அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைச் சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்? இதைப் பேசுவதும் எழுதுவதும் வெட்டி வேலையா? அல்லது இதுவும் ஒரு விளம்பரத்திற்கான அடையாள வேலையா? இன்று இதைப் பேசினாலும் எழுதினாலும் கூட விருதும் பாராட்டும் கிடைக்கும் நிலை உள்ளது. ஒவ்வொருவரின் சாதாரணத் கடமைகள் கூட சாதனைகளாக பேசப்படும் காலம் இது.
உணவிற்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் வலியில்லாத இன்னும் எழுத்தறிவே பெறாத 30 சதவீத மக்களால் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பேச முடியாது. எழுத முடியாது. ஊரில் உள்ள அரசாங்க பள்ளிக்கூடத்தில் என்ன நடக்கிறது என்பது கூட இவர்களுக்ககுத் தெரியாது. தனியார் பள்ளி மஞ்சள் நிற வாகனங்கள் ஏன் ஊருக்குள் வந்தன என்பதும் தெரியாது.
ஆனால், உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை பேசத் தெரிந்தவர்களும் அதிகாரப் பதவிகளைப் பெற்றவர்களும் அரசாங்க வேலை பெற்று மதிப்பையும் பொருளாதார வளத்தையும் பெற்றவர்களும் கூட, அவரவர் ஊரில் உள்ள அவரவர் படித்த அரசு பள்ளிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. விதிவிலக்காக ஒரு சிலர் இருப்பதால் எங்காவது ஒன்றிரண்டு அரசுப் பள்ளிகள் பேர் சொல்லும் பள்ளிகளாக உள்ளன. குறைகள் இல்லாத பள்ளிகளாகக் காட்சியளிக்கின்றன.கடந்த 40 ஆண்டுகளில், பள்ளிகளை நடத்துவது புதிய வகையான வணிகத் தொழிலாக மாறியது. வசதியானவர்கள் கல்வித்தந்தைகளாக மாறினார்கள். அதிகாரத்தில் இருந்தவர்களும் கல்வி வணிகத் தொழிலில் கூட்டாளிகள் ஆனார்கள். தற்போது தனியார் பள்ளிகள் வசதியானவர்களை முற்றிலுமாக ஈர்த்துக் கொண்டன. இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் அரசாங்க வேலையில் இருப்பவர்களும் விதிவிலக்கல்ல.
சாதிய அடுக்கில் கீழ் இருந்தும் பொருளாதாரத்தில் சிறிதளவு வளர்ச்சியை பெற்றவர்களையும் தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொண்டன. இதுவும் ஒரு ஜனநாயக வளர்ச்சி தான் என்ற அளவில் தனியார் கல்வி நிறுவனங்களை ஏற்றுக் கொள்ளலாம். கல்வி வணிகச் சுரண்டலுக்கு எந்த மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்ல.
நாளொன்றுக்கு 500 ரூபாய் வருமானத்திற்கு கூட வழியில்லாதவர்கள் மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 இல் 4 பேர் உள்ளனர். இவர்களுக்காக இலவச, பொதுப் பள்ளிகளை நடத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது. ஏழைகள் சொந்த ஊரை விட்டு குடி பெயர்ந்து விட்ட ஊர்களில் அரசுப் பள்ளிகள் பூட்டப்பட்டு விட்டன. அதையும் சில இடங்களில் பார்க்கிறோம்.
எப்படியோ, எழுத்தறிவு விகிதம் உயர்ந்து இன்று உயர்கல்வி வாய்ப்புகளையும் அரசு வேலை வாய்ப்புகளையும் பெறுவதில் மிகப்பெரிய போட்டி உருவாகிவிட்டது. இதனால் உயர்கல்வி சந்தையும் சிறப்பாக இயங்குகிறது. அரசாங்க வேலைகளை விலைக்கு விற்பவர்கள் அரசாங்க அதிகாரத்திற்கு வந்துவிட்டதால் அரசாங்க வேலைகளையும் விலை கொடுத்து வாங்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அரசாங்கப் போக்குவரத்து நடத்துனர், ஓட்டுனர் பணியிடங்கள் கூட விலைக்கு விற்கப்பட்டதை நாம் அறிவோம். வேலைக்காக காத்திருப்பவர்களை விட பயிற்சி மையங்கள் என்ற பெயரில் உள்ள சில இடைத்தரகர்கள் அரசாங்கத்தின் வேலை நியமன அறிவிப்புகளுக்காக காத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
அரசுப் பள்ளிகள் எப்படியோ 50 ஆண்டுகாலம் தப்பித்தவறி படித்தவர்களுக்கு ஆசிரியர் வேலையும் எழுத்தர் வேலையும் அதிகாரி வேலையும் கொடுத்து வாழ்வளித்தது. பொதுக் கல்வி முறையால் உருவான அரசாங்க வேலை வாய்ப்புகளால் சமூக இட ஒதுக்கீட்டின் பயன்களையும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள் பெறுவதற்கும் அரசாங்கம் நடத்திய இலவசப் பொதுப் பள்ளிகள் வாய்ப்பளித்துள்ளன. ஆனால் இது போன்ற வாய்ப்புகளும் இனி கானல் நீராக மாறும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.
தற்போதுள்ள நிலையில் ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் கிடைக்கச் செய்ய தொடக்கப் பள்ளிகளில் குறைந்தது பள்ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவையுள்ளது. இதன் மூலம் ஈராசிரியர் பள்ளிகளை மூன்று ஆசிரியர் பள்ளிகளாக மாற்ற முடியும். எழுத்தறிவுத் தரம் மேம்பட வழி கிடைக்கும்.
ஆனால், ஓராண்டுக்கு முன்பு 6000 இடைநிலை ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளுக்கு நியமிக்க உள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால் 1500 ஆசிரியர்களை மட்டுமே ஓராண்டு கடந்த பிறகு பிறகு நியமிக்க உள்ளதாகத் தெரிகிறது. அரசுக்கு நிதிச் சுமை உள்ளதால் வேறு வழி இல்லை என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். இதுதான் விடுதலைக்குப் பிறகு 75 ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி!
மொத்தச் சீரழிவுக்கும் காரணங்கள் என்ன? தீர்வுகள் என்ன? என்று அக்கறை கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லா குடிமக்களுக்கும் உள்ளது. இதில் ஒரு அங்கமாகவே அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அடங்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளை விட்டால் ஏழைகளுக்கு கல்விக்கு வேறு வழியில்லை. அரசுப் பள்ளிகளை இனி ஏழைப் பெற்றோர்கள் மூலம் தான் காப்பாற்ற முடியும். அதற்கான வழி தான் பள்ளி மேலாண்மைக் குழு. கல்வி உரிமைச் சட்டம் 2009, பெற்றோர்களுக்கு அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தில், அன்றாடச் செயல்பாடுகளில் சட்டப்படியாக பங்கேற்பு உரிமையை வழங்கியுள்ளது. இந்த உரிமை தங்களுடைய குழந்தைகளின் கல்வி நலனில் பெற்றோர்களும் பங்காற்றுவதற்கான உரிமை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் கல்வி நலன் அரசு பள்ளிகளின் நலனோடு இணைந்தது என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனங்களிலும் தற்காலிக ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர் நியமனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் நடைபெறத் தொடங்கியுள்ளன. சில எதிர்ப்புகளின் காரணமாக தனியார் வேலை அமர்வு முறை அரசு பள்ளி ஆசிரியர் நியமனங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இணக்கமாக இயங்கினால் குழந்தைகளின் கல்வி நலனை மட்டுமல்லாமல் ஆசிரியர் நியமனங்களில் தற்காலிகம், தொகுப்பபூதியம், தனியார் வேலை அமர்வு போன்ற ஆபத்துகள் உருவாகாமல் தடுக்க முடியும். ஆசிரியர் இயக்கங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசுப் பள்ளிகளை பாதுகாப்பதற்கு உரிய வழிகளை பெற்றோர்களுடன் கரம் கோர்த்து உரையாட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவினர் சந்திப்புகள் அரசாணையில் உள்ளது போல குறைந்தது மாதம் ஒருமுறை மட்டுமல்ல, தேவை ஏற்படும் போதெல்லாம் நடைபெற வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து பொதுக் கல்வியை பாதுகாப்பதற்கு அன்றாடம் உரையாட வேண்டும்.
இது நடந்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளின் நலன், ஏழைக் குழந்தைகளின் நலன் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நலன் எல்லாவற்றையும் பாதுகாக்க முடியும்.
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு