எம்.சி.ராஜாவின் கண்ணோட்டத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம், டாக்டர் அம்பேத்கரை மிகவும் கவலைக்குள்ளாக்கியது என்பது உண்மையே.லோதியான் குழுவின் தீர்ப்பும் அவருக்கு அவ்வளவு சாதகமானதாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் இது ஒரு முறை ஏற்பட்ட தருணம் என்று அவர் நினைத்தார். எனவே, அவர் தன்னாலானவற்றை செய்வது என்றும் முடிவு செய்தார். லண்டனில் தனது இருப்பு, தனது கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் என்று அவர் நம்பிக்கையுடனிருந்தார். லண்டனுக்குச் செல்லும் வழியில், நாட்டுக்கு எழுதிய கடிதங்களில், தனது அச்சகத்தின் பாதுகாப்பு பற்றி வேதனைமிக்க கவலை தெரிவித்தார். காங்கிரஸ் முகாமைச் சேர்ந்த, சிந்தனையற்ற சாதி இந்துக்களால் அது எரிக்கப்பட்டுவிடுமோ என்றும் அவர் அச்சம் கொண்டார்.

ஒரு புதிய அறையை ஏற்பாடு செய்யும் படியும், புதிய நூல்கள் அடங்கிய பெட்டிகளை அகற்றும்படியும் அல்லது அவற்றைப் பாதுகாப்பான வேறிடத்தில் வைக்கும்படி யும் சிவதர்க்கருக்கு அவர் ஆலோசனை கூறினார். தனது புத்தகங்களின் பாதுகாப்பு பற்றிய சிந்தனை அவரைத் தொடர்ந்து அலைக்கழித்து வந்தது. 1932, சூன் 7இல் டாக்டர் அம்பேத்கர் லண்டன் சென்றடைந்தார். தனது பணித் திட்டம் தொடர்பாக, அவர் ஒரு வார காலத்தில் ஒவ்வொரு பெரிய பிரிட்டிஷ் அதிகாரியையும் அனைத்து கேபினட் அமைச்சர்களையும் சந்தித்து, தனது வாதத்தை முழு ஆற்றலுடன் எடுத்துரைத்தார். தட்டச்சு செய்யப்பட்ட 22 பக்கங்களைக் கொண்ட ஒரு மனுவை, அவர் பிரிட்டிஷ் அமைச்சரவையிடம் அளித்தார். ஆனால், அவருடைய முயற்சிகளின் பலன் குறித்து அவரால் அப்பொழுது எதுவும் கூற முடியவில்லை.

ambedkar_400விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மிகவும் உயர் மட்டத்தில் முடிவுகள் எடுக்கப் படுகின்றன. பம்பாய், சென்னை மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் தனித் தொகுதிகளைப் பெறுவார்கள் என்று ஊகிக்கப்படுகிறது. சூன் 14 ஆம் தேதிக்குள், தனது லட்சியத்தை அடைவதற்கு சாத்தியமான அனைத்தையும் அவர் செய்து விட்டதால், அவர் நாடு திரும்ப விரும்பினார். ஆனால், அவருடைய ஆதரவாளர்களில் சிலர், அவர் அங்கு தன் இருப்பை நீடிக்க வேண்டுமென்று விரும்பியதால், டிரெஸ்டனில் டாக்டர் மோல்லர் நடத்தி வந்த ஒரு ஜெர்மன் சானடோரியத்தில், உடல் நலம் பெறுவதற்காக மேலும் ஒரு மாதம் தங்கியிருப்பதென்று முடிவு செய்தார். அதனால், தேவைப்பட்டால் அவர் அங்கிருந்து விரைவாக லண்டனுக்குச் செல்ல முடியும். டாக்டர் அம்பேத்கருக்கு பணம் தேவைப்பட்டது. காலவரையறையின்றி அவர் அங்கு தங்க நேரிட்டதால், உடல்நலன் மற்றும் செலவுகள் பற்றி அவருக்கு கவலை ஏற்பட்டது. எனவே, அவர், சாத்தியப்படின் தனக்கு சற்று பணம் ஏற்பாடு செய்யும்படியும் சிவதர்க்கரைக் கேட்டுக் கொண்டார்.

சூலை மத்தியில், டாக்டர் அம்பேத்கரின் உடல்நலம் தேறியது. டரெஸ்டனை விட்டுப் புறப்பட்டு, பெர்லினில் ஒருவார காலம் தங்கினார். அப்பொழுது அங்கு ஹிட்லர் எழுச்சி பெற்று வந்த நிலைமை ஏற்பட்டிருந்தது. தான் வியன்னாவுக்குச் சென்று அங்கு "கங்கா' என்ற கப்பலில் நாடு திரும்புவதாக, பெர்லினில் இருந்து அவர் எழுதினார். ஆனால் இம்முறை, தனக்கு வரவேற்பு தொடர்பான சம்பிரதாய ஏற்பாடுகள் மூலம் தன்னை தொந்தரவுக்கு உள்ளாக்கக் கூடாது என்று அவர் கூறினார். டாக்டம் அம்பேத்கர் தனது மாணவப் பருவத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றபோது, அவரது புறப்பாடு மற்றும் வருகை குறித்து எவரும் கவலைப்பட்டதில்லை. ஆனால், வட்டமேசை மாநாட்டு காலத்திலிருந்து அவரது புறப்பாடு மற்றும் வருகை, அவரைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானவர்களும் பத்திரிகையாளர்களும் பொது வழியனுப்பு மற்றும் வரவேற்புகளை ஏற்பாடு செய்யும் சூழல் உருவானது. டாக்டர் அம்பேத்கர், ஆகஸ்டு 17இல் பம்பாய் வந்து சேர்ந்தார்.

வகுப்புவாரிப் பிரச்சினை மீதான பிரிட்டிஷ் பிரதமரின் முடிவு, 1932 ஆகஸ்டு 17இல் அறிவிக்கப்பட்டது. தீண்டத்தகாதவர்கள் தொடர்பான முடிவின் பகுதி கீழே தரப்படுகிறது :

மாட்சிமை பொருந்திய மன்னர் அரசின் வகுப்புப் பிரச்சனை பற்றிய முடிவு - 1932 டிசம்பர் 1 ஆம் தேதியன்று, வட்டமேசை மாநாட்டின் இரண்டாவது அமர்வின் முடிவில், மாட்சிமை பொருந்திய மன்னராட்சியின் சார்பில், பிரதமர் வெளியிட்ட அறிக்கை. இது பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் உடனடியாக வரவேற்பைப் பெற்றது.

1. வகுப்புப் பிரச்சினைகளில் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் உடன்பாட்டை எட்டுவதற்கு, இந்தியாவிலுள்ள சமூகங்களால் முடியாமல் போனால் மற்றும் இதற்குத் தீர்வு காண்பதற்கு மாநாடும் தவறியுள்ள நிலையில், அதன் காரணமாக இந்தியாவின் அரசியல் கூட்ட ரீதியான முன்னேற்றம் தவறிப் போகக் கூடாது என்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி உறுதி பூண்டுள்ள நிலையில், ஒரு தற்காலிகத் திட்டத்தை வகுத்து, அதைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த முட்டுக்கட்டையை அவர்கள் அகற்றுவார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டது.

2. மார்ச் 19 அன்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி, சமூகங்கள் உடன்பாடு காண்பதற்கு தொடர்ந்து தோல்வியடைந்து வருவதானது, ஒரு புதிய அரசியல் சாசனத்தை வகுப்பதற்கான திட்டங்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் எழுகின்ற சிரமமான மற்றும் கருத்து வேறுபாடுகளுக்குரிய பிரச்சினைகளை கவனமாக மறு ஆய்வு செய் வதில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். புதிய அரசியல் சட்டத்தின் கீழுள்ள அம்சங்களிலாவது ஒரு முடிவு இல்லாமல், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் மேற்கொண்டு முன்னேற்றம் சாத்தியமில்லை என்று அவர்கள் இப்பொழுது கருதுகின்றனர்.

3. எனவே, அதற்கேற்ப, உரிய காலத்தில் நாடாளுமன்றத்தின் முன் அளிக்கப்படவிருக்கிறது. இந்திய அரசியல் சாசனம் தொடர்புடைய அறிவிக்கைகளில் கீழே வகுத்தளிக்கப்பட்டுள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிகளும் அவற்றில் அடங்கும் என்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம், மாகாண சட்டப் பேரவைகளில் பிரிட்டிஷ் இந்திய சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்வது மட்டுமேயாகும். மத்திய சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவத்திற்கான ஆலோசனை கீழே பத்தி 20இல் கொடுக்கப்பட்டுள்ள காரணத்திற்காக ஒத்திவைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கத்தை ஒரு வரம்புக்குட்படுத்துவதால், அரசியல் சாசனத்தை வகுப்பதற்கு சிறுபான்மையினரின் வேறுபல பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணரவில்லை என்று பொருளாகாது. மாறாக, இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு காரணம், பிரதிநிதித்துவத்தின் வழிமுறை மற்றும் விகிதாசாரங்கள் என்ற அடிப்படையில் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டு விட்டால், தேவைப்படும் பரிசீலனை செய்யப்படாத பிற வகுப்புவாரிப் பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு நடைமுறை உடன்பாட்டுக்கு வருவதற்கு சமூகங்களுக்கே சாத்தியமாகக் கூடும் என்பதுதான்.

4. தங்களுடைய முடிவை மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்படுகின்ற எந்த பேச்சுவார்த்தைகளுக்கும் தாங்கள் உடந்தையாக இருக்க முடியாது என்று மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி விரும்புகிறது; மற்றும் பாதிக்கப்பட்ட எல்லா தரப்புகளாலும் ஆதரிக்கப்படாத, அதை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த விண்ணப்பத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கு, மாட்சிமை தங்கிய மன்னராட்சி தயாராக இருக்காது. ஆனால், மகிழ்ச்சிகரமான முறையில் ஓர் ஒன்றுபட்ட உடன்பாடு ஏற்படுமேயானால், மன்னராட்சி அதற்கு எதிராக எந்தக் கதவையும் மூடாது என்று மிகவும் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, ஒரு புதிய இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னால், தொடர்புடைய சமூகங்கள், கவர்னர்களின் மாகாணங்களில் ஏதாவது ஒன்றுக்கு அல்லது அதற்கு மேற்பட்டவைகளுக்கு, அல்லது பிரிட்டிஷ் இந்தியா முழுமைக்கும் ஒரு நடைமுறை சாத்தியமான மாற்றுத் திட்டத்திற்கு பரஸ்பரம் உடன்பட்டுள்ளனர் என்று திருப்தியடைந்தால், தற்பொழுது வகுத்தளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி அவர்கள் நாடாளுமன்றத்திற்குப் பரிந்துரை செய்வதற்குத் தயாராக இருப்பார்கள்.

5. வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உறுப்பினர்கள், ஒரு பொதுத் தொகுதியில் வாக்களிப்பார்கள். ஒரு நீண்ட காலத்திற்கு இந்த வர்க்கங்கள், இம்முறையினால் மட்டுமே சட்டப் பேரவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறுவது சாத்தியமாகாது என்பதõல், அட்டவணையில் காட்டியிருப்பது போன்று, பல சிறப்பு இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கி வழங்கப்படும். இந்த இடங்கள் சிறப்புத் தொகுதிகளிலிருந்தான தேர்தல் மூலம் நிறைவு செய்யப்படும். இதில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள "தாழ்த்தப்பட்ட வர்க்கங்களை' சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பார்கள். அத்தகைய ஒரு சிறப்புத் தொகுதியில் வாக்களிக்கும் எந்த நபரும், மேலே குறிப்பிட்டது போன்று, ஒரு பொதுத் தொகுதியில் வாக்களிக்கவும் தகுதி பெற்றிருப்பார். தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் மிகவும் அதிக அளவில் உள்ள, தேர்வு செய்யப்பட்ட பிரதேசங்களில் இந்தத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது நோக்கமாகும். ஆனால், சென்னையைத் தவிர அவை மாகாணத்தின் முழு பரப்பையும் தழுவியதாக இருக்கக் கூடாது.

வங்காளத்தில், சில பொதுத் தொகுதிகளில், வாக்காளர்களில் பெரும்பான்மையோர் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. எனவே, அதன்படி, மேற்கொண்டு புலனாய்வு நிலுவையில் இருக்கும் சூழலில், அந்த மாகாணத்தில் சிறப்பு தாழ்த்தப்பட்ட வர்க்கத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை. வங்காள சட்டப் பேரவையில் தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் 10 இடங்களுக்கு குறைவில்லாமல் பெற வேண்டும் என்பது நோக்கமாகும்.

ஒவ்வொரு மாகாணத்திலும் சிறப்பு தாழ்த்தப்பட்ட வர்க்கத் தொகுதிகளில் வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் (தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தால்) பற்றிய துல்லியமான விவரம் இறுதியாக இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இது, ஒரு விதியாக, வாக்குரிமைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பொதுவான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இருப்பினும் வட இந்தியாவில் சில மாகாணங்களில், அங்குள்ள சிறப்பு நிலைமைகளுக்கு தீண்டாமை பற்றிய பொதுவான கோட்பாட்டைப் பயன்படுத்துவது, சில அம்சங்களில் பொருத்தமற்றதாகப் போகும் மாநிலங்களில் திருத்தம் தேவைப்படும்.

இந்த சிறப்பு தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் தேவைப்படும் என்று மாட்சிமை தங்கிய மன்னராட்சி கருதவில்லை. குறிப்பிட்டுள்ள வாக்காளர் பட்டியல் மறு ஆய்வுக்கான பொது அதிகாரங்களின் கீழ் முன்னதாக அவை ரத்து செய்யப்படாமலிருந்திருந்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவை முடிவுக்கு வரும் என்று அரசியல் சாசனத்தில் வகை செய்யப்படும் என்று அவர்கள் கருதுகின்றனர். இந்தத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு மாகாண சட்டசபைகளில் தனி இடங்களும், இரண்டு வாக்குகள் அளிக் கும் உரிமையும் வழங்கப்பட்டன. அதன்படி அவர்கள் தங்களுடைய சொந்தப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றும் பொதுத் தொகுதிகளிலும் வாக்களிக்கலாம்.

- வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)

Pin It