‘நவம்பர் 1984 இல் தில்லியில் நடைபெற்ற படுகொலைக்கு காரணமானவர்கள் இன்னமும் தண்டிக்கப்படாததினாலேயே -தில்லி படுகொலைகள் நடைபெற்று 18 ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் குஜராத் படுகொலைகளை காண நேர்ந்தது. இப்போது தில்லியில் நடந்ததை நாம் மறந்து விட்டால்; இன்னும் சிறிது காலத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்ததையும் நாம் மறந்துவிட்டால்; மற்றொரு படுகொலையை நாம் விரைவில் காண நேரிடும்.’

Gujrat violence
1984இன் தில்லி படுகொலைகள் பற்றிய ஓர் ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எச்.எஸ். பூல்கா 2004 இல் அளித்தபோது, ‘20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொடூரங்களைக் கிளறி ஏன் வெறுப்பை வளர்க்க வேண்டும்?' என்று அவரிடம் கேட்டவர்களுக்கு அவர் அளித்த பதிலே மேற்குறிப்பிட்டது.

‘2002 ஆம் ஆண்டு குஜராத்தில் பா.ஜ.க.-மோடி அரசின் முழு ஆதரவோடு நடைபெற்ற இனப்படுகொலைகள் பற்றி ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு, அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. ஆனால், இன்று பாதிப்புக்குள்ளான அந்த மக்களின் நிலை என்ன? இந்த இனப்படுகொலைக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்ன? அன்று நடந்த வெறியாட்டங்களில் உயிர் தப்பியவர்களின் நிலை என்ன? இவற்றிற்கு மேலாக இன்று குஜராத்தில் முஸ்லிம்களின் நிலை என்ன என்பது, யாராலும் கேட்கப்படாத கேள்வியாகவே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால், குஜராத்தில் படுகொலைகள் நடந்தன என்பது மங்கிய நினைவாகவே இன்று மக்கள் மனதில் இருக்கிறது என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஊடகங்கள் அதை மறக்கடித்து விட்டன. அதை மட்டுமல்ல, எந்த கொடூர நிகழ்வும், அக்காலகட்டத்தில் ஊடகங்களுக்கான தீனியாக, பரபரப்பாக செய்தியாக்கப்பட்டு, வேறொரு நிகழ்வு வந்தவுடன் வெகு எளிதில் தங்கள் கவனத்தையும் மக்கள் கவனத்தையும் அதன் பக்கம் திருப்பிவிடும் வேலையையே ஊடகங்கள் தொழிலாகக் கொண்டிருக்கின்றன.

2002 பிப்ரவரி 27 அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட நெருப்பின் காரணமாக 58 பயணிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சில கர சேவகர்களும் இருந்தனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட தொடர் படுகொலைகள், குஜராத் மாநிலமெங்கும் நடத்தப்பட்டன. எந்த அளவிற்குப் பரவலாக இந்த படுகொலைகள் நடந்தன என்பதற்கான சான்று, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் ஆய்விலிருந்து தெளிவாகிறது. குஜராத்தில் மொத்தம் உள்ள 464 காவல் நிலையங்களில் 284 காவல் நிலைய எல்லைக்குள் படுகொலைகள் நடந்துள்ளன. அதாவது மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 153இல் இந்த வெறிச் செயல்கள் பரவியிருந்தன. ஏறத்தாழ 993 கிராமங்களும் 151 நகரங்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

மாநில காவல் துறையால் தடுக்க இயலாத/தடுக்க விரும்பாத இந்த கலவரங்களில் அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி, 963 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நகர்ப் பகுதிகளில் 18,037 குடும்பங்களும், கிராமப்புறங்களில் 11,204 குடும்பங்களும் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. 413 பேர் காணாமல் போயுள்ளனர். அதாவது, அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. கிடைத்த உடல்களில் 228 உடல்கள் அடையாளம் காணப்படாதவை.

குஜராத்தின் பஞ்ச்மகால் மாவட்டத்தின் பந்தர்வாடா கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், 1.3.2002 அன்று நடைபெற்ற இரு கொடூர நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அக்டோபர் 2002இல் விடுதலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அன்றைய நிகழ்வில் உயிர் தப்பிய அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மார்ச் 2002 முதல் டிசம்பர் 2005 வரை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாநில காவல் துறைத் தலைவர் எனப் பலரிடமும் வாய் மொழியாகவும், எழுத்து மூலமாகவும் பலமுறை நீதி கேட்டு புகார் அளித்துள்ளனர். ஊடகங்களையும் தங்களுக்கு துணையாக இருக்குமாறு அழைப்பு விடுத்தனர். ‘நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள்' அமைப்பு அவர்களுக்கு சட்ட உதவியை வழங்கியது.

அக்கிராம மக்கள் அரசு நிறுவனங்களை மட்டும் நம்பி இருக்காமல், கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் மிச்சங்களைத் தேடும் பணியையும் மேற்கொண்டனர். அதன் விளைவாக டிசம்பர் 27, 2005 அன்று அக்கிராம மக்கள் லூனாவாடா நகரின் எல்லையில் உள்ள பாணம் ஆற்றுக்கு அருகில் காட்டுப் பகுதியில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்கள், மொத்தமாக புதைக்கப்பட்டிருந்ததை கண்டெடுத்தனர். தேடுதல் நிகழ்விற்கு உடன் வந்திருந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வை முழுவதுமாக ஒளிபரப்பின.

கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புகள் ஆகியவற்றை காவல் துறையிடம் ஒப்படைத்த அவர்கள் நீதி கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினர். குஜராத் உயர் நீதிமன்றம், ‘கண்டெடுக்கப்பட்ட உடல்களின் பகுதிகளை, அய்தராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வுக் கூடத்திற்கு டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்ப வேண்டும்’ என ஆணை பிறப்பித்தது. அந்த ஆய்வு சி.பி.அய்.யின் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்றும் கூறியது. அந்த ஆய்வின் முடிவில், 8 உடல்கள், அவர்களின் உறவினர்களின் உயிரணுக்களுடன் பொருந்து வதாகவும், மீதமுள்ள 11 உடல்கள் அடையாளம் காணப்படாத தாகவும் தெரிய வந்தது. ஆனால், வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற மக்களுக்கு, ஆய்வறிக்கை இறுதிவரை வழங்கப்படவே இல்லை. இருப்பினும், அரசு எளிதில் அந்த அறிக்கையைப் பெற்றது.

இதனால் கிராம மக்களால் அந்த அறிக்கையின் முடிவிற்கு பதில் அளிக்க இயலவில்லை. ஆனால், அரசு உடனடியாக ஒரு பதில் அளித்தது. அதோடு வழக்கை விரைந்து முடிப்பதற்கான அத்தனை வேலைகளையும் குஜராத் அரசு செய்தது. நடுநிலையாக வழக்கை விசாரிக்க அமர்த்தப்பட்ட சி.பி.அய். வழக்கறிஞரும், குஜராத் அரசுக்கு சார்பான நிலையையே எடுத்து நீதிமன்றத்தில் வாதிட்டார். இவ்வாறு மிக மோசமாகக் கொல்லப்பட்டு, மொத்தமாக புதைக்கப்பட்டவர்களின் வழக்கினை சி.பி.அய். எடுத்துக் கொண்டு, மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை யாருடைய செவிகளிலும் விழவில்லை. தங்களின் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் வழக்கு நடந்த ஓராண்டிற்குள் 600 மனுக்களை கிராம மக்கள் நீதிமன்றத்தில் அளித்தனர். சான்றாக, அமீனாபென் ரசூல் என்பவர் அளித்த மனுவில், அவரது மகனின் எலும்புகளில் ஒட்டியிருந்த துணி, அவருடைய மகன் கொல்லப்பட்ட அன்று அணிந்திருந்த உடையின் பகுதியே என்பதை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் காவல் துறை பிரேத பரிசோதனை போன்ற எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் உடலை அழிக்க முயன்றது தெரிய வந்தது.

கோத்ரா ரயில் தீயில் பலியானவர்களில் அடையாளம் காணப்படாத உடல்கள், அரசு பிணக்கிடங்குகளில் 5 மாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. அடையாளம் காண்பதற்கான அழைப்புகள் ஊடகங்களிலும் பொது அறிக்கைகள் வழியாகவும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், லூனாவாடா நகரின் முஸ்லிம் இடுகாடு மிக அருகிலேயே இருந்தபோதும், கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கேட்பாரற்று, எவருக்கும் தெரிவிக்கப்படாமல், எங்கோ ஒரு காட்டுப் பகுதியில் ஒட்டுமொத்தமாகப் புதைக்கப்பட்ட அடையாளம் காண இயலாவிடினும், உள்ளூர் மத குருவிடம் இறுதி மதச் சடங்குகளை நிறைவேற்றும் வகையில் அந்த உடல்கள் அளிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யாதது மட்டுமல்ல, ஒரு பொய்யான வழக்கையும் பதிவு செய்து மக்களை ஏமாற்றியுள்ளது காவல் துறை. இவ்வாறு காவல் துறையின் உதவியோடு இந்த கொடூரங்களை அரங்கேற்றியவர்கள், இன்றும் சுதந்திரமாக நாட்டில் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கொடுமை என்றால், அவர்களில் பலர் அரசின் உயர் பதவிகளிலும் நீடிக்கிறார்கள் என்பது -இந்திய அரசமைப்பு, நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கியுள்ளது.

அவ்வாறான குற்றவாளிகளில் முதன்மையானவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி. குஜராத் இனப்படுகொலைகள் நடைபெற்று சில மாதங்களிலேயே தேர்தலை சந்தித்த போதும் மோடி மீண்டும் பதவிக்கு வந்தார். ஒரே ஆறுதல், அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி தோல்வியைத் தழுவியதே. ஆனால், அது எந்த வகையிலும் மோடி அரசின் மத விரோத செயல்பாடுகளை குறைக்கவில்லை. ஒருபுறம், 2002 கலவர வழக்குகளின் சாட்சிகளை குலைப்பதற்கான வேலைகளும் மறுபுறம், மேலும் மேலும் முஸ்லிம் மக்களுக்கு நெருக்குதல்களும் தொடர்ந்தன; இன்றுவரை தொடர்கின்றன.

இன்றைய குஜராத்தில் முஸ்லிம்கள் இரண்டாம்தர குடிமக்களாக மட்டுமின்றி, நாளும் அச்சத்துடனேயே வாழக்கூடிய சூழலிலேயே வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அரசு அதிகாரிகளையோ, காவல் துறையினரையோ, அரசின் முழுமையான ஆதரவைப் பெற்ற குற்றவாளிகளையோ பகைத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே பரிதாபகரமான உண்மை. இதனால் பெரும்பான்மையான வழக்குகள் வெகு விரையில் முடிக்கப்பட்டு, குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்; அல்லது எவ்வித விசாரணையும் இன்றி வழக்குகள் ஒத்திப் போடப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு இயற்கையானது! - கணேஷ் தெவி

குஜராத் சகிக்க இயலாத இடமாக மாறிவிட்டது. குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரையிலாவது. இன்று, குஜராத்தில் நான் பேசக்கூடியவர்கள் வெகு சிலரே உள்ளனர். ஏனெனில், அவர்கள் அடிப்படையானவற்றை புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் பிரச்சினை என்னவெனில், என்னால் இந்த நகரின் மக்களுடன் பேச இயலாது. பாலைவனத்தில் நடப்பதைப் போன்றது அது. குஜராத்திகள் அமைதியை விரும்கிறவர்கள் என்ற பொதுவான நம்பிக்கை, தற்போது நம்ப இயலாத ஒன்றாக இருக்கிறது. அது உண்மையெனில், 1969 முதல் தொடர்ந்து நடைபெற்ற இத்தனை கலவரங்களும் எப்படி சாத்தியப்பட்டிருக்கும்?

நான் புரிந்து கொண்ட வரையில், அவர்களுடைய பேராசை உணர்வின் ஒரு பகுதியாகவே வன்முறை இருக்கிறது. குஜராத்திகள் பொதுவாக அதீத பேராசை கொண்டவர்கள்; செல்வங்களை அடைவதற்கு அவர்கள் எதையும் செய்வார்கள். இங்குள்ள மிகவும் நாகரீகமானவர்கள், மற்ற வகையில் நான் மதிப்பவர்கள், அமெரிக்காவிற்கு ‘விசா' வாங்குவதற்காக எதையும் செய்வார்கள் -சட்ட விரோதமான ஏமாற்று வேலைகள் உட்பட! செல்வத்தைப் பெருக்குவதில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். அவர்கள் பக்திகூட செல்வத்தைப் பெருக்குவதை நோக்கியே இருக்கும். கடவுளிடம் அவர்கள் பண்டமாற்று உறவு கொண்டுள்ளனர்.

நான் உனக்கு பக்தியை தருகிறேன்; நீ எனக்கு செல்வத்தை தா. இங்கு நிலவுகிற முஸ்லிம்கள் மீதான வெறுப்பு, அவர்கள் உணர்ந்து வளர்த்துக் கொண்டதோ, கற்றுக் கொண்டதோ அல்ல. அது மிகவும் இயல்பானது. இயற்கையாகவே இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டதைப் போன்றது. பஞ்சாபில் இருப்பதைப் போல பாகிஸ்தான் பிரிவினையினால் ஏற்பட்ட கசப்புணர்வு இங்கு கிடையாது. ஆழமான, சொல்லப்போனால் வழிவழியாக வந்த சோம்நாத் பற்றிய செய்திகளும், பல படையெடுப்புகளின் செய்திகளும், எராளமான ஒரு சார்புக் கருத்துகளுமே இருக்கின்றன.

அதன் பிறகு காந்தியின் காலம் வரை, ஒரு பெரிய இடைவெளி உள்ளது. காந்தி குஜராத்தில் புகழ்மிக்க மனிதர் அல்ல என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும். வெறும் வாயளவில் மட்டும் அவரை மதிப்பதாக காட்டிக் கொள்வார்கள். முஸ்லிம்களை வெறுப்பதால், நீங்கள் குஜராத்தில் ஒரு கெட்ட மனிதராக பார்க்கப்படுவதில்லை. ஓர் இயல்பான மனிதராகவே தோற்றம் அளிப்பீர்கள். நாகரீகமான மனிதர்கள் முஸ்லிம்களை வெறுப்பார்கள். இந்நிலை நகரத்தில் மட்டுமல்ல; கிராமங்களிலும் நிலவுகிறது. ஒரு முஸ்லிம் மனதளவில் பாதிக்கப்படும் வகையில் ஏதேனும் நடந்தால், அது மிக இயல்பானது. குஜராத்திகள் எந்த வகையில் முஸ்லிம்களுடன் உறவைப் பேணுகிறார்கள் என்பதை உணர்த்த, நான் நர்மதா அணை பிரச்சினைக்கு வருகிறேன்.

குஜராத் அடிப்படையில் முழுமையாக அணைகளுக்கு சார்பான மாநிலம். அதனாலேயே மேதா பட்கருக்கு எதிரானது. மேதா பட்கரை யாரேனும் ஆதரித்தால் அவரை முஸ்லிம் என்பார்கள் குஜராத்திகள். சகிப்பற்றத் தன்மை என்பது, குஜராத்தின் பொதுவான குணம். முஸ்லிம்கள் வெறுக்கப்பட்டால், ஒட்டுமொத்த குஜராத்தும் அவர்களை வெறுக்கும். மேதாவை எதிரியாகப் பார்த்தால், ஒட்டுமொத்த குஜராத்தும் அவரை எதிரியாகப் பார்க்கும். அவர்கள் மனம் இறுக மூடிக் கிடக்கிறது. மாற்றுக் கருத்து என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பொருளாதார ரீதியாக குஜராத்தில் அடுக்கு நிலை நிலவாத போதும், முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக சார்புத் தன்மை கொண்டவர்களாக இல்லாதபோதும்கூட இந்நிலை நிலவுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹபீப் தன்வர், வடோதராவிற்கு வந்து தங்கியிருந்து பணிபுரிய விரும்பினார். ஆறு மாதங்களுக்கு அவருக்கு வீடே கிடைக்கவில்லை. இதன் விளைவாக அவர் திரும்பிச் சென்று விட்டார். நாங்கள் சில பேர் அவருக்கு ஒரு தங்குமிடம் ஏற்பாடு செய்ய முயன்றோம். ஆனால், யாரும் அவருக்கு இடமளிக்க விரும்பவில்லை. அப்போது நான் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்கூட, மற்ற விசயங்களில் உண்மையில் நல்ல மனிதரான அவர்கூட மறுத்துவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிக நேர்மையான நாடாளுமன்ற உறுப்பினரான ராவூப் வலிவுல்லா, அகமதாபாத் நகரின் மய்யத்தில் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். காங்கிரஸ் கட்சிகூட அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. ராவூப் ஒரு முஸ்லிமாக இருந்ததால்தான் என நான் நினைக்கிறேன். அஹ்சன் ஜாப்ரி கொல்லப்பட்டபோது -எந்த வகையிலும் இழப்பின் தன்மையோ, எதிர்வினையோ ஏற்படவே இல்லை. எந்த வகையான அரசியல் அல்லது தத்துவ ரீதியான வேறுபாடுகளுமின்றி, முஸ்லிம்கள் வெறுக்கப்படுகிறார்கள்.

பட்ட மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் இளைஞர் என்னுடன் இருந்தார். 2002 கலவரத்திற்குப் பிறகு, திடீரென அவர் பேசும்போது வாக்கியங்கள் அமைக்க சிரமப்படுவதை கவனித்தேன். பொதுவாக அவர் மிகத் தெளிவாக எழுதக் கூடியவர். ஆனால், அவரது எழுத்தும் உடைந்தது. உண்மையில் அவரால் எழுதவே முடியவில்லை. ‘அபாசியா' நோய் தாக்கப்பட்டதன் அறிகுறி அது. மிகக் கடுமையான மன பாதிப்பு காரணமாக, பேச்சு, எழுத்து மற்றும் மொழித் திறனில் குறைபாடு ஏற்படுத்துவதே அபாசியா நோய். மிக கணிசமான அளவு முஸ்லிம்கள் இருந்தபோதும் ஓர் உருது நாளிதழ்கூட இல்லாத ஒரே மாநிலம் குஜராத்தான். ஒரு வேளை ஒட்டுமொத்தமாக அபாசியா நோய் தாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணமோ என நான் அஞ்சுகிறேன். இத்தனை வெறுப்பு, நிராகரிப்பு, அச்சுறுத்தலுக்கு இடையே வாழ்வது எத்தகையதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே நான் விரும்பவில்லை. எதிர்வினைக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் உள்ளதா? அப்படி ஒன்று உருவாகிக் கொண்டுள்ளதா? எனக்குத் தெரியவில்லை.

(நன்றி : ‘தெகல்கா' -மே 20, 2006)
Pin It