Dalit Drama Festival

இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் அரங்கின் வடிவங்கள் பல்வேறு நிலைகளில் வளர்ந்துள்ளன. இவ்வரங்கின் ஒரு வடிவமாக தலித் அரங்கம் நிலைப்பெறுவதில் சிக்கல்கள் தொடர்ந்து எழுகின்றன. டாக்டர் அம்பேத்கரின் நூற்றாண்டு எழுச்சிக்குப் பிறகு, தலித் விடுதலைக்கு உரமளிக்கக்கூடிய நிகழ்த்துக் கலைகளை உள்ளடக்கி, தலித் அரங்க நிகழ்வுகள் தலித் அடையாளத்துடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் தலித் அரங்கக் கோட்பாடு, தலித் அரங்கின் வடிவம், தலித் அரங்கக் கூறுகள், ஆடு வெளி, உடல்மொழி, அழகியல், இசை, தலித் அரங்கின் அரசியல் போன்றவற்றைப் பற்றிய கூர்மையான அறிவும் தெளிவும் கொண்டு, தலித் அரங்கம் கட்டமைப்பு செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது.

தலித் அரங்க நிகழ்வுகள், கலை வெளிப்பாடுகள் தொடர்ந்து சமூக மாற்றத்திற்கான ஊடகமாகத் திகழ்ந்து வரும் சூழலில், தலித் அரங்கு குறித்து சிந்திப்பதற்கும் ஒருமித்த கருத்தோடு தலித் அரங்கை கட்டமைத்து செயல்படுத்துவதற்காக, இந்தியாவில் முதல் முறையாக தேசிய தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கமும், தலித் நாடக விழாவும் - விழுப்புரத்தில் மே 25, 2007 அன்று நடைபெற்றது. தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கிற்கு, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் மு. ராமதாஸ் தலைமை வகித்தார். தலித் அரங்கவியல் கருத்தரங்கில் பெர்னாட் பாத்திமா, மு. ஜீவா, விழி.பா. இதயவேந்தன், பிரேம், அரங்க. மல்லிகா, கிளேர், ‘துடி' பாரதி பிரபு, கே.எஸ். முத்து, அமலநாதன், கோவிந்தசாமி, சிந்தனைச் செல்வன், அமைதி அரசு, இன்பகுமார், பாக்கியநாதன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

தலித் அரங்கு சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் ஒரு விடுதலை அரங்கு. இது சமத்துவம், சுதந்திரம், தன்மானம், சமூக அங்கீகாரம் ஆகியவற்றை நோக்கி நகர்ந்து, புதிய பண்பாட்டுத் தளங்களை உருவாக்கி, தலித் மக்களின் அன்றாட செயல்பாடுகளை இணைத்து - மக்கள் பங்கேற்கும் ஓர் அரங்கமாக செயல்படுகிறது. இந்த அரங்கு, தலித்துகளின் கலைகளை ஆதிக்கச் சாதியினர் கொச்சைப்படுத்தி வருவதிலிருந்து மதிப்புறச் செய்கிறது. ஆதிக்கச் சாதியினர் கட்டமைத்துள்ள கலை பற்றிய புனிதத்திற்கு எதிராக உள்ளது. தலித் மக்களை இழிவுபடுத்திய கருத்துகள் மீது எதிர்வினை செய்கிறது; தலித்துகளின் உண்மை வரலாற்றினை எடுத்துக் கூறுகிறது - போன்ற விடுதலைக் கருத்துகள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டன.

மாலை நிகழ்த்தரங்கில் நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. அரங்கில் சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, பெரியமேளம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலித் விடுதலைக் குரலாக எழுச்சிப் பாடல் பாடப்பட்டது. இது, முழுக்க முழுக்க தலித் நிகழ்த்தரங்கமாகவே நடத்தப்பட்டது. தற்போது உள்ள சூழலில் கலை விழாக்கள் என்றாலே ஆட்டம், பாட்டம், இசை போன்றவையே அதிக அளவில் முன்னிறுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, தலித்துகளின் விடுதலையை நோக்கி தலித் நாடகங்களை முன்னிறுத்தியது பாராட்டுக்குரியது. இந்நிகழ்த்தரங்கம் புத்தத் திடலில், மக்களின் பங்கேற்பில் விடிய விடிய ஆற்றலை வெளிக்கொண்டு வந்து பங்கேற்பை உறுதிப்படுத்தியதை காண முடிந்தது.

இவ்வரங்கில் ப. லலிதா, கு. சின்னப்பன், தொல். திருமாவளவன், ரவிக்குமார், க. நெடுஞ்செழியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் ஒடுக்கப்பட்ட தலித்துகள் விடுதலை அடைவதற்கு முன்தேவையாகவும், அவர்களின் பண்பாட்டின் விடுதலைக்கான கூறுகளை உருவாக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடாகவும் தேசிய தலித் நாடக விழாவும், தலித் நாடக அரங்கவியல் கருத்தரங்கமும் நிகழ்த்தப் பட்டன. தலித் அரங்கு - தலித் கருத்தரங்குகளை, தலித் பண்பாட்டை வெளிக்கொணர்தல்; தலித் அரங்கக் கலைஞர்களை அங்கீகரித்தல்; தலித் அரங்கை நவீன கலாச்சாரத் தாக்குதலில் இருந்து மீட்டெடுத்தல்; தலித் கலைஞர்களை தெருவிலிருந்து மேடைக்கும், தலித் மக்களை வசவிலிருந்து வாழ்வுக்கும் அச்சத்திலிருந்து துணிவுக்கும், இழிவிலிருந்து உணர்வுக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், நிகழ்த்துதலிலிருந்து பயிற்றுவித்தலுக்கும் கொண்டு செல்லுதல் ஆகிய தீர்மானங்களை, தேசிய தலித் நாடக விழா 2007 தங்களின் எதிர்கால செயல்பாடுகளாக முன்னிறுத்தியது.

- மதியரசன்

Pin It