இலங்கை: யானையை மறைக்கும் முயற்சி' என்ற ஆங்கில நூலை பேராசிரியர் ராமு. மணிவண்ணன் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் 976 பக்கங்களில் ஓர் ஆவணப் பெட்டகமாக வெளிவந்திருக்கிறது. நான்கு அடிப்படையான கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

ramu manivannan1. ஆளும் சிங்களப் பேரினவாத ஆட்சிகளின் நோக்கம் – இனப்படுகொலைதான் 2. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள்

60 ஆண்டுகளாகவே திட்டமிட்டு தொழில்படுகின்றன 3. அரசு மட்டுமின்றி, ஆளும் வர்க்கமான அறிவுஜீவிகள் (புத்த பிக்குகள் உள்ளிட்டோர்) அழித்தொழித்தலுக்கான அதிகாரங்களை அரசு ஆதரவோடு கையில் எடுத்துள்ளனர் 4. ஆட்சியாளர்களும் ஆளும் ஆதிக்க அறிவுஜீவிகளும் தமிழர்களை ஒடுக்குவதற்கான அரசியல் மற்றும் சமூக வெளியை இலங்கை அரசியல் கட்டமைப்பே உருவாக்கித் தந்திருக்கிறது.

1948 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழர் இன அழிப்புக்கான திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதற்கான வெற்றிக் கொண்டாட்டமே முள்ளிவாய்க்கால். இப்படி இனப்படுகொலைக்காகவே நடத்தப்பட்ட இறுதிப் போருக்கு இலங்கை அரசு ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக தன்னை தயார்படுத்தியே வந்திருப்பதை விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.

ராணுவ ரீதியான ஒடுக்குமுறையே இலங்கையின் நோக்கம் என்பதற்கு சான்றுகளை அடுக்கிக் காட்டுகிறார் நூலாசிரியர். சிவில் சமூகத்தில் ராணுவத்தைக் குவிப்பதில் மிக அதிக எண்ணிக்கையில் தெற்காசியாவிலேயே முன்னிற்பது இலங்கைதான். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஒரு குடிமகனுக்கு 6 ராணுவம் என்ற விகிதத்தில் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதே அந்நாட்டில் நிலவும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான சான்று. ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை 4 லட்சம். போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று ராஜபக்சே அறிவித்த பிறகு, மேலும் ஒரு லட்சம் பேரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? போர் முடிந்ததற்குப் பிறகும் ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் 20 சதவிகிதம் ஏன் அதிகரிக்க வேண்டும்?

2006 இலிருந்து 2009 வரை ஒரு கோடியே 44 லட்சம் கிலோ கிராம் வெடி மருந்துகள் விமானத்திலிருந்து வன்னிப் பகுதியில் போடப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் இதற்காக 13 ஆயிரம் முறை விமானம் பறந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டவர் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் (இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது மட்டுமே). இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் விமானக் குண்டுவீச்சில் சராசரியாக 116 பேர் கொல்லப்பட்டனர் என்று அய்.நா. தயாரித்துள்ள உள்ளக அறிக்கையின் பதிவை "அயர்லாந்து சமாதானப் பேரவை' அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கை அரசு கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 50 சதவிகிதத்திற்கும் கீழே குறைத்து, பல மடங்கு கூடுதலாக ராணுவத்திற்கே ஒதுக்கி வந்துள்ளது.

1965 ஆம் ஆண்டிலிருந்து அரசு ராணுவத்திற்கு படிப்படியாக உயர்த்திய நிதி ஒதுக்கீட்டை புள்ளிவிவரங்களுடன் இந்நூல் பட்டியலிட்டுள்ளது. இந்த ராணுவமயமாக்குதலை கவனத்தில் கொள்ளாமல் பல உதவும் நாடுகள் வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அமைதியை ஏற்படுத்த முடியும் என்ற தவறான புரிதலுக்கு வந்தன. "சுனாமி'யால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்கும் ஏற்கனவே நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் தாராளமாக நிதியை வழங்கின. ஆனால் அம்முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடந்த காலத்திலேயேகூட, தமிழர்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல இயலாமல் ராணுவத்தின் கெடுபிடிகள் இருந்தன. இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு இடையே அமெரிக்க தலையீட்டில் "ஓஸ்லோ ஒப்பந்தம்' உருவானபோது, சுயாட்சிப் பிரதேசங்களான காசா மற்றும் மேற்கு கரைப் பகுதிகளில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் சுதந்திரமாக சென்று வருவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவில்லை. காசாவிலிருந்து மாம்பழங்களை ஏற்றிக் கொண்டு மேற்குக் கரையின் நபுலஸ் நகரத்துக்கு செல்லும் டிரக்குகள் காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தால் நிறுத்தப்படும். அங்கு மீண்டும் இஸ்ரேல் டிரக்குகளில் ஏற்றப்பட்டு மேற்கு கரை எல்லைப் பகுதி வரும்போது அந்த மாம்பழங்களை இறக்கி மற்றொரு முறை பாலஸ்தீனர்களின் டிரக்குகளில் ஏற்றப்பட்ட பிறகே நபுலஸ் நோக்கிச் செல்ல முடியும். இந்த நடைமுறைகள் முடிய மூன்று நாட்களாகிவிடும். அதற்குள் மாம்பழங்கள் அழுகிவிடும். பாலஸ்தீனர்களின் பிரதேசங்கள் சுயாட்சி பெற்றிருந்தாலும்கூட, இஸ்ரேல் ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்க முடியும் என்பதை இஸ்ரேல் உணர்த்திக் கொண்டே இருந்தது. இதே நடைமுறையைத்தான் நார்வே சமாதான அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதும் இலங்கை ராணுவம் பின்பற்றியது.

பேருந்துகளில் பயணிக்கும் தமிழர்களை ஆங்காங்கே சோதனைச் சாவடிகளில் இறக்கி நீண்ட வரிசையில் நிற்க வைத்து, ராணுவத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பிறகுதான் மாற்றுப் பேருந்துகளில் பயணிக்க வேண்டும். ஒரு மைல் தூரத்திற்குள்ளேயே ராணுவம் இப்படி பலமுறை சோதனைகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்வதோ, தமிழர் பகுதியான மட்டக்கிளப்புக்கு செல்வதோகூட அவ்வளவு எளிது அல்ல; அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் தமிழர்கள் உள்ளாகியே தீர வேண்டும்.

இந்நூலின் "இறுதித் தீர்வு' என்ற அத்தியாயம், திட்டமிட்ட இனப்படுகொலையைத்தான் இலங்கை நடத்தியது என்பதற்கு ஏராளமான சான்றுகளை முன் வைக்கிறது. போரில் உயிர் தப்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நேரடி சாட்சியங்கள் ரத்தத்தை உறையச் செய்கின்றன. அவை கற்பனை கூட செய்து பார்த்திட இயலாத கொடூரங்களையும் அவலங்களையும் உணர்த்தி இதயத்தை சுமையாக்கி விடுகின்றன. இத்தனைக்கும் மக்களை காப்பாற்றக்கூடிய நவீன தொழில்நுட்பக் கருவிகள் அரசிடம் இருந்தன. அதைப் பயன்படுத்தி தமிழ் மக்களைக் காப்பாற்ற இலங்கை ராணுவம் தயாராக இல்லை. ராணுவத் தாக்குதலுக்கும் அப்பால் உணவு மற்றும் மருந்துகளை வழங்க மறுத்து பட்டினிச் சாவுக்கு கதவு திறக்கப்பட்டது. அய்.நா. தலைமைச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கையிலிருந்தே இதற்கான சான்றுகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. "போரில்லாத பகுதி' (Nணி ஙிச்ணூ ஙூணிணஞு) என்று ராணுவம் அறிவித்த பகுதிகளிலும் ஏன் அய்.நா. அலுவலர்களுக்கான பாதுகாப்புப் பகுதிகளிலும்கூட குண்டுகள் வீசப்பட்டதை தேதி வாரியாக பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை பதிவாக்கியிருக்கிறது.

சுமார் மூன்று லட்சம் மக்கள் உயிர் பாதுகாப்புக்காகத் திரண்டிருந்த "போரில்லாத பகுதி'யில் (06.02.2009) நிலம், கடல், வானம் என்ற மூன்று பகுதிகளிலிருந்தும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதை அய்.நா. அறிக்கை பதிவு செய்துள்ளது. “இறுதித் தாக்குதல் நடக்கப் போகிறது; போரில்லாத பகுதிக்கு பொது மக்கள் போகலாம்'' என்று இடைவிடாமல் ராணுவம் அறிவித்துக் கொண்டும் துண்டுப் பிரசுரங்களை வீசிக் கொண்டும் இருந்தன. அரசின் நோக்கம் இனப்படுகொலைதான் என்பதற்கு இது வலிமையான சான்று. தனது குடிமக்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்க வேண்டிய ஓர் அரசு, இப்படி உயிர் பிழைக்கும் வாய்ப்பை மக்களிடமே ஒப்படைக்குமா?

இலங்கை அரசு நியமித்துக் கொண்ட "போரில் கற்ற பாடம் மற்றும் நல்லிணக்க' (lesson learnt and reconciliation commission)  இணிட்ட்டிண்ண்டிணிண) ஆணையத்தில் ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் விமானப்படை தளபதி குணதிலகா அளித்த வாக்குமூலங்கள் தமிழ் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடிய தொழில்நுட்பங்கள் அரசிடம் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. அரசிடமிருந்த ஆள் இல்லாத விமானங்கள் வழியாக இரவிலும் பகலிலும் மக்கள் வாழும் பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களை அடையாளம் காண முடியும்; ஆயுதங்களோடு இருப்பவர்களையும் பிரித்துப் பார்க்க முடியும்; குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகளையும் தீர்மானிக்க முடியும். ஆனால், இந்த நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதாகவும் பொது மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இலங்கை ராணுவ செயலாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் நடந்ததோ நேர் எதிரானது. ஒன்றுமறியா மக்களைக் கண்டறிவதற்கும் அவர்கள் மீது குண்டுகள் வீசுவதற்கும் பள்ளி, மருத்துவமனைகளைக் கண்டறிந்து தாக்குதல் நடத்துவதற்குமே இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட செஞ்சோலை முகாமில் விமானக் குண்டு வீச்சு நடத்தி, அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிணமாக்கப்பட்டார்களே – அது குழந்தைகள் காப்பகம் என்பதைக் கண்டறிந்த பிறகுதானே? அதேபோல, இறுதிக் கட்டப் போரில் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டனவே – அது எப்படி?

போர்க் களத்தில் சிக்கிக் கொண்ட செஞ்சிலுவைச் சங்க ஊழியர்கள், மருத்துவமனைகள் இருக்குமிடத்தை ராணுவத்திடம் பட்டியலிட்டுக் கொடுத்தனர். "அங்கெல்லாம் குண்டுவீச்சு நடத்த வேண்டாம்' என்று ராணுவத்திடம் வேண்டுகோள் வைத்தனர். இவ்வளவுக்குப் பிறகும் ராணுவம், மருத்துவமனைகள் மீது இறுதிக்கட்டப் போரில் 64 முறை குண்டுகளை வீசியிருக்கிறது. மருத்துவமனைகள் இருப்பதை உறுதிப்படுத்தி, குண்டுகளை வீசுவதற்குதான் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய பட்டியலை ராணுவம் பயன்படுத்தியது. தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்த உள்ளூர் மருத்துவர்கள், மருத்துவமனை இருக்கும் பகுதிகளை ராணுவத்திடம் தெரிவிக்க வேண்டாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்திடம் மன்றாட வேண்டியிருந்தது. புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் 01.02.2009 அன்று 800க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தனர். இதில் 500 பேர் நோயாளிகள். பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணி வரையிலும் மீண்டும் இரவு 10.20 மணிக்கும் அடுத்த நாள் பிப்ரவரி 2 அன்று மாலை 6.40 மணிக்கும் மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்பட்டன. செஞ்சிலுவைச் சங்க மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மோர்வன்முர்ச்சிகன் லோசரி இதை தனது அறிக்கையில் உறுதி செய்துள்ளார்.

அரசு விசாரணை ஆணையத்திடம் (எல்.எல்.ஆர்.சி.) வாக்குமூலம் அளித்த ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே (ஆகஸ்டு 14, 2010) போர் நிறுத்தப் பகுதிக்குச் சென்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்ததாகவும் ஆனால் விடுதலைப் புலிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை அங்கிருந்து போகவிடாமல் தடுத்து, அவர்களை அச்சுறுத்தி மனித வெடிகுண்டாக ஒரு போராளி மாறி மக்களை சாகடித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இது அப்பட்டமான பொய் என்பதை போர் முடிந்தவுடன் அதிபர் ராஜபக்சே "தி இந்து' நாளேட்டின் ஆசிரியர் என். ராமுக்கு அளித்த பேட்டி அம்பலப்படுத்திவிட்டது.

"தி இந்து' (30.06.2009)க்கு அளித்த பேட்டியில், “போரில்லாத பகுதி எது என்று அறிவித்ததே ராணுவம்தான். அந்த இடங்களை அய்.நா.வோ வேறு நபர்களோ அடையாளப்படுத்தவில்லை. நாங்கள் அப்படி அறிவித்த பகுதிக்குதான் பிரபாகரனும் அவருடைய போராளிகளும் வந்தனர். அவர்கள் தப்பிச் செல்ல வேறு எவருடைய வருகையையோ அங்கு எதிர்பார்த்திருந்தனர். இப்படி ஓரிடத்தில் திரட்டி, சுற்றி வளைத்து தாக்கினோம்'' என்று ராஜபக்சே உண்மையை வெளிப்படையாகக் கூறிவிட்டார்.

அய்க்கிய நாடுகள் அவையின் பயிற்சி மற்றும் ஆய்வு மய்யம் இறுதிக் கட்டப் போரின்போது எடுத்த செயற்கைக் கோள் படம், இனப்படுகொலைக்கான வலிமையான சாட்சியமாகும். அமெரிக்காவில் இயங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம், இப்படங்களை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பெருமளவில் கூடியுள்ள பகுதிகளில் குண்டு வீச்சுகளை ராணுவம் நடத்தியிருப்பதை உறுதி செய்திருக்கிறது. போரின் கடைசி ஆறு மாதங்களில் மக்களுக்கு உணவு, மருந்துகள் மறுக்கப்பட்ட நிலையில் மிக அதிக அளவில் பட்டினிச் சாவுக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். 2009 ஏப்ரலில் அகதி முகாம்களில் மடிந்துபோன 30 மூத்த குடிமக்களின் சவப் பரிசோதனையில் அவர்கள் பட்டினியால் மடிந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; தடை செய்யப்பட்டுள்ள ரசாயன வாயு, வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கிளஸ்டர் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தியிருப்பதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. பாகிஸ்தானிலிருந்து இவற்றை இலங்கை அரசு வாங்கியதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ஏடுகள் வெளியிட்ட செய்திகள், தீக்காயங்களுடன் இறந்தவர்களை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களை பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையிலிருந்து விரிவாக இந்நூல் பதிவு செய்திருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த 300 பொது மக்களை சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிராக ராணுவம் சுட்டுக் கொன்றது. சரணடைவதற்கு முதல் நாள் 18.05.2009 அன்று நடேசன், புலித்தேவன் இலங்கை உயர் அதிகாரிகளுடன் பேசி, இதற்காக அரசின் ஒப்புதல் உறுதியைப் பெற்ற பிறகே வெள்ளைக் கொடியுடன் வந்தனர். ராணுவத்தின் சர்வதேச நெறிமுறைகளைப் புறந்தள்ளிய நடவடிக்கையை அப்போது ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா வெளிப்படையாகக் கண்டித்துள்ளார். இது, ஒழுங்கு மீறிய செயல் என்பதை ஒப்புக் கொள்கிறார். இந்தப் படுகொலைக்குப் பிறகு டிசம்பர் மாதம் அய்.நா.வின் சிறப்புத் தூதர் பிலிப் அல்ஸ்டன், ஒழுங்கு மீறல் குறித்து இலங்கை அரசிடம் விளக்கம் கேட்டு எழுதினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆயுதம் தாங்கியப் போராளிக் குழுவின் அரசியல் பிரிவு தலைவர் ஒருவர் சரணடைய முன்வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது சர்வதேச முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு நாளும் 15.12.2008 முதல் 18.05.2009 வரை "போரில்லாத பகுதி'களில் நடந்த கிரைøனட் ஷெல் வீச்சுகள், வீசப்பட்ட இடம் மற்றும் இறந்த பொது மக்களின் எண்ணிக்கைகளை ஆவணம் விரிவாக அட்டவணைப்படுத்தியுள்ளது. மே 9 அன்றுதான் விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதலை நடத்தினர். ஆத்திரமடைந்த ராணுவம் போரில்லா பகுதியின் நான்கு திசைகளிலிருந்தும் "ஆர்ட்டிலரி' தாக்குதல் நடத்தியதில் – அந்த ஒரு நாளில் மட்டும் – 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 1,122 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்துபோன 1000 பொதுமக்களில் 378 உடல்கள் மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. எஞ்சிய உடல்களை ராணுவம் சாலை ஓரங்களிலும் கடற்கரையிலும் வீசி எறிந்தது. மே 9 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி காலைவரை – ஒரே இரவில் – 2000 பொது மக்களும் அதே நாள் மாலையில் 3200 பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அய்.நா.வின் புனர்வாழ்வுக்கான கள அதிகாரி லாரன்ஸ் கிறிஸ்ட், 3200 பேர் இறந்ததை உறுதிப்படுத்துகிறார்.

இது தவிர முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், காணாமல் போன பெண்கள், பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் பற்றிய ஏராளமான தரவுகள் மற்றும் ஆவணங்களை மிக விரிவாக இந்த ஆவணம் பதிவு செய்துள்ளது.

ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாறு குறித்து பல விரிவான நூல்கள் வெளிவந்துள்ளன. அமைதி காக்கச் சென்ற இந்திய ராணுவம் இலங்கையில் நடத்திய அத்துமீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்த விரிவான ஆவணத்தை "சாத்தானின் படைகள்' என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் இயக்கமே ஆவணமாக்கியது. ராஜிவ் கொலை நடந்தபோது இந்திய உளவுத்துறை அந்த ஆவணங்களைக் கைப்பற்றி முற்றாக அழித்ததோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ராஜிவ் கொலையில் தொடர்புபடுத்தவும் அந்த ஆவணத்தையே சான்றாக்கியது. அந்த வரிசையில், ஈழத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் இனப்படுகொலை நோக்கத்தோடு நடத்திய போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும் முழுமையான ஆவணமே இந்நூல்.

* Sri Lanka: Hiding The Elephant - Documenting Genocide, War Crimes and Crimes Against Humanity

ராமு.மணிவண்ணன், அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, சென்னை பல்கலைக் கழகம். பக்கம் 976, விலை ரூ.2500

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.