(கடந்த இரு இதழ்களில் வெளிவந்த ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணல், இந்த இதழில் நிறைவடைகிறது)

மன்னர்கள் எவ்வளவு மோசமாக இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? ஏனென்றால் மன்னர்கள் கடவுள்களைப் போல கருதப்படுகிற நிலை இங்கு இருக்கிறது.

Sivasupramaniyan
மன்னர்கள் நிலவரி வாங்குவதில் மிகவும் மோசமாக இருந்திருக்கின்றனர். அதுமட்டுமில்லை, கட்டாய வேலை வாங்கியும் இருக்கிறார்கள். ‘விருஷ்டி' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்துதான் ‘வெட்டி' என்ற சொல் வந்திருக்கும். வீணான - பயனற்ற வேலை செய்பவர்களை இன்றுகூட ‘வெட்டி வேலை செய்பவர்' என்றுதான் சொல்லுகிறோம். இந்த வேலையினை செய்யாவிட்டால் தண்டனை உண்டு; செய்தால் கூலி இல்லை. கோயில்கள் கூட இப்படித்தான் கட்டப்பட்டிருக்கக் கூடும். காவிரிக்கரையை உயர்த்துவதற்கு இத்தகைய வேலையே வாங்கப்பட்டிருக்கிறது. கோயில்களில் வேலை செய்யாதவர்களை ‘சிவத்துரோகி' என்று கூறி தண்டனைகள் தரப்பட்டிருக்கின்றன. கோயில்களுக்கென்று இருந்த நிலங்களில் உழைக்க வேண்டும். ஆனால் கூலி இருக்காது. கடவுளிடத்தில் போய் பேரம் பேச முடியாது!

அய்ரோப்பா நாடுகளிலும் ‘உழைப்பது எல்லாம் தேவனுக்காக' என்ற கொள்கை இருந்தது. மார்டின் லூதர் கிங், புரட்சியின் போது இதை எதிர்த்தார். அப்போது கத்தோலிக்க மடங்கள், தேவாலயங்கள், குறுமடங்கள் போன்றவற்றிற்குப் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் - ஏன் பல கிராமங்களே சொந்தமாக இருந்தன. அங்கிருக்கிற மக்களிடம் ‘தேவனுக்காக உழைக்கிறீர்கள்' என்று கூறி அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது. மார்டின் லூதர் கிங் அதை எதிர்த்தார் என்பதற்காகவே மக்கள் அவரை ஆதரித்தனர். இப்படி இங்கேயும் மன்னர்கள் உழைப்பை சுரண்டியிருக்கிறார்கள். அடுத்து பாலியல் வன்முறைகள். பிறகு மநுதர்ம முறைப்படி ஆட்சி நடத்தியது. இது ஒன்றே போதும், மன்னர்கள் கொடுங்கோலர்கள் என்று சொல்வதற்கு. மநுதர்ம முறைப்படி நால்வர்ணங்கள் - அதற்கு வெளியே இருக்கக்கூடிய ‘அவர்ணர்கள்' தீண்டத்தகாதவர்கள் மீது தீண்டாமை - சோழர் காலத்தில் இறுக்கமாகி, விஜயநகர காலத்தில் முற்றுப் பெற்றது என்ற குறிப்புகள் எல்லாம் வரலாற்றில் உண்டு.

வரி வாங்குதல் மூலம் நடைபெற்ற கொடுமைகள் தனி. திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னன் 64 வகை ஊழியங்களை வைத்திருந்திருக்கிறான். ஊழியம் என்றால் வெட்டி வேலை. உப்பு ஊழியம், யானை ஊழியம், ஓலை ஊழியம் என்று பல ஊழியங்கள் உண்டு. யானை ஊழியம் என்பது யானைக்கு மட்டை வெட்டிப் போடுவது. அன்றைக்கு யாருடைய முறையோ அவர்கள் கண்டிப்பாக ஊழியத்தை செய்ய வேண்டும். இல்லை என்றால் தண்டனை உண்டு. ஆனால் வேலைக்கு ஏற்ற ஊதியமோ, ஓலைக்கு கிரயமோ தரமாட்டார்கள். ஓலை ஊழியம் என்பது ஓலையை வெட்டி எழுதுவதற்கேற்ப பதப்படுத்தி, சீவி அரசு அலுவலகங்களில் சேர்க்க வேண்டும். நேற்றைய ஓலையில் இன்று எழுத முடியாது. அன்றே தயாரித்தால்தான் எழுத முடியும்.இது ஓலை ஊழியம்.

உப்பு ஊழியம் என்பது, தாமரைக் குளத்தில் எடுக்கப்பட்ட உப்பை நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலுக்கும், கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரம் கோயிலுக்கும் கொண்டு போய் கொடுப்பது. இந்த மாதிரியான ஊழியங்களும், வெட்டி வேலைகளும், பண்பாட்டு ஒடுக்குமுறைகளும், பொருளாதார சுரண்டல்களும் மன்னராட்சியில் இருந்தன. அங்கு ஜனநாயகம் கிடையாது இல்லையா! சோழர் காலத்தில் பார்ப்பனர் - வேளாளர் கூட்டாக இருந்து வேலை செய்திருக்கின்றனர். பரஸ்பரம் ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வது. இந்த வரலாற்றையெல்லாம் வெளிப்படுத்தினால், தங்களுக்கு ஆபத்து என்பதால்தான் ஆதிக்க சாதியினர் - மன்னர்கள் கம்பீரமானவர்கள், போர் புரிபவர்கள், "ஆண்மை' மிக்கவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களை அடிமைப்படுத்தியவர்கள்; சுரண்டலை நிகழ்த்தியவர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் பவுத்தம் சார்ந்த கல்வெட்டுகள் எந்த நிலையில் உள்ளன?

பவுத்தம் சார்ந்த கல்வெட்டுகள் எவ்வளவு இருக்கிறது என்று தெரியவில்லை. ஓர் எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால், திருமலை என்று ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி. அவர் ஓர் ஆய்வாளர். நீலகண்ட சாஸ்திரியின் மாணவர். தனிப்பட்ட முறையில் நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். சீர்காழிக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு கல்வெட்டு, அது படியெடுக்கப்பட்டிருக்கிறதே தவிர வெளியிடப்படவில்லை. ஓர். அய்.ஏ.எஸ். அலுவலர் என்ற நிலையில் அவரால் அதை ஆய்வு செய்ய முடிந்தது. மைசூருக்குச் சென்று வெளியிடப்படாத அந்த கல்வெட்டினை ஆய்வு செய்கிறார். அதிலும் அடிமைகள் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

வரி வாங்கும்போது வீடுகளுக்குச் சென்று கடுமையான வசவு சொற்களைப் பயன்படுத்தி வரி வாங்கப்பட்டிருக்கிறது. அதற்கு ‘அரவு தண்டம்' என்று பெயர். ஆனால் பார்ப்பனர் மற்றும் வேளாளர் வீடுகளில் அரவு தண்டம் செய்யக்கூடாது. வரி கட்டவில்லையென்றால் கேட்கலாமே ஒழிய, வசவு சொற்களைப் பயன்படுத்தி அதை செய்யக்கூடாது என்று குறிப்பு இருக்கிறது. இது ஒரு முக்கியமான கல்வெட்டு. அது இன்றுவரை வெளியே வரவில்லை. இதைப்போல எத்தனையோ வெளிவராத கல்வெட்டுகள் இருக்கின்றன.

நாகப்பட்டிணத்தில் பவுத்த வியாரத்தில் இருந்த கல்வெட்டுகள் வெளிவந்திருக்கின்றன. ஓர் உண்மை என்னவென்றால், பவுத்த வியாரமாக இருந்த அது சைவக் கோயிலாகி இருக்கிறது. இது கூட கல்வெட்டிலிருந்துதான் தெரிகிறது. இதிலிருந்த பவுத்த வியாரங்கள் சைவக்கோயில்களாக மாற்றப்பட்டிருக்கின்றன என்ற செய்தி நமக்கு கிடைக்கின்றது. மயிலை சீனிவேங்கடசாமி எழுதுகிறபோது, ஆத்தூரில் அது சமணமா, பவுத்தமா என்று தெரியவில்லை. வண்ணார் துணி துவைப்பதற்காக சமண, பவுத்த உருவம் உள்ள கல்லைப் பயன்படுத்தினர் என்கிறார். இது மாதிரி நமக்கு நிறைய இருக்கின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் வடக்கே ஒரு கிராமத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியது. வகுப்பு எடுக்கச் சென்ற போது அங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் அழகிய பெரிய அற்புதமான ஒரு தீர்த்தங்கர் சிலையை கண்டுபிடித்திருக்கின்றனர் என்பதை அறிந்தேன்.

சமணர்கள் அந்தப் பகுதியிலே இருப்பதால், அதை அழகாக உட்கார வைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். நல்ல வேலைப்பாடுகள் அமைந்த சிலை. ஆனால் அதை அதற்கு முன்பு யாரும் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லா கல்வெட்டும் கிடைத்தால்தான் நாம் தமிழ் பவுத்தம் குறித்த ஒரு முடிவுக்கு வர முடியும். அதுமட்டுமல்ல, என்னென்ன சொற்கள் வழக்கத்திலிருந்தன என்பதை எல்லாம் அறிய வேண்டியுள்ளது. எத்தகைய வாய்மொழிக்கதைகள் வழக்கத்திலிருந்தன என்றும் அறிய வேண்டியுள்ளது.

மயிலை சீனிவேங்கடசாமி எழுதும்போது, ஒரு வாய்மொழிக் கதையை கூறுவார். “ஒரு கள்வன் கன்னம் வைக்கும் போது சுவர் விழுந்து இறந்து விடுவான். அந்தச் சுவர் ஈரமாயிருந்ததால் விழுந்துவிட்டது. கடைசியாக கள்வனின் மனைவி மன்னனிடத்தில் புகார் கொடுப்பாள். அந்த சுவருக்கு சொந்தக்காரன் ஈரச் செங்கல்லை வைத்துக் கட்டியதால்தான் என்னுடைய கணவன் இறந்தான் என்று கூறுவாள். மன்னன் அந்த வீட்டுக்காரனை ஈரச்சுவர் கட்டியதற்காக கழுவிலேற்ற உத்தரவிடுவான். உடனே அந்த வீட்டுக்காரன் நான் என்ன செய்ய முடியும், குயவன்தான் ஈரச் செங்கலைத் தந்தான் என்று சொல்வான். குயவனை தூக்கிலிடும்படி மன்னன் கட்டளையிட, குயவனும் நான் வேலை செய்யும்போது அழகான வண்ணார் பெண்ணொருத்தி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள், அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததால் மனசு கலைந்து அப்படி ஆகிவிட்டது என்றான். மன்னனும் அந்த வண்ணார் பெண்ணை தூக்கிலிட உத்தரவிட்டான்.

அவர் வந்தவுடனே நான் வழக்கமாக துணி துவைக்கும் கல்லின்மீது திகம்பர சாமி ஒருவர் (சமண முனிவர்) உட்கார்ந்திருந்தார். அவர் போய்விட்டாரா என்று பார்ப்பதற்காகத்தான் நான் அடிக்கடி அந்தப் பக்கம் போக வேண்டியிருந்தது என்று கூறியிருக்கிறார். சமண முனிவரும் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டு இருக்கிறார். அவர் எதுவும் பேசாமல் மவுன நிலையிலிருந்ததால் அவரை கழுவிலேற்றினார்கள்'' என்று ஒரு வாய்மொழிக்கதையைப் பதிவு செய்திருக்கிறார். அதற்கு ஒரு பழமொழியைக்கூட சொல்லியிருக்கின்றனர்: ‘பழியெல்லாம் போம் அமணந்தலையோடு'. இதிலிருந்து சமண முனிவர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இவற்றையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உங்கள் எழுத்தும் இயக்கமும் அடித்தள மக்களுக்காகவும், பார்ப்பனியத்திற்கு எதிராகவும்தான் இருக்கிறது. ஆனால் உங்கள் நூல்கள், தங்கள் கருத்துக்கு எதிராக உள்ள ‘காலச்சுவடு' பதிப்பகத்திலிருந்து வருகிறதே. ஏன் இந்த முரண்?

ஓர் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடிய மூன்று எதிர்பார்ப்புகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். முதலில், அவனுடைய படைப்பு அச்சில் வெளிவர வேண்டும். இரண்டாவது, பரந்த தளத்தில் அது வாசகர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும். மூன்றாவது, முறையான மதிப்பீடு. மூன்றாவது இல்லையென்றாலும் முதலிரண்டும் எழுத்தாளர்களுக்கு மிகவும் முக்கியமானவை. என் எழுத்துக்களுக்கு "காலச்சுவடு' அறிமுகமானது, ஆ. ரா. வெங்கடாசலபதி மூலம் தான். அவர் மாணவராக இருந்த போதே வ.உ.சி.யைப் பற்றி ஆய்வு செய்ய என்னை சந்திக்க வந்து நண்பரானவர்.

அப்போது எனது ‘கிறித்துவமும் ஜாதியும்' என்ற நூல் வெளிவரும் நேரம், மேத்தூர் ராஜ்குமார் அவர்களுக்கு இந்த நூலைத் தரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அவர் பதிப்பை தொழிலாகக் கொண்டவர் அல்ல. ஆனால் பொழுதுபோக்காக நூல்களை கொண்டுவருவார். என்னுடைய நூல்களையும் அவர்தான் வெளிக்கொண்டு வருவார். பொதுவாக ஆண்டுக்கு இவ்வளவு என்று புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். அவரோ நினைத்த போது கொண்டு வருவார். ‘கிறித்துவமும் ஜாதியும்' என்ற அந்த நூலுக்காக மட்டும் நான் என்னுடைய கைப்பணத்தை நிறைய செவழித்து, தகவல்களை சேகரித்து இருக்கிறேன்.

அதிகமுறை வடக்கன் குளம் என்ற ஊருக்கு காலையில் எட்டு மணிக்கே சென்று விடுவேன். சிற்றுண்டியை அங்கேயே சாப்பிட்டுவிட்டு பனிரெண்டு மணி வரை அங்கேயே இருந்து, எந்தப் பயனும் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறேன். கொடைக்கானலில் உள்ள ஏசு சபை ஆவணக் காப்பகத்தில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, அங்கேயே தங்கி ஆவணங்களை சேகரித்து வந்தேன். அங்கே கிடைத்த ஆவணங்கள் மிக முக்கியமானவை. ஆவணக்காப்பகத்திலே ஆவணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இங்கே இதைப் பார்ப்பது நான் தான் கடைசி ஆளோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. கையை வைத்தாலே நொறுங்கியது.

தனியாக வேறு யாராவது இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி, வேறு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நினைத்தேன். எனவே இந்த ஆவணங்களை முழுமையாகப் பயன்படுத்த நினைத்தேன். என்னுடைய புத்தகத்திலேயே பின்னிணைப்பாக சேர்க்க எண்ணினேன். ‘தோட்டத்திலே பாதி கிணறு' என்கிற மாதிரி, ராஜ்குமார் தான் அதை பதிப்பிப்பார் என்றேன். சலபதி மூலமாக ‘காலச்சுவடு' அதை வெளியிட்டார்கள். முழுமையாக அந்த நூல் வெளிவந்தது. என்னுடைய அனுமதி இன்றி எதையும் நீக்காமல் தான் வெளியிட்டார்கள். 2001 டிசம்பரில்தான் முதல் பதிப்பு வந்தது. 2007இல் ஆறு ஆண்டுகளில் நான்கு பதிப்புகள் வெளிவந்தன. ஒரு பதிப்பாளருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள உறவு எங்களிடையே இருக்கிறது. எந்த இடங்களில் நாங்கள் வேறுபடுகிறோம் என்பதை, நாங்கள் இருவரும் புரிந்தே வைத்திருக்கிறோம். அதனால் எங்களுக்குள் எந்த இடையூறும் இல்லை.

‘பரிசல்' - செந்தில்நாதன் என்னை மிகவும் கவர்ந்தவர். ஏனென்றால் சைக்கிளில் புத்தகக் கட்டுகளை வைத்துக் கொண்டு, அதை ஒரு தொழிலாக மட்டுமில்லாமல் தொண்டாகவும் செய்பவர். அவர் ஒரு நூல் கேட்டார். என்னுடைய ‘நாட்டார் வழக்காற்றில் அரசியல்' என்ற நூலைத் தந்தேன். பிறகு ‘பஞ்சமனா பஞ்சையனா' என்ற கட்டுரைத் தொகுப்பு. மூன்றாவதாக "கோபுரத் தற்கொலைகள்'. இதற்காக நான் அவரிடமிருந்து எந்தவிதமான மதிப்பூதியத்தையும் பெறவில்லை. அவரிடம் அதை நான் எதிர்பார்க்கவுமில்லை. அவர் என்னுடைய தோழர். அடுத்து பாரதி புத்தகாலயத்திற்கு "பிள்ளையார் அரசியல்' கொடுத்தேன். நன்றாக விற்றது என்றார்கள். ‘புதுச்சேரியிலிருந்து நாட்குறிப்புகள்' தந்தேன். அவர்களும் கருத்து ரீதியான நிறுவனம் என்பதால் மதிப்பூதியம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. "புது விசை'க்கும் "பிள்ளையார் அரசியல்', "பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள்' "தர்க்கங்களும் இந்து முஸ்லிம் ஒற்றுமையும்' ஆகிய நூல்களைக் கொடுத்தேன்.

ஆதவனும் கொள்கை ரீதியாக என்னுடன் இருப்பவர் என்பதால், மதிப்பூதியம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லா பதிப்பகங்களுக்கும் நான் அப்படி தர முடியாது. ஓய்வு பெற்று விட்டதால் எனக்கும் பொருளாதார வரம்புகள் இருக்கின்றன. வேலையிலிருக்கும் போது ஆண்டுக்கொரு முறை சம்பள உயர்வு கிடைக்கும். ஓய்வு பெற்ற பிறகு அதுவும் இல்லை. புத்தகங்கள் வாங்க வேண்டியிருக்கின்றன. அதற்குப் பணம் வேண்டும். ‘காலச்சுவடு' எழுத்துக்கு சரியாக பணம் தந்து விடுகிறார்கள். என்.சி.பி.எச்., பேராசிரியர் வானமாமலை அவர்களின் தொகுப்புகளை கொண்டு வருகிறது. அது இயக்க ரீதியாக இயங்கும் நிறுவனம் என்பதால், நான் அதனிடத்தில் பணம் வாங்க முடியாது. ஆனால் ‘காலச்சுவடு' அப்படியல்ல. தனியானது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ‘காலச்சுவடு' தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதா ஆட்சியில் கலைஞரைக் கைது செய்தபோது எழுத்தாளர்களையெல்லாம் ஒன்றிணைத்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, தொலைபேசியிலேயே கேட்டு என் பெயரை சேர்த்தார்கள். பல இதழ்களிலே அது வெளிவந்தது. ‘நாச்சார்மட விவகாரம்' கதையை எதிர்த்து கையெழுத்து கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். அதே போல ‘பிள்ளைகெடுத்தாள் விளை' கதை குறித்தும் என்னிடம் கட்டுரை கேட்கப்பட்டது. அதற்கும் நான் எனக்கென சில ‘ரிசர்வேஷன்ஸ்' இருக்கின்றது என்று கூறி மறுத்து விட்டேன். ‘காலச்சுவடு'க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் உறவு இருக்கிறது; ஆனால் கருத்தியல் ரீதியாக இடைவெளி இருக்கிறது.

‘பிள்ளைகெடுத்தாள் விளை' பற்றிய உங்கள் கருத்து என்ன?

அந்தக் கதையைப் படித்து முடித்ததும் இரண்டு விதமான உணர்வுகள் எனக்கு ஏற்பட்டன. ஒன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதான பரிதாப உணர்வு; மற்றொன்று, அவள் மீது பழி சுமத்தி அவளது துயரத்திற்குக் காரணமான ஆதிக்க சாதியினர் மீதான கோபம்.

அடுத்த சில நாட்களில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தக் கதை பற்றிய பேச்சு வந்தது. கதை குறித்த அவரது விமர்சனத்தைக் கேட்டபோது, அத்தகைய ஒரு வாசிப்பிற்கும் அந்தக் கதை இடமளிப்பது எனக்குத் தெரிந்தது. கதையை மறுபடியும் ஒரு முறை வாசித்தேன். கதை முன்வைக்கும் கேள்வி என்ன என்பது தெளிவாக இல்லாமல் இருப்பது புரிந்தது. இதற்கு முக்கிய காரணம், கதையில் ஆசிரியரின் சார்பு நிலை எந்த இடத்திலும் வெளிப்படாமல் இருப்பது மற்றும் இதன் மீதான விவாதங்களின் போது சுந்தரராமசாமி, தனது நிலையை தெளிவுபடுத்தாதது. அதனால்தான் இரண்டு விதமான வாசிப்புகளுக்கு அக்கதை இடமளிப்பதாக நான் கருதுகிறேன்.

சந்திப்பு : "கீற்று' நந்தன்
Pin It