அன்பான குழந்தைகளே!
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?

school-boys
மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் பரவும் நோய்களான காலரா, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றைத் தடுக்க தண்ணீரை காய்ச்சி, வடிகட்டி பருகுங்கள். நீர்நிலைகள், ஆறு, கடல் பக்கம் போகாதீர்கள், ஈரச்சுவர் அருகில் படுத்து உறங்காதீர்கள், விளையாடாதீர்கள்.

மய்ய அரசு பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்து சட்டம் இயற்றி உள்ளது. அதை நாம் வரவேற்போம். புகை பிடித்தால் புற்று நோய் உருவாகும். புகை பிடிக்கிறவர்களிடம் அதை கைவிடச் சொல்லி பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள். பொது இடங்களில் புகைத்து பிறருக்கு எரிச்சலை உருவாக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். புற்றுநோயை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.

செல்பேசிகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால் பேசுவதைக் காட்டிலும் பிற செயல்களுக்குத்தான் அது இப்போது அதிகமாக பயன்படுகிறது! பெரியவர்களும், குழந்தைகளும் செல்பேசிகளை அதிக அளவில் பயன்படுத்தினால் மூளைக்கட்டிகள் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

செல்பேசி கோபுரங்களிலிருந்து வரும் கதிர்வீச்சால் பறவைகள் இறப்பதும், மலட்டுத்தன்மையாவதும் அதிகரிப்பதாக சொல்கிறார்கள். செல்பேசியை குறைக்க பல வழிகள் இருக்கின்றன அதிக அளவில் புத்தகம் படிப்பதிலோ, விளையாடுவதிலோ, பிற பயனுள்ள வேலைகளை செய்வதிலோ நேரத்தை செலவிடத் தொடங்கினால் செல்பேசி பயன்பாடு குறையும். தொடங்கலாமா?
Pin It