இலக்கிய ‘மேலாண்மை'யோடு

பொன்னுசாமி எழுதுகிறார்

இந்திய ‘இறையாண்மை' காக்க

நம் சிதம்பரம் போராடுகிறார்

வெள்ளாமை பெருக்கிய

தம் வேளாள புளுத்திகளுக்கு

‘வேளாண்மை' விருது வழங்கி

பொள்ளாச்சி மகாலிங்கம் மகிழ்கிறார்

பள்ளிப் பருவத்திலேயே

‘நாவாண்மை'யோடு

கலைஞர் திகழ்ந்ததாய்

பேராசிரியர் பறைசாற்றுகிறார்

ஈழத்தமிழர்

பிணங்களின் மேல்

இந்திய – இலங்கை ‘வல்லாண்மை'

நிறுவியதை ‘நாம் தமிழர்' சீமான்

ஓயாமல் கதறுகிறார்

அமெரிக்க ‘நாட்டா(ண்)மை'

எங்களிடம் செல்லாதென

இடதுசாரி – நக்சல்பாரி

எழுதி, எழுதி மாய்கிறார்

‘முகவாண்மை'யை

திறந்து வைத்து

தமிழ்த் தேசிய மாவீரர்

பேருரையாற்றிப் போகிறார்

இப்படி பிறப்பொக்கிய

திருநாளாய்

‘பேராண்மை' பிதுக்கித் தள்ளும்

‘உனது மொழி' மேல்

எனக்கேன் பற்றும் – கிற்றும்

– சு.ம. காட்டேரி

Pin It