இந்தியாவின் 6,38,596 கிராமங்களும் "ஊர்' என்றும் "சேரி' என்றும் பூகோள ரீதியாக – எந்தச் சுவர்களுமின்றி – இரண்டு இந்தியாக்களாகப் பிரிந்து நிற்கின்றன. சேரி வாழ் தலித் மக்களுக்கு எதிராக, ஒவ்வொரு நாளும் (24 து 7) 27 வன்கொடுமைகள் (வன் தாக்குதல், வீடுகளை எரித்தல், பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், துப்பாக்கிச்சூடுகள், காவல் மரணங்கள்...) நிகழ்த்தப்படுகின்றன. இந்நாட்டின் தொல்குடி மக்கள் மீது (25 சதவிகிதம்) மேற்கூறிய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுப்போர் – அந்நிய நாட்டினரோ, அண்டை மாநிலத்தவரோ, அந்நிய மதத்தினரோ, வேறு வர்க்கத்தினரோ அல்லர். இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்து வகை கொடூரங்களையும் நிகழ்த்துகின்றவர்கள் – அதே தேசிய இனத்தையும், அதே வர்க்கத்தையும், அதே மதத்தையும் சேர்ந்தவர்கள்தான்! சேரியில் வாழ நிர்பந்திக்கப்பட்ட இம்மக்கள் மீது சமூக – பண்பாட்டு ரீதியான பாகுபாட்டையும், வெறுப்பையும், இழிவையும் உமிழ்பவர்கள் பொதுச் சமூகம் என்று அடையாளப்படுத்தப்படும் "ஊர்'ச் சமூகத்தினர்தான்.

நாள்தோறும் இழைக்கப்படும் இத்தகைய அநீதிகள், இச்சமூகத்தின் இயல்பான வாழ்வியல் நடைமுறையாகவே கருதப்படுகின்றன. அதனால்தான் இந்த அநியாயங்களுக்கு எதிராக பொதுச் சமூகம் கிளர்ந்தெழுவதில்லை. அந்நியன் நிகழ்த்தும் தாக்குதல் என்றால் கொதித்தெழும் "இந்தியன்'; அண்டை மாநிலத்தவனின் ஆதிக்கம் என்றால் வீறு கொள்ளும்"தமிழன்'; ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவம் என்றால் புரட்சி செய்யும் "கம்யூனிஸ்ட்'; சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்றாலோ, ஊழல் என்றாலோ குரல் கொடுக்கும் "முற்போக்குவாதி' – இவர்கள் எல்லாம் 25 கோடி பேர் கீழ்ஜாதி மக்களாக நடத்தப்படும் கொடுமையைக் கண்டித்து, அவர்களை சமத்துவக் குடிமக்களாக மாற்ற முன்வருவதில்லை. மாறாக, கல்வி, பொருளாதாரம், அறிவியல் முன்னேற்றம், ஜனநாயகம், அரசியல் அதிகாரம், வளர்ச்சி, விழிப்புணர்வு போன்றவை இம்மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும்; இவை அனைத்தும் தங்களுடைய செயல்திட்டத்தில் உள்ளடங்கி இருப்பதாகவும் பொய் சொல்கிறார்கள்.

சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்பட்ட இந்திய விடுதலைப் போராட்டம் 150 ஆண்டுகள் நடைபெற்ற போதும்; வர்க்கப் போராட்டம் தொடங்கி 75 ஆண்டுகளைக் கடந்தும்; தேசிய இனப் போராட்டம் 50 ஆண்டுகளாக நடைபெற்றாலும் – இவை எதுவுமே ஊரையும், சேரியையும் இணைப்பதற்கான (அதற்கு தடையாக இருக்கும் இந்து வர்ண – சாதி அமைப்பைத் தகர்ப்பதற்கான) போராட்டங்கள் அல்ல, அல்லவே அல்ல. வெள்ளையன் வெளியேற வேண்டும், இந்தியன் ஆள வேண்டும்; வலதுசாரிக்கு பதில் இடதுசாரி ஆட்சி வேண்டும்; தில்லி ஆதிக்கம் நீங்கிய, தமிழர் ஆட்சி கோலோச்ச வேண்டும் என்ற அரசியல் அதிகாரத்திற்கான போராட்டங்களேயன்றி – அதனினும் வலிமையான ஜாதியை அழித்தொழிப்பதற்கான இலக்கை – இவர்களுடைய போராட்டங்கள் கொண்டிருக்கவில்லை. இந்திய விடுதலையோ, இடதுசாரி ஆட்சிகளோ தன்னளவில் ஊரையும் சேரியையும் இணைக்கவில்லை என்பது, தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்துகின்றவர்களுக்கு அனுபவப் பாடமாக இருப்பினும், இப்பேருண்மையை அவர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

பொதுச்சமூகத்தினரால் நடத்தப்படும் இத்தகு அரசியல் போராட்டங்கள், தங்களுடைய ஜாதியை ஒழிப்பதற்கானதுமன்று. "இந்தியன்', "தமிழன்', "இந்து', "பாட்டாளி வர்க்கம்' என்ற குறியீடுகள் அரசியல்பாற்பட்டவை. அரசியல் போராட்டங்களில் மேற்கூறிய அடையாளங் களுடன் தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள், சமூக – பண்பாட்டு ரீதியான உறவுமுறைகளைப் பேணும்போது, சற்றும் கூச்சமின்றி தங்களை ஜாதி ரீதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அதனால்தான் சொல்கிறோம், "தமிழன்' அரசியல் ரீதியாகக்கூட ஓர்மை பெறவில்லை. எந்த இந்தியன், எந்தத் தமிழன், எந்த கம்யூனிஸ்ட் கட்சி நடத்தினாலும் – அவருடைய தலைமையின், மாவட்டத்தின், வட்டத்தின், ஒன்றியத்தின் ஜாதி அனைவருக்கும் முதலில் அறிவிக்கப்படுகிறது. ஜாதியற்ற ஒற்றைத் தலைவன்கூட இந்நாட்டில் இல்லை என்பதைவிட வெட்கக்கேடு வேறென்ன இருக்க முடியும்? இருப்பினும், இந்தியனுக்காகவும், தமிழனுக்காகவும், பாட்டாளிகளுக்காகவும் கட்சி/இயக்கம் நடத்துவதாக இவர்களால் "துணிச்சலாக' சொல்ல முடிகிறது. ஜாதி கொடுக்கும் இத்துணிச்சலுக்குப் பெயர் அயோக்கியத்தனம்!

 தமிழன் ஓர்மை பெற என்ன வழி? இந்து அடையாளங்களை சுமக்கும் வரை, தமிழன் சமூக, அரசியல், பண்பாட்டு ரீதியாக ஓர்மை பெறவே முடியாது என்பது தந்தை பெரியாரின் முடிவு. இப்புரிதல் இல்லாத இன விடுதலை – சேரித்தமிழனை மட்டுமல்ல; ஊர்த்தமிழனையும் சூத்திர இழிவிலிருந்து விடுவிக்காது. மூவேந்தன்கள் தன்னாட்சியுரிமை பெற்றிருந்தும் போகாத சூத்திர இழிவு, தில்லியிலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் எப்படிப் போகும் என்பதற்கும்; ஆயுதப் போராட்டத்தை நடத்தினாலும் பிறவி இழிவை ஒழிக்க முடியாது என்பதற்கும் முனைவர் பட்ட ஆய்வுகள் தேவையில்லை; பகுத்தறிவு போதும்!

பரமக்குடி படுகொலையையொட்டி, இம்முறை முற்போக்குவாதிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று (17 குழுக்கள் என்று சொல்லப்படுகிறது) உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். நாள்தோறும் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, அதற்குக் காரணமான ஜாதிகளாலான சமூக அமைப்பை ஒழிப்பதற்கான செயல்திட்டங்களை இவர்கள் எவரும் முன்மொழியவில்லை. அரச பயங்கரவாதம், முக்குலத்தோரின் ஆதிக்கம், நிவாரணங்கள் என்பதைக் கடந்து இவர்கள் பேசவில்லை. தீண்டாமைக் கொடுமைகள் தலித் மக்களின் உயிரைப் பறிக்கும்வரை, அதைப்பற்றி அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றனர். அதனால்தான் படுகொலை நிகழ்த்தப்படாத நாட்கள் இவர்களைப் பாதிப்பதில்லை. ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்திற்கு எதிரான, பிறமொழிக் கலப்புக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான, சுற்றுச்சூழல், அணுஉலைகள், ஊழலுக்கு எதிராக என நாள்தோறும் போராடுபவர்கள் – தீண்டாமைக் கொடுமைகள் நிகழும்வரை காத்திருப்பது என்ன நியாயம்? உண்மையில், 365 நாட்களும் இந்த அநீதிகளுக்கு எதிராக அமைதி காப்பதால்தான், 366 ஆவது நாள் அது படுகொலையில் முடிகிறது.

தலித் மக்களைப் பொருத்தவரை, தாங்கள் நாள்தோறும் சந்திக்கும் பாகுபாடு, இழிவு, வெறுப்புணர்வு மற்றும் வன்கொடுமை ஆகிய அனைத்திற்கும் பிறவி இழிவுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அவர்கள் கீழ்ஜாதிகளாகப் பிறந்ததால்தான் ஏழைகளாக இருக்கிறார்கள்; ஏழைகளாகப் பிறந்ததால் கீழ் ஜாதியாகவில்லை. எத்தகைய உயர் படிப்பையும், பொருளியல் முன்னேற்றங்களையும், அரசியல் அதிகாரங்களையும் ஈட்டிய பிறகும் அவர்கள் மீதான தீண்டாமை அகலவில்லை. ஆக, பிறவி இழிவைப் போக்க முற்படாதவரை, இவர்கள் மீதான தீண்டாமையும் விலகாது. இவர்களுடைய போர்க்குணம் மட்டுமே இவர்களின் பிறவி இழிவைப் போக்கிவிடாது. தங்கள் மீதான அநீதிகளுக்கு எதிராக சில எதிர்வினைகளை இம்மக்கள் நிகழ்த்தலாம். ஆனாலும் அது தற்காலிகமானதுதான்.

தலித் மக்களின் பிறவி இழிவை எது போக்கும்? டாக்டர் அம்பேத்கர் தானும் தன் மக்களும் "இந்துவாக சாகக்கூடாது' என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். இதன் பொருள் : இந்துவாகப் பிறப்பது ஒரு விபத்து; ஆனால் நம் வாழ்நாளில் இந்து அடையாளங்களை முற்றாகத் துறக்க வேண்டும். அது மட்டுமே நம்மை முழு விடுதலை பெற்ற மக்களாக மாற்றும் என்பதுதான். இதுதான் அம்பேத்கரியலின் முதன்மை செயல்திட்டம். அவர் செய்யத் துணிந்ததை நாம் செய்ய மறுப்பதால்தான் – இச்சமூகம் மிகப்பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

இந்து பிடியில் இருந்து வெளியேறாமல் சிலர், தங்கள் பெயர்களை மட்டும் வீர அடையாளத் துடன் மாற்றிக் கொண்டு, தாங்களே உருவாக்கிய வரலாற்றுப் பெருமிதங்களோடு மார்தட்டிக் கொள்கின்றனர். இவர்கள் முன்வைக்கும் "மன்னாதி மன்னர்'களுக்கே நீங்காத இழிவு, இவர்களுக்கு மட்டும் எப்படி நீங்கிவிடும்? பள்ளன் – பறையன் – சக்கிலியன் – பஞ்சமன் என்ற இழிவைக் கொண்டிருக்கும் மன்னனுக்கும், மக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? இதைப் பகுத்தாய்ந்து பார்க்காதவரை, அடிமை விலங்கு அறுபடாது. ஜாதி என்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒவ்வொருவரின் சிந்தனையிலும் போடப்பட்டுள்ள விலங்கு. தலித் மக்கள் இந்து பிடியில் இருந்து மீளாமல், ஆயிரம் வீர வரலாறுகளை உருவாக்கிக் கொண்டாலும், எந்த இழிவும் அவர்களை விட்டு ஒழியாது என்பதற்கு, பரமக்குடி படுகொலையாவது இறுதிச் சான்றாக இருக்கட்டும்.

ஒப்பாரும் மிக்காருமில்லாத தலைவர் அம்பேத்கர் எழுதிய, "தீண்டத்தகாத மக்கள் – யார்? அவர்கள் ஏன் தீண்டத்தகாத மக்களாக மாறினர்?' என்ற உண்மை வரலாற்றைச் சொல்லும் ஆய்வு நூலையும், "சாதியை ஒழிக்கும் வழி' என்ற பிறவி இழிவுக்கான அருமருந்தைச் சொல்லும் நூலையும் புரிந்து கொள்ளாதவரை – அதை மக்களிடம் கொண்டு செல்லாதவரை, விடுதலைக்கு வழியில்லை! சில சாதியவாதிகள் தங்களின் சுயநலத்திற்காக, இம்மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக செய்யும் சூழ்ச்சியே – எந்த ஆதாரங்களுமற்ற "அடித்தட்டு வரலாறு'கள்.

பார்ப்பனிய படிநிலைப்படுத்தப்பட்ட இந்து வர்ண சாதி அமைப்பில் உள்ள 6,000 சாதிகளில் எந்த இரு சாதிகளும் சமமானவை அல்ல. ஜாதிகளாலான இந்த ஏற்றத்தாழ்வை முற்றாக எதிர்ப்பதும், மக்களை இணைப்பதும் தான் அம்பேத்கரின் கொள்கை. இதற்கு மாறாக, இந்து சமூகம் உருவாக்கிய அப்பட்டமான புனைவுகளின் வழிநின்று, தலித் மக்களிடையே வரலாற்று ரீதியான பிளவை ஏற்படுத்தி, அதற்கு சில போலி பெருமிதங்களை சூட்டி, ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக்க முனைவோர் – எதிரிகளுக்கு துணை புரிகின்றனர். இவர்கள் நஞ்சைவிட ஆபத்தானவர்கள். நஞ்சை நல்லது என்று விற்கும் கொடுஞ்செயலை இவர்கள் செய்கிறார்கள். நீ வேறு, நான் வேறு என்று அறிவுக்கு ஒவ்வாத கற்பிதங்களை காலந்தோறும் பரப்புரை செய்து கொண்டு, ஆபத்து காலங்களில் மட்டும் அனைவரும் அணிவகுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

முக்குலத்தோர் ஆதிக்கத்தை வீறுகொண்டு எதிர்ப்பது மட்டுமே தலித் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துவிடாது. தலித்துகள் முக்குலமாக ஒன்றிணைந்து, ஆதிக்கத்தை தகர்ப்பதுதான் நம்முன் இருக்கும் ஒரே வழி. "பெரும்பான்மை'சாதி இந்துக்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட ஒரு சாரார் மட்டுமே எதிர்வினை புரிந்திட முடியும் என்று எண்ணுவது தற்கொலை முயற்சி. பட்டியல் சாதியினரின் திரட்சியுடன் கூடிய தொலைநோக்குச் செயல் திட்டங்களே பரமக்குடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

*** 

“தீண்டத்தகாத மக்களின் பரிதாபமான நிலையைக் கண்டு மனம் வருந்துவோர், தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது, “தீண்டத்தகாதவர்களுக்காக நாம் ஏதேனும் செய்தாக வேண்டும்'' என்று ஓலமிடுவதை வழக்கமாகக் கேட்கிறோம். இப்பிரச்சனையில் அக்கறையுள்ள எவரும், “தீண்டத்தக்க இந்துவை மாற்றுவதற்கு நாம் ஏதாவது செய்வோம்'' என்று சொல்வதைக் கேட்பது அரிது. மீட்கப்பட வேண்டியவர் தீண்டத்தகாதவர்கள்தான் என்றே எப்போதும் கருதப்படுகிறது. நற்பணிக் குழு ஒன்றை அனுப்புவதானால், அதைத் தீண்டத்தகாதவர்களிடம்தான் அனுப்ப வேண்டும். தீண்டத்தகாதவர்களைத் திருத்திவிட முடிந்தால், தீண்டாமை மறைந்து போகும். தீண்டத்தக்கவர்களுக்கு எதுவுமே செய்ய வேண்டியதில்லை. அவர் மனதளவிலும், நடத்தையிலும், எழுத்திலும் நலமாயிருக்கிறார். அவர் ஆரோக்கியமாயிருக்கிறார், அவரிடம் எந்தக் கேடும் இல்லை. இவ்வாறு கருதுவது சரிதானா? சரியோ, தவறோ இந்துக்கள் இக்கருத்தைதான் விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். தீண்டத்தகாத மக்களின் பிரச்சனைக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று தங்களைத் தாங்களே நிறைவு செய்து கொள்ள உதவுகிறது என்ற பெரிய சிறப்பு இக்கருத்துக்கு உள்ளது...

“... தீண்டத்தகாத மக்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து விடப்பட்டுள்ள வெளிப்புற மக்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் தனியாக இருப்பது, பிரித்து வைக்கப்பட்டிருப்பது – அவர்களுடைய விருப்பத்தால் அல்ல. கலந்து வாழ விருப்பமில்லை என்பதற்காக, அவர்கள் தண்டிக்கப்படவில்லை. இந்துக்களுடன் ஒன்றாக சேர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புவதால்தான் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். வேறு விதமாகச் சொன்னால், யூதர்களின் பிரச்சனையும், தீண்டத்தகாதோரின் பிரச்சனையும் – இப்பிரச்சனை மற்றவர்களால் உருவாக்கப்பட்டவை என்ற அளவில் ஒரே மாதிரியானவை என்றாலும் – சாரம்சத்தில் வெவ்வேறுவிதமானவை. யூதர்கள் தாமாகவே விரும்பி, தனித்து வாழ்கிறார்கள். தீண்டத்தகாதோர் கட்டாயமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். தீண்டாமை இம்மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது; இம்மக்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல.''

– டாக்டர் அம்பேத்கர்,

பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 3

Pin It