தமிழ்த்தேசியவாதிகளும், புரட்சிகர புதிய ஜனநாயகவாதிகளும் கடந்த சில ஆண்டுகளாக தலித் அரசியல் மீதும் தலித் இயக்கங்கள் மீதும் எழுப்பிய காழ்ப்புணர்வுமிக்க விமர்சனங்கள் இப்போது பாபாசாகேப் அம்பேத்கர் மீதும் வீசப்படுகின்றன.

                இந்தியா முழுவதும் வாழ்ந்து வரும் இருபத்தைந்து கோடிக்கும் மேலான ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குறியீடாகத் திகழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். இந்தியத் துணைக் கண்டத்தின் ஈடு இணையற்ற சிந்தனையாளரான அம்பேத்கர் மீது இருபதாண்டுகளுக்கு முன்னால் அருண் சோரி என்பவர் அறிவு நேர்மையற்ற விமர்சனங்களை எழுப்பினார். அந்த விமர்சனங்களில் பழங்கிழப் பார்ப்பனக் காழ்ப்புதான் வெளிப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கம்பீரமாய் அம்பேத்கரின் சிலைகள் நின்று கொண்டிருக்க, அருண்சோரிகள் தூசிகளெனத் தொலைந்து போனார்கள். இருப்பினும், அம்பேத்கர் மீதான அறிவு நேர்மையற்ற விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன.

"தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்' இதழின் ஆசிரியர் பெ.மணியரசன் எழுதிய "சாதியும் தமிழ்த் தேசியமும்' என்ற கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. அந்நூலில், பாபாசாகேப் அம்பேத்கரை ஓர் இந்துத்துவவாதி என்றும், தேசிய இனங்களின் மொழியையும் இருப்பையும் மறுத்தவர் என்றும், இந்தியப் பார்ப்பனர்களுக்குத் தத்துவச் சேவை புரிந்தவர் என்றும், இப்போது பேசப்பட்டு வரும் தலித்தியம், அம்பேத்கரியத்தில் பொதிந்துள்ள இந்திய ஏகாதிபத்திய ஆதரவுக் கருத்துகளைக் கொண்டது என்றும், தலித்தியமே தமிழ்மொழி சு தமிழ்த்தேசியம் சு தமிழ் இனம் ஆகியவற்றிற்கு எதிரானது என்றும் தனது கருத்துகளை எடுத்து வைத்துள்ளார்.

இன்னும் ஒருபடி மேலே போய், "சாதி என்பது, மனிதர்களின் இயல்பான கூட்டுத் தற்காப்பு ஆற்றல்' என்றும் "கூட்டுத் தற்காப்பு ஆற்றல்கள் தேவைப்படும் மனிதர்களுக்கு, அவர்களின் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த கேடயமாக இருப்பது சாதி' என்றும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சாதி குறித்து எவரும் கூறாத விளக்கங்களைக் கூறி "அசத்துகிறார்.'

அண்மைக் காலமாக தமிழ்த் தேசியக் கருத்தாடல்கள் தலித் இளைஞர்களிடம் தீவிரமாக விதைக்கப்பட்டு வருகின்றன. சாதி இந்துக்களின் சமூக அரசியல் அதிகாரத்திற்கு மேலும் மேலும் வலு சேர்க்கின்ற தமிழினம், தனித் தமிழ்நாடு, தமிழ்த் தேசியம் போன்ற வறட்டு வாதங்களுக்காக தலித் இளைஞர்களின் ஆற்றல் வீணடிக்கப்பட்டு வருகிறது. தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சியை வீணடிக்கும் வேலையை தலித் இயக்கங்களும், முன்னணி தலித் தலைவர்களும் ஆர்வத்தோடு செய்து வருகின்றனர்.

தொடக்கக் காலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மரபு வழிப்பட்ட சாதி ஆதிக்க எதிர்ப்பு, இந்து மத ஒழிப்புக் கருத்தியலில் துளிர்த்து, அம்பேத்கரின் சிந்தனைகளாலும், அவரது ஒவ்வொரு வார்த்தையினாலும் வளர்ந்து செழித்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்ட தலித் அமைப்புகளும் கூட இன்று தங்களைத் தமிழ்த் தேசிய இயக்கங்களாக மாற்றிக் கொள்ளத் துடிக்கின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தன்னை "தலித் அமைப்பல்ல; தமிழ்த் தேசிய இயக்கம்' என்ற அறிவிப்பையே வெளியிட்டுவிட்டது. தலித் அமைப்புகள் தங்களை ஏன் தமிழ்த்தேசிய இயக்கமாக பாவிக்கின்றன? அதற்கு என்ன தேவை ஏற்பட்டு விட்டது? போன்ற கேள்விகள் விடைகாணப்படாதவையாக நீடிக்கின்றன.

அதே நேரத்தில், தமிழ்த்தேசிய முகமூடிகளையும், புரட்சிகரப்பொதுவுடைமை முகமூடிகளையும் அணிந்து கொண்டு, அம்பேத்கர் மீது சாதிய வன்மம் நிறைந்த அறிவு நேர்மையற்ற அவதூறுகளை சாதி இந்துக்கள் அள்ளி வீசுகிற நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு வகையான போக்குகளும் அம்பேத்கரியத்தின் மீது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நிலைகுலையச் செய்வதாக அமைந்துள்ளன. அதே நேரத்தில் தலித் மக்களின் தனித்த அரசியல் உணர்வெழுச்சியை மழுங்கடிப்பதாகவும் இது இருக்கிறது.

போலி முற்போக்குச் சாதி இந்துக்களின் திட்டம் வெளிப்படையானது. அம்பேத்கர் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் அவரை அடித்தளமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள தலித் அரசியலை உடைத்தெறிய முடியும்; அதன் மூலம் ஏற்கனவே சாதி அடிமைகளாக இருக்கும் தலித் மக்களை அரசியல் தளத்திலும் அடிமைகளாக, ஏவல் கூலிகளாக வைத்துக் கொள்ள முடியும்! அந்த அடிப்படையில்தான் பெ.மணியரசனும், புதிய ஜனநாயகப் புரட்சிவாதிகளும் அம்பேத்கர் மீது திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் அல்லது திராவிடர் என்ற மொழி தென்னிந்தியாவில் மட்டும் பேசப்பட்ட மொழி அல்ல; ஆரியர்களின் ஊடுருவலுக்கு முன் அனைத்திந்திய அளவிலும், காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை பேசப்பட்ட மொழியாகும். உண்மையில் இம்மொழி இந்தியாவெங்கிலும் வாழ்ந்த நாகர்களின் சு திராவிடர்களின் மொழியாக இருந்தது” என்று தமிழின் பெருமையை உலகிற்கு அறுதியிட்டுக் கூறிய டாக்டர் அம்பேத்கரை தமிழ்த் தேசியத்தின் எதிரி என்று சித்தரிக்கிறார் பெ.மணியரசன்.

பிரிவினையின் போது, நாட்டை இரண்டாகப் பிரிக்கவில்லையெனில் இந்தியா நிம்மதியாக இருக்க முடியாத நிலை உருவாகியிருந்ததை வரலாற்றுப் பார்வையாளர்கள் எவரும் அறிவர். பஞ்சாபிலும், வங்கத்திலும் சீக்கியர்களுக்கு எதிராக இந்துக்களும், முஸ்லிம்களுக்கு எதிராக சீக்கியர்களும் வாளேந்தி வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. 1946 இன் இறுதி மாதங்களில் நகரங்களின் தெருக்களில் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவிந்து கொண்டிருந்த பொழுதுகளில், இந்தியாவிலிருந்த அத்தனை பேரும் நாடு பிரிக்கப்பட வேண்டியதன் தேவையை உணர்ந்தனர். அச்சூழலில் நாட்டைப் பிரிப்பதற்கு முதல் ஆதரவுக் குரலை எழுப்பியவர் அம்பேத்கர். வேற்றுமைகள் ஆழப்பதிந்துவிட்ட பிறகு பிரிவினை தவிர்க்க முடியாதது என்ற அடிப்படையிலும், பிரிவினைக்குப் பிறகு இரு நாடுகளும் அமைதியான வளர்ச்சிப் பாதையில் செல்ல வழியேற்படும் என்ற முடிவிலும்தான் அம்பேத்கர் பிரிவினையை ஆதரித்தார். மணியரசன் அவரது நூலில் கூறியுள்ளதைப் போல, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்தலைவர்களோடு கை கோத்துக்கொண்டு அவ்வாறு கூறவில்லை.

மொழிவாரி மாநிலங்கள் அமைந்த கதைகள் எவ்வளவு குழப்பத்தில் நடந்தன என்பதை இந்திய வரலாற்றைப் படித்த எவரும் அறிவர். எத்தனை எல்லைக் கோட்டுச் சிக்கல்கள் எழுந்தன! மாநில உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதில் மாநிலங்களுக்கிடையே எத்தனை போட்டிகள் எழுந்தன! மொழிவாரி மாநிலங்கள் அவரவர் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்டால், இந்தியாவின் வளர்ச்சியும், ஒருமைப்பாடும் பாதிக்கப்படும் என்று அம்பேத்கர் எண்ணினார். மேலும், வலுவான மய்ய அரசின் மூலமே தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக அரசியல் பலன்களைப் பெறமுடியும் என்பதும் அம்பேத்கரின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த அடிப்படையிலேயே மொழிவாரி மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும் தன்னாட்சியும் வழங்குவதை எதிர்த்தார். மாநிலங்களின் அளவில்கூட பெரிய மாநிலம் அமைவதை தீவிரமாக எதிர்த்தார். 1956 சனவரி 17 அன்று, ஜவகர்லால் நேருவுக்கு எழுதிய தந்திக் கடிதத்தில், “உத்திரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற பெரிய அளவிலான மாநிலங்களை உருவாக்குவதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். தீண்டத்தகாத மக்களை அங்கீகரிக்க மறுக்கும் பெரும்பான்மையினரைக் கொண்ட மாநிலத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இருக்காது” என்று எழுதினார். அந்த அடிப்படையில்தான் மாநில அரசுகள் வலிமை பெறுவதை அவர் எதிர்த்தார்.

அவர் எண்ணியது போலவே, இன்று மாநில அரசுகள் தன்னிச்சையாக நடந்து கொள்கின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கும் அதுதானே காரணம். எனவேதான் வலுவான மய்ய அரசு அமைவதை அம்பேத்கர் ஆதரித்தார்.

இந்திய மண்ணில் குருதிக் கலப்பில்லாத தூய்மையான இனம் என்று எதுவுமில்லை. இந்திய மண்ணில் வாழ்ந்த மக்கள் எவரும் தங்களை தனித்த இனமாகக் கருதிக் கொண்டதில்லை. மாறாக, தங்களை தனித்தனிச் சாதிகளாகத்தான் உணர்கிறார்கள். நவீன தேசிய இன அரசியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட பின்னரும் கூட தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாக எண்ணிக் கொண்டதில்லை. 1860 வரை "தமிழ்', "தமிழன்' என்ற கருத்துகள் கூட உருவாகவில்லை. அனைத்தும் சாதிகள் தான். மனிதர்களுக்கு அடையாளமே சாதிப் பெயர்கள்தான். தமிழர், தெலுங்கர், கன்னடர் என்று அம்மொழி பேசுவோரும் தங்களைச் சாதி அடையாளம் கொண்டே வெளிப்படுத்திக் கொண்டனர். பொதுவான வாழ்விடம் என்றோ, பொதுவான துயரம் என்றோ எதையும் கருதிக் கொள்ளாத தமிழர்கள் ஒரு தேசிய இனமாக எப்படி உருப்பெறுவார்கள்? தமிழர்களின் தீவிர இந்து மதப்பற்றும், சாதி வெறி உணர்வும் அவர்களை இன உணர்வு, மொழி உணர்விலிருந்து விலக்கி வைத்துள்ளது. தமிழ்த்தேசிய விவாதங்கள் தீவிரமாகப் பேசப்படும் இன்றுவரையிலும் தமிழ், தமிழன் என்பது அரசியல் தளத்தில்தான் உச்சரிக்கப்படுகிறதே தவிர, சமூக பண்பாட்டுத் தளங்களில் அல்ல! இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்த் தேசிய அடையாளம் எப்படி வந்தது? இல்லாத தேசியத்தை அம்பேத்கர் மறுத்தார் என்பது அறியாமையின் உச்சம் அல்லவா?

பம்பாய், சென்னை, கல்கத்தா, அய்க்கிய மாகாணங்கள் உள்ளிட்ட மாகாணங்களை உருவாக்கிய போது ஆங்கில ஆட்சியாளர்கள் எத்தகைய அரசியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார்களோ, அத்தகைய கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் 1956இல் நேரு இதர மாகாணங்களை உருவாக்கினார். இனவழிப்பட்ட அல்லது மொழி வழிப்பட்ட மாநில தேசிய அரசுகள் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் அல்ல! இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் குறித்த எந்தத் துல்லியமான தகவல்களையும் நேரு வைத்திருக்கவில்லை.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் மத்திய சு மாநில அரசுகளுக்கிடையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த அதிகாரப் போட்டியில் மத்திய அரசு தனது ஆட்சி மொழியை மாநில அரசுகளும் ஆட்சி மொழியாக ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறது. பிரதிநிதித்துவத்தை ஏற்று, மய்யப்படுத்தப்பட்ட அதிகாரமும், பொதுவான மொழியும் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்பதால்தான் இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், கட்டாயத் திணிப்பின் மூலம் அதை நிறைவேற்றுவதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். மாநில அரசுகள் ஏற்கும் வரை தொடர்பு மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என்றார். அதை ஏற்றுதான் நேரு இருமொழி கொள்கையை உருவாக்கினார். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்தி திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வருவதால், ஆங்கில மொழி மத்திய – மாநில அரசுகளின் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. இங்கே தமிழ்மொழியின் இருப்பை அம்பேத்கர் மறுத்ததாக மணியரசன் குற்றம் சாட்டுவதில் என்ன பொருள் இருக்கிறது?

இந்திய ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் இந்திய சமூக ஆதிக்கச் சக்திகளான பார்ப்பனர்களுக்கும் ஆதரவான தத்துவச் சேவையை அம்பேத்கர் செய்தார் என்கிறார் பெ.மணியரசன்.

சுதந்திரத் தொழிலாளர் கட்சியை 1936 இல் நிறுவி, “இந்தியா தொழிலாளர்கள் நிறைந்த நாடு. இங்கு தொழிலாளர்களின் அரசை நிறுவுவோம்” என்று முழங்கியவர் அம்பேத்கர். 1942இல் தொழிலாளர் நல அமைச்சராகப் பொறுப்பேற்று, முதலாளிகள் – அரசு தொழிலாளர்கள் பங்கேற்ற இந்திய வரலாறு கண்டிராத முத்தரப்பு மாநாட்டை முதன்முதலாக நடத்தியவர் அம்பேத்கர். எட்டு மணிநேர வேலை – ஊதியத்துடன் கூடிய விடுப்பு –சேமநலநிதி – ஓய்வூதியம் – மகப்பேறுகால ஊதிய விடுமுறை – தொழிலாளர் சுரண்டலை ஒழிக்க தனி ஆணையம் – குறைந்தபட்ச கூலி நிர்ணயம் – என அனைத்து உரிமைகளையும் தனி ஆளாக நின்று தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தந்த ஒரு தலைவரை, இந்திய ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு சேவை புரிந்தவர் என்று கூறுவதை சாதி வன்மம் நிறைந்த உளறல் என்றுதான் எவரும் கூறுவர்.

கடந்த நூற்றாண்டு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைத்த பலன்களைவிட அம்பேத்கர் பெற்றுத்தந்த உரிமைகள்தான் அதிகம். இந்தியத் தொழிலாளர்களின் தந்தை எனப் போற்றப்பட வேண்டிய டாக்டர் அம்பேத்கர், தலித் மக்களுக்காக மட்டுமே பாடுபட்டவர் என்று

குறுக்கப்படுவதற்கு இந்தியக் கம்யூனிஸ்டுகளின் சாதிய வன்மம்தான் காரணம். அத்தகைய வன்மம் தான் அம்பேத்கர் இந்திய முதலாளித்துவச் சக்திகளுக்கு சேவகம் செய்தார் என்று கூறுமளவிற்கு பெ. மணியரசனுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது.

இந்திய வரலாற்றில், பார்ப்பனர்களைப் பற்றியும், பார்ப்பனியம் பற்றியும் விரிவான ஆழமான ஆய்வுகளை நடத்தி, பார்ப்பனியத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் அம்பலப்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர் ஒருவரே! அவருக்கு நிகராக, பார்ப்பனர்கள் மீது அறிவார்ந்த தாக்குதலை நடத்தியவர் வேறு எவருமிலர். அம்பேத்கர் எழுதிய அனைத்து எழுத்துகளிலும், அவரது ஒவ்வொரு மூச்சிலும் பார்ப்பனிய எதிர்ப்புணர்வு நீக்கமற நிறைந்திருந்தது. கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1916இல் "இந்தியாவில் சாதிகள் சு அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி' என்ற ஆய்வுக்கட்டுரை எழுதிய நாளிலிருந்து, 1956இல் அவர் மறையும் வரை எந்த நிலையிலும் அவர் பார்ப்பனர் எதிர்ப்பை கைவிடவில்லை.

அம்பேத்கர் மீது வைக்கப்படும் விமர்சனங்களையே தலித் அரசியலின் மீதும் தாம் வைப்பதாக பெ.மணியரசன் அவரது நூலில் குறிப்பிடுகிறார். மணியரசன் மட்டுமல்ல, இன்னும் ஏராளமான இடைநிலைச்சாதி முற்போக்குவாதிகளும் கூட தலித் அரசியலின் மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். புரட்சிகரப் பொதுவுடைமை அரசியலை விரிவுபடுத்துவதற்கும், இடைநிலைச்சாதி இந்துக்களின் இந்துமயப்படுத்தப்பட்ட கற்பனைவாதமான' தமிழ்த்தேசிய அரசியலை' ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்கும் தலித் அரசியல் பெரும் தடையாக இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். பார்ப்பன ஆதிக்கத்தையும் இடைநிலைச் சாதிய மேலாதிக்கத்தையும் "புரட்சிகரப் பொதுவுடைமை' "தமிழ்த் தேசியம்' என்ற பிரச்சாரங்களின் மூலம் மறைமுகமாகத் திணிக்கத் துடிக்கிறார்கள்.

அம்பேத்கர் இந்திய தேசிய ஆதரவாளராகவும் இருந்ததாக பெ.மணியரசன் விமர்சிக்கிறார். இந்திய நாடு ஒருபோதும் ஒரு தேசமாக மாற முடியாது என்றும், இந்தியர்கள் என்றுமே ஒரு தேசிய இனமாக மாற வழியில்லை என்றும் இந்திய நாடாளுமன்றத்திலேயே முழங்கிய டாக்டர் அம்பேத்கரை பெ.மணியரசன் இந்திய தேசியத்தின் ஆதரவாளர் என்று கூறுவது எத்தனை அபத்தம். தமிழ்த் தேசியத்தைப் போலவே, இந்திய தேசியமும் ஒரு கற்பனைவாதம் என்பதை அம்பேத்கர் உணராதவரல்லர். 1949 நவம்பர் 11 ஆம் நாளன்று இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் நிர்ணய சபையின் இறுதிக் கூட்டத்தில் அம்பேத்கர் ஆற்றிய உரையே இந்திய தேசியம் குறித்த அவரது எண்ணத்திற்குச் சான்று. அப்பேருரையில், “இந்தியர்களுக்கு தாங்கள் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் என்ற எண்ணம் வருவதே மிகக் கடினமான ஒன்றாகும். இங்கே அமர்ந்துள்ள அரசியல் உணர்வுமிக்கத் தலைவர்கள், "இந்தியாவின் மக்கள்' என்று அழைப்பதையே கடுமையாக எதிர்த்த நிகழ்வு என் நினைவிற்கு வருகிறது! "இந்திய தேசம்' என்று அழைக்கப்படுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள். இந்தியர்கள் ஒரே தேசத்தவர் என்று நம்புவதன் மூலம் மிகத் தவறான கருத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கிறீர்கள்.”

“பல ஆயிரம் சாதியினராகப் பிளவுபட்டுள்ள மக்கள் எப்படி ஒரே தேசத்தினராக மாற முடியும்? சமூகத்தளத்தில் இந்தியர்கள் இன்னும் பிளவுண்டு கிடக்கிறார்கள் என்பதை எவ்வளவுக் கெவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. அப்போதுதான் இந்தியர்களுக்குள் ஆழ வேரூன்றியுள்ள சமூகப் பிளவுகளை அகற்ற வேண்டிய அவசியத்தை நாம் உணர்வோம். அந்த இலக்கினை அடைவது நமக்கு மிகக் கடினமாக இருக்கப் போகிறது. அதுவும் அமெரிக்க அய்க்கிய நாட்டில் இருந்ததைவிட நமக்குக் கடினமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் சாதிகள் இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. சாதிகள் அனைத்துமே தேச விரோத சக்திகள்தான். இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டுமானால், சாதிகளை முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

சாதிகள் ஒழிக்கப்படாதவரை இந்தியா ஒருபோதும் ஒரு தேசமாக மாறமுடியாது என்ற தெள்ளத் தெளிவான கருத்தை அம்பேத்கர் கொண்டிருந்தார். மேலும், இந்தியா ஒரு தேசமாக மாற வேண்டும் என்ற கவலையோ எண்ணமோ அம்பேத்கரிடம் இருந்ததே இல்லை. அதைவிட, இந்திய நாட்டின் ஜனநாயகத் தன்மை குறித்தும், எதிர்காலத்தில் இந்தியாவை ஆளப்போகும் தலைவர்கள் குறித்தும்தான் அதிகம் கவலைப்பட்டார். அரசியல் தளத்தில் கிடைத்திருக்கும் சமத்துவம், சமூகத் தளத்திலும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றுதான் அதிகம் அக்கறைப்பட்டார்.

இந்திய மண்ணில் எந்தவொரு தேசியக் கருத்துருவாக்கத்திற்கும் சாதி அமைப்புமுறை பெரும் தடையாக இருக்கும் என்பதை தமிழ்த்தேசிய வாதிகள் உணரவில்லை. தருமபுரியில் 300க்கும் மேற்பட்ட தலித்துகளின் வாழ்விடங்களை ஒரே நேரத்தில் கொள்ளையடித்து, குண்டுகளை வீசி அழித்தொழிக்கக் காரணமாக இருந்த ராமதாசை; தலித்துகளுக்கு எதிராக அனைத்து சாதிவெறியர்களையும் ஒன்றிணைக்கத் துடிக்கும் ராமதாசை "தமிழினக் காவலர்' என்று தனது நூலில் குறிப்பிடும் பெ.மணியரசன் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிதீவிர இந்து இடைநிலை சாதிப்புத்தியுள்ள மணியரசனைப் போன்ற தமிழ்த்தேசியவாதிகளின் சாதி இந்து தமிழ்த்தேசிய கருத்துருவாக்கத்தை தலித் மக்கள் முறியடித்தே தீருவார்கள்.

             சாதியும் தமிழ்த்தேசியமும்

             பெ.மணியரசன்

             பக்கங்கள் : 120

 விலை : ரூ. 80

பன்மைவெளி, தஞ்சாவூர் – 1, 9841604017

( தொடரும்)

Pin It