1998

சனவரி

கல்பாக்கம் அணுஉலை ஆபத்து

அணுகுண்டு தயாரிப்பதற்காகத்தான் அணுசக்தி பயன்படுகிறது. அவ்வாறு அணுகுண்டு செய்வதற்கான கச்சா பொருட்களை உருவாக்கும்போது வெளியிடப்படும் வெப்பத்தை வைத்துதான் அணுசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து வரும் அணுக்கழிவுகளில் இருந்து மின் கதிர் இயக்க ஆபத்தின் விளைவு பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரை நிலைத்து நிற்கும். ராஜஸ்தானில் உள்ள அணுஉலையில் 400 மைக்ரோக்யூரி அளவிற்கு அதிகமானால் வேலை செய்ய வேண்டாமென அங்குள்ள அணுசக்தித் துறை ஆணையிட்டுள்ளது. ஆனால், இங்கு 960 மைக்ரோக்யூரி அளவிற்கு இருந்தாலும் வேலை செய்ய வேண்டுமென இங்குள்ள அதிகாரி கூறுகிறார். இதை எதிர்த்து இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். – செழியன்

தலித்துகளைப் பாதிக்கும் சூழல்

தலித் மக்களைப் பெரிதும் பாதித்து, வாழ்வைச் சீரழிக்கும் உலகமயமாக்கல் மற்றும் சூழலியல் பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடாமல், தலித் அமைப்புகளும் தலித் ஆர்வலர்களும் வெறுமனே இடஒதுக்கீட்டுப் பிரச்சினைகளை மட்டுமே முன்வைத்துப் போராடுவது, மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும். இன்றைய பொருளியல் தளத்திற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ள பார்ப்பனியத்தை அடையாளங்கண்டு உலகமயமாக்கலையும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போரிடாமல் தலித் போராட்டம் முழுமை பெறாது. – பிரித்திவிராஜ்

பிப்ரவரி

யாரை ஆதரிப்பது?

நேரு காலத்தில்தான் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டது. இந்திரா ஆட்சியில்தான் அந்த சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. ராஜிவ் காந்திதான் பூட்டியிருந்த கதவுகளைத் திறந்து அருகே சென்று பூசைநடத்த வழிசெய்தார். கடைசியாக, ராணுவத்தை உதவிக்கு அனுப்பி, நரசிம்மராவ் ஆட்சியில்தான் பாபர் மசூதி இடித்து நொறுக்கப்பட்டது. இசுலாமியர்கள் எப்படி காங்கிரசை ஆதரிக்க முடியும்? கரசேவைக்கு ஆளனுப்பிய ஜெயலலிதாவை ஆதரிக்க முடியுமா?  -ஆதவன்

பேராபத்தாக முடியும்

பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்கு சமூகநீதிக்கு எதிரான வாக்கு என்பதை அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டிலே சிறுபான்மை மக்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதைப் பொருத்துதான் மக்களாட்சியின் உணர்வை மதிப்பிட முடியும். இந்த எச்சரிக்கையை கேட்காவிட்டால், அது நியாயத்தின் தோல்வியாக அமைய நேரிடும். அதற்கு எதிர்காலம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். இப்பொழுது தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நிற்பது வெறும் இடங்களைப் பெறுவதற்காக மட்டுமல்ல; இங்கு பா.ஜ.க. விற்கு ஒரு கட்டுமானத்தை ஏற்படுத்திக்கொள்ள நினைக்கின்றனர். இது எதிர்காலத்தில் பேரபாயத்தை ஏற்படுத்தும்.

 – கி. வீரமணி

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

தமிழ்த்தேசிய அரசியலுடன் சாதி ஒழிப்பு அரசியலையும் முதன்மைப்படுத்தி, தலித் தலைமையில் சமூக விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் தலித் அமைப்புகள் சில வெகு மக்கள் அமைப்புகளாக வளர்ச்சியடைந்துள்ளன. விடுதலைச் சிறுத்தைகள், தியாகி இம்மானுவேல் பேரவை, தமிழக மனித உரிமைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் மற்றும் அம்பேத்கர் பேரவை ஆகியவை ஒருங்கிணைந்து சாதி ஒழிப்பு அய்க்கிய முன்னணியாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தலித் எழுச்சியும், தமிழ்த் தேசிய அரசியலும் செழுமையடைந்துள்ள நிலையினையும் கூர்மையடைந்துள்ள போக்கினையும் மதிப்பீடு செய்வது அவசியமாகிறது. – செய்திக் கட்டுரை

கோவை கலவரம்: மறைக்கப்பட்ட செய்திகள் சி.மா.பிரித்திவிராஜ் இந்துத்துவா + கோமாளித்தனம் = ‘துக்ளக்' நெடுஞ்செழியன் திருவந்தவாரில் பஞ்சமி நில மீட்பு தொடங்கியதுதேவராஜன் பசுத்தோல் போர்த்திய ‘கல்கி' நெடுஞ்செழியன்

மார்ச்-ஏப்ரல்

மேலவளவு தலைவர் பதவிக்கான இடஒதுக்கீட்டை நிரந்தரமாக்க வேண்டும்

நடைபெறவிருக்கும் ஊராட்சித் தேர்தலில், எங்கள் மேலவளவு ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் இந்த ஒதுக்கீட்டு அறிவிப்பை அறிந்த சாதி இந்துக்களில் கள்ளர்கள் வெறுப்படைந்தனர். இந்த ஒதுக்கீட்டினை எதிர்த்து, இதனைப் பொதுவாக அறிவிக்கச் செய்ய வேண்டி கூட்டுறவு, நிலவள வங்கி, பால் பண்ணை ஆகியவற்றிற்கான தேர்தல்களைப் புறக்கணிப்பது எனத் தீர்மானித்து மேலவளவு கள்ளர்கள் 2.9.1996 அன்று ‘ஊர்க்கூட்டம்' ஒன்றைக் கூட்டினர். மேலவளவு மந்தைத் திடலில் ஆயிரம் பேருக்கு மேல் கள்ளர்கள் கூடி, காந்தி நகர் காலனியைச் சேர்ந்த அனைத்துத் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊர்க்கூட்டம் நடத்தப் போவதாக அழைத்தனர்.

அக்கூட்டத்தில் எங்களிடம் கள்ளர்கள், ‘மேலவளவு இதுவரை பொதுவாக இருந்தது. ஆனால், இம்முறை அரசால் தவறாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதனை எதிர்க்கிறோம். அதனால் நீங்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடாது. மீறி மனுதாக்கல் செய்தால் நீங்கள் எங்கள் நிலத்தில் நடக்கக் கூடாது; ஊருணியில் தண்ணீர் எடுக்கக் கூடாது; எங்கள் கடைகளில் சாமான்கள் வாங்கக் கூடாது; எங்கள் சாதிக்காரர்களிடம் வேலை செய்யக் கூடாது; எங்கள் தெருக்களில் நடமாடக் கூடாது. இது ஊர்க் கட்டுப்பாடு. எனவே, நாம் எல்லோரும் சேர்ந்து இத்தேர்தலைப் புறக்கணித்தால் இது பொதுவாக அறிவிக்கப்பட்டுவிடும்” என்றனர்.

ஆனால், இளைஞர்கள் பலரும் ஒரு மனதாக, ‘அரசு தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கியிருக்கும் உரிமையைப் பறிப்பதற்கு கள்ளர்கள் திட்டமிடுகிறார்கள்” எனக்கூறி இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தேர்தலில் உறுதியாகப் போட்டியிடுவது பற்றி கூறிவிட்டு வெளியேறினர். கள்ளர்கள் கூலிப்படையாகச் சிலரை அமர்த்தி, கொட்டாம்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் எங்கள் இனத்தவர் எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவிடாதவாறு தடுத்து விட்டனர்.

இது இவ்வாறு இருந்தபோதிலும் எங்கள் இன இளைஞர்களில் நான், காஞ்சிவனம், சுரங்கமலை, கன்மாய்பட்டியைச் சேர்ந்த வையன் கருப்பன் ஆகிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 5.9.1996 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்...

பின்னர் 7,8 ஆகிய நாட்களில் தொடர்ந்து ஊருக்கு வந்து கள்ளர்கள் மிரட்டினார்கள். 9.6.96 அன்று காலை 10 மணிக்கு மந்தைத் திடலில் கூடிய கள்ளர்கள் எங்கள்இன மக்கள் எல்லாரையும் வலுக்கட்டாயமாக அழைத்து, ‘வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றவர்களை 10.9.1996 வரை வெளியே விட்டுவிடக் கூடாது: மீறிச் சென்றால் வெள்ளரிக்காயைப் போல் தலையைச் சீவி விடுவோம்” என்று எச்சரித்து அனுப்பினர்...

ஆகவே நான் தங்களிடம் வேண்டுவது என்னவென்றால், அரசால் எங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்க நினைத்து, பலவகையான கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கள்ளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தும், காவல் பணியிலிருந்து தங்கள் கடமையைச் சரிவர செய்யாத போலிசார் மீது நடவடிக்கை எடுத்தும், இப்பகுதி பதற்றம் நிலவுகிறது

என்பதை நன்கு அறிந்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத மேல் மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தும், அரசுப் பணியைச் சரிவர செய்யவிடாமல் தடுத்த கள்ளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிந்து கேட்டுக் கொள்வதோடு, இந்த மேலவளவு ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடஒதுக்கீட்டை நிரந்தரமாகவே ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாவீரன் மேலவளவு முருகேசன், சாதி இந்துக்களின் மிரட்டல் குறித்து தெளிவாக எழுதி, ‘தேசியப் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் ஆணை'யத்திற்கு அனுப்பிய கடிதத்திலிருந்து சில பகுதிகள்

மரண தண்டனையை ஒழித்துவிட்டால், கொடூரமான குற்றங்கள் அதிகரித்து விடுமென சிலர் கூறுகின்றனர். இது தவறு. மரண தண்டனையைக் கைவிட்ட நாடுகளில், அந்தத் தண்டனை நடைமுறையில் இருந்த காலங்களிலும் அது கைவிடப்பட்ட பின்னரும் பதிவாகியுள்ள குற்றங்களின் பண்பிலோ, அளவிலோ பெரிய மாற்றம் எதுவுமில்லை எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. – டாக்டர் பாலகோபால்: ‘தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்'

மே

ஒற்றுமை மாயை!

தலித் ஒற்றுமையை ஏன் எல்லோரும் வலியுறுத்துகின்றனர்? இது, ஆதிக்க சாதியினரின் தந்திரம். நம் மக்களை திசை திருப்புவதற்கான ஒரு திட்டம். ‘தலித் மக்களிடையே ஒற்றுமை இல்லை; அதனால் அவர்கள் காலம் முழுவதும் இப்படியே இருக்க வேண்டியதுதான்' என்று ஒடுக்கப்பட்ட மக்களையே அவர்களின் நிலைக்குக் காரணம் என்று குறை கூறுகின்றனர். இதற்கு நாம் இரையாகக் கூடாது. நாம் ஒன்றுபட்டாலே நம் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்பது தவறு. நாம் ஒன்றுபடுவது சாத்தியமில்லை என்பதால்தான் இக்கருத்தை முன்னிறுத்துகின்றனர் என்பதே உண்மை. ஒற்றுமை என்பது நமது போராட்டத்தின் மூலம் மட்டுமே இயல்பாக வரும்; நாம் ஒற்றுமையை தேடிப்போகவேண்டியதில்லை. ஒற்றுமை என்பது நம்மை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் ஒரு மாயை.

– தலையங்கம்

மதக் கலவரங்களின் பின்னணி என்ன?

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்கள் உடலில் குண்டு பாய்ந்த இடத்தைத் தோண்டி எடுத்து, பெட்ரோல் விட்டு எரித்து, மதக் கலவரத்தால் இறந்தவர்கள் என அறிக்கை கொடுக்க காவல் துறை முடிவு செய்ததையும், பின்னர் உறவினர்களின் உடல்களை ஏற்க மறுத்ததால் இரண்டு நாட்களுக்குப் பின் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தவர்கள் எனக் குறித்து உடல்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் மீதும் அவர்களின் பொருளாதாரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இக்கலவரத்தை எவரும் வரையறுக்கவில்லை. – உண்மை அறியும் குழு அறிக்கை 

சூன்

ஆபத்தான இந்து பண்பாடு

மதவாதம் என்பது, அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு தந்திரம். இந்து ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான ஒரு முயற்சி. ஆனால், மதவாத அரசியல் என்பது அதிகாரத்தை மட்டுமே கைப்பற்றுவதற்கான செயல்முறைத்

திட்டம் அல்ல. சமூகத்தில் அதிகாரத்தைப்பெற்று, மக்கள் எண்ணங்களை ஆக்கிரமித்து அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற மதவாத சக்திகள் திட்டமிடுகின்றன. இது ஓர் அரசியல் செயல்முறைத் திட்டம் என்பதைவிட, ஒரு பண்பாட்டுச் செயல் முறைத் திட்டம் என்பதே சரியானதாகும். எனவேதான், இந்த மதவாத சக்திகள், பண்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதில் தீவிர கவனத்தைச் செலுத்துகின்றன. – கே. என். பணிக்கர்

தலித்: சாதியை அழிப்பதற்கான குறியீடு

‘தலித்' என்னும் சொல்லை சாதி ஒழிப்பை முன்னிலைப்படுத்தும், போராளிகளைக் குறிக்கும் சொல்லாகவே கொள்ள வேண்டும். அதன் அரசியல் செயற்தளம் அவ்வாறே அமைந்துள்ளது. எனவேதான், தலித் என்று தலைநிமிரக் கோரி இச்சொல் வெளிப்பட்டது. இது, சாதியைக் குறிக்கும் சொல் அல்ல; சாதி அழிப்பைக் குறிக்கும் சொல். இவ்வாறே இச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இது, தாழ்த்தப்பட்ட அனைத்து சாதிகளையும் குறிக்கும் சொல் அல்ல; அனைத்து சாதிகளிலிருந்தும் விலகி, சாதி ஒழிப்புக்கான போராளிப் படையில் அணி திரள்பவர்களே தலித் மக்கள். அவர்களின் செயலே தலித் அரசியல்; அதற்கான தத்துவமே தலித்தியம். அவர்கள் படைக்கும் இலக்கியமே தலித் இலக்கியம். அவர்களின் அரசியல் தலைமையே தலித் தலைமை என்பது. – உஞ்சை ராசன்

மேலவளவு ராஜா நேர்காணல்

மாவீரன் மேலவளவு முருகேசன் படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தன் உயிரையும் துச்சமாக எண்ணி, விடுதலை வேட்கை என்ற லட்சியத்தோடு மேலவளவைச் சேர்ந்த ராஜா தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அவருடைய பேட்டி ‘தலித் முரசி'ல் இடம் பெற்றுள்ளது.

– ஜெயராஜ்

அணுகுண்டுக்கு தேசபேதம் இல்லை

ரஷ்ய செர்னோபில் அணுஉலை விபத்தில் காற்று மூலம் பரவிய கதிரியக்கப் பொருட்கள் சுவீடன் நாட்டு காடுகளில், புல்வெளிகளில் படிந்தது. அவற்றை மேய்ந்த மான்களின் உடலிலும் கதிரியக்கம் பரவியது. நீண்ட தூரம் செல்லும் பறவைகளின் மூலம் இந்தியாவுக்கும் அந்த கதிரியக்கம் பரவியதாகக் கூறுகின்றனர். அணுகுண்டுகளுக்கு தேச பேதம் கிடையாது. பாகிஸ்தான் மீது போடுகின்ற குண்டு, பாகிஸ்தானுக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது, – அ.தா.பாலசுப்பிரமணியன்

பா.ஜ.க. அரசின் மறைமுகத் திட்டங்கள் நெடுஞ்செழியன் மதவாதத்தின் பன்முகப் பரிமாணங்கள்

கே.என். பணிக்கர் நீதிபதி சிறீ கிருஷ்ணா குழுவின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஏழு கடல் கடந்து வேர்

நீட்டும் இந்துத்துவா அ. மார்க்ஸ் இந்துத்துவா அணுகுண்டு நெடுஞ்செழியன்

மரண தண்டனையை ஒழித்துவிட்டால், கொடூரமான குற்றங்கள் அதிகரித்து விடுமென சிலர் கூறுகின்றனர். இது தவறு. மரண தண்டனையைக் கைவிட்ட நாடுகளில், அந்தத் தண்டனை நடைமுறையில் இருந்த காலங்களிலும் அது கைவிடப்பட்ட பின்னரும் பதிவாகியுள்ள குற்றங்களின் பண்பிலோ, அளவிலோ பெரிய மாற்றம் எதுவுமில்லை எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. – டாக்டர் பாலகோபால் : ‘தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும்' 

சூலை ஆகஸ்ட்

மக்கள் வெகுண்டெழுவர்

‘தடா' சட்டத்தை பஞ்சாப் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காகத்தான் டில்லி அரசு முதலில் கொண்டு வந்தது. ஆனால், அது தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டபோது, பெரும்பாலும் இசுலாமியர்களும், தலித் மக்களும்தான் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டனர். மேலும், எந்தவொரு கொடூரமான சட்டமானாலும் அது எளிய மக்கள், சிறுபான்மை மக்கள், தலித் மக்கள் மற்றும் தேசிய இன உணர்வாளர்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும் என்பதில் அய்யமில்லை.

ஏற்கனவே நடைமுறையில் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் இருக்கும்போது இப்புதிய சட்டம் தேவையில்லை. எனவே, இச்சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். குடியரசுத் தலைவர் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்கிற குரல் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து எழுகிறது. அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகளும் இச்சட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறது. – திருமாவளவன்

முரண்பாடான ஜனநாயகம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய குழுவில் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் கூறியதை நினைவிற் கொள்வது முக்கியமானதாகும். அவர் பின்வருமாறு கூறினார். ‘நாட்டில் ஓர் அரசியல் ஜனநாயகம் உருவாகப் போகிறது. சமூக சமத்துவமின்மை தொடர்வது, அரசியல் ஜனநாயகத்திற்கு முரண்பாடனதாகும். இந்த முரண்பாடு விரைவில் களையப்பட வேண்டும். இந்த முரண்பாடு தொடருமானால், சமூக சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் ஒருநாள் இந்த அரசியல் ஜனநாயகத்தையே குலைத்து விடுவார்கள்.”

– ஜேம்ஸ் மாசே

ஒரு தலித் இதழாளரைத் தேடி...

அங்கீகரிக்கப்பட்ட 686 செய்தியாளர்களில் 454 செய்தியாளர்களின் பெயர்கள் சாதிப்பட்டத்தோடு இருந்தது; 240 பார்ப்பனர்கள், 79 பஞ்சாபி கத்ரிகள், 44 காயஸ்தர்கள், 26 முஸ்லிம்கள், அதே அளவு பனியாக்கள், 19 கிறித்துவர்கள், 12 ஜெயின்கள், ஒன்பது (வங்காள) பைத்யாக்கள். மீதமுள்ள 232 செய்தியாளர்களில், ஒரு குத்துமதிப்பாக 47 பேருடைய சாதிப்பின்னணி என்னவென்று துருவிப் பார்த்தேன். அதில் ஒருவர் கூட தலித்தாகத் தென்படவில்லை.

 – பி.என். உன்னியால், மூத்த பத்திரிகையாளர், ‘பயனீர்' நாளேட்டில்

பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்குமா?

உலகிலேயே நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு சட்டரீதியாக இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரே நாடு அர்ஜென்டினா மட்டும்தான்; அங்கு பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்த வரிசையில் இடம் பெற முயலும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்த முயற்சி பெற்றி பெறுமா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். பெண்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வதிலும், விழிப்புணர்வு பெறுவதிலும், உறுதியாகப் போராடுவதிலும்தான் இந்த கேள்விக்கான விடை அடங்கி இருக்கிறது.

– விடுதலை க. ராசேந்திரன்

கூடங்குளம் அணுமின் நிலைய ஆபத்து

கூடங்குளத்தில் இரு அணு உலைகள் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ரஷ்யாவுக்கும், இந்தியாவிற்குமிடையில் அண்மையில் ஏற்பட்டுள்ளது. இவ்வணு உலைத் திட்டம் மனித இனத்திற்கும், பிற உயிரினங்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பெரும் அழிவை விளைவிக்கும் ஒரு நாசகாரத் திட்டமாகும். அணு உலையில் பெரிய விபத்து ஏற்பட்டால், ஒவ்வொரு பக்கமும் 170 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் கதிரியக்கப் பாதிப்பு இருக்கும். விபத்து எற்பட்ட48 மணி நேரத்திற்குள் இதிலுள்ள மக்கள் இடம் பெயரவேண்டும். இது நடைமுறைச் சாத்தியமா? – ஒய். டேவிட்

மதவாதத்தை முறியடிப்பது எப்படி?

பண்பாட்டுத் துறையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். மதவாத சக்திகள், நமது பண்பாட்டுக்கு எவ்வகையான கேடு விளைவித்துள்ளன என்று பார்க்க வேண்டும். மதவாதிகள், இந்தியாவில் நிலவும் பன்முகப் பண்பாட்டை ஒரே போன்ற தன்மையுடையதாக மாற்ற முயல்கின்றனர். தலித் மக்களின் தனித்தன்மையான வழிபாட்டு முறைகள் அனைத்தும் இந்துமயமாக்கப்பட்டு விட்டன. எனவே அம்மக்களின் தனித்தன்மை என்பது அழிந்து, ஒன்றோடு ஒன்றாக ஒன்றிப் போய்விட்டது. நமது பண்பாடு பன்முகத் தன்மை கொண்டது. இது ஊருக்கு ஊர் வேறுபடும். ஆனால், இதை மதவாதிகள் ஏற்பதில்லை. – கே.என். பணிக்கர்

தூக்கு தண்டனை எதிர்ப்பு மாநாடு கங்கை கொண்டான் மலம் அள்ளும் கைகளுக்கு மறுவாழ்வு நா. கருணாநிதி பொடா : கொலைகாரச் சட்டம் சுப. வீரபாண்டியன் மதவாதமயமாக்கலின் பின்னணி கே.என். பணிக்கர் 356 – மக்களாட்சிக்கு எதிரானது நெடுஞ்செழியன் சிதம்பரம் விக்டோரியா கொலை உண்மை அறியும் குழு அறிக்கை

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறை, வரதட்சணைக் கொடுமை, பெண்களை ஆபாசமாக்கி விளம்பரம் செய்தல் போன்றவற்றை எதிர்த்தல் என்றளவில்தான் பெண்ணிய இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இந்து மதத்தை எதிர்க்கவில்லை. – அரங்க மல்லிகா : ‘பெண்ணிய இயக்கங்கள் இந்து மதத்தை எதிர்க்க வேண்டும்'

*** 

தேசியம் என்பது, விருப்பு மற்றும் வெறுப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஒன்று என அம்பேத்கர் கூறுகிறார். இங்கு தமிழ்த் தேசியம் எதை விரும்புகிறது, எதை வெறுக்கிறது விலக்குகிறது எனப் பாருங்கள். இது, சாதியை ஒழிக்குமா? தலித் விடுதலைப் போராட்டமும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டமும் சில ஒற்றுமைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல. அவை இரண்டையும் ஒன்றாக வைத்து திட்டம் தீட்டுவது, ஒன்றுக்கு மற்றதை பலியிடவே வழிவகுக்கும்.

– ரவிக்குமார் :’இரட்டை வாக்குரிமைக்கான போராட்டம், தலித் மக்களை ஓரணியில் சேர்க்கும்'

செப்டம்பர்

சிறீ கிருஷ்ணா அறிக்கை

சிறீ கிருஷ்ணா அறிக்கையை ஏற்பதற்கு இந்தியா பாகிஸ்தான் அல்ல' என்று பால்தாக்கரே கொக்கரிக்கிறார். அதாவது, இது இந்துக்களின் நாடு என்பதுதான் இதன்மூலம் அவர் சொல்ல வரும் செய்தி. சுமார் 3000 உயிர்கள் பலியாகி விட்டதாக மதிப்பிடப்படும் நாட்டில் ஒரு மிகப் பெரும் மதக்கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்ஆணவத்தின் உச்சியில்நின்று கொண்டு, தங்களை என்ன செய்துவிட முடியும் என்று அரசு ஆதரவோடு சவால் விடுகிறார்கள்.

இப்படி கற்பனை செய்யலாம்: ஒரு மாநிலத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக இருந்து, அம்மாநிலத்தில் முஸ்லிம்களைக் குற்றப்படுத்தி ஒரு விசாரணை கமிஷன் அறிக்கை தந்து அந்த அறிக்கையை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, அம்மாநில முதல்வர் ஏற்க மறுத்தால், இந்த நாட்டின் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், மனித உரிமை பேசும் அறிவுஜீவிகள், எல்லாம் என்ன செய்திருப்பார்கள்? நாடே தீப்பற்றி எரிந்திருக்காதா? அந்த எதிர்ப்பு உணர்வுகளில் நூறில் ஒருபங்கு எதிர்ப்பாவது இப்போது வெளிப்பட்டிருக்கிறதா? – க. ராசேந்திரன்

சாமியாரே போலிதான்!

போலிச் சாமியார்' என்கிற சொல்லைப் பயன்படுத்துவதே தவறானது. மாட்டுகின்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்டா போலிச் சாமியாரா? 1994 க்கு முன்னால் பிரேமானந்தாவும் சாமியார் தான். சாமியாரே போலிதான். ஒரு நாத்திகனுக்குரிய ஆவேசத்தோடு பார்ப்பனர் அல்லாத சாமியார்களைப் பற்றி செய்திகள் வெளியிடும் ‘ஜுனியர் விகடன்,' சங்கராச்சாரி பற்றிய சர்ச்சையில் இறங்கவே இறங்காது. துறவு வாழ்க்கையில் தண்டத்தை வைத்துவிட்டு ஓடிப்போய்விட்ட ஜெயேந்திரனைப் பற்றி அது ஒரு வரி கூட எதிராக எழுதியதில்லை. சங்கராச்சாரி, சாய்பாபா போன்றவர்களைப் பற்றி மீடியாவில் எப்போதுமே எதிரான செய்திகள் வெளிவராது. – வே. மதிமாறன்

அக்டோபர்

மாறாத ஜாதி!

ஒடுக்கப்பட்ட மக்கள் முதலில் கல்வி கற்க வேண்டும் என்றனர்; அதிலும் தீண்டாமைதான். நகர்ப்புறங்களுக்குச் செல்ல வேண்டும் என்றனர்; அங்கும் அவர்களுக்கு மட்டும் சேரி வாழ்க்கைதான். தொழில்மயமானால் எல்லாம் சரியாகிவிடும் என்றனர்; அங்கும் நவீன வர்ணாசிரமம்தான். இடஒதுக்கீடு அளித்தால் ஏற்றத்தாழ்வு இருக்காது என்றனர்; ஆனால், அரசுப் பணிகள் இன்றளவும் ‘அக்கிரகார' மயம்தான். கணினி யுகத்தில் ஜாதி எல்லாம் அடியோடு மறைந்து விடும் என்றனர்; அங்கும்இம்மக்கள் ‘அவர்ணஸ்தர்' களாக்கப்பட்டு விட்டனர். கிராமத்தில் இருக்கும்வரை தீண்டத்தகாதவன் என உடல் ரீதியான தாக்குதல்கள்; ஓரளவு ஆட்சி நிர்வாகத்திற்கு வந்தால் ‘செட்யூல்டு காஸ்ட்' எனும் தீண்டாமை – உளவியல் ரீதியான தாக்குதல்கள்; இதையெல்லாம் எதிர்த்து இயக்கமானால் ‘தலித் தீவிரவாதி' பட்டம் – அரச வன்முறை. சமத்துவபுரங்களிலும் சேரிகள் உருவாகும் ஆபத்தை மறுப்பதற்கில்லையே!

– தலையங்கம்

அண்ணாவின் வாரிசா?

கருத்துகளைப் பிரித்தெடுத்து விட்டு தலைவர்களை மட்டும் புகழ்ந்து கொண்டிருக்கும் நோய் தமிழக அரசியலில் வேகமாகப் பரவி வருகிறது! அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை என்பார்கள்! பெரியார் சிறந்த சமூக சீர்திருத்தவாதி என்பார்கள்; அண்ணா சிறந்த பேச்சாளர் என்பார்கள். இந்தப் புகழ்ச்சி உரைகளோடு அவர்களின் கருத்துகள் பேசப்படுவது இல்லை. காலங்காலமாகச் சொல்ல வேண்டிய கருத்துகள் சிதைக்கப்பட்டு விடுகின்றன. கடைசி கட்டத்தில் பெரியார், அண்ணாவோடு வாஜ்பாயும் மின் விளக்கு ‘கட் அவுட்'டில் சேர்க்கப்பட்டு விட்டார்! டாக்டர் அம்பேத்கருக்கும் இந்த ஆபத்துகள் வரலாம்; தந்தை பெரியாருக்கும் வரலாம்! எச்சரிக்கை! எச்சரிக்கை!

– க. ராசேந்திரன்

***

தொழில் உரிமை கிடக்கட்டும்
தொன்றுதொட்டு
வாழ்வுரிமை இழப்பதே
தமிழன் வரலாறு
சேரிக்குத் தள்ளப்பட்டவன்
செந்தமிழன் இல்லையா?

அவனை
ஊருக்கு நடுவே உட்கார
வைத்தால்
நாறுமோ
உங்கள் வீடும் நாடும்
 
தேர்வடம் பிடிக்க நீளும் கையை
ஜாதித் தமிழனின் கை
தட்டிவிடும் என்றால்
தமிழ்த்தேசியம்
எந்தத் தறுதலைகளுக்கு?

– கவிஞர் இன்குலாப்

***

பழங்குடிகளின் உரிமைப்

போராட்டம் பெண்களை துகிலுரிக்கும் பத்திரிகைகள் நெடுஞ்செழியன்

அரசமைப்புச் சட்டத்தை பா.ஜ.க. திருத்தக்கூடாது வரலாற்றைத் திரித்து எழுதும் பா.ஜ.க. நீனா வியாஸ் 

நவம்பர்

தலித் மக்களுக்கு எதிரான சதி

விழுப்புரம் மாவட்டத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஏறத்தாழ 27 லட்சம் மக்கள் தொகை கொண்ட நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களால் ஆன மாவட்டம் அது. நான்காயிரம் கிராமங்கள் என்றால் நான்காயிரம் சேரிகள் உள்ளதென்று பொருள். நான்காயிரம் தனி சுடுகாடுகள் உள்ளனவென்று பொருள். ஆக, நான்காயிரம் கிராமங்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் தீண்டாமை இருக்கிறதென்று பொருள். ஆனால், இந்த ஆண்டில் இந்த மாவட்டத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவான வழக்குகள் 31 மட்டுமே. அவற்றில் 19 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. ஒன்பது வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. வெறும் மூன்று வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு சொல்லப்பட்டது. – ரவிக்குமார்

அடித்தள மக்களும் பத்திரிகைகளும்

வணிகத்திற்காக வரும் நாளேடுகள் மட்டுமின்றி, பொதுச் செய்திகளை வெளியிடும் நாளேடுகளில் கூட வணிகத்திற்கென தனியே செய்தியாளர்களை வைத்துள்ளனர். இதேபோல் விளையாட்டுக்கென தனியாக நிருபர்கள் உள்ளனர். ஒரு நாளேட்டில் ‘கோல்ப்' விளையாட்டைப்பற்றி எழுதுவதற்கென்றே தனியாக முழுநேரம் பணி புரியும் ஒரு நிருபர் உள்ளார். அதேபோல், நாகரிக உடைகள், அணிகலன்கள் என முக்கியமற்ற இவற்றைப் பற்றி எழுதுவதற்கு என தனித்தனி நிருபர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள பெரிய பத்திரிகைகளில் கூட கிராமப்புற ஏழ்மையைப் பற்றி எழுதுவதற்கு என ஒரேயொரு முழுநேர நிருபர்கூட இல்லை.

– பி. சாய்நாத்

இந்திய அமைப்பைத் தகர்ப்பதுதான் தீர்வு

இந்தியாவில், தமிழகத்தின் கிராமங்களிலும் நகரங்களிலும் நாள்தோறும் நிகழ்ந்துவரும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த – தனது ஆற்றலோ, தனது இயக்கத்தின் ஆற்றலோ போதுமானதல்ல என்றும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தலையிடுவது சாத்தியமல்ல என்றும் கருதிய பெரியார், தீண்டாமையையும் சாதியத்தையும் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தையும் அந்த அரசியல் சட்டம் பாதுகாக்கும் இந்தியா என்ற அமைப்பையும் தகர்ப்பதுதான் அதற்குத் தீர்வு எனக் கருதினார். அதற்காகத்தான் 1957 இல் அவர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் கிளர்ச்சியை நடத்தினார். – எஸ்.வி. ராஜதுரை

டிசம்பர்

மேலவளவு: தண்டனை எப்போது?

மேலவளவு படுகொலை இந்த நாட்டில் தலித் மக்களது நிலை என்னவாக இருக்கிறது என்பதன் குறியீடாகும். இந்த நாட்டில் உள்ள அரசாங்கம், காவல் துறை, நீதித்துறை, அரசியல் கட்சிகள் எல்லாவற்றினதும் சாதிச்சார்பை அம்பலப்படுத்திய குறியீடுதான் மேலவளவு படுகொலை. இந்தக் கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளின் பிணையை ரத்து செய்வதற்கே உச்ச நீதிமன்றம் வரை செல்லவேண்டியிருந்தால், அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர எங்கே போவது? உச்ச நீதிமன்றத்தையும் தாண்டி அதிகாரம் கொண்ட ஒன்றுதான் அந்தக் தண்டனையை வழங்க முடியும். அந்த அதிகாரம், பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம்தான் இருக்கிறது. – ஆதவன்

தாழ்த்தப்பட்ட அமைப்புகள் ஜாதி அமைப்புகளா?

சாதிக் கலவரத்திற்கு அரசியல் பின்னணி உள்ளது. இந்த அரசியல் கட்சிகள் எப்படி சாதிக் கலவரத்தை அடக்க முடியும்? சாதியைப் பார்த்து தான் அரசியல் நடத்துகின்றனர். மேடைக்கு தான் தமிழன், தமிழ் என்று பேசுகின்றனர். அரசியல் கட்சிகள் மட்டும் கூடி சாதிக் கலவரத்தை தடுக்கப்போகிறார்களாம். இது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து. சாதி அமைப்புகள் என்றால், தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்புகளை உட்படுத்தப் பார்க்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களிடம் சாதி எப்படி இருக்க முடியும்? ஜாதியே வேண்டாம் என்றுதானே கூறுகிறோம். ஜாதியே வேண்டாம் என்பவன் ஜாதி வெறியனாக இருக்க முடியாது. ஆனால், தாழ்த்தப்பட்டோர் அல்லாத பிறரிடம் சாதி வெறி ஒரு சதவிகிதம் கூட மாறவில்லை. ஜாதிக் கொடுமையை எதிர்க்கும் நாம் ஜனநாயக சக்திகளை அடையாளம் காண வேண்டியுள்ளது. – திருமாவளவன்

கள்ளர், தேவர், மறவர் என்ற மூன்று பிரிவினரும் முக்குலத்தோர் என இணைந்து எப்படி பலம் பெறுகின்றனரோ அதுபோல பள்ளர், பறையர், சக்கிலியர் இவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் நாம் வலிமை பெற முடியும். ‘பறையர் குரல்' என்றும் ‘மள்ளர் மலர்' என்றும் இதழ்கள் வெளிவருவது விரும்பத்தக்கது அல்ல.

– டாக்டர் வேலு அண்ணாமலை:’தலித் மக்கள் இந்துக்கள் அல்லர்'

Pin It