dalit_oldmanஜாதியுடன் போரிட்ட முன்வரிசை வீரர்
அவர் பிணங்களின் மீதும்
குருதிக் கறையின் மீதும் நின்று
இன்று நாங்கள் களத்தில் முன்னேறுகிறோம்
நாளை எம் உடல்களின் மேல்நின்று
எம் பிள்ளைகள் போரிடலாம்
எவ்வளவு உயரமாயினும் சரி
எங்கள் உடல்களை அடுக்கியேறி
விடுதலையைப் பறிப்போம்

எங்கள் தந்தையர்
எமது மந்தையின் முதல் ஈற்றுக் குட்டிகள்
அவர்களே எமக்குப் பாய்ச்சலை கற்றுத்தந்தனர்

மனிதக் காட்டை சமமாக்கி
எம்மை இம்மண்ணில் ஊன்றியது
எங்கள் தந்தையரே

எங்கள் தந்தையர்
உள்ளங்கை ரேகைகளில்
பூமியின் வரைபடத்தை வைத்திருந்தனர்
அவற்றைத் தொட்டுணர்ந்தே திசையறிந்தோம்

அவர்தம் விழிகளால்
பார்க்கப் பழகினோம்

எங்கள் தந்தையரே எமக்கு
நாவைப் பொருத்தினர்
அதிகாரம் திணித்த மவுனத்தை நொறுக்கியது
அவர் முதல் குரல்
இன்றெமது நாவின் பேச்சொலி
நேற்றவர் பேச்சின் எதிரொலி

சொல்லின் சுவையை அறியத்தந்தது
எங்கள் தந்தையரே
எங்களை அருகமர்த்தி
கறித்துண்டுகளின் சுவையைக் காட்டித் தந்தது போல்
அவரதைச் செய்தனர்

அகரம் வைத்திருக்கும் அதிகாரத்தை
சொன்னது எங்கள் தந்தையரே
எழுத்துக் கோடுகளின் வளைவுகளை
தட்டி நிமிர்த்தினால்
அந்த வரியின் வழியே உலகம் சுற்றலாம்
என்ற ரகசியத்தை போதித்ததும் அவர்கள்தான்

எங்கள் தந்தையரின்
உயிரின் பதியம் நாங்கள்
முதிர்ந்த இலையொன்றைப் போல்
உதிரும் அவர்கள்
எங்கள் நிலத்தில் கலக்கின்றனர்
அந்த உரம் பெற்று நாளை
எம் வேர்களிலிருந்து
வலிய காட்டு மரத்தின் கன்றுகள் முளைக்கும்

எங்கள் தந்தையர்
சுவாசித்த காற்று இது
அவர் எச்சில் படுத்திய உணவு
அவர் மகிழ்வுற்றிருந்த மண்
இப்பிரபஞ்சத்திலிருந்த அவர்கள்
இன்று பிரபஞ்சமாக இருக்கின்றனர்
நாங்கள் அதனுள்ளே இருக்கிறோம்
அவ்வாறெனில்
அவர் எம்மை மீண்டும்
கருத்தரித்திருக்கின்றார்

எதிரிகள் அவர்களை அரக்கரென
அழைத்ததாய் எங்கள் தந்தையர் கூறுவர்
அது பொருத்தமானதுதான்
எங்கள் தந்தையர் நடத்திய
எண்ணற்ற போர்களில் அவர் சிந்திய
உயிர்த்துளியிலிருந்து பிறப்பெடுத்தோம்
குருதித் துளியிலிருந்து பிறப்பெடுத்தோம்
வியர்வைத் துளியிலிருந்து பிறப்பெடுத்தோம்
எங்கள் தந்தையரைப் புதைத்திட்ட
மண்ணின் துகள்களிலிருந்தும்
இனி பிறப்பெடுப்போம்.

(குறிப்பு: தோழர் கம்பீரனின் தந்தையர் திரு.பழனி அவர்களின் நினைவாக...)

- அழகிய பெரியவன்

Pin It