கப்பல் முழுக ஆரம்பித்தவுடன் தேசம், மதம், சாதி, உத்தியோகம், பணம், பதவி ஆகியவைகளைக் கவனிக்காமல் – பலம் குறைவானவர்களையும், சக்தி குறைவானவர்களையும் காப்பாற்றுவதே முதல் கடமையாய் நினைத்துப் பெண்களையும், வயோதிகர்களையும், குழந்தைகளையும், நோயாளிகளையும், முதலில் காப்பாற்றுகின்றான். ஆகவே, ஆட்சியிலும் அப்படிப்பட்ட கொள்கையே மனித தர்ம நாயக ஆட்சியாகும். இந்த ஆட்சியை ஜனநாயக ஆட்சிக் கப்பலிலிருக்கும் எல்லா ஜனங்களுக்கும் சுதந்திரம் கொடுத்தால், முதலில் எடுத்துக்காட்டிய ஜனநாயகக் கொள்கை ஆதிக்கமானது – ஒவ்வொரு தனி மனிதனும், தான் தான் முதலில் காப்பற்றப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கலகம் ஏற்பட்டு, அதனால் கரையேறும் சாதனங்கள்கூட எல்லாம் அடியோடு முழுகிப்போகும். இந்த மாதிரிதான் நமது ஜனநாயகமும் இருக்கின்றது.
ஜனநாயக ஆட்சி மனித தர்மத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு மற்றொரு உதாரணம் என்னவென்றால், இவ்வாரம் இந்திய சட்டசபையில் சர். ஹரிசிங் சுவரால் கொண்டு வரப்பட்ட விவாகச் சீர்திருத்தச் சட்டமானது, ஒரே அடியாய் தலையில் அடித்துக் கொல்லப்பட்டு விட்டது. இந்தச் சட்டமானது, வெகுகாலமாக அநேக அறிவாளிகள் என்பவர்களால் ஆலோசித்து சம்மதிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டதாகும்.
அந்தச் சட்டத்தின் சாரமெல்லாம் தனக்கு இஷ்டமான பெண்ணை, அதுவும் ஒரே பெண்ணை மணந்து கொண்டு வாழ்வதை எந்தச் சட்டமும் தடுக்கக் கூடாது என்பதேயாகும் (அதாவது, கலப்பு மணத்திற்கு அனுமதியளிப்பது). இதனால், மதம், பெரியோர் செய்த ஏற்பாடு ஆகியவைகள் கெடக்கூடாது என்கின்ற காரணங்களே, மனிதவுரிமைக்குத் தடையாய் இருக்கின்றது என்று ஏற்படுகின்றதே அல்லாமல் – அது மனித தர்மத்திற்கோ, சரீர சவுக்கியத்திற்கோ, நாணயத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ என்ன தடை அல்லது கெடுதி ஏற்படுகின்றது என்பது கவனிக்கப்படவில்லை என்கின்றது நன்றாய் விளங்குகின்றது.
ஈரோடு சுயமரியாதை மகாநாட்டில் தலைமை வகித்த திரு. ஜெயகர் அவர்கள், கலப்பு மணத்தைப் பற்றிப் பேசும்போது – தான் கலப்பு மணத்தைப் பற்றி வெள்ளைக்கார அதிகாரிகளுடன் பேசியதாகவும், அதற்கு அவர்கள் “கலப்புமணச் சட்டத்தைப் பாஸ்செய்து (நிறைவேற்றி) எங்களை இந்த நாட்டைவிட்டு விரட்டப் பார்க்கின்றீர்களா என்று கேட்டார்கள்'' என்பதாக எடுத்துச் சொன்னார். ஆகவே கலப்பு மணம், அனுபவத்தில் நமது நாட்டில் நடைபெறுமானால், நமது நாட்டில் அய்ரோப்பியர் ஆட்சியோ, கிறிஸ்துவர் ஆட்சியோ, முகமதிய ஆட்சியோ, இந்துக்கள் ஆட்சியோ – மற்றபடி பவுத்தம், கிறிஸ்து, இஸ்லாம், இந்து முதலிய மதங்களோ; பார்ப்பான், பறையன் முதலிய சாதிகளோ; அந்நிய ஆட்சிகளோ அடியோடு நமது நாட்டைவிட்டு, ஏன் உலகத்தையே விட்டுக்கூட ஓடிப்போக மார்க்கமுண்டாகும். இந்த நிலைகூடாது என்கின்றவர்களுடைய ஆட்சிதான் – இன்று ஜனநாயக ஆட்சியாகவும், இனியும் அதிகமான முற்போக்குள்ள ஜனநாயக ஆட்சியாகவும் இருக்கின்றது; இருக்கவும் போகின்றது.
ஆகவே, லெனின் ஆட்சியோ, கமால்பாட்சா ஆட்சியோதான் மனிதத் தர்ம – மனித நாயக, ஆட்சியாக இருக்க முடியுமே அல்லாமல், மற்றபடி எந்தச் சீர்திருத்தம் கொடுத்து, எந்த ஜனநாயக ஆட்சி கொடுத்து, அதை எந்த மகாத்மா ஒப்புக் கொண்டு, அதை எந்த வெள்ளைப் பார்ப்பானோ, கறுப்புப் பார்ப்பானோ, மொட்டைப் பார்ப்பானோ மனப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு நடத்திக் கொடுப்பதாயிருந்தாலும் – அது ஒரு நாளும் மனித தர்ம ஆட்சியாக இருக்க முடியவே முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
மேலும், மனிதனுக்கு ஒரு நாயகம் வேண்டி இருந்ததின் காரணமே மனித சமூகம் நாயகமில்லாமல் வாழ்க்கை நடத்த முடியாமல் போனதினாலேயேயாகும். அந்தப்படி முடியாமல் போனதற்குக் காரணம், மனிதனுக்கு அறிவில்லாத தன்மையும் சுயநலத் தடிப்புமாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், மேல்கண்ட இரண்டும் மக்களுடன் மக்கள் கலந்து, ஒற்றுமையாயும் நம்பிக்கையாயும் வாழச் செய்ய முடியாது.
ஆகவே, மக்கள் தங்களுக்கு ஓர் அரசன் வேண்டியது என்பதற்கு ஆதாரமான காரணங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு, அரசன் இல்லாமல் வாழலாம் என்கின்ற தன்மை அடையும்வரை, தங்கள் பொதுவாழ்வில் தங்களுக்குத் தாங்களே நாயகர்களாயிருந்து கொள்வது என்பது, சாத்தியமான காரியமாகுமா என்பதைக் கவனித்துப் பார்த்தாலும் ஜனநாயகத்தின் முட்டாள்தனம் விளங்காமல் போகாது. அந்தக் காரணங்கள் சரிப்படுத்தப்படாத ஜனங்கள் மறுபடியும் தங்களைத் தாங்களே தங்கள் பொதுவாழ்வுக்கு நாயகர்களாய் இருந்து கொள்ளுவது என்பது சாத்தியமான காரியமாகுமா என்பதைக் கவனித்துப் பார்த்தால், ஜனநாயகத்தின் முட்டாள்தனம் விளங்காமல் போகாது.
ஆகவே, இப்போது ஜனநயாக ஆட்சி என்று நாம் சொல்லுவதெல்லாம், ஒருக்காலும் மனித தர்ம ஆட்சியாகவே ஆகாது. முதலில் நான் மனிதன்; பிறகுதான் இந்தியனோ, எவனோ ஆவேன்.
("குடி அரசு' தலையங்கம் – 8.2.1931)