ஆண்டுகள்

பல்லாண்டுகள் ஆகியும்

மாண்டுபோகா உன்

மமதை

என்னமாய்ச் சிரிக்கிறது

கண்களில்...

டேய் போட்டுப்

பேசும் உன் திமிர்

இதழோரம்

பிதுங்கும்

இளக்காரம்

சொல்லில் தெறிக்கும்

எள்ளல்

 காலங்காலமாய்க்

காயப்படுத்தியது என்னவோ

உண்மைதான்

இப்போது

எல்லாமே தலைகீழ்

வெள்ளையாய்ச்

சட்டை போட்டாலே

நீ வீரனா?

உன்

தனிக்குவளை

தர்மம்

அம்மணமாய்

அவிழ்ந்து சிரிக்கிறதே!

 என்ன பெரிதாய்க்

கிழிக்கிறது உன் குலம்

நீ சாதிச் சாக்கடையில்

நாறுகின்ற மலம்

 சேரன்

சோழன்

பாண்டியன்

பல்லவன்

இப்படி

ஆண்டவரிசை என

அடுக்குகிறாய்...

இந்தப் பெருமை

எதற்குக் காணும்?

இதோ

ரூபாய்க்குக்

கிலோ அரிசி

பங்கீட்டுக் கடையின்

நீண்ட வரிசையில்

நீயும் நானும்!

– தமிழேந்தி

Pin It