கரூர் நகரமும் அதற்குத் தென்மேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந் துள்ள செட்டிப்பாளையம் கிராமமும், 1945 முதல் 2005 வரையான கால கட்டத்தில் அடைந்த மாற்றங்களை புனைவுத்தன்மை இல்லாமல் இந்த நூல் ஆராய முற்படுகிறது. இந்நூலாசிரியர் எஸ். நீலகண்டன், இந்த ஆய்வை நூலுக்கு வெளியிலிருந்து அணுகி யிருக்கும் சார்பற்ற தன்மைதான் இந்த நூலின் மையமாகச் செயல்படுகிறது.

இன்றைய கரூரின் வளர்ச்சி அபரிமித மானது; இந்த வளர்ச்சி திடீரென உருவான ஒன்றல்ல. பேருந்துக்குக் கூடு கட்டும் தொழிலும் விசைத்தறி தொழிலும்தான் தற்போதைய கரூரின் nagaramஅடையாளம். ஒரு காலத்தில் கரூர் மக்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் விவசாயத்தின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது. இந்தச் சூழலில் பல புதிய தொழில்களில் கரூர் மக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முயன்றனர். விவசாயத்தின் வளர்ச்சி வீழ்ச்சி அடைய அடைய பிற தொழில் களில் வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் கரூர் நகரமும் செட்டிப்பாளையம் கிராமமும் அடைந்த மாற்றத்தின் விளைவால் ஏற்பட்ட நன்மையும் தீமையும் தான் இந்த நூல்.

கரூரின் காலமாற்றத்தில் நிறைய புது பணக்காரர்களைப் பெற்றுத் தந்தது. இதில் புதிய தலைமுறையைச் சேர்ந்த பணக்காரர்களும் அடக்கம். இருபது லட்சாதிபதிகள் மட்டுமே இருந்த நகரத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கோடீஸ் வரர்கள். உதாரணமாக மிதிவண்டியில் சாக்குப்பை விற்ற ஒருவர், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாக்கு தயாரிக்கும் கம்பெனி முதலாளியானது. அடுத்து, சாதியின் இறுக்கம் குறைந்தது. அதாவது, தீண்டாமை என்பது வீடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது. முதலியார்கள் வசம் இருந்த நெசவுத் தொழில் அனைத்து சாதியினருக்குமானதாக பரவலானது; செட்டியார் வகுப்பினர் மட்டுமே செய்துவந்த வட்டித் தொழில் ஒழிந்து, எண்ணற்ற "பைனான்ஸ் கம்பெனிகள்' உருவானது. நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்து, வேளாளக் கவுண்டர்களைவிட மற்றவர்களின் வளர்ச்சி அதிகமானது. வளர்ச்சி என்பது இருபக்கமும் தீட்டப் பட்ட கத்தியைப் போன்றது. கரூரின் வளர்ச்சி சில மோசமான தீமைகளையும் பெற்றுத் தந்தது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக 1950களில் கரூர் நகரத்தின் கடற்கரையாகக் கருதப்பட்ட அமராவதி ஆற்றின் மணல் முழுக்க அள்ளப்பட்டு, அதன் குரல்வளை நெரிக்கப் பட்டது. துர்நாற்றம் வீசும் சாயக்கழிவு களின் வாய்க்காலாக அமராவதி ஆறு மாறிப்போனது. கரூர் அடைந்த மாற்றத் தின் மிக மோசமான விளைவு இது.

நூலின் இரண்டாவது பகுதி, செட்டிப் பாளையம் கிராமம் படிப்படியாக 1940களுக்குப் பிறகு அடைந்த சமூக மாற்றத்தைக் குறிப்பிடுகிறது. கிராமத்தின் வளர்ச்சி என்பது நகரத்தோடு ஒப்பிடும் போது அதன் வேகம் குறைவாகத்தான் இருக்கும் என்பதற்கு இந்தக் கிராமமும் விதிவிலக்கல்ல. கரூருக்கும் செட்டிப் பாளையத்துக்குமான தொலைவு 10 கி.மீ. தான் என்றாலும், நகரத்தில் புழக்கத்தில் வரும் பொருள் அந்த 10 கி.மீட்டரைக் கடக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் அதிகம் என்றே தோன்றுகிறது.

குலத்தொழிலை செய்துவந்த பலர், அந்தத் தொழிலை விட்டுப் புதிய வழியில் தங்கள் வாழ்க்கையைச் செலுத்த முயன்றனர். "வயிற்று சோத்தாள்' என்று அழைக்கப்படும் பண்ணை அடிமை முறை படிப்படியாக அழிந்துபோனது ஒரு நல்ல மாற்றம் என்றே சொல்ல வேண்டும். தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்த ஷாம்பு, பேஸ்ட் உள் ளிட்டப் பொருட்களை மக்கள் இயல்பாக பயன்படுத்தத் தொடங்கினர். ஓட்டுவங்கியாகப் பயன்பட்ட நிலக்கிழார் களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. பண்ணைகளில் வேலை பார்த்தவர்கள் நிலம் வாங்கத் தொடங்கினர். சுப நிகழ்ச்சிகளின்போது எல்லாச் சாதியைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக உணவருந்தும் சூழல் உருவானது. தாழ்த்தப்பட்டவர் களின் பிள்ளைகள் தனியாக அமர்ந்து படிக்கும் சூழல் மாறி, அவர்களின் குடியிருப்புகளிலும் பள்ளிகள் இயங்கத் தொங்கின. இந்த மாற்றங்கள் எல்லாம் எவ்வாறு படிப்படியாக ஏற்பட்டன என்று, அதன் காலமாற்றத்தோடு சொல்வது இந்த நூலின் தனிச்சிறப்பு.

ஒரு நகரத்தின் வளர்ச்சிக்குக் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை நிரூபிப்ப தற்காக இந்த நூல் தன் பயணத்தைத் தொடங்கினாலும், அந்தக் குறிப்பிட்ட இலக்கை மட்டுமே அடைவதை இந்த நூல் தன் லட்சியமாகக் கொள்ளவில்லை என்பதை இந்த நூலை வாசிப்பதின் ஊடே புரிந்துகொள்ள முடியும். கரூர் நகரமும் செட்டிப்பாளையம் கிராமமும் படிப்படியாக தனக்குள் உள்வாங்கிய மாற்றம்தான் இந்த நூல். இந்த மாற்றத்தை ஒட்டுமொத்தமான கிராம, நகர மாற்ற மாக புரிந்துகொள்ள வேண்டும்.

காலம் எவ்வாறெல்லாம் புதிய புதிய மாற்றங்களை உள்வாங்கிக்கொள்கின்றன; "தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முன்னேறிக்கொண்டிருக் கிறார்கள்' என்ற கருத்து தன் வலிமையை இழப்பது; புதிய பொருட்களின் தேவை அதிகரிக்கும்போது அதற்காக நாம் எதை எதையெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் இந்த நூலின் வாயிலாகப் புரிந்துகொள்கிறோம்.

காலம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றத்தை நம்முடைய மனம் தொடர்ந்து சில நெருடல்களுடன் அங்கீகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமூக மாற்றத்தை வெளிப்படையாக விரும்பாதவர்கள்கூட மறைமுகமாக அதை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் அடைந்த மாற்றம்தான் ஒரு நகரமும் ஒருகிராமமும். அந்த மாற்றம் எவ்வாறெல்லாம் நடந்தது என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு விவரிப்ப தில்தான் இந்த நூலின் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.

ஒரு நகரமும் ஒரு கிராமமும் எஸ். நீலகண்டன் வெளியீடு: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்600 001 பக்கம்: 240, விலை: ரூ.150

Pin It