நாடாளுமன்றத்துக்கும் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேர வைகளுக்கும், தமிழ்நாட்டில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 2019 ஏப்பிரல் 11 முதல் மே 19 முடிய ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து கொண்டிருக் கிறது.

இதற்குமுன் நடைபெற்ற தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் பணம் கோடி கோடியாய்ச் செலவிடப்படுகிறது. ஆந்திரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரும் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெ.சி. திவாகர் ரெட்டி வெளியிட்ட அறிக்கை “தி இந்து” ஆங்கில நாளேட்டில் 23.4.2019 அன்று வெளியாகியுள்ளது. அதில், “ஆந்திரத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் கிட்டத்தட்ட 25 கோடி உருபா செலவிட்டனர். ஆந்திரத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைக்கும் சேர்த்து தேர்தல் செலவு ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது. வாக் காளர்கள் ரூ.2000-க்குக் குறைவான தொகையைப் பெற மறுக்கின்றனர். சில இடங்களில் வேளாண் தொழிலாளர்களும் பிற கூலி வேலை செய்வோரும் ரூ.5000 கேட்டனர்” என்று திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

delhi electioncommision office 600ஊடகவியல் ஆய்வு நடுவம் மேற்கொண்ட ஆய்வில், 2010 முதல் 2014 வரை இந்தியாவில் நடந்த தேர்தல் களில் ரூ.1,50,000 கோடி செலவிடப்பட்டதாகவும், இதில் பாதித் தொகை கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் என்றும் கூறியுள்ளது. பா.ச.க.வும், காங்கிரசும் 2019 ஏப்பிரல்-மே மாதங்களில் நடைபெறும் தேர் தலில் தனித்தனியே ரூ.50,000 கோடி செலவிடத் திட்டமிட்டிருப்பதாக 14.4.2019 நாளிட்ட ‘டெக்கான் கிரானிக்கிள்’ ஆங்கில நாளேட்டின் ஆசிரியவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்குக் கோடி கோடியாகப் பணம் கொடுப்பது யார்? பெருமுதலாளிகள், பெரும் வணிகர்கள், பெரிய ஒப்பந்தக்காரர்கள் முதலானோர் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கின்றனர். 1930-கள் முதலே காங்கிரசுக் கட்சிக்கு பிர்லா, டாடா போன்ற முதலாளிகள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். அதனால், இவர்களின் பொருளியல் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் காங்கிரசுக் கட்சியில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன.

1937-இல் பெரும்பாலான மாகாணங்களில் காங்கிரசுக் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது, ஆட்சியதி காரத்தில் முதலாளிகளின் செல்வாக்கு வளர்ந்தது. இம்முதலாளிகள் பார்ப்பன - பனியா - மார்வாரி உள்ளிட்ட மேல்சாதியினராகவே இருந்தனர். இன்றளவும் இந்தியாவில் உள்ள பெருமுதலாளிய நிறுவனங்களும் வணிகக் குழுமங்களும் இந்த மேல்சாதியினரின் ஆதிக்கதிலேயே இருக்கின்றன.

இந்தியா குடியரசானபின் 1952இல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலின்போதே வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது ஏற்பட்டுவிட்டது. தேர்தலில் அதிக அளவில் செலவு செய்ய வாய்ப்புள்ள கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெறக் கூடிய நிலை உண்டாயிற்று. மக்கள் நாயக ஆட்சியாக வளர வேண்டியது பணநாயகத்தின் ஆட்சியாக மாறியது. தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்குப் பெருந்தொகையை நன்கொடையாக அளிப்பது, சனநாயக நெறிமுறைகளுக்கும் மக்களாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானதாகும் என்று எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

இது தொடர்பாக, 1957-இல் மும்பை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி யாக இருந்த எம்.சி. சாக்ளா, “இது மிகப் பெரிய ஆபத்து; வேகமாக வளர்ந்து வரும் சனநாயகத்தின் குரல்வளையைக் கூட நெரித்து விடும், தொழில் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மட்டுமின்றி, வாக்களிக்கும் வாக்காளர்கள் கூட தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்து அறிவது முதன்மையாகும்” என்று தீர்ப்பளித்தார், இதே போன்றதோர் தீர்ப்பை கொல்கத்தா நீதிமன்றமும் 1957-இல் வழங்கியது,

அதன் பிறகும் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளித்துவந்த நன்கொடை குறித்த விவரம் பொது மக்கள் அறிய முடியாதவாறு இரகசியமாக வைக்கப்பட்டது. இந்த நன்கொடையில் பெரும்பகுதி கருப்புப்பணம் என்பதால் அரசியல் கட்சிகளும் தொழில் நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படு கின்றனர்.

1991-இல் தாராள மயம் - தனியார் மயம் என்கிற கொள்கையை அரசுகள் நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின், நிலம், காடுகள், கனிம வளங்கள், மணல், பெட்ரோலிய எண்ணெய் வயல்கள் முதலானவை பெருமுதலாளிய நிறுவனங்களின் கொள்ளைக்குத் திறந்துவிடப்பட்டன. இந்த இயற்கை வளங்களை மலிவு விலையில் பெறவும், அப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றவும் முதலாளிய நிறுவனங்கள் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்கும், எதிர்க் கட்சி களுக்கும் பெருந்தொகையைக் கையூட்டாகவும், நன் கொடையாகவும் அளிப்பது வேகமாகப் பெருகியது. சனநாயகம் என்பது பணம் குவிக்கும் வணிகமாக மாறிவிட்டது. தேர்தல் நன்கொடை என்பது அரசியல் கட்சிகளின் அச்சாணி போலாகிவிட்டது. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்ற பதவிகளுக்குச் செல்வது குறுகிய காலத்தில் கோடிகளில் பணத்தைக் கொள்ளையடிப்பதற்கே என்ற நிலை ஏற்பட்டுவிட்டது,

அரசியல் கட்சி, நன்கொடை என்கிற பெயரில் இவ்வளவு தொகைதான் பெறவேண்டும் என்கிற வரம்பு ஏதும் இல்லை. அதேபோல் தேர்தலில் செலவு செய்வதற்கும் வரம்பு இல்லை, தற்போது நாடாளுமன்றத் திற்குப் போட்டியிடும் வேட்பாளர் எழுபது இலட்சம் உருபா வரையில் செலவு செய்யலாம் என்று விதிக்கப் பட்டுள்ளது, அரசியல் கட்சிகளின் வரவு-செலவு எந்த வொரு தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை, அதனால் அதில் ஊழலும் கருப்புப் பணமும் தாராள மாகப் புழங்குகின்றன. அரசியல் கட்சிகளின் வரவு-செலவை இந்திய அரசின் தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசியல் கட்சிகள் செவிமடுப்ப தில்லை.

சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு என்கிற தன்னார்வ அமைப்பின் தகவல்படி, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் 69 விழுக்காடு இன்னாரிட மிருந்து பெறப்பட்டவை என்பதே தெரியாதவை; மீத முள்ள 31 விழுக்காடு வருமான வரித்துறைக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் அறிக்கையிலிருந்து வெளியில் தெரிய வருபவை ஆகும். அரசியல் கட்சிகளின் உண் மையான வருவாய் அவற்றின் அறிக்கையில் வெளி யிடுவதைவிட இரண்டு மடங்கு இருக்கும், இவற்றின் உண்மையான வருவாய் குறித்து வருமானவரித் துறையிடமோ, தேர்தல் ஆணையத்திடமோ அதிகாரப் பூர்வ ஆவணம் கிடையாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை கள் குறித்து சில தகவல்களைப் பெறமுடிந்தது. இந்த நிலையைத் தேர்தல் பத்திரத் திட்டம் ஒழித்துவிட்டது.

தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் அரசியல் கட்சிகளுக்குத் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதைப் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளன. சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2002-இல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வேட்பாளரின் கல்வித் தகுதி, சொத்து விவரம், குற்ற வழக்குகள் குறித்த விவரங்களை வேட்பாளர் விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும்; வாக்காளர்கள் இந்த விவரங்களை அறிவதற்கான உரிமை உடைய வர்கள் என்று தீர்ப்பளித்தது. இது நடைமுறையில் பின்பற்றப்படுகிறது. வேட்பாளர்கள் விண்ணப்பத்தில் அளித்த விவரத்தின்படி, 2009இல் நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் 300 பேர் (58ரூ) கோடீசுரவர்கள், 2014-இல் 100 விழுக்காட்டினரும் கோடீசுவரர் கள். எனவே கோடிகளில் செலவிடக்கூடிய பணவசதி படைத்தவர்களையே எல்லாக் கட்சிகளும் வேட்பாளர் களாக நிறுத்துகின்றன.

2017ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்த போது, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் கட்சிகளுக்குப் பணமாக நன்கொடை தரும் முறையில் கருப்புப் பணத்தின் புழக்கத்தைத் தடுத்திட, தேர்தல் பத்திரத் திட்டம் என்பதை நடுவண் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தார். இதற்காக 1951-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச்சட்டம், 1934-ஆம் ஆண்டின் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 2013-ஆம் ஆண்டின் தொழில் நிறுவ னங்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப் பட்டன.

நடுவண் அரசு 2018 சனவரி 2 அன்று தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 இலட்சம், ரூ.10 இலட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி, ஏப்பிரல், சூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் பத்து நாள்களுக்கு வழங்கப்படும். நாடாளு மன்றத்துக்குத் தேர்தல் நடக்கும் ஆண்டுகளில் கூடுதலாக முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதன்படி 2019 பிப்பிரவரி 28 அன்று நடுவண் அரசு வெளியிட்ட அறிவிப்பில் 2019 மார்ச்சு, ஏப்பிரல், மே மாதங்களில் முப்பது நாள்களுக்குத் தேர்தல் பத்திரம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மே 15 வரை தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். மே 19 அன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தனி நபரோ, இந்துக் கூட்டுக் குடும்பமோ, சிலர் ஒன்று சேர்ந்தோ, தொழில் நிறுவனமோ தேர்தல் பத்திரத்தை வங்கியில் வாங்கி, தனக்கு விருப்பமான கட்சிக்கு நன்கொடையாக அளிக்கலாம். அந்தக் கட்சி தன் வங்கிக் கணக்கில் தேர்தல் பத்திரத்தைச் செலுத்திப் பணமாக மாற்றிக் கொள்ளும். தேர்தல் பத்திரம் வழங்கிய வரின் பெயர் வெளியிடப்படாமல் இரகசியமாக வைக்கப் படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் இருந்த கருப்புப் பணப் புழக்கத்தைத் தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் தடுத்துவிட்டதாக மோடி அரசு பெருமை கொள்கிறது. ஆனால் இது உண்மை அன்று.

வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடைப் பத்தி ரங்களை நடைமுறைப்படுத்துவதால் திரைமறைவு நன்கொடைகள் தடுக்கப்படும் என்று மோடி அரசு சொல்கிறது. நீண்டகாலமாக வங்கிகள் மூலமாகத்தான் கருப்புப் பணம் வெள்ளையாக் கப்பட்டு வருகிறது என்பது ஊரறிந்த உண்மை யாகும். ஹவாலா பணப் பரிமாற்றத்திற்கு வங்கிகள் துணைபோகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, கருப்புப் பணத்தைப் புதிய பணத்தாள்களாக மாற்றிக் கொள்வதில் ரிசர்வ் வங்கி முதல் உள்ளூர் கிளை வங்கிகள் வரையில் துணைபோயின என்பது அம்பலப் பட்டுச் சந்தி சிரிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்த லிலும் ஒரு விழுக்காட்டுக்குமேல் வாக்குகள் பெற்ற - தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரம் வழங்க முடியும். 2017ஆம் ஆண்டு வரையில் ஒரு தொழில் நிறுவனம் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க வேண்டுமானால் அது குறைந்தது மூன்று ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்; இலாபத்தில் இயங்கியிருக்க வேண்டும்; மூன்று ஆண்டுகளின் நிகர இலாபத்தில் 7.5 விழுக்காடு அளவுக்கு மட்டுமே நன்கொடை தர முடியும் என்கிற விதிகள் இருந்தன. தேர்தல் பத்திரத் திட்டம் இந்த விதிமுறைகளை நீக்கிவிட்டது. மேலும் தொழில் நிறுவனங்கள் சட்டம் 182(3)-இன்படி அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விவரத்தை ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று இருந்த விதியும் இப்போது நீக்கப் பட்டுவிட்டது. அதேபோன்று இந்தியாவில் இயங்கும் அயல்நாட்டு முதலாளிய நிறுவனங்கள் தேர்தல் நன் கொடை அளிப்பதற்கு இருந்த தடைகளும் அகற்றப்பட்டு விட்டன.

எனவே, தேர்தல் நேரத்தில் முளைக்கும் காளான் நிறுவனங்கள், போலி நிறுவனங்கள் பெயர்களில் கருப்புப் பணம் தேர்தல் பத்திரங்களாக மாற்றப்படும். இந்நிறுவனங்களின் பெயர்கள் இரகசியமாக வைக் கப்படும் என்பதால் எவ்வளவு பணம் எந்த அரசியல் கட்சிக்குத் தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்டது என்ப தெல்லாம் திரைமறைவு தில்லுமுல்லுகளாகவே இருக்கும். எனவேதான், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, “தேர்தல் பத்திரம் அரசியல் கட்சி களுக்குத் தொழில் நிறுவனங்கள் தரும் கருப்புப் பணத்தை மூடி மறைப்பதற்கான ஒரு திட்டம்” என்று கூறியிருக் கிறார் (தி இந்து-ஆங்கிலம்-27.1.2019).

தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி, அரசு ஊழியர்கள் மக்களின் பொதுநலன் தொடர்பாக எடுக்கும் கொள்கை முடிவுகளைக் குடிமக்கள் அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. அதுபோல் தேர்தலில் வெற்றி பெறும் ஒரு அரசியல் கட்சி எடுக்கும் முடிவுகளைத் தேர்தல் பத்திரங்கள் தீர்மானிக்க வாய்ப்பு இருப்பதால், வாக்காளர்கள் தேர்தல் நன்கொடைப் பத்திரங்ளை வாங்கி வழங்கியவர்களின் விவரத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும்.

சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு 2019 மார்ச்சு மாதம் உச்சநீதிமன்றத்தில், “தேர்தல் பத்திரம் வழங்குவதைத் தடைசெய்ய வேண்டும். அல்லது தேர்தல் நடவடிக்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் நன்கொடை வழங்கியவர்களின் விவரங்களை வெளியிட ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்று வழக்குத் தொடுத்தது. மார்க்சிஸ்ட் பொதுவுடைமைக் கட்சியும் இதேபோன்று ஒரு வழக்கைத் தொடுத்தது.

jeyadeep prasanthpoosan ramadoss 6002019 ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத் துக்குப் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை முதன்மை வழக்காகக் கருதி, உச்சநீதிமன்றம் 2018 திசம்பர் மாதத்திற்குள் விசாரித்து, தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இதற்கு மாறாக, முதல் கட்டத் தேர்தல் தொடங்குவதற்கு முதல் நாள் ஏப்பிரல் 10 அன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மூன்று நாள்கள் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, சனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பின் சார்பில், “தேர்தல் பத்திரங்கள் வெளிப்படைத் தன் மையை மறுக்கின்றன; போலியான நிறுவனங்கள் பெயரில் கருப்புப் பணம் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. நன்கொடையாளர் யார் என்பதை அறியும் வாய்ப்பு ஆளும் கட்சிக்கு மட்டும் இருக்கிறது; அதனால் மற்ற கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதைத்தடுத்திட தன் அதிகாரத்தைப் பயன்படுத்தும்” என்று வாதிடப் பட்டது.

தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ராக்கேஷ் திவேதி, “வேட்பாளர் பற்றிய விவரத்தை அறிவது ஒரு பகுதி மட்டுமே ஆகும். வேட்பாளர் போட்டி யிடும் கட்சிக்கு நன்கொடை அளித்தது யார் என்பதை அறிவது அதைவிட முதன்மையாகும். அரசியல் கட்சிகள் யாரிடமிருந்து நன்கொடை பெற்றன என்கிற விவரத்தை அக்கட்சிகளின் வலைதளத்தில் வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், “தேர்தலில் கருப்புப் பணம் செலவழிக்கப் படுவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது செயல்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி இந்தத் தேர்தல் நேரத்தில் உச்சநீதி மன்றம் தலையிடக்கூடாது. தேர்தல் முடிந்த பின்னர் இதனை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், “அரசியல் கட்சிக்கு யார் நன்கொடை அளித்தார் என்பதை அறியும் உரிமை வாக் காளர்களுக்கு இல்லை; நன்கொடை அளித்தவரின் பெயர் இரகசியத்தைக் காத்திட அரசமைப்புச் சட்டப்படி அரசுக்கு உரிமை உண்டு” என்று தலைமை வழக்கு ரைஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு ஏப்பிரல் 12 அன்று ஒரு இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. அதில், “நாட்டில் நியாயமான முறையில் தேர்தல் நடைமுறைகள் செயல்படுவது குறித்து தேர்தல் பத்திரத் திட்டம் அழுத்த மான சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தாம்பெற்ற தேர்தல் பத்திரங்கள் எந்த நாளில் எந்த வங்கியின் கணக்கில் செலுத்தப்பட்டது, நன்கொடை வழங்கியவர்களின் பெயர்கள், அவர்களின் வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட அறிக்கையை முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணையத்திடம் மே 30-க்குள் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அந்த விவரங்களையும் வருமானவரிச் சட்டம், தேர்தல் சட்டம், வங்கிச் சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டு விரிவாக ஆராய்வோம் என்று கூறிய நீதிபதிகள், இறுதித் தீர்ப்புக் கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

நாடாளுமன்ற சனநாயகத்திற்கு அடிப்படையாக விளங்கும் தேர்தல் முறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் பத்திரத் திட்டம் குறித்து முன் கூட்டியே விசாரித்துத் தீர்ப்பு வழங்கி நியாயம் செய்திட உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. குறைந்த அளவில், தேர்தல் பத்திரத் திட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து விட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்தியிருக்கலாம். இந்த இடைக்காலத் தீர்ப்பால் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் பத்திரம் மூலம் கருப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க இயலாது.

2017-2018-ஆம் ஆண்டில் கடைசி மூன்று மாதங்களில் தேர்தல் பத்திர விற்பனை ரூ.220 கோடி ஆகும். இதில் பா.ச.க.வுக்கு ரூ.210 கோடி, காங்கிரசுக்கு ரூ.5 கோடி, மற்ற கட்சிகளுக்கு ரூ.6 கோடி அளிக்கப்பட்டுள்ளது. 2017-18-இல் பா.ச.க. பெற்ற தேர்தல் நன்கொடை ரூ.1,027 கோடி; காங்கிரசு பெற்ற நன்கொடை ரூ.197 கோடி. தேர்தல் பத்திரத் திட்டம் ஆளும் கட்சிக்கு அதிக அளவில் வெள்ளைப் பணமாகவும் கருப்புப் பணமாகவும் அளிப்பதற்கே உதவும்.

அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடைக்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் பத்திரம் மூலம் வரம்பின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் தரலாம். இங்கிலாந்தில் குறிப்பிட்ட நிதி ஆதாரங்களிலிருந்து மட்டுமே அரசியல் கட்சி களுக்கு நன்கொடை வழங்க முடியும். ஒவ்வொரு காலாண்டிற்கும் அளிக்கப்பட்ட நன்கொடை விவரத் தை அரசியல் கட்சியின் பொருளாளர் வெளியிட வேண்டும். பிரான்சிலும் கனடாவிலும் தனிநபர் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியும். அதற்கும் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை என்பது சனநாயகத் தின் ஆணிவேர் போன்றதாகும். வேட்பாளரின் விவரத்தை அறியும் உரிமை வாக்காளருக்கு இருப்பது போல், வேட்பாளரின் அரசியல் கட்சி பெறுகின்ற தேர்தல் நன்கொடை விவரத்தை அறியும் உரிமையும் இருக்க வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டம் இவற்றை மறுக்கிறது. இரகசியம் காத்தல் என்கிற பெயரால் கார்ப்பரேட்டு நிறுவனங்களின் கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அளிக்கப் பட்டு, தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதுடன், அமைக்கப்படும் ஆட்சியின் கொள்கை முடிவுகளை - செயல் திட்டங்களை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் வாய்ந்ததாகவும் விளங்கும். எனவே சனநாயகம் காக்கப்பட தேர்தல் பத்திரத் திட்டம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும்.

Pin It