இன்னும் மறக்க முடியாத வலியாக நெஞ்சத்தில் அலையடித்துக் கொண்டிருக்கின்றன கண்ணீர் உறைந்த பெண்களின் முகங்கள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ இந்த நிலைக்கு மீண்டும் வர என்று உழைக்கும் தம் கைகளைப் பிசைந்து கொண்டிருக்கும் ஆண்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் எல்லாவற்றையும் இழந்துபோய் உட்கார்ந்திருக்கும் குழந்தைகள்... தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி தலித்துகளின் சூறையாடப்பட்ட பொருட்கள், எரிக்கப்பட்டு கருகிப் போன வீடுகள், வெப்பம் தாளாமல் வெடித்துக்கிடக்கும் சுவர்கள் என மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு சிதைந்து போயிருக்கிறது அம்மக்களின் வாழ்க்கை.

திருப்பத்தூர் சு தருமபுரி சாலையில் அமைந்திருக்கும் நாயக்கன்கொட்டாயில் இறங்கி மேற்கு நோக்கி இருக்கும் சாலையில் சென்றால் நத்தம் காலனி. நாயக்கன் கொட்டாயில் இறங்கியவுடனே கிழக்கில் வானளாவ உயர்ந்திருக்கும் சுத்தி அரிவாள் சின்னமும் அதற்கு மேல் அமைக்கப்பட்டிருக்கும் பாலன், அப்பு சிலைகளும் அது பொதுவுடைமைக்காரர்கள் களப்பணியாற்றிய பூமி என்பதை விளக்கும். அந்த நினைவுச் சின்னத்திற்கு நேராக அமைந்திருக்கும் தலித் பகுதி அண்ணா நகர். அதற்குப் பின்புறம் சற்று தொலைவில் வயல் வெளிகளையும் தோட்டங்களையும் கடந்து போனால் வருவது கொண்டம்பட்டி. இம்மூன்று பகுதிகள்தான் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவை.

இங்கு வாழும் தலித்துகள் வன்னியர்களின் நிலங்களில் வேலை செய்வது இல்லை. அவர்கள் பெங்களூரு, கோவை, திருப்பூர் என பெரிய நகரங்களில் வேலை செய்து தங்கள் வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். வீடுகள் மிகவும் நேர்த்தியாகவும் வசதியாகவும் கட்டப்பட்டவை. அழகுணர்ச்சியோடு வடிவமைக்கப்பட்டவை. உழைத்துச் சேர்த்த பணத்தை பொருட்களாகவும், பணமாகவும் அவர்கள் வைத்திருந்தனர். பொருளாதார நிலையில் வன்னியர்களுக்கு கடன் கொடுப்பதும் அவர்களிடம் அதைத் திரும்பப்பெறுவதும் அவர்களோடு நட்புடன் இருப்பதும் அவர்களை அழைத்துக்கொண்டு வீடுகளில் உணவு கொடுப்பதும் என அன்புடன் இருந்திருக்கின்றனர்.

தருமபுரி சேரிகள் சூறையாடப்பட்டதற்குக் காரணம் ஒரு காதல் திருமணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது மட்டும் அல்ல. நத்தம் காலனியில் வசிக்கும் இளங்கோ, தருமபுரி அரசு மருத்துவமனையில் சமையல்காரராக இருக்கிறார். அவருடைய மகன் இளவரசன். அப்பகுதியில் அமைந்திருக்கும் செல்லங்கொட்டாய் என்னும் வன்னியர்கள் வாழும் பகுதியில் வசிக்கும் நாகராஜன் என்பவரின் மகள் திவ்யா. இளவரசன் கல்லூரியிலும் திவ்யா செவிலியர் பயிற்சிக் கல்லூரியிலும் படித்தனர். இவர்களுக்கு இடையிலான காதல் அப்பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் தெரியும். ஒருமுறை செல்லங்கொட்டாய் வன்னியர்களால் இளவரசனும் அவருடைய பெற்றோர்களும் மிரட்டப்பட்டுள்ளனர்.

ஆனால், எல்லா எதிர்ப்பையும் மீறி இளவரசனும் திவ்யாவும் 14.10.2012 அன்று திருமணம் செய்துகொண்டனர். அவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பில்லை என்று சேலம் சரக டி.அய்.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல்துறையிடமும் அவர்கள் முறையிட்டுள்ளனர். அவர்களுக்குப் பாதுகாப்பு தருவதற்கும் சமரசம் செய்வதற்கும் காவல்துறையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. திவ்யாவின் குடும்பத்தினர் வராததால் அது நடக்காமல் போனது.

இந்தக் காதல் திருமணத்தால் தங்கள் ஜாதி கவுரவம் போய்விட்டதாகப் பொருமுகிறார்கள் வன்னியர்கள். ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராகவும் அப்படி திருமணம் செய்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் பா.ம.க. வைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் தொடர் பிரச்சாரம் செய்கின்றனர். இளவரசனையும் திவ்யாவையும் எப்படியாவது பிரித்திட வேண்டும் என சாதி அரசியல்வாதிகள் மிகவும் தீவிரம் காட்டுகின்றனர். வன்னியர்களிடம் இழந்துபோன தங்கள் செல்வாக்கை மீண்டும் பெறவும், அதை வைத்து அரசியலில் சீட்டு பேரம் பேசவும் அதற்காக யாரையும் பலியிடவும் தயாராக இருக்கும் அவர்களுக்கு இந்தத் திருமணம் ஒரு பெரிய துருப்புச் சீட்டாக மாறிப்போனது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொறுப்பாளரும் ஒன்றியச் செயலாளருமான மதியழகன் தலைமையில் 14.11.2012 அன்று நாயக்கன்கொட்டாயில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. வெள்ளாய்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணசாமி, மெடிக்கல் சிவா, பச்சையப்பன் போன்றோர் கூட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். 36 ஊர்களைச் சேர்ந்த வன்னியர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதில் திவ்யாவை அதே மாதம் 7ஆம் தேதி ஒப்படைக்க வேண்டும் என தலித் மக்களிடம் வலியுறுத்துகின்றனர். இல்லையென்றால் ஒரு வீடு கூட இருக்காது என மிரட்டவும் செய்தனர்.

அந்த 7ஆம் தேதியும் வந்தது. மகளை அழைத்துவரச் சென்ற அம்மாவிடம் திவ்யா, “நான் என் கணவருடன் தான் இருப்பேன். உங்களோடு வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள்” என்று வர மறுத்துவிட்டார். இச்செய்தி செல்லங்கொட்டாயில் வசிக்கும் வன்னியர்களிடம் தெரிவிக்கப்படுகிறது. "திவ்யா வர மறுத்ததால் அவரின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்துகொண்டார்' என்ற செய்தி திடீரென்று பரவியது. அவரின் உடலை வைத்து போராட்டம் நடத்த உடலைத் தூக்கிக் கொண்டு நெடுஞ்சாலைக்கு வருகின்றனர். இதற்குள் நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் பகுதிகள் அடங்கிய திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் வடக்கு திசையில் சீராம்பட்டியில் ஒரு மரமும் தெற்கு திசையில் எஸ்.கொட்டாவூரில் ஒரு மரமும் மரம் அறுக்கும் எந்திரத்தால் வெட்டிச் சாய்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் நாயக்கன் கொட்டாயில் சாலை மறியலில் 50 பேர் ஈடுபட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். பெட்ரோல் குண்டுகள், கட்டுகற்கள், கடப்பாரைகள் என ஆயுதங்களோடு நத்தம் காலனியில் நுழைகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலுமுள்ள பீரோக்களை உடைத்து அதிலுள்ள நகைகள், பட்டுப்புடவைகள், பணம் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசி விட்டுச் செல்கின்றனர். எரியும் தீயில் சான்றிதழ்கள், குழந்தைகளின் பாடநூல்கள் எல்லாவற்றையும் வீசிவிட்டுச் செல்வது எனத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட வடிவத்தில் நடந்து கொண்டே இருக்கிறது. எல்லா வீடுகளிலும் இருக்கும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன, பொருட்கள் நாசமாக்கப்பட்டன; விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள், மின்னடுப்புகள், மின்சமையல் கலங்கள் என எல்லாம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. நத்தம் காலனியில் வேலையை முடித்துக்கொண்டு அருகில் இருக்கும் அண்ணாநகருக்குச் சென்றது அந்த சாதி வெறிக்கும்பல். அதே அட்டூழியத்தை அங்கிருக்கும் தலித் வீடுகளிலும் அது அரங்கேற்றியது.

அண்ணா நகரில் ஜோசப் என்பவர் பெரிய வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். அந்த வீட்டின் வெளிக்கதவு மட்டும் பதினைந்து அடி நீளம் இருக்கும். அதை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் நெடுஞ்சாலையில் போட்டிருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு பொருளும் மிச்சமில்லாமல் அவ்வீட்டில் எல்லாம் கொளுத்தப்பட்டன. 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு, மேல் மாடியிலிருந்து உடைக்கப்பட்ட பீரோ கீழே தள்ளப்பட்டது. அண்ணாநகரில் முடிந்து, எதிரே இருக்கும் கொண்டம்பட்டிக்கும் அக்கும்பல் சென்று இதே போல தாக்குதலை நடத்தி முடித்தது.

தாக்குதல் நடந்த அந்த நேரத்தில் நத்தம் அண்ணாநகர் பகுதிகளில் ஆண்கள் மிகவும் குறைவாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெண்கள் கழனியில் வேலை செய்து விட்டு திரும்பியிருக்கிறார்கள். குழந்தைகள் பள்ளிகளிலிருந்து வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தங்கள் வீடுகள் எரிவதைக் கண்ட குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள். பரிமளா (25) என்பவர் நத்தம் காலனியில் நுழைந்தவுடன் முதல் வீட்டில் வசிப்பவர். தன்னுடைய 3 நாள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் புதர்மண்டிய இடத்தில் ஒளிந்து கொள்ள, கூட்டம் அவருடைய வீட்டை நாசமாக்கியது. அவர்களுடைய ரெட்டை மாட்டு வண்டியினை கொளுத்தினர்.

நத்தத்தில் இருக்கும் தச்சு வேலை செய்யும் ரவியின் வீடு தொழிற்கூடத்துடன் இருந்தது. அவை முழுவதும் எரிக்கப்பட்டன. வாங்கி வைக்கப்பட்ட மரக்கட்டைகள் மட்டும் ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும். அவருடைய நான்கு சக்கர வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. அதே போல் நகைகள், துணிகள் என 35 லட்சத்திற்குமேல் அழிக்கப்பட்டன. ஒலிபெருக்கி அமைக்கும் வேலையைச் செய்யும் சிவராஜ் என்பவரின் தொழிற்கருவிகளான பந்தல் பொருட்கள், குழல் விளக்குகள், அலங்கார விளக்குகள், ஒலிபெருக்கிச் சாதனங்கள், கழிகள் என 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அம்மாசி(60) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். கொளுத்தப்பட்ட வீட்டிற்குள் இருந்து கத்த அவரை அக்கும்பல் தூக்கி வெளியே போட்டுவிட்டுப் போயிருக்கிறது. தாக்குதல் நடக்கும்போது குழந்தைகள் மிகவும் மிரண்டு போயிருக்கிறார்கள். சில மாணவர்களிடம் பேசும் போது அவர்களோடு பள்ளியில் படிக்கும் மாணவர்களே தங்கள் வீடுகளைக் கொளுத்தியதாகச் சொன்னார்கள். தீப்பற்றி எரியும் வீடுகளையும் வெறியோடு வரும் கும்பலையும் கண்ட குழந்தைகள் கதறினர். மஞ்சள் தோட்டம், புதர்கள், கரும்புத்தோட்டம் என ஓடிப் போய் ஒளிந்திருக்கிறார்கள்.

அண்ணாநகரில் இருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி சொன்னார்: “எங்க ஸ்கூல்ல படிக்கிற பசங்க கூட வந்தாங்க, எங்க பிரண்ட்ஸோட அம்மாக்களும் வந்தாங்க. கெட்ட கெட்ட வார்த்தைகள்ல திட்டி, கொளுத்து கொளுத்துன்னு சொல்லி எல்லாத்தையும் கொளுத்திட்டுப் போயிட்டாங்க. இப்ப எப்படி அவங்ககூட ஒண்ணா ஸ்கூல்ல படிக்கிறது? அவங்க எங்ககூட பேசுவாங்களா மாட்டாங்களான்னு கூட தெரியல. எங்க புக்ஸையெல்லாம் எரிச்சுட்டாங்க.”

திடீரென்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வன்னியர்கள் எப்படி திரண்டனர்? அவர்களுக்கு இவ்வளவு வீடுகளையும் அழிக்கும் அளவுக்கான பெட்ரோல் குண்டுகள் எப்படி கிடைத்தன? அவற்றைத் தயாரிக்க அவர்கள் எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டனர்? இவைஎல்லாம் நாகராஜன் இறந்த உடனேயே தயாரிக்கப்பட்டதா? அல்லது இவ்வளவு பேரும் அதற்குள்ளே வந்து சேர்ந்திருந்தனரா என எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை.

இந்தத் தாக்குதல் ஏறக்குறைய 5 மணி நேரம் நடந்தது. ஆனால், ஒரு காவல் துறையினர்கூட அதுவரை அங்கு வந்து சேரவில்லை. ஆனால் நத்தம் காலனியிலிருந்து காவல்துறைக்கு கைபேசி மூலம் பலமுறை தகவல்கள் சென்றிருக்கின்றன. எல்லாம் முடிந்த பிறகே அவர்கள் வந்தனர். காவலர்கள் வந்து வானத்தை நோக்கி சுட்டிருந்தாலே "பாதிக்கு மேல காப்பாற்றி இருக்கலாம்' என்கிறார், அங்கிருந்து மக்களை கவனித்துக் கொள்ளும் ரமணி.

தாக்குதல் நடந்ததைக் கேள்வியுற்ற தமிழக முதல்வர், நிவாரணத் தொகையாக 50 ஆயிரம் ரூபாயை அறிவித்தார். ஆனால் அது ஒரு சுவரைச் சரி செய்யக் கூட ஆகாத பணம் என்பது பாமரனுக்கும் தெரியும். தலித் மக்கள் மீதான தாக்குதலை "கலவரம்' என்று பல இதழ்கள் எழுதின. இவ்வளவு கொடூரம் நிகழ்ந்த பிறகும் தலித்துகள் பொறுமையாக இருந்தனர். ஆனால் தமிழகத் தலைவர்கள், வன்னியர்களும் தலித்துகளும் அமைதி காக்க வேண்டும் என்று நாட்டாண்மை செய்தனர். வைகோ போன்றவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டால் தான் ரத்தம் கொதிக்கும்; தமிழகத்தில் சேரித் தமிழர்கள் தாக்கப்பட்டால் அந்தப்பக்கம் வந்து கூட எட்டிப் பார்க்க மாட்டார். தமிழ்த்தேசியத் தலைவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் "ஜா'தியை "சா'தியாக மாற்றியதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் தவிர வேறு எந்த திராவிடக் கட்சிகளும் இத்தாக்குதல் குறித்து அக்கறை கொள்ளவில்லை. ஒருவாரத்துக்குப் பிறகு உண்மை அறியும் குழுவை தி.மு.க. அனுப்பி, இத்தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சிதான் காரணம் என்று கண்டுபிடித்தது. அதற்குப் பிறகு தொடர் நடவடிக்கையாக அவர்கள் எதுவும் செய்யவில்லை. எதிர்க்கட்சியான தே.மு.தி.க. இப்பிரச்சினையில் எந்த நிலைப்பாட்டினையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் இடதுசாரிகளின் பங்களிப்பை நாம் குறிப்பிட்டாக வேண்டும். அவர்கள் தலித்துகளின் பக்கம் நின்றார்கள். தலித் இயக்கங்களும் குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ரஜினி, செங்கொடி போன்ற வழக்குரைஞர்களும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். பல்வேறு உண்மை அறியும் குழுக்கள் வந்து சென்றன. அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன; ஆனால், தொடர்பணிகள் ஏதும் செய்யவில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் கூடும் படைப்பாளிகள் இப்பிரச்சினைக்கு மட்டும் தனித்தனியாகவே இருந்து கொண்டனர். தலித் பிரச்சினை என்றால் தலித்துகள் பார்த்துக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு!

தருமபுரி தாக்குதல் குறித்த ராமதாஸின் பேட்டிதான் மிகவும் முக்கியமானது. தலித் இளைஞர்கள் ஜீன்ஸ்பேண்ட், டி சர்ட், கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு வன்னியப் பெண்களை மயக்குகிறார்கள்; காதல் நாடகம் ஆடுகிறார்கள் எனக் கூறி மாவட்டம் மாவட்டமாகச் சென்று தலித் அல்லாத பிற சாதி இந்துக்களைத் திரட்டி கூட்டம் போட்டார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையும் மாற்ற வேண்டும் என்றார். ராமதாஸின் இந்த நேர்காணலுக்குப் பிறகு 27.11.2012 அன்று வடலூர் அருகே பாச்சாரப்பாளையத்தில் தலித்துகளின் 7 வீடுகள் கொளுத்தப்பட்டன. போட்டித்தேர்வுக்காக பயிற்சிகள் நடத்தப்படும் இடமும் தீக்கிரையாக்கப்பட்டது. 12.12.2012 அன்று ராமதாஸ் வாழும் திண்டிவனம் அருகே கருப்பெரும்பாக்கத்தில் 10 வீடுகள் நாசமாக்கப்பட்டன. 16.01.2013 அன்று பண்ருட்டி அருகே மேலிருப்பில் 6 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

மாமல்லபுரத்தில் 2013 ஏப்ரலில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு நாள் நிகழ்ச்சியன்று மரக்காணத்தில் கட்டையன் தெருவில் 8 வீடுகள் எரிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் செம்பூர் வன்னிய இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இத்தனை தாக்குதல்களுக்குப் பிறகும் ராமதாஸ் தலித்துகளையே குற்றம் சொல்லக்கூடிய கொடிய சாதிய மனநிலையில் இயங்குவது சமூக ஒற்றுமைக்கு சவால் விடுவதன்றி வேறென்ன?

நத்தத்தில் எரிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்த தந்தை பெரியார் படத்தின் முகத்தில் அரிவாளின் முனையால் குத்தி இருந்ததைப் பார்த்தோம். பெரியார், மார்க்ஸ் படங்களை வைத்து அரசியல் பிழைப்பை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சி பெரியாரியலைக் குத்திக் கொன்று சாதி அரசியல் செய்வதற்கான குறியீடாகவே அது தென்பட்டது.

மனிதம் கொன்ற சாதியம் தருமபுரி தொடர்பான கட்டுரைகள்

தொகுப்பு: யாழன் ஆதி

பக். : 96, விலை: 60/

பாரதி புத்தகாலயம், சென்னை – 18

பேசி : 044 24332424

Pin It