சிறுபான்மையினர் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்பது, இங்கே கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை எவ்வகையிலும் பறிக்கலாகாது என்றும், அவர்தம் நிர்வாகங்களில் தலையிடுவது அரசமைப்புச் சட்டப்படி தவறு என்றும், வெள்ளம் வருவதற்கு முன்பே அணை போடுவது போல - விவாதம் தொடங்குவதற்கு முன்பே சொல்லைப் பிடுங்கும் வேலை நடைபெறுகிறது.

தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கும் காலம் இது. அந்த கோரிக்கைக்கான அத்தனை நியாயங்களும் இங்கே இருக்கின்றன. இந்து சாதிய சமூகத்தில் நிலம், தொழில்கள், பதவி, அதிகாரம் அனைத்துமே கடந்த பலநூறு ஆண்டுகளாக ஆதிக்க சாதியினரிடம் தான் இருந்தன. இன்றளவும் நிலைமை மாறிவிடவில்லை. பொருளாதாரத்தையும், நிலங்களையும், அதிகாரங்களையும் ஆதிக்க சாதியினரே வைத்துக் கொண்டு, அதிகாரம் அற்ற அரசிடம் போய் கேள் என்றால் சரியா என்று கேட்கிறார்கள் தலித் மக்கள்.

Minority
வேறு வகையில் சொல்வதென்றால், 90 சதவிகித பணியிடங்களை தனியார்கள் வைத்துக் கொண்டு, 10 சதவிகித வேலை வாய்ப்புகளை மட்டுமே வைத்திருக்கும் அரசிடம் போய் கேள் என்றால், தலித்துகள் என்ன வெறும் நாக்கையா வழித்துக் கொண்டிருப்பது? சரி அப்படியும் கூட நீயே யாரையும் எதிர்பார்க்காமல் நிலம், பணம், கட்டுமானம் என்று பார்த்துக் கொண்டாலும் தாழ்வில்லை. நிலத்தை அரசு தருகிறது; நிதியையும் அதுவே தருகிறது; மின்சாரம், தண்ணீர் என்று அனைத்து அடிப்படைகளையும் அரசே தருகிறது என்றால், எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு எங்களிடம் வராதே என்று தலித்தைப் பார்த்து சொல்வது என்ன நியாயம் என்பதே தலித்துகளின் கேள்வி.

இதே வாதத்தினை நாம் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருத்தலாம். குருதிப் பிரிவு வேறு, தசையின் தன்மை வேறு என்றெல்லாம் அடம்பிடிக்காமல் - இக்கருத்து அவர்களுக்கும் 100 சதவிகிதம் பொருந்தும் என்பதே உண்மையிலும் உண்மை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகள் அரசு மானியங்களைப் பல வகைகளில் பெற்று வந்திருக்கின்றன. அன்றைக்கு இருந்த எல்லா சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கும் அரசு பாதி விலையில் நிலம் கொடுத்தது. இதற்காக 1894 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்படி, பொது நன்மை என காரணம் காட்டி வெள்ளை அரசால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பின்னர் அந்நிலங்கள் சிறுபான்மையினர் நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் பாதி விலைக்குத் தரப்பட்டன. இதனோடு அரசு அக்கல்லூரிகளையும், கல்வி நிறுவனங்களையும் நடத்த நிதிக் கொடையையும் (Grant) அளித்தது.

அரசு இதோடு நின்றுவிடவில்லை. கட்டடம் கட்டவும் மானியம் அளித்தது. எடுத்துக்காட்டாக, வேலூரில் இயங்கும் ஊரிஸ் கல்லூரிகூட அப்படி கட்டப்பட்டதுதான்! அன்று சென்னை ராஜதானிக்கென ‘சென்னை கல்வி விதி' (Madras Educational Code) என்று இருந்தது. அதன் அடிப்படையில் ஆய்வுக்கூடங்கள், நூலகம் ஆகியவற்றைக் கட்டவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் அரசு மானியம் அளித்தது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் அரசு இத்தகைய மானியங்களை சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத கல்வி நிறுவனங்களுக்குத் தருகிறது. எனவே தலித் மக்கள் அதில் தங்களுக்கு உரியபங்கை கேட்பது, தார்மீக அடிப்படையில் நியாயமானதாகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 30(1)இன் கீழ் சிறுபான்மையினரின் உரிமைகளும், கல்வி நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன. அப்பிரிவு சில அடிப்படை உரிமைகளை அவர்களுக்கு வழங்குகிறது. அதே அரசமைப்புச்சட்டம் பிரிவு 16(4)இன்படி சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களான தலித் மக்களுக்கு பணி நியமனம் பெறுவதை அடிப்படை உரிமையாக்குகிறது. அப்படி என்றால், சிறுபான்மையினரின் உரிமைகள் தலித் மக்களின் உரிமைகளை எந்த வகையில் இல்லாததாக்கும் அல்லது மறுக்கும்? ஒருவருடைய அடிப்படை உரிமையை காரணம் காட்டி பிறிதொருவரின் அடிப்படை உரிமையை மறுப்பதும், இல்லாததாக்குவதும் ஜனநாயக விரோதமானதாகும்; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும்.

இந்தியா முழுவதிலும் இருக்கும் இந்து மதக் கோவில்களின் கர்ப்பக் கிரகங்களில், தாங்கள் தான் நுழையவும் பூசை செய்யவும் முடியும் என்று பார்ப்பனர்கள் - தமது பாரம்பரிய உரிமையை காரணம் காட்டுகிறார்கள். இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்தில் பார்ப்பனர்களால் ‘பாரம்பரிய உரிமை' என்ற வாதமே வைக்கப்பட்டது; இன்றும் வைக்கப்படுகிறது. சிறுபான்மையினரும் அவ்வாறான அடிப்படை ‘உரிமை' என்ற நிலையை முன்னிறுத்தி, தலித் மக்களுக்கான பணி நியமன உரிமையை மறுத்து வருகின்றனர். இது தலித்துகளுக்கு எதிரான தந்திரமேயன்றி வேறென்ன?
தலித் மக்கள் இடையிலே தான் பெரும்பாலான சிறுபான்மையினரின் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அம்மக்களுக்கு தொண்டு செய்கிறோம் என்றும் அவை சொல்லிக்கொள்கின்றன.

ஆனால் அந்தத் தொண்டு என்பது கீழ்நிலையிலேயே நின்றுபோய் விடுகிறது. என்றைக்குமே பிறரை எதிர்நோக்கி இருக்கும் (Perpetual Dependence) நிலை அது. ஆண்டான் அடிமை நிலையும் கூட. அவர்களின் நிர்வாகங்களில் இருக்கும் உயர் பதவிகளுக்கு தலித்துகளை சிறுபான்மையினர் அனுமதிப்பதில்லை. கல்லூரிகளின், கல்வி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் இருக்கிறவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் இது விளங்கும். கூட்டம் சேர்க்கவும், தம்முடைய பலத்தையும் நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் தலித் மக்களையே நம்பியிருக்கும் சிறுபான்மையினரின் நிறுவனங்கள், அம்மக்களுக்குப் பதவிகளோ, பணிகளோ அளிக்காமல் கைவிட்டுவிடுகின்றன. ‘ஆன்மீக விடுதலை பெறுங்கள்; உங்களுக்கு மோட்சத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன' என்று தலித் மக்களிடம் கூறிவிட்டு, நிர்வாகத்தின் கதவுகளை மூடிக்கொள்கின்றனர். பரலோகத்திற்கு வழிகாட்டுபவர்கள் பணி நியமனத்தில் வழிகாட்டுவதில்லை; வழிவிடுவதுமில்லை. ‘ஆன்மீக அரவணைப்பு' என்று சொல்லி, அன்றாட வாழ்வில் கைவிரிப்பது அநியாயமில்லையா?

face
இந்தியா முழுமைக்கும் மதிப்பிட்டால் முஸ்லிம்களிலும், கிறித்துவர்களிலும் மதம் மாறிய தலித் மக்களே பெரும்பான்மையாக இருக்கின்றனர். ஆனால் இம்மத சிறுபான்மையினரால் நடத்தப்பட்டுவரும் கல்லூரிகளின் பெரும் பொறுப்புகளான முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர் போன்ற பதவிகளில் இம்மதங்களில் இருக்கும் பெரும்பான்மை மக்களே இல்லை! (எ.கா. சென்னை கிறித்துவக் கல்லூரியில் நீண்டகாலம் பணிபுரிந்து வந்த உலகம் போற்றும் தாவரவியல் பேராசிரியர் தயானந்தன் அவர்களுக்கு, இறுதிவரை அக்கல்லூரி முதல்வர் பதவி வழங்கப்படவே இல்லை).

பார்ப்பனர்களையும், இடை சாதி இந்துக்களையும் இப்பொறுப்புகளில் அமர வைக்கும் சிறுபான்மையினர் நிர்வாகம், ஒரு தகுதி வாய்ந்த தலித்தை அங்கே வைப்பதில்லை. நாடு விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இத்தகைய தலித் விரோத போக்கைதான் கடைப்பிடித்து வருகின்றன, சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள். இது, சாதியம் அன்றி வேறென்ன? இக்கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 100 சதவிகித ஊதிய மானியத்தை அரசிடம் இருந்து இந்நிர்வாகங்கள் பெற்றுக் கொள்கின்றன. மக்களின் வரிப்பணத்திலிருந்து இப்படி கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தலித்துகளுக்கு பதவி வழங்க மறுப்பது - இந்து சாதியத்தைக் காட்டிலும் படுமோசமானது அல்லவா?

‘அரசிடம் இருந்து உதவி பெறும் தனியார் கல்லூரிகளான 160 கல்லூரிகளில், 60 கல்லூரிகள் சிறுபான்மையினரால் நடத்தப்படுபவை. இது முன்னமே நமக்குத் தெரிந்ததே. 160 கல்லூரிகளில் 9,866 விரிவுரையாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களிலே சிறுபான்மையினரின் கல்லூரிகளில் பணிபுரிகிற விரிவுரையாளர்களை மட்டும் நாம் தனியே கணக்கிட்டால் 3,992 பணியிடங்கள் வரும். இது, மொத்தத்தில் 40.5 சதவிகிதமாகும். அப்படியானால் அரசு, தனியார் கல்லூரிகளுக்கு அளித்துவரும் ஊதிய மானியத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் 40.5 சதவிகித பணத்தைப் பெற்று வருகின்றன. இவ்வாறு அரசிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதியினைப் பெறுகின்ற சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள், அதே அரசின் சட்டம் உறுதிப்படுத்தும் தலித் மற்றும் பழங்குடியினருக்கான 18+1 சதவிகிதப் பணியிடங்களை வழங்க மறுப்பது ஏன்? (பார்க்க அட்டவணை ).

Colleges

சிறுபான்மையினரின் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின் படி 751 தலித் விரிவுரையாளர்களும், 49 பழங்குடியின விரிவுரையாளர்களும் பணிபுரிய வேண்டும். ஆனால் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் 61 தலித் விரிவுரையாளர்களே பணியில் இருக்கின்றனர். இந்த 61 விரிவுரையாளர்களும்கூட, 15 கல்லூரிகளிலேதான் இருக்கின்றனர். 45 சிறுபான்மையினர் கல்லூரிகளிலே ஒரு தலித்தும் விரிவுரையாளர் பணியிடத்தில் இல்லை. எந்த ஒரு கல்லூரியிலும் பழங்குடியின விரிவுரையாளர் இல்லை.

சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களில் மட்டும் தான் இந்த நிலை நீடிக்கிறதா? அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களின் நிலை என்ன? இதைப் போன்ற கேள்விகள் இங்கே எழுவது இயல்பானதே. இக்கல்லூரிகளிலும் நிலைமைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. இவ்வகை கல்லூரிகளின் எண்ணிக்கை 100. இக்கல்லூரிகள் எவை எவை என்பதற்கு சான்றாக சில பெயர்களை மட்டும் பார்ப்போம். பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கிவிடும்!

கல்வி வள்ளல் பச்சையப்பன் கல்லூரி, திருப்பனந்தாழ் ஆதீனம் கல்லூரி, இந்து சமய அறநிலைத் துறை நடத்தும் பூம்புகார் பேரவைக் கல்லூரி, அருள்மிகு பழநியாண்டவர் மகளிர் மற்றும் ஆடவர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரி, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி (தந்தை பெரியாரால் நிறுவப்பட்டது), மேல நீதி தநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரி, ஆதித்தனார் கல்லூரி, தூத்துக்குடி காமராசர் கல்லூரி, சேலம் சாரதா கல்லூரி, மயிலம் சிறீமத் சிவஞான பாலசுவாமிகள் கல்லூரி, கோவை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரி, கரந்தை தமிழவேள் உமா மகேசுவரர் கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கல்லூரி, வேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் கல்லூரி என்று இக்கல்லூரிகளின் பட்டியல் நீள்கிறது. இக்கல்லூரிகளுக்கும் இடஒதுக்கீட்டு சட்டம் பொருந்தும்.

இந்த 100 கல்லூரிகளில் இடஒதுக்கீட்டின்படி தலித் விரிவுரையாளர்கள் 1124 பேரும், பழங்குடியின விரிவுரையாளர்கள் 62 பேரும் இருக்க வேண்டும். பழங்குடியினர் யாரும் விரிவுரையாளர்களாக இக்கல்லூரிகளில் இல்லை. தலித் விரிவுரையாளர்களாக 557 பேர்களே இருக்கின்றனர். அதாவது 49.5 சதவிகிதம், எஞ்சிய 50.5 சதவிகித தலித் பணியிடங்கள் - தலித் அல்லாதவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியிலும், பரமத்தி வேலூர் கந்தசாமி கவுண்டர் கல்லூரியிலும், சென்னை எஸ்.அய்.வி.இ.டி. கல்லூரியிலும் மட்டும் இடஒதுக்கீடு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் பாராட்டத்தகுந்த கல்லூரிகள் எனலாம். சமூக நீதி காத்த மாவீரர்களும், வீராங்கனைகளும் தி.மு.க. விலும் அ.தி.மு.க.விலும் இருக்கின்றனர். ஆனால் இதைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. தலித் மக்களின் பாதுகாவலர்கள் வாய் திறக்காமல் உள்ளனர்.

மேற்சொன்ன 160 கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,326. இதில் சிறுபான்மையினர் கல்லூரிகளின் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 2,064. இடஒதுக்கீட்டின் படி இப்பணியிடங்களில் சிறுபான்மைக் கல்லூரிகள் - 187 தலித்துகளையும், 14 பழங்குடியினரையும் நிரப்பியிருக்க வேண்டும். சிறுபான்மையினர் அல்லாத கல்லூரிகளிலோ 236 தலித்துகளையும், 32 பழங்குடிகளையும் பணியமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பிற சாதியினரைக் கொண்டே இவ்விடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் மட்டும் ஒரேயொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை நான்காம் தரப் பணியில் வைத்துள்ளனர். முருகன், வள்ளி என்கிற பழங்குடியினப் பெண்ணை கட்டிக்கொண்டான் என இவர்கள் கதை சொல்கிறார்களே, அந்தப் பற்றுக்காகத்தான் இதுவோ எனத் தெரியவில்லை.

எழுத்தர், மேலாளர், காசாளர் போன்ற நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களை கையாளக்கூடிய ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தலித்துகளையும், பழங்குடியினரையும் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது அப்பட்டமான சாதி வெறி என்று தெரிகிறது. இதை சுட்டிக்காட்டும்போது, ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் தலித்துகளையும் பழங்குடியினரையும் பணியமர்த்தி இருக்கிறோமே என்பார்கள் இவர்கள். பெருக்குகிறவர், துப்புரவுப் பணியாளர், அலுவலக உதவியாளர் போன்ற பணியிடங்களில் வர்ணாசிரம தர்மப்படி தலித் மற்றும் பழங்குடி மக்களை நிரப்பியிருப்பது பதிலாக சொல்லப்படும். சிறுபான்மையினரின் கல்லூரிகளில் சிறுபான்மையினருக்கு மட்டுமே வேலை என்ற நிலை - மதச்சார்பின்மைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும் சவாலினை ஏற்படுத்தக்கூடியதும் ஊறுவிளைவிக்கக்கூடியதும் ஆகும்.

அரசமைப்புச் சட்டம் எடுத்துள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவநிலை என்கிற இரு கண்களைப் போன்ற ஜனநாயக நிலைப்பாட்டுக்கு எதிராக, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் "சனாதனம்' எனும் பழமைவாதக் கருத்து நிலையை எடுக்கின்றன. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகாமல் நீண்ட நெடுங்காலமாக நடந்தும் வருகின்றன. சாதிய பாகுபாட்டை அவமான உணர்வு ஏதும் இன்றி கடைப்பிடிக்கின்றன. இந்நிலையில் இவர்கள் தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்று சொல்வதில் பொருள் எதுவும் இல்லை.

சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மை மக்களின் நலன் களுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அந்த நோக்கமாவது நிறைவேற்றப்படுகிறதா என்றால், அதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை சமூகத்து மாணவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இங்கு சிறுபான்மையல்லாத சாதி இந்து மாணவர்களே அதிகமாக உள்ளனர்.

அரசுக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் செய்கின்ற அதே வேலையை செய்வதற்கு - சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்கள் என்ற தனி அமைப்புகள் எதற்கு? பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்தில் அமர்ந்து கொண்டிருக்கவும் தானா? கேரளாவில் 1957ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி அரசு பதவி ஏற்றுக் கொண்டது. அந்த அரசு அப்போது "கேரள கல்விச் சட்டம் 1957' என்ற பெயரில் ஒரு சட்ட முன்வரைவை கொண்டு வந்தது. கேரள சிறுபான்மை சமூக மக்கள் இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்டமுன்வரைவு, ஆளுநரின் ஒப்புதலின்றி குடியரசுத் தலைவரின் கருத்துக்கு அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவரோ அந்த சட்ட முன்வரைவை உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அனுப்பிவிட்டார்.

இச்சட்டம் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீட்டினை வழங்க வகை செய்திருந்தது. அந்த சட்ட முன்வரைவை கவனமாக ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், தன் கருத்தை 1958 லேயே தெரிவித்திருக்கிறது. கேரள சட்ட முன்வரைவின் பிரிவு 11(2)இல் குறிப்பிடப்பட்டிருக்கிற சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் - தலித் மக்களுக்கான இட ஒதுக்கீடு, சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையை எவ்வகையிலும் பறிக்காது. அவர்களின் உரிமைக்கு இது எதிரானது அல்ல - சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் தலித் மக்களுக்கான இடஒதுக்கீடு, இப்பிரிவின்படி செல்லத்தக்கதே என்றது உச்ச நீதிமன்றம்.

சிறுபான்மையினரின் கல்வி நிலையங்களில் தலித், பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிகளை வழங்கலாம் என்று கருத்துரைத்த உச்ச நீதிமன்றத்தின் விருப்பத்தை - அதைத் தொடர்ந்த எந்த மாநில அரசுகளும், மய்ய அரசுகளும் காதில் போட்டுக் கொள்ளாமல் விட்டு விட்டன. மொத்தத்தில் சாதிமயமாக்கப்பட்டுவிட்ட சிறுபான்மையினரின் அடாவடித்தனமும், சமூக நீதிக் காவலர்களின் பொறுப்பின்மையும் அரசின் பாராமுகமும் தலித் மக்களை - சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளன.

கிறித்துவர்களின் விவிலியத்திலே ஏசு சொல்லியிருக்கும் கதைதான் நினைவுக்கு வருகிறது. லாசர் என்கிற ஒரு ஏழை, பணக்காரனின் வீட்டு வாசலில் காத்திருந்து செத்துப் போகிறான். பணக்காரனும் சாகிறான். ஏழை சொர்க்கத்துக்கும், பணக்காரன் நரகத்துக்கும் போகிறான். சொர்க்கத்தில் இருக்கும் ஏழையிடம் உதவி கேட்டு கதறுகிறான் பணக்காரன். ஏழைகளும், வறியவர்களுமாக இருக்கும் தலித்துகளே! இந்த கதையின் படி, உலகத்தில் இருக்கும் வரை எங்களிடம் கெஞ்சிக் கொண்டே இருங்கள். எல்லாவற்றையும் மேலே போன பிறகு கணக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று போதிக்கிறார்கள் சிறுபான்மையினர். அவர்களுக்குத் தெரியும், அந்தக் கதை வெறும் கதை தானென்று. தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தான் இன்னும் அது புரியவில்லை.

அவர்கள் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை உலகம் அறியும். அவர்கள் சொல்லும் இறுதித் தீர்ப்பென்பதும் மறுக்கப்பட்ட நீதி தானே!

- அடுத்த இதழிலும்
Pin It