நூல் மதிப்புரை

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளரும், ஆய்வறிஞருமான அருணன் எழுதிய நூல் “காலந்தோறும் பிராமணியம்”. மூன்று பாகங்கள், இரண்டு நூல்களாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நூல் இரண்டு நிலைகளை நம்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. ஒன்று பார்ப்பனியம். மற்றொன்று வரலாறு.

பார்ப்பனியத்தைப் பற்றிப் பேசும்போது, ரிக், யசுர், சாம, அதர்வனங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள் குறிப்பாக மனுஸ்மிருதி, தர்ம சூத்திரங்கள் போன்ற பார்ப்பனிய இலக்கி யங்களே முன்னிலை பெறும். வரலாறு அங்கே அரிதாகிவிடும்.

வரலாறு பற்றிப் பேசும்போது, கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள் சமகால வரலாற்றாளர்களின் குறிப்புகள், இதர வரலாற்றுச் சான்றுகளுமே முன்னிலை பெறும். பார்ப்பனியம் அங்கே இருக்காது. உண்மையில், வரலாறுக்குள் பார்ப்பனியம் ஒளிந்து கொண்டிருக்கிறது. இந்நூல் வரலாறு வழியாகப் பார்ப்பனியத்தைக் கண்முன் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் பார்ப்பனியம் எப்படி இயங்கியிருக்கிறது, எப்படி ஒளிந்து நின்றது, எப்படித் தற்காத்துக் கொண்டது, எப்படித் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வந்துள்ளது என்பதை வேத காலம் முதல் சோழர் காலம் வரை முதல் பாகத்திலும், சுல்தான்கள் காலம் முதல் முகலாயர் காலம் வரை இரண்டாம் பாகத்திலும் உரிய சான்றுகளுடன் விளக்கி இருக்கிறார் நூலாசிரியர் அருணன். நூல் முழுவதும் அவர் கையாளும் சொல் - பிராமணியம்.

பிராமணியம் என்பது அவர்களின் நலனைப் பேணுவது மட்டுமன்று, அது ஒரு சமூகக் கட்டமைப்பு. அந்தக் கட்டமைப்பில் நால்வருண முறை இருக்கும். நால்வகை ஆசிரம வகை இருக்கும். புனிதம் சேர்க்கச் சமயச் சடங்குகள் இருக்கும், ஆணாதிக்க முறை இருக்கும், சண்டாளர்கள் இருத்தப்படுவார்கள், அவர்கள் அடிமைகள், பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவார்கள். இத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி முதன்மைக் கூறாக வருணமுறையை இருத்தி இயங்கிய ஒரு சமுதாயமுறைக் கட்டமைப்பே பிராமணியம் என்று தொடக்கத்திலேயே பிராமணியமான பார்ப்பனியத்தைச் சுருக்கமாக அறிமுகம் செய்து வைக்கிறார் ஆசிரியர்.

பார்ப்பனியத்தின் தோற்றம் கி.மு.1000, ரிக்வேதத்தின் தோற்றகாலம் அது. அதைத் தொடர்ந்து 500 ஆண்டுகள் இந்நாட்டின் வரலாறு காணாமல் போய்விட்டது. சொல்லப்பட்டது பார்ப்பனியம் பற்றிய வேதகால வரலாறு.

அக்காலத்தில் ரிக் நால்வருணத்தைத் தோற் றுவித்ததோடு, தொடர்ந்து வந்த பார்ப்பனிய நூல்கள் எல்லாம், அதை அடியயாற்றி ஆதிக்கச் சமுதாயமாகப் பார்ப்பனியத்தையும் அடிமைச் சமூகமாகச் சூத்திரர்களையும் உருவாக்கி மனித நேயமற்ற, சமநிலை அற்ற சமூகப் படிநிலையை உருவாக்கிவைத்தது. இங்கே சத்திரியர், வைசியர், சூத்திரர் எல்லாமே அடிமைச் சமூகங்கள்.

இதை முதல் முதலாக எதிர்த்து இயக்கம் நடத்தியவர் புத்தர். பார்ப்பனியம் பதுங்கியது. புத்தர் வெற்றி பெற்றார். பின்னர், பவுத்தத்தில் தன்னை இணைத்துக் கொண்டது பார்ப்பனியம். புத்தர் தோல்வியுற்றார். வென்றது பார்ப்பனியம்.

இருந்தாலும் பவுத்த - பார்ப்பனியப் போரின் விளைவே நந்தர்கள் என்ற சூத்திரர் களின் அரசு வட இந்தியாவில் உருவாகியது என்கிறார் அருணன். நந்தர்கள் நாவிதர் சமூகத்தவர் என்பதை சான்றுகளுடன் இவர் உறுதிசெய்கிறார்.

சூத்திரன் ஆட்சியில் உள்ள நாடு பஞ்சத் தாலும், கொடிய நோயாலும் அழிய வேண்டும் (மனு : இயல் 8, 20 - 22 ) என்று சாபமிடும் பார்ப்பனர்கள், சூத்திர நந்த வம்சத்தை அழிக்காமல் விடுவார்களா? சந்திரகுப்த மவுரியன், இந்தியா மீது படையயடுத்து வந்த அலெக்சாந்தரின் உதவியை நாடினான் என்று ஏ.எல்.பாஷ்யத்தை மேற்கோள் காட்டும் அருணன், “பிராமண வாதிகளுக்குத் தேச பக்தியைவிட வருண பக்தியே முக்கியம்” என்று அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

பல்லவர்கள் காலமும், பிற்காலச் சோழர்கள் காலமும் பார்ப்பனர்களின் பொற்காலம். தமிழ்நாட்டிற்குப் பார்ப்பனர்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்ட காலம் இது. தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரத்திலும், புதுவைக்கு அருகில் திருபுவனி என்னும் ஊரிலும், சமஸ்கிருதக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுத் தமிழை புறம்தள்ளிய பார்ப்பனியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது “காலந்தோறும் பிராமணியம்”.

“அக்பர் ஆட்சியில் பிராமணியம் சலுகைகளை அனுபவித்தது. இந்தப்போக்கு ஜஹாங்கீர் ஆட்சியில் அனேகமாகத் தொடர்ந் தது” என்று சொல்லும் அருணன், அவுரங்கசீப் ஆட்சியைத்தவிர மற்ற முகலாயர்களின் ஆட்சியிலும் பார்ப்பனியம் சலுகைகள் அனுப வித்து வந்துள்ள செய்தியை மிகச் சரியாகப் பதிவு செய்கிறார்.

இஸ்லாமிய ஆட்சியில் ரசியாபேகம் இந்தியாவின் முதல் பேரரசியானார். பெண்ணடிமைச் சின்னங்களை வீசிவிட்டு மக்கள் முன் தோன்றிய முதல் பேரரசி ரசியா. அவருக்குப்பின் இந்திய அரியணையை அலங்கரித்தவர் இந்திராகாந்திதான், வேறு யாருமே இல்லை என்ற அருமையான தகவல் இந்நூலில் சொல்லப் பட்டுள்ளது.

என்றாலும், குழந்தை மணங்களும், கணவனை இழந்த இளம்பெண்களைக் கூட்டம் கூட்டமாகத் தீயில் தள்ளிப் பொசுக்கிய அவலங்களை நேரில்பார்த்த வரலாற்றாளர் களான அபுல்ஃபசல், இபின்பதுVதா, டூவர்ட் பார்போசா என்ற போர்த்துகீசியரின் நேரடிவாக்குமூலங்களை நூலாசியர் பதிவு செய்திருக்கும் விதம் நெஞ்சத்தைப் பதறச் செய்கிறது.

மராட்டிய சிவாஜி, கிஷ்ணதேவராயர் காலங்களில் பார்ப்பனர்களின் வளர்ச்சியும் ஆதிக்கமும் அதன் விளைவுகளும்; கூடுதலாகச் சொன்னால், இதுவரை வெளிவராத பார்ப்பனியச் செய் திகளை எல்லாம் தாங்கி வந்திருக்கும் அருமையான நூல் “காலந்தோறும் பிராமணியம்”.

இரண்டாம் பாகம் முன்னுரையில், இந்நூல் குறித்து “இந்தியா டுடே” இதழில் வெளிவந்த ஒரு விமர்சனம், “சாதியின் உருவாக்கத்தில் பிராமணித்திற்கு மட்டுமே பங்கிருப்பதாகக் கூறுவது முற்றிலும் சரியான கூற்றா” என்ற தலைப்பில் “சாதியின் தோற்றத்தை பிராமணன் என்பவனிடத்தில் சுமத்தி விட்ட தாக” அந்த விமர்சகர் வருத்தப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார் நூலாசிரியர்.

விமர்சனக் கட்டுரையின் தலைப்புக்கு “ஆம், சரிதான்” என்பதே விடையாகும், இரண்டாவதற்கு “சாதியின் தோற்றம் பிராமணனின் அடிப்படைச் சொத்து” என்பது சரியான கருத்து. விமர்சகரின் வருத்தம் அர்த்தமற்றது. ஏனென்றால்,

நான் எழுதிய “அருந்ததியர் இயக்க வரலாறு” நூலைப் பற்றிய விமர்சனத்தை “முற்றுகை” என்ற இதழுக்கு அனுப்பி இருந்தார் ஒரு நூல் விமர்சகர். அதைப்பார்த்த நான் முற்றுகை ஆசிரியர் யாக்கனிடம் கேட்டேன் இந்த விமர்சனம் சரியா என்று. அவர் சொன்னார், “நூலின் முதல் அத்தியாயத்தில் சிலபக்கங்களை மட்டுமே படித்துவிட்டு எழுதியிருக்கிறார் விமர்சனம் என்று. அவசரத்தில் வெளியிட்டு விட்டேன்” என்றார்.

அந்த விமர்சகர்தான் “காலந்தோறும் பிராமணியம்” நூலுக்கும் இந்தியா டுடேயில் விமர்சனம் எழுதியிருக்கிறார். கூலிக்கு மாரடிப்பது விமர்சனம் ஆகாது.

“காலந்தோறும் பிராமணியம்” ஒவ்வொரு தமிழரும், தமிழச்சியும் படிக்கவேண்டிய பயனுள்ள நூல். எழுதிய ஆசிரியர் அருணனின் பயனுள்ள இப்பணி நாளைய சமூக விடுதலைக்கான கருத்தாயுதங்களில் ஒன்றாக இருக்கும்!

- எழில்.இளங்கோவன்

Pin It