்கை கிடையாது. ஆயினும் உடலின் சிறு பகுதியும் வெளியில் தெரியாமல் புடவையைச் சுற்றியிருப்பாள். மொட்டை அடித்தத் தலையில் முக்காடிட்ட புடவை காது மடல்களைச் சுற்றி புடவை உடல் முழுதும் வழிந்து இருக்கும். சிவந்த நிறம், வட்ட வடிவமான முகம், தீர்க்கமான நாசி, களையான கண்களில் நிரந்தர சோகம். அவளை எப்போதாவது எங்கள் தெருப் பக்கம் பார்ப்பதுண்டு. வாய் எப்பொழுதும் “நாராயணா, நாராயணா” என்று முணுத்துக் கொண்டே இருக்கும். குடுகுடுவென ஓடுவது போன்ற நடை. மரநிழல்களில் நின்று முகம் தெரியாத யாரையோ திட்டிக் கொண்டிருப்பாள். ஆணோ, பெண்ணோ தன்னைக் கடந்து செல்கிறவர்களைக் கூர்ந்து பார்ப்பாள். “பாவம், ரொம்பச் சின்ன வயசிலேயே அறுத்துப் போயிட்டா” என்று பெண்கள் பேசிக் கொள்வார்கள்.

                அவள், ஒரு நாள் பெரியகுளத்தில் விழுந்து செத்துப் போனாள். காலிலிருந்து இடுப்பு கை என எங்கும் புடவை விலகி விடாதவாறு வாழை நாரினால் கட்டிக் கொண்டிருந்தாள். வாழை நாரைச் சுற்றும் பொழுது தான் வாழ்ந்த குறைநாள் சந்தோஷங்களை நினைவுபடுத்திப் பார்த் திருப்பாளா, இறந்து போன அவளின் கணவன் முகத்தை நினைவு கூர்ந்திருப்பாளா, அவளின் கல்யாண நாளை நினைத்திருப்பாளா. தன் தாய் தந்தையை நினைத்திருப்பாளா. ரொம்ப நாட்கள் அந்த வட்ட முகம் நினைவிலிருந்து மனதைத் தொல்லை படுத்திக் கொண்டே இருந்தது.

“கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இங்கு

வேரிற் பழுத்தப்பலா”

                அவள் வாழ்ந்த காலத்தில் எத்தனை உதாசீனங்களை, ஒதுக்கல்களை சந்தித் திருப்பாள். அவள் எதிரே வரப்பார்த்தால் விலகிச் செல்வது, திரும்பி விடுவது, குடும்பத்தில் எந்த நல்ல காரியத்தி லிருந்தும் கலந்து கொள்ளவிடாமல் செய்தது... எப்படி, இந்த சமூகம் அரக்கத் தனமாகவும் அராஜகமாகவும் இருந்திருக் கிறது. நாராயணா, நாராயணா பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?

                அந்தக் காலத்தில் இறந்த கணவனுடன் அவளையும் சங்கிலியால் பிணைத்து உயிருடன் எரித்தே இருக்கிறார்கள் பாவிகள். எரிக்காத பெண்களின் தலை மொட்டையடிக்கப் பட்டிருக்கிறது. படுக்கப் பாயும் தலையணையும் மறுக்கப்பட்டிருக்கிறது. வெறும் தரையில்தான் படுக்க வேண்டும். உணவில் உப்பு உறைப்புக் கூடாது. வெறும் தண்ணீர் சோறும், கீரை வதக்கலும் தான் உணவு. பாலோ, பழமோ கூடாது. பூசணிக் காயை நன்கு சுட்டு கொதிக்கக் கொதிக்க கடிக்க வேண்டும் என்று வற்புறுத்தப் பட்டிருக்கிறார்கள். அப்போதுதான் பற்கள் சீக்கிரம் கொட்டிப் போகுமாம். இந்த நாட்டில் பெண்களின்மீது அவ்வளவு கொடுமைகள் நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இப்போது தேவலாம். ஆனாலும், திரைப் படங்களில்... பெண்ணின் வளையல்கள் கையுடன் கை மோதி உடைக்கப்படுவது, கொண்டையில் இருக்கும் பூ பிய்த்தெறியப் படுவது, குங்குமம் அழிக்கப்படுவது என இரங்கத்தக்கவாறு படம் பிடித்து கல்லா நிரப்புகிறார்கள். கைம்பெண் ஒருத்திக்கு வற்புறுத்தி குங்குமம் வைத்து விடுவதை உச்சபட்ச கொடுமை எனக் காட்சிப் படுத்தியது பாமரத்தனம், பாசாங்குத்தனம் எனலாம். ஒரு கைம்பெண் குறித்தும் அவளின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் வர்ணித்து எழுதி கடைசியில் இந்த “பொம்மைகளும் கிளர்ந்தெழட்டும்” என்று எழுதுவதிலும் பாசாங்குத்தனம் தான் இருக்கிறது. மன்னிக்கவும்... பல்லி ளிக்கிறது.

                ஆறு மாதத்திற்குமுன் ஆனந்த விகடனில் கி.ரா.வை நேர்காணல் செய்திருந்தார்கள். அதில் அவர் கரிசல் காட்டைவிட புதுச்சேரி வாழ்க்கைதான் எனக்குப் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். அது அவர் விருப்பம். அதில் நமக்கென்ன ஆட்சேபம் இருக்கப் போகிறது. ஆனால், எந்த கலாச்சாரம் மிகச் சிறந்த கலாச்சாரம் என்ற கேள்விக்கு சந்தேகமென்ன பிரெஞ்சு கலாச்சாரம்தான், தமிழ் கலாச்சாரத்தில் என்ன இருக்கிறது. வெறும் கட்டுப்பாடுகள்தான். பறவை களைப் போல சந்தோஷமாக இருக்க வேண்டாமா? யாரும் யாருடனும் வாழலாம்... பிடித்திருந்தால் சேர்ந்து வாழலாம். பிடிக்கவில்லையா பிரிந்து வேறொரு ஆள் வேறொரு இடம் என்று வாழலாம். அப்படித்தான் இருந்தது தமிழ்நாடும் தமிழ்நாட்டு கிராமங்களும். நகரத்தான்கள்தான் கிராமத்தைக் கெடுத்து விட்டான்கள் என்றெல்லாம் பதிலுரைத் திருக்கிறார். ஏதாவது கிண்டல் பண்ணினாரா என்றும் தெரியவில்லை.

                இன்னொரு கேள்விக்கு... எல்லாம் இந்த குடும்ப அமைப்புதான் காரணம். குடும்பம் சிதையணும்கிறார். 90 வயதில் குடும்பம் சிதையணும்ங்கிற சிந்தனை எப்படித் தோன்றுகிறது என்று தெரிய வில்லை.

                முற்போக்கு முகம் படைத்த பெண்ணியத்திற்காகவே பிறப்பெடுத்துள்ள சில பெண்ணிய கவிஞர்களிடமிருந்து இது போன்ற குரல் எழும்புகிறது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதிர்ச்சியா பேசி கவனம் கவருவது. அப்படி ஆட்களின் நோக்கம் அவ்வளவுதான்... வேறு ஒரு புண்ணாக்கும் இல்ல... அப்படி பேசுபவர்க ளெல்லாம் குடும்பம் இல்லாமலா இருக்காங்க... இந்த பார்வையும்... இப்படி எழுதவும் கி.ரா.வுக்கு எப்பிடி முடியுது. அவருக்கு கவனம் கவரணும்ங்கிற நோக்கம் இருக்க வாய்ப்பில்லையே... அது இருக்கட்டும்.

                ஒருகேள்வி : நீங்கள் உங்கள் எழுத்துகளில் தலித்கள் பற்றி எழுதுவதைத் தவிர்த்தே வந்திருக்கிறீர்களே, ஏன்?

                பதில் : ஏன்னா அவங்களப்பத்தி எனக்கு ஒன்றும் தெரியாது, அவங்களின் பழக்க வழக்கம் தெரியாது, அவங்களோட பாஷை புரியாது... புரியாதது பத்தி என்ன எழுதறது?

                கி.ரா.விடம் ஆப்பிரிக்க நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் உள்ள பழங்குடிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட வில்லை. கிராமங்களில் ஊடாடி கிடக்கும் உழைக்கும் சமுதாய மக்கள் குறித்தான, அன்றாடம் பார்க்கும் பேசும் எளிய நமது அடுத்தடுத்தத் தெருக்களில் இருக்கும் சமூக மக்கள் குறித்தான கேள்விக்கு எனக்கு அவங்க பாஷை புரியாது என்பது பதிலில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த நேர்காணல் குறித்து... நிறைய எழுதணும் கேட்கணும்னுதான் தோணுது, வேணாம். எப்படி இருந்தாலும் என்னோட குருநாதர் கி.ரா.தான். அவரு வேண்டுமானால் நான் யாருக்கும் குரு கிடையாதுன்னு மறுக்கலாம். துரோணரைக் கேட்டுக்கிட்டா ஏகலைவன் மாணவனானான்? கடைசியில் அவனுக் கிட்ட கட்டவிரலை வாங்கிக்கிட்டு துரோணர் ஏகலைவனை ஏத்துக்கலையா. கி.ரா. வேணாம்னு மறுத்தாலும் அவருதான் என் குருநாதர். வேணும்னு கேட்டா சுட்டுவிரலை குருதட்சணையாகத் தருகிறேன்!

Pin It