பார்ப்பனர்கள் ஆதிக்கத்திலுள்ள உச்சநீதிமன்றம் மக்கள் பிரதநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கே தன்னை ‘எஜமான்’ என்று, நிலைநிறுத்திக் கொண்டு பூணூலை சாட்டையாக மக்கள் மீது சுழற்றி வீசிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி, தி.மு.க.வின் தோழமை கட்சிகள் அறிவித்த முழு வேலை நிறுத்தத்தை, தடை செய்தது உச்சநீதிமன்றம்.

தி.மு.க. அணி - அதை ஏற்றுக் கொண்டு, முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிட்டு, ‘உண்ணாவிரதப்’ போராட்டத்தை அறிவித்தார்கள். அதைக்கூட உச்சநீதிமன்றத்தால் சகிக்க முடியவில்லை. முதல் தேதி அன்று காலையில் அ.தி.மு.க. சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அகர்வால், அரசு அலுவலகங்கள் தொடங்கப்படாத நேரத்தில் அவை செயல்படுகிறதா, இல்லையா என்பது பற்றிக்கூட பரிசீலிக்காமல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும், தமிழக அரசை கலைப்பதற்கு, உச்சநீதிமன்றம் குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யும் என்றும் மிரட்டியுள்ளார்.

மாநில அரசைக் கலைக்க பரிந்துரைக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு எப்படி வந்தது? ‘ராமராஜ்யத்தில்’ வழங்கப்பட்ட ஒரு குலத்துக்கு ஒரு நீதியைத்தான் - இப்போது உச்சநீதிமன்றமும் வழங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றம் இயற்றும் இடஒதுக்கீடு சட்டங்களை எல்லாம் ‘ராமராஜ்ய’ நீதிமன்றங்கள் முடக்கிப் போட்டுவிடுகின்றன. ‘சம்பூகன்கள்’ படிப்பதற்கு எப்படி அனுமதிப்பார்கள்?

நீதித்துறை என்ன - விமர்சனத்துக்கே அப்பாற்பட்டதா? தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒய்.கே.சபர்வால் பற்றி ‘மிட்டே’ நாளிதழ் வெளியிட்ட செய்திக்காக - அது நீதிமன்ற அவமதிப்பு என்று, டெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை எடுத்து, அந்தப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் கார்ட்டூன் ஓவியர் உட்பட நான்கு பேருக்கு நான்கு மாத சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. சபர்வால் தலைமை நீதிபதியாக இருந்தபோது - பல வணிக வளாகங்களை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கையால் கட்டிடம் கட்டும் சில ஒப்பந்தக்காரர்கள் பயன் பெற்றனர். அவர்களோடு நீதிபதியின் இரண்டு மகன்களான சேத்தன் சபர்வால், நிதின் சபர்வால் இருவருக்கும் தொடர்பு உண்டு. அத்துடன், தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்தில் தங்கிக் கொண்டே அவரது மகன்கள், இந்த வேலையை செய்திருக்கிறார்கள் என்று, அப்பத்திரிகை ஆவணங்களுடன் செய்தி வெளியிட்டது. இவ்வளவுக்கும், சபர்வால் பதவியில்கூட இல்லை. ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகும்கூட, நீதிபதி மீது குற்றம் சாட்டினால், அதற்கு நீதிமன்ற அவமதிப்பாகிவிடுமா?

சுமத்தப்பட்ட குற்றம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அதற்கு நீதிமன்ற அவமதிப்பு சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியாது என்று, அண்மையில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தைக்கூட நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

இப்படித்தான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதியான சிறீவத்சவா என்பவர் அண்மையில் ஒரு தீர்ப்பில் கூறும்போது பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்றார். உ.பி. மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் மைனாரிட்டிகள் அல்ல என்று ‘அதிரடியாக’ தீர்ப்பு வழங்கியவரும் இதே நீதிபதிதான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த் என்ற பார்ப்பனர், அரசு நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்தது பற்றிய சர்ச்சைகள் எழுந்தன.

அந்தப் பார்ப்பனர் ஓய்வு வயதையும் தாண்டி, முறைகேடாக பதவியில் நீடித்ததை அன்றைய சட்ட அமைச்சராக இருந்த ராம்ஜெத்மாலனி அம்பலப்படுத்தினார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எஸ்.சோத்தி பதவி ஓய்வுக்குப் பிறகு, ‘நீதியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதினார். நீதிபதிகளாக இருப்பவர்கள் நடுநிலை தவறி சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவதை, துணிவோடு அந்த நூலில் விவரித்திருந்தார். இந்த நூல் நீதிமன்றத்தை அவமதிக்கிறது என்று, அப்போதும் வழக்கு தொடரப்பட்டது.

தமிழ்நாட்டில் பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இராமச்சந்திரன் என்ற பார்ப்பனர் ஓய்வு வயதையும் தாண்டி, முறைகேடாக பதவியில் நீடித்ததை, பெரியார் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். இவர் பதவியில் நீடிக்கும்போதே அவரது தம்பி, 60-வது பிறந்த நாளைக் கொண்டாடியதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இப்படி ஏராளம் உண்டு.

நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்வதுபோல் நீதிபதிகளுக்கும், இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தின் 312வது பிரிவு, இதை வலியுறுத்துகிறது. ஆனாலும், நீதிபதிகள், இந்த சட்டப் பிரிவை அமுல்படுத்துவதில் அக்கறை காட்டுவதில்லை.

நாடாளுமன்றத்தின் அதிகாரம் பார்ப்பனரல்லாதாரிடம் வந்துவிட்ட நிலையில், பார்ப்பனர்கள் நீதிமன்றங்களைக் கைப்பற்றிக் கொண்டு, நீதிமன்றங்கள் வழியாக, தங்களது மேலாண்மையை நிலைநாட்டி வருகின்றனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.