வாழ்க்கை என்பது வளமானது அல்லது வறுமையானது. வறுமையில் வாழ்பவரிடையே, வாடுபவரிடையே அனுபவங்கள் ஏராளம் இருக்கும். கதைகள் கணக்கற்று இருக்கும். அவர்கள் நம்பி இருக்கும் கிணறுகள் வற்றினாலும் அவர்களுக்குள் வாழும் கதைகள் வற்றாது. நாவல் குமாரகேசன் நல்ல சிறுகதை யாளர். செஞ்சோற்றுக் கடன் தொகுப்பு வழி சில கதைகளைச் சொன்னவர் "கோட்டை பொம்மக்கா' மூலமும் சில கதைகளைச் சொல்லியுள்ளார்.

                சிறுவர்களுக்கு சிறு வயதில் நோய் ஏற்படும் போது அவர்களுக்காக வேண்டிக் கொண்டு கிடா வெட்டுவது வழக்கம். அதுவே சிறுவனை பலி வாங்கி விடுகிறது. சிறுவனுக்காக வேண்டிக் கொண்டதற்காக காளியாத்தாளுக்கு பலி கொடுக்க ஓர் ஆட்டுக் குட்டி வளர்க்கப்படுகிறது. ஆட்டுக் குட்டி மீது சிறுவனுக்கு அன்பும் வளர்கிறது. பலி கொடுக்கப்பட்டவுடன் மனம் தாளாமல், பொறுத்துக் கொள்ள முடியாமல் சிறுவன் கிணற்றில் விழுந்து இறந்தே விடுகிறான். "ஈர்ப்பு' என்னும் இச்சிறுகதையில் சிறுவனுக்கும் ஆட்டுக் குட்டிக்குமான உறவை அழகாக பின்னி யுள்ளார். சிறுவனின் மனநிலையை நன்கு உணர்த்தியுள்ளார். வேண்டுதலுக்காக வெட்டும் பெரியோர்களுக்கு வேண்டு கோள் வைத்துள்ளார்.

                ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுதல் தொடரும் என்று குறிப்பிட்ட கதை "கண்டு கொண்டால்'. ஏமாற்றுதலில் எத்தனையோ வகை உண்டு. அதிலொரு வகையைக் காட்டியுள்ளார். சாதாரண கதை எனினும் நல்ல அறிவுரை.

                "பூர்வீக வீடு' புதுப்பிக்கப்பட்டால் திருமணம் நடக்கும் என்ற சோசியரின் பேச்சை நம்பி மோசம் போன ஒரு "சக்தி வேலு'வின் கதை இது. கதையை அழகாகக் கொண்டு சென்றுள்ளார். மூட நம்பிக் கையால் மக்கள் எவ்வாறு பாதிக்கப் படுகிறார்கள் என்று உணர்த்தியுள்ளார். பூர்வீக வீடு என்பதற்கு முன் பூர்வீக பூமி பெருமையைப் பேசியுள்ளார்.

                "தடங்கல்' கதை இத்தொகுப்பில் ஒரு தடங்கலாக உள்ளது. சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால் கணவன் மனைவியிடையே எழும் பிரச்னையைப் பேசியுள்ளது. இயல்பாக இல்லை.

                கணவன் மனைவியை வைத்து எழுதப்பட்டதாயினும் இத்தொகுப்பிலுள்ள "கிரகம்' நன்று. கணவனுக்கு மனைவி மீது நம்பிக்கையும் இருக்கிறது. சந்தேகமும் இருக்கிறது. கணவன் வெளியூர் சென்றிருந்த ஓர் இரவு கோடாங்கி உயிர் பலி கேட்கிறது என்று கதை விட பயந்து போன மனைவி பரிகாரத்திற்காக கோடாங்கிக் கேட்பதைக் கொடுக்கிறாள். திரும்பி வந்த கணவனுக்குச் சந்தேகம் வலுக்கிறது. சொன்னால் பலிக்காது என்று கோடாங்கி சொன்னதால் சொல்ல முடியாமல் தவிக்கிறாள். மூட நம்பிக்கையே காரணம். எதார்த்தமான கதை. மக்களின் மூடநம்பிக்கையைச் சாதகமாக ஆக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கோடாங்கியைக் குற்றம் சாட்டியுள்ளார்.

                "பூமி'யின் மீதுள்ள அக்கறையைக் காட்டுகிறது "பூமி' சிறுகதை. கடவுள்களை வைத்து எழுதப்பட்ட கதை எனினும் இன்றைய சூழலுக்கு அவசியமாக உள்ளது. சூழல் கேட்டை விவரித்துள்ளது. நகர மயமாதல், உலகமயமாதல் ஆகிய வற்றாலே பாதிப்பு என்கிறார். கடவுள் களாலேயே வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது என்கிறார்.

                பள்ளியில் நடக்கும் உழைப்புச் சுரண்டலைக் கூறியுள்ள கதை "விறகு வெட்டிகள்'. பள்ளியில் படிக்க அனுப்பப் படும் மாணவர்கள் விறகு வெட்ட அனுப்பப்படுகின்றனர். காட்டில் இருந்த "கழுத விரியன்' கடித்திட இறந்து விடுகிறான். பள்ளிச் செலவில் விறகு வாங்காமல் மாணவர்களை அனுப்பி விறகு வெட்டச் செய்யும் ஆசிரியர்களைக் குற்றம் சாட்டியுள்ளது. உயிருக்குப் போராடும் மாணவனை வண்டியில் கூட்டிச் செல்ல மறுக்கும் ஊர்க்காரர்களையும் விமரிசித் துள்ளது. இத்தொகுப்பில் இச்சிறுகதை ஒரு குறுநாவல் என்னும் அளவிற்கு விரிவாக உள்ளது. காட்சி விவரணைகள் மூலம் கதையை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

                விறகு வெட்டிகள் ஆன சிறுவர்கள் பாதிக்கப்பட்ட கதை இதுவென்றால் மர வெட்டிகளால் மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்ட கதை "ஜீவித ராகம்'. மலையில் ஒரு கும்பல் மரங்களை வெட்டிச் செல்ல வனத்துறையினர் மலை வாசிகளைக் கைது செய்து துன்புறுத்து வதைப் பொறுக்காமல் மலைவாழ் மக்கள் மண்ணுக்கு இறங்கி விடுகின்றனர்.

                அரசிடம் நட்ட ஈடு கோரு கின்றனர். ஊரில் இல்லாதவர்கள் ஓட்டுப் போட மலைவாசிகளைப் பயன்படுத்திய தலைவரிடம் முறையிடுகிறார்கள். தலைவரின் மறைமுக முயற்சியால், சூழ்ச்சியால் மண்ணிலிருந்து மலைக்கே துரத்தப் படுகின்றனர். மலையில் மீண்டும் கைது படலம் தொடர்கிறது. மலை வாசிகளை மண்வாசிகள் எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று விளக்குகிறது கதை.

                "கொழுஞ்சி' ஓர் இயற்கை உரம். “கொழுஞ்சி போட்டு நட்டா சும்மா சோறு நெய் பசையோட எலையில வழுக்கிட்டுப் போகும் பாரு” என்று பாத்திரத்தின் வாயிலாக ஆசிரியரே குறிப்பிட்டுள்ளார். கொழுஞ்சி கதையில் இன்று செயற்கை உரம் இட்டு வருவதையும் பேசியுள்ளார். பணத்திற்காக கொழுஞ்சியை விடியும் முன்பே தாயும் மகனும் பறித்து வருகின்றனர். ஆனால் வாங்குபவன் போதுமான அளவு வாங்கி விட்டதாக மறுத்து விடுகிறான். ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர் தாயும் மகனும். திரும்பும் போதும் அவர்கள் கொழுஞ்சியைச் சுமந்து செல்கின்றனர். அச்சுமை வாசக மனத்திலும் கனக்கிறது.

"சின்னாண்டி' போன்ற மனிதர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். பாசாங்கற்ற சின்னாண்டி பாத்திரம் மூலம் பரிதாபத்தை ஏற்படுத்தி யுள்ளார். சிக்கலில்லாத ஆண் பெண் உறவு இராது. அப்படியே இருந்தாலும் சமூகம் சந்தேகக் கண்ணோட்டத்தோடே பார்க்கும். பேசும். களங்கம் உண்டாக்கும். சின்னாண்டி தங்கத் தாய் உறவு அருமையாக சித்தரிக்கப் பட்டுள்ளது. கதையின் முடிவு அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது.

                வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால் இந்தியாவில் ஒற்றுமை இல்லை. வேற்றுமையே உண்டு. அண்டை மாநிலங் களுக்கிடையே ஒற்றுமை இல்லை. அண்டை வீட்டார்களுக்கிடையே ஒற்றுமை இல்லை. பொதுவாக மனிதர் களிடம் எப்போதும் ஒற்றுமையே இருப்ப தில்லை. வேற்றுமையே எங்கும் மேலோங் கியுள்ளது. மனிதர்களிடையே இல்லாத ஒற்றுமை நாய்களிடம் உள்ளது என்று உணர்த்தியுள்ளார். "ஒற்றுமை' கதை மிக சிறப்பு. நீதிமன்ற தீர்ப்பிற்குப் பின்னும் காவிரி நீர்ப் பிரச்னையும் முல்லைப் பெரியாறு பிரச்னையும் தீர்க்கப்படாமல் உள்ளதையும் கதையின் வாயிலாக குறிப்பிட்டு கோபத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.

                "கோட்டை பொம்மக்கா' - தொகுப் பின் இறுதிக் கதை இதுவே. நரிகள் பற்றிய கதை ஏராளம் உண்டு. நரிகள் குறித்த கதை எனினும் "கோட்டை பொம்மக்கா' பற்றியே கதை கூறியுள்ளது. ஆட்டைக் கடித்துத் தின்ற நரி பொம்மக்காவையும் கடித்துக் குதறிய கொடுமையைத் தாங்க முடிய வில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்த "கதை'யை நினைவூட்டுகிறது. “அவ கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் பொம்மையன் குதிரையில வரல. உள்ளூர் தெய்வம் முத்தாலம்மன் முன்னாடி வந்து நிக்கல. சொந்தக்கார தெய்வம் ஜக்கம்மா வரல” என்று தெய்வங்களையும் குற்றம் சாட்டியுள்ளது எடுத்துக்காட்டுக்குரிய செய்தியாகும்.

                எழுத்தாளர் நாவல் குமார கேசனிடம் கதை சொல்லும் கலை சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு கதையையும் எங்கு ஆரம்பிப்பது, எப்படி கொண்டு செல்வது, எப்படி முடிப்பது என்பதை நாவல் குமார கேசன் நன்கு தெரிந்துள்ளார் என்பதைக் கதைகள் உறுதிப்படுத்துகின்றன. விவரணைகள் கண்முன் காட்சியாக விரிகின்றன. கொங்கு வட்டாரத்தின் மொழியைக் கையாண்டதுடன் கொங்கு வட்டாரத்தில் புழங்கும் சொற்களைக் கதைக்குள்ளும் கொண்டு வந்துள்ளார். ஒரு கிராமத்தில் காணப்படும் அனைத்து விசயங்களையும் கூர்ந்து கவனித்தவராக அறியப்படுகிறார். சில கதைகள் சாதாரணமாக இருந்தாலும் பல கதைகள் அசாதாரணமாக உள்ளன. சில சிறியதாக உள்ளன. சில சிறு நாவல்களாக உள்ளன. பெரும்பாலான பாத்திரங்களில் கவுண்டர் இன மக்களையே படைத்துள்ளார். பாத்திரங்களை பாசாங்கற்ற வர்களாகவும் எளிமையானவர்களாகவும் படைத்துள்ளார். மூடநம்பிக்கையிலிருந்து மக்கள் மீள முடியாமல் உள்ளனர் என்றும் அறியச் செய்துள்ளார். ஒரு சிறுகதை யாளரான நாவல் குமாரகேசன் சிறுகதையி லிருந்து அடுத்தத் தளமான நாவல் உலகிற்குச் சென்று "நாவல்' குமாரகேசன் என்னும் பெயருக்கு ஏற்ப "நாவல்' ஆசிரியராக விளங்குவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது "கோட்டை பொம்மக்கா”.

கோட்டை பொம்மக்கா

ஆசிரியர் : நாவல் குமாரகேசன்

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

41, கல்யாணசுந்தரம் தெரு,

பெரம்பூர், சென்னை - 600 011.

விலை ரூ.80-

தொடர்புக்கு : 9444640986

Pin It