இலங்கையில் சிங்களராகப் பிறந்த டாக்டர் ஜூட் லால் பெர்னாண்டோ, தற்பொழுது அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் ஆய்வாளராகப் பணி புரிகிறார். மதங்கள் பற்றிய ஆய்விலும் அமைதி குறித்த ஆய்விலும் ஈடுபாடு உடைய அவர், அமைதி முயற்சிகளில் மதங்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறித்தும் தேசிய இனச்சிக்கல்கள் குறித்தும் குறிப்பாக இலங்கை சார்ந்தும், பொதுவாக தென்னாசியா சார்ந்தும் தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இலங்கையின் "தேசிய அரசு உருவாக்கத்திலும் அழிவிலும் மதத்தின் பங்கு' என்ற தலைப்பிலான அவரது ஆய்வு நூல் பதிப்பிற்கு தயாராகி வருகிறது. அமைதியை முன்னெடுப்பதற்கான இதழ்களாக வெளிவரும் சிங்கள இதழான "கிதுசாரா' மற்றும் தமிழ் இதழான "ஒளியை நோக்கி' ஆகியவற்றின் நிறுவன உறுப்பினர் இவர். அகில இலங்கை மீனவத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பெர்னாண்டோ இருந்தார். 18.5.2013 அன்று "தமிழ் நெட்' இணையதளம் வெளியிட்ட ஜூட் பெர்னாண்டோ அவர்களுடைய பேட்டியின் தமிழாக்கமே இது.

தமிழில் : புலேந்திரன்

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட நாளான மே 18 அன்று, நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அனைவரும் ஒன்றுகூடி நினைவுகூர வேண்டிய தேவை என்ன?

நாம் யாரை நேசித்தோமோ அவர்கள் நம்மை விட்டுச் சென்றதை வெறுமனே நினைவு கூர்வதற்காகவா நாம் இங்கு கூடியிருக்கிறோம்? இல்லை, அதற்காக மட்டும் நாம் இங்கு கூடவில்லை. ஒரு மிகப் பெரிய காரணத்திற்காகத்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். நாம் யாரை அதிகம் நேசித்தோமோ அவர்களை இழந்த வலிக்குப் பின்னால் மிக ஆழமான ஒரு செய்தி அடங்கி இருப்பதை நாம் அறிவோம். அந்த செய்தியை ஒட்டுமொத்த உலகிற்கும் தெரிவிப்பதற்காகத்தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்படுவீர்கள் என்று குண்டு மழை பொழிந்து அச்சுறுத்திய பிறகும் தமிழ் மக்களாகிய எங்களை அடக்கி விட முடியாது என்ற உண்மையை ஒட்டுமொத்த உலகத்திற்கும் தெரிவிப்பதற்காகத்தான் இங்கு ஒன்று கூடியுள்ளோம். எனவே, நம்முடைய பலவீனங்களை நினைவு கூர்வதற்காகவோ, நாம் தோற்கடிக்கப்பட்டதை அல்லது நாம் இழந்ததை குறித்து நினைவு கூர்வதற்காகவோ நாம் இங்கு ஒன்றுகூடவில்லை. நம்முடைய அளப்பரிய மனித உணர்வையும் மன வலிமையையும் நம் மக்களின் சுதந்திர வேட்கையையும் கொண்டாடுவதற்கும் நினைவு கூர்வதற்குமே நாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம்.

மரணத்தை எதிர்கொண்ட நிலையிலும் தமிழ் மக்கள் சுதந்திரத்திற்கான தங்கள் உறுதியை இழக்கவில்லை என்பதை உலகத்திற்கு தெரிவிப்பதற்காகத்தான் இந்த கொண்டாட்டம் இங்கு நடைபெறுகிறது. ஒரு தேசமாக இணைந்து நின்று தங்கள் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக உறுதியேற்றிருக்கக்கூடிய மக்களை இதுபோன்ற பாரிய படுகொலைகளால் கூட அடக்கிவிட முடியாது. இம்மக்களின் உறுதியை மரணத்தாலேயே குலைக்க முடியாது எனில், வேறு எவற்றாலும் அதனை குலைக்க முடியாது.

இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?

இலங்கை அரசு தனது வெற்றியை கொண்டாடும் வகையில் பெரிய நிகழ்வுகளை இன்று (மே 18) ஏற்பாடு செய்திருப்பதை நாம் அறிவோம். இலங்கை அரசும் அதன் ஆயுதப் படைகளும் தங்களுடைய மேலான ஆயுத பலத்தை கொண்டாடும் நிலையில், தமிழ் மக்கள் தங்களுடைய மேலõன மன வலிமையையும் எவராலும் தோற்கடிக்க முடியாத தங்களுடைய சுதந்திர வேட்கையையும் கொண்டாடுகிறார்கள். அவர்கள் கொடூரமான வன்மத்தைக் கொண்டாடுகிறார்கள்; நாமோ நம்முடைய மனித நேயத்தை கொண்டாடுகிறோம். அவர்கள் பொய்களை கொண்டாடுகிறார்கள்; நாமோ உண்மையைக் கொண்டாடுகிறோம்.

இலங்கை அரசு தன்னுடைய சொந்த முயற்சியாலேயே எல்லாவிதமான பன்னாட்டுச் சதிகளையும் எதிர்த்து இப்போரை வென்றதாக பெருமையாகக் கூறிக்கொள்கிறது. இல்லை, இல்லவே இல்லை. அவர்கள், இப்போரை தாங்களாக வெல்லவில்லை. 30 ஆண்டுகளாக அவர்களால் அதைச் செய்யமுடியவில்லை. 2002 இல் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அமைதி முயற்சியையும் அவர்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்தை தமிழ்த்தேசியப் போராட்டம் ஈட்டிய வலு சமநிலை உருவாக்கியது.

பின் அவர்கள் எப்படி போரை வென்றனர்?

வாஷிங்டன் (அமெரிக்கா) தமிழ்த்தேசிய தலைமையை முக்கியக் கூட்டங்களின் போது தவிர்க்காமல் இருந்திருந்தால்; சுனாமிக்குப்பிறகு இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைக்கான நிதியை வாஷிங்டன் மறுக்காமலிருந்திருந்தால்; அய்ரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசுகளின் அழுத்தத்தால் தமிழ்த் தேசிய தலைமையை தடை செய்யாமல் இருந்திருந்தால் இந்த வலு சமநிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்காது.

மேலும், வலு சமநிலை மாற்றத்திற்கான அடிப்படை வேலைகள் முடிந்த நிலையில் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா தந்திரோபாய உதவியையும், சீனா ராணுவ ரீதியான உதவியையும் செய்யாமல் இருந்திருந்தால், இன்றைய இலங்கை அரசின் வெற்றிக்கு வாய்ப்பே இருந்திருக்காது. பன்னாட்டு அரசுகளின் இத்தகைய ஆதரவுதான் தமிழ் மக்களுக்கு எதிராக மிகக்கொடூரமான வன்செயல்களை செய்வதற்கான வாசலைத் திறந்து விட்டது. மேலும், போரின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் இருந்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அயலுறவுத் துறை அதிகாரிகள் இலங்கை அரசை ஆதரிக்காமல் இருந்திருந்தால்,இணை தலைமை நாடுகளின் பிற அய்ரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் பேச விடாமல் செய்யாதிருந்திருந்தால் இறுதிக் கட்ட படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். சில அய்ரோப்பிய நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என்று விரும்பிய போதிலும் அதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய துணிவு அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. எனவே, இலங்கை அரசு போரில் இறந்தவர்களைப் பற்றி தவறான கணக்கு சொன்னதைவிட மோசமான பொய் எதுவென்று சொன்னால், தங்களின் சொந்த முயற்சியினால் இந்தப் போரை வென்றோம் என்று அவர்கள் சொல்வதுதான்.

பன்னாட்டுச் சமூகத்தின் மிகப்பெரிய பொய் எதுவென்றால், இலங்கை அரசு திமிர்பிடித்த பிடிவாதத்துடன் இருந்ததால்தான் அதன் கொடூரத்தை தடுத்து நிறுத்த தங்களால் இயலவில்லை என்று சொல்வதுதான். இலங்கை அரசிற்கான முழு அதிகாரத்தை பன்னாட்டு சமூகங்கள்தான் அளித்தன. பன்னாட்டுச் சதி என்பது இலங்கை அரசுக்கு எதிரானதல்ல; ஒரு தேசிய இனமாக உள்ள ஈழத்தமிழர்களுக்கு எதிரானது

தமிழ் மக்கள் ஏன் படுகொலை செய்யப்பட்டனர்?

ஏனெனில, தமிழ் மக்கள் தாங்கள் ஒரு தேசிய இனமாக தங்களுக்குரிய சுதந்திரத்தை கேட்டுப் போராடினார்கள். ஏனெனில், தங்களுடைய தாயகத்தின் மீதான உரிமையையும் தங்களுக்கென ஓர் அரசை உருவாக்குவதற்கான உரிமையையும் கேட்டுப் போராடினர். அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடியதோடு தங்களுக்கான ஓர் அரசையும் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் உருவாக்கிய, இப்பனிப்போரின் கடைசிக் கட்டம் வரை இந்தியா ஆதரித்த ஒருங்கிணைந்த இலங்கை அரசுக்கு இக்கோரிக்கை ஒரு பெரிய சவாலாக விளங்கியது. இந்தியப் பெருங் கடற்பகுதியில் தன்னுடைய அதிகாரத்தை விரிவாக்கிக் கொள்ள அமெரிக்கா ஒருங்கிணைந்த இலங்கையை இன்று ஆதரிக்கிறது.

எனவே, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது வெறும் மனித உரிமை மீறலோ, போர்க்குற்றமோ மட்டும் அல்ல. அமெரிக்கா மற்றும் "கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்' (எல்.எல்.ஆர்.சி.)சார்ந்த தீர்மானங்கள் அறிவிக்க விரும்புவதுபோல் இது சட்டம் ஒழுங்கு சீர்குலைவால் ஏற்பட்ட விளைவும் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய வாழ்வையும் அதாவது ஈழத்தமிழ் அடையாளத்தையும் தமிழ் ஈழத்தையும் அழிப்பதற்காக முன்கூட்டியே சிந்தித்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமே இது.

ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற அளவில் தமிழ் மக்களை அழிக்கும் நோக்கத்துடனும், இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மீது அவர்கள் கொண்டிருந்த உறவையும் தங்கள் தேசியத் தலைமையுடன் அவர்கள் கொண்டிருந்த உறவையும், பிரித்து அழித்தொழிக்கும் நோக்கத்துடனுமே தமிழர்கள் அங்கு பெருமளவில் கொல்லப்பட்டனர். சுருக்கமாகச் சொன்னால், தமிழர்களுக்கு எதிரான போர் ஒரு தேசிய இனமாக அவர்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது இனப்படுகொலையைத் தவிர வேறல்ல. உலக நாடுகள் இது இனப்படுகொலை அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலமும் வேறு ஏதேதோ பெயர்களில் அதை அழைக்க முற்படுவதன் மூலமும் தாங்கள் இனப்படுகொலை மூலம் ஒரு தேசிய இனத்தை அழிக்க முயன்றதை தாங்களே அம்பலப்படுத்தி வருகின்றனர். எனவே, நாம் இப்படுகொலையை அதன் உண்மையான பொருளில் இனப்படுகொலை என்றே அழைப்போம். இலங்கை அரசு மட்டும் அல்ல, இலங்கை அரசுக்கு யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்கள் அனைவருமே இனப்படுகொலை குற்றம் புரிந்தவர்களே.

இன்று நடப்பது என்ன?

உண்மையில், தமிழ் வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலகட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஒற்றைப் படுகொலை முள்ளிவாய்க்கால் தான். இத்தகைய படுகொலை தமிழ் அரசையும் அதன் தேசியத் தலைமையையும் அழிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை தொடர்வதற்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.

அய்க்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள், அமெரிக்கா மற்றும் "கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான ஆணைய'த்தின் நலன்களுக்கேற்ப நிறைவேற்றப்பட்டு வரும் சூழலில், தமிழ்த் தேசிய வாழ்க்கையின் ஒவ்வொரு கூறும் அழிக்கப்பட்டு வருகிறது. அவை தமிழ் மக்களின் நிலப் பறிப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்கள பவுத்த வழிபாட்டுத் தலங்களை உருவாக்குவது, ராணுவ மயமாக்கல் மற்றும் தமிழர் பொருளாதார வளங்களை அபகரிப்பதன் மூலம் சாத்தியமாகி வருகிறது. இதனோடு இணைந்து தமிழ் மக்களை தொடர்ச்சியாக நசுக்கும் போக்கு தமிழர் தாயகத்தில் மட்டும் அல்ல; புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் நடக்கிறது.

தங்களுடைய தேசிய லட்சியங்களை மட்டுமல்லாது தமிழ் ஈழம் என்ற பெயரையும் அதன் குறியீடுகளையும் கூட கைவிடும் வகையில் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக உளவியல் போர் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இனப்படுகொலை தொடர்ந்து வருகிறது; அது முடிந்துவிடவில்லை. தமிழ்த் தேசத்திற்கெதிரான போர் முடிந்துவிடவில்லை; மாறாக அது வேறுவழிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசை ஆதரித்த அதே சக்திகளின் ஆதரவுடன் இன்று இனப்படுகொலை தொடர்ந்து நடந்து வரும் சூழலில், போருக்குப் பிந்தைய நிலையில் "நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி' என்ற பெயரால் இவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறோம்.

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் நாம் ஒரு தேசமாக தொடர்ந்து சிதைக்கப்படுகிறோம். ஆனால், அதை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத ஒரு சூழலை உருவாக்குவதன் மூலம் இந்த ஒடுக்குமுறையையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறோம். இன்றைய நிலையை போருக்குப் பிந்தைய சூழல் என்று நாம் ஏற்றுக்கொள்ளும்படி இந்த அதிகார சக்திகள் நம்மை நிர்பந்திக்கின்றன. ஆனால், உண்மையில் அது நம்மீது வேறு வழிகளில் நடத்தப்படும் போரே அன்றி வேறல்ல. இதை போருக்குப் பிந்தைய சூழல் என்று அழைப்பது இனப்படுகொலை நடவடிக்கையின் ஒரு பகுதியே. ஆக, நம்முடைய கூட்டு வேட்கைகளுக்கு எதிராக தொடுக்கப்படும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு போரே இது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வது எப்படி?

இறுதிக்கட்ட படுகொலைகளை தடுப்பதற்கு "ஆக்கப்பூர்வமான ஒரு திட்டம்' மேற்குலகத்திடம் இருந்ததாக நார்வே குழுவினர் தற்பொழுது தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் என்பது வேறொன்றும் அல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும், அவர்களின் தாயக உரிமையையும், அவர்களின் தேசிய உரிமையையும் முற்றாக விட்டுக் கொடுக்க வலியுறுத்த முயல்வதே. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் முள்ளிவாய்க்காலில் நமது மக்கள் முழு உறுதியோடும் தீரத்துடனும் இத்தகைய திட்டங்களுக்கு கடும் மறுப்பை தெரிவித்து விட்டனர். அவர்களுடைய அந்த செய்தி தெள்ளத் தெளிவானது. சுதந்திரமற்ற, நீதியற்ற, சமத்துவமற்ற வாழ்க்கை வீணானது என்பதே அது. மாண்போடு வாழ்வது அல்லது மாண்போடு சாவது. தங்களுடைய அளப்பரிய தியாகங்களின் மூலம் அவர்கள் சொன்ன அறிவார்ந்த அரசியல் கொள்கை இதுதான். எனவே, முள்ளிவாய்க்காலில் இருந்து உணரப்படும் உண்மையின் ஊடாக நம்முடைய கூட்டு அரசியல் குறிக்கோளில் நாம் தெளிவாக இருப்போம். நீதி மற்றும் சுதந்திரத்திற்கான இலக்கை நாம் நம்முடைய அற்ப சுகத்துக்காகவும் வசதிக்காகவும் ஒருபோதும் மாற்றிக்கொள்ள முடியாது. புதுதில்லியாலோ, லண்டனாலோ, வாஷிங்டனாலோ இதை மாற்றிவிட முடியாது.

முதலில் நாம் ஒன்றை மனதில் மிக உறுதியாகவும் தெளிவாகவும் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் இருத்திக் கொள்ள வேண்டியது என்னவெனில், ஒடுக்குமுறைக்கு எதிராக சாத்தியமான பெரும் உள வலிமையை கொண்டிருந்த, இன்றும் கொண்டிருக்கக்கூடிய ஒரு மக்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாம். சுதந்திர உணர்வை சாவின் மூலம்கூட கொன்று விட முடியாது என்ற அறிவை நமது உள்ளங்களில் ஏந்துவோம். இரண்டாவது, நமக்கு யாரும் சுதந்திரத்தை கொடுக்கப் போவதில்லை. நாமே நமது போராட்டத்தினால் மட்டுமே சுதந்திரத்தைப் பெறமுடியும். அதுதான் நமது சுயநிர்ணய உரிமை; நம்முடைய சுதந்திரப் போராட்டம் நம் தோள்களில் தங்கி நிற்கிறது. அதை நாம் மட்டுமே சுமந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்.

நமது இனப்படுகொலையில் பங்காற்றியவர்களை நம் பாதுகாவலர்களாக நாம் கருத முடியாது. நாம் ஒன்றும் செயலாற்ற இயலாத ஒடுக்கப்பட்ட மக்களல்லர். நம்முடைய கூட்டு அரசியல் வேட்கைகளை தெளிவாக எடுத்துச் சொல்லிய எழுச்சி பெற்ற மக்கள் நாம். 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் அதை நாம் செய்திருக்கிறோம். 1977 தேர்தலின் போது நாம் அதை செய்திருக்கிறோம். நமக்கான ஓர் அரசை நிர்மாணிப்பதன் மூலம் நாம் அதை செய்திருக்கிறோம் மீண்டும் 2004 தேர்தலின்மூலம் நாம் அதை செய்திருக்கிறோம். இறுதியாக, முள்ளிவாய்க்காலில் அவர்கள் அளித்த ஆக்கப்பூர்வமான திட்டத்தை மறுத்ததன் மூலம் நாம் அதை செய்திருக்கிறோம்.

உலகத்திற்கு நாம் அளிக்கக்கூடிய செய்தி என்ன?

அமைதிப் பேச்சுவார்த்தை காலகட்டத்தில் வலுசமநிலை சிதைக்கப்படுவதை எதிர்த்த பல அய்ரோப்பிய நாடுகள் இருந்ததை நாம் அறிவோம். சில கட்டங்களில் இலங்கை அரசின் போரை நிறுத்த அவர்கள் விரும்பியதையும் நாம் அறிவோம். வன்னிக்குச் சென்று தங்கள் சொந்த கண்களால் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் மாபெரும் சாதனைகளைப் பார்த்த அய்ரோப்பிய நாடுகளின், அந்த பத்திரிக்கையாளர்கள், மனிதநேயப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், தூதர்கள், அரசியல்வாதிகள், நாடாளுமன்றவாதிகள், அமைச்சர்கள் எல்லாரும் எங்கே சென்று விட்டனர்?

நண்பர்களே! தமிழர்களின் போராட்டம் ஓர் உண்மையான மனித உரிமைப் போராட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா? நீங்கள் ஏன் இப்பொழுது அமைதியாக இருக்கிறீர்கள்? வலுசமநிலை இன்று மாறிவிட்டதாலா? நீங்கள் ஒருகாலத்தில் யாரை ஆதரித்தீர்களோ, யாரைப்பார்த்து வியந்து பாராட்டினீர்களோ அம்மக்களுக்கு எதிராக ஓர் இனப்படுகொலை நடந்த போதும் இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போதும் அதைக்கண்டு உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? நீங்கள் உலகத்தின் முன் வந்து நின்று உண்மையைச் சொல்ல வேண்டும் என நாங்கள் கோருகிறோம். ஏனெனில், அது உங்கள் தார்மீகக் கடமையாகும்.

உலகின் தெற்கு நாடுகளுக்கு தலைமை வகிக்கும் சீனாவும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் இலங்கை அரசை ஆதரிப்பதன் மூலம் இந்தியக் கடலில் அமெரிக்காவின் வளர்ச்சியை தடுக்கலாம் என முயற்சி செய்வதை நாம் அறிவோம். இத்தகைய நாடுகள் ஈராக்கில் நடைபெற்ற போரை எதிர்த்தார்கள் என்பதையும் நாம் அறிவோம். பாலஸ்தீனத்திற்கு எதிரான போரையும் அவர்கள் எதிர்த்தார்கள். ஒடுக்கப்பட்ட சமூக வர்க்கங்களின் போராட்டங்களிலும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பங்காற்றுகின்றன.

ஆனால், என்னுடைய கேள்வி என்ன என்றால் தமிழர்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கெதிரான பிற போராட்டங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? நீங்கள் உங்கள் கண்களை திறந்து பார்க்க வேண்டும் எனக் கோருகிறோம். எங்களுடைய போராட்டமும் சுதந்திரத்திற்கான போராட்டமே. ஆசியா கண்டத்திலுள்ள பல ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் போராட்டங்கள் இதன்மூலம் உந்துசக்தி பெற்றுள்ளன. எங்களை அங்கீகரிக்க ஏன் தயக்கம் காட்டுகிறீர்கள்? உண்மையைச் சொல்லுவதற்கான காலம் வரும்.மார்டின் லூர்தர்கிங் இவ்வாறு குறிப்பிட்டார். “கோழைகள் அது பாதுகாப்பானதா எனக் கேட்பர். சுயலாபம் கருதுபவர்கள் அதில் அரசியல் அதிகாரம் உள்ளதா எனக் கேட்பர். பகட்டை விரும்புபவர்களோ அது புகழ்பெற்றதா எனக் கேட்பர். ஆனால், மனசாட்சி அது சரியானதா என்று கேட்கும். அது பாதுகாப்பானதாகவோ, அரசியல் அதிகாரம் உடையதாகவோ, புகழ்பெற்றதாகவோ இல்லாவிடினும் ஒருவர் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வரும். அவரது மனசாட்சி அதை சரி என்று சொல்வதால் மட்டும்.”

உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது!

Pin It