நாமக்கல்லில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் மாநில முதல்வர் ஒரு கருத்தைத் தெரிவித்தார். நீங்கள் அனைவரும் மக்களின் சேவையில் அர்ப்பணிப்புடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்து கெட்ட பெயர் எடுக்கக்கூடாது. மீறி நீங்கள் தவறுகள் செய்தால் கட்சி ரீதியாக மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும் உங்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். நான் சர்வாதிகாரியாக மாற வேண்டி இருக்கும் என்று கூறினார். அது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளானது. அவர் ஏன் அப்படிக் கூறினார் என்பதன் பின்புலத்தை சற்று ஆய்வு செய்து பார்த்தால் அவர் பேசியதன் உண்மைப் பின்னணியை நம்மால் உணர முடியும். ஒரு மாநில முதல்வருக்கு உள்ளாட்சிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரை கூறவும் வழிகாட்டிடவும் கடமையும் பொறுப்பும் உள்ளது என்பதை எவரும் மறுக்க இயலாது. அதே நேரத்தில் இப்படி ஏன் கடுமை காட்டினார் என்பதுதான் கேள்வி. நான் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவேன் என்று கூறியதுதான் பலரின் புருவத்தை உயர்த்தியது.

மக்களின் அன்றாடத் தேவைகளில் பணிபுரிவது உள்ளாட்சிகள் மட்டும்தான். ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ அல்ல. எந்த அளவுக்கு மக்களின் அன்றாடத் தேவைகளில் உள்ளாட்சித் தலைவர்கள் கரிசனத்துடன் பணி செய்கின்றார்களோ அந்த அளவுக்கு உள்ளாட்சித் தலைவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். உள்ளாட்சித் தலைவர்கள் மக்கள் குறைகளை களைந்திடக் களைந்திட மக்கள் அவர்களுடன் நெருக்கம் காட்டுவார்கள். இந்த இடத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.panchayatஇவர் எந்த அளவுக்கு மக்களுடன் நெருக்கமாக இருக்கின்றாரோ அந்த அளவுக்கு அரசு அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரை நாட ஆரம்பித்துவிடுவார்கள். காரணம் ஒரு அரசு அதிகாரிக்கு நல்ல திட்டங்களை சிறப்புடன் நடைமுறைப்படுத்த தகுதியானவராகக் கருதி அவரிடம் வருவர். அதேபோல் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் தேர்லுக்கு அவரை நாடுவார்கள் வாக்குகளை மக்களிடமிருந்து எளிதாகப் பெறுவதற்கு. மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொடர்புடையவராக நம் நகர உள்ளாட்சித் தலைவர்கள் செயல்பட ஆரம்பித்தால் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர் மட்டும் அல்ல, அவர் மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத மனிதராக மாறிவிடுவார்.

அதே நேரத்தில் உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அன்றாடப் பணிகளில் குறுக்கிடவும் முடியும். அந்தக் குறுக்கீடு என்பது பணம் பறிப்பதற்கு என்று அனைவரும் அறிவர். இதை எப்படிச் செய்கின்றார்கள் என்பதை பல முறை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. சமீபகாலமாக இந்தக் குறுக்கீடு வந்த காரணத்தால்தான் பொதுமக்களே இந்த மாதிரி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமமே இருக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். இந்தச் சூழல் என்பது மாநகராட்சியில் அதுவும் சென்னை போன்ற நகரங்களில் மேலோங்கி இருப்பதை சமூக வலைத்தளங்களில் கட்டுரைகளாக மட்டும் வரவில்லை; மாறாக நிகழ்வுகள் சாட்சிகளாக வந்ததை நாம் அனைவரும் பார்த்துள்ளோம்.

உள்ளாட்சி செயல்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் நடந்து கொள்கின்ற விதம், காசு பார்க்கின்ற விதம், சொத்து குவிக்கும் விதம் அனைத்தும் மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன. குறைந்த பட்சம் மக்களுக்கு தொல்லையற்ற நிலையிலாவது செயல்பட்டால் கூடப் பரவாயில்லை. உள்ளாட்சிகள் மக்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு நற்பெயரை தங்கள் சேவைகள் மூலம் எடுக்கின்றனவோ அந்த அளவுக்கு அது மாநில அரசுக்கு நற்பெயரை வாங்கித் தரும். அந்தச் சூழலைத்தான் மாநில அரசு உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடமிருந்து எதிர்பார்க்கிறது.

இந்த விவாதத்தை மையப்படுத்துகின்றபோது நாம் இன்று அரசியல் எந்த சூழலில் நடைபெறுகிறது என்பதை புறந்தள்ளி விவாதிக்க முடியாது. எனவே இந்தப் பின்னணியில் அரசியல் சேவைக்கானதாகவா இருக்கின்றது என்பதுதான் பலர் கேட்கும் கேள்வி. இந்த இடத்தில் ஒரு புதுப்புரிதல் நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு வேண்டும். நாம் சந்தைக்கால அரசியல் சூழலில் வாழ்கிறோம் என்பதுதான் உண்மை. லாபம் ஈட்டுவது எதிலும் காசு பார்ப்பது, எனக்கென்ன கிடைக்கும் என சிந்தித்து செயல்படுவது என்பதுதான் மையச் செயல்பாடு.

அரசியலுக்கு மூலதனம் வேண்டும், அரசியல் செயல்பாடுகள் அனைத்திற்கும் பணம் தேவை, அந்த மூலதனம் எங்கேயிருந்து வரும் என்பதுதான் கேள்வி. பெரும் பணம் செலவழிக்காமல் பதவிகளைப் பிடிக்க முடியுமா? கட்சிக்காரராக இருந்தாலும் பணம் இல்லாமல் வேலை செய்வாரா? வாக்குகள் வாக்குறுதிகளை மட்டும் நம்பி விழுந்து விடுகிறதா? வாக்குகளுக்குப் பணம் தரும் நிலையில், கட்சிக்காரர்கள் பணம் இல்லாமல் வாக்களிக்கின்றார்களா? அனைத்தும் பெரும் செலவுக்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகள். இந்தப் பணம் எங்கே இருந்து வருகிறது. அரசியலுக்கு முதலீடு செய்த பணத்தை யார் தருவது. மக்களுக்குச் சேவை செய்யவா இவ்வளவு போராட்டங்களுக்கிடையில் பெரும் பணத்தை செலவிட்டு வெற்றி பெற்றோம் என்ற சிந்தனையுடன் தானே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருப்பார்கள். இவ்வளவு செலவழித்து பதவிகளை எதற்காகப் பிடித்தார்கள். அவர்கள் பணம் செலவழித்தார்கள் பதவிகளைப் பிடிக்க என்பது உண்மைதான். ஆனால் பணம் வாங்கிக் கொண்டு வாக்குகளை அளித்த பொதுமக்கள் இவர்கள் பெரும் பணம் செலவழித்து பதவிக்கு வந்துள்ளார்கள் என்ற சிந்தனையுடன் இருக்கமாட்டார்கள்.

இந்தச் சூழலில் மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக உள்ளாட்சியில் வந்திருக்கக்கூடியவர்கள் தங்கள் செயல்பாடுகளை கத்தியின்மேல் நடப்பதுபோல் நடத்த வேண்டியிருக்கும். அடுத்து இவர்கள் அனைவரும் தலைவர்களாக ஆளுகை மற்றும் நிர்வாகத்தை கரைத்துக் குடித்து விட்டு வரவில்லை. இந்தச் சூழலில் 50% கடந்து பெண்கள் பதவிக்கு வந்துள்ளனர். பதவிக்கு வந்துள்ள பெண்களை அதிகாரப்படுத்தி செயல்திறன் மிக்கவர்களாக மாற்றி பாலின சமத்துவப்பார்வை கொண்டவர்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் கணவன்மார்கள் நடந்து கொள்வார்களா என்ற கேள்வி இருப்பதால்தான், அவர்களுக்கும் அரசு கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றது.

அதே நேரத்தில் மத்திய அரசு உள்ளாட்சியில் வருவாய் ஈட்டும் பல வாய்ப்பு இருந்தும், அவைகளை முறையாக வசூலித்து நிதி ஈட்டும் நிர்வாகத்தை நடத்திடாமல் மத்திய மாநில அரசுகள் தரும் நிதியை செலவிடும் நிறுவனமாகவே உள்ளாட்சிகள் செயல்படுகிறது என்ற விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. எனவே நிதி ஈட்டும் வாய்ப்பை பெற்றிருக்கும்போது அதை முறையுடன் செய்து உள்ளாட்சியின் வருமானத்தை பெருக்கும்போது உள்ளாட்சி பொறுப்புடையதாக மாறும் என தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தலால் இன்று நகர்ப்புற உள்ளாட்சி, வீட்டு வரி போன்ற இனங்களில் வரி வசூல் நியாயமாகச் செய்திட வற்புறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் வேகமாக நகர்ப்புறமாகும் ஒரு மாநிலம். நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் தந்த புள்ளி விபரப்படி 63% மக்கள் நகர்ப்புறத்தில் வாழ்கின்றனர். நகரமயமாதல் என்பது ஒரு நிலையில் இந்தியாவைப்போல் உள்ள நாடுகளில் அது தொழில்மயமாவதையும், அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தாலும், நகர்ப்புறத்திற்கு புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவேண்டியது நகர்ப்புற உள்ளாட்சிக்கான கட்டாயக்கடமையாகும். நகரங்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும், பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்கினை வகித்தாலும், மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ எல்லா வசதிகளையும் அனைத்துத் தரப்பினருக்கும் செய்து தருவதுதான் மிகப் பெரும் சவாலான பணி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு.

இந்திய நாட்டில் பெரும் சவாலான பணி, ஆளுகையில் எது என்றால் அது நகரமானாலும் கிராமமானாலும், “பகிர்ந்தளிக்கும் நீதி” என்பதுதான். இதை ஆங்கிலத்தில் டிஸ்டிபூட்டிவ் ஜஸ்டிஸ் என்று கூறுவார்கள். இந்திய ஜனநாயகத்தில் மிகப்பெரிய குறையாக விளங்குவது பகிர்ந்தளிக்கும் நீதிதான். இந்திய சமூகத்தில் ஆதிக்க சக்திகள், வகுப்புகள், சாதிகள் ஆளுகைகளுக்கு வரும் பதவிகளைப் பிடித்துவிடும். அதேபோல்தான் மேம்பாட்டுக்கானத் திட்டங்களையும் பிடிக்கும் வல்லமை ஆதிக்கச் சக்திகளுக்கு நகரங்களிலும் கிராமங்களிலும் உண்டு. ஆளுகையால்தான் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்பும், பல்வேறு நிலைகளில் கிராமங்களிலும் நகரங்களிலும் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களால் பயன்களைப் பெற முடியாமல் புறக்கணிப்புக்கு ஆளான பல சமூகக் குழுக்கள் இருக்கின்றன.

அவைகளைத் தொட்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதுதான் மிக முக்கியமான பணி. அந்தப் பணியை மக்களுடன் இணைந்து, அவர்களுடைய பங்கேற்புடன் செய்திட வந்தது தான் இந்த புதிய உள்ளாட்சி. இதை உள்ளாட்சித் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது. மத்திய மாநில அரசுகளால் செய்ய முடியாத அந்த “பகிர்ந்தளிப்பு நீதி”யை முறையாக பரிபாலனம் செய்யத்தான் பணிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்தப் பணியைச் செய்ய முறையான பார்வையை உருவாக்கிக் கொண்டு, அந்தப் பணிகளை புரிதலுடன் செய்திட வேண்டும். இந்தப் பணிகள் எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பொதுமக்களுக்கு அரசு பிச்சை போடுவதாகச் செயல்படக் கூடாது. நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, புறக்கணிப்பு, ஒடுக்குதல் ஒதுக்குதல், வேறுபாடுகள் நிறைந்திருப்பதால் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கு வழிகோலுவதுபோல், மக்களின் சுயமரியாதைக்கு குந்தகம் இல்லாமல் செயல்பட வேண்டும்.

மேற்கூறிய செயல்பாடுகளுக்கு நம் உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஒரு கடப்பாடும், ஒதுக்கப்பட்ட மக்கள் மேல் ஒரு கரிசனமும், பார்வையும், ஆளுகையையும், நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு நம் உள்ளாட்சித் தலைவர்களை தயாரிக்க வேண்டும். இது சாதாரண தயாரிப்பு அல்ல. அவர்களின் ஆடுகளம் சோதனைகள் நிறைந்ததாகவும், தடைகள் நிறைந்ததாகவும், சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றது.

இந்தச் சூழலில்தான் தமிழக அரசு மிக முக்கியமான வரலாற்று அறிவிப்பினைச் செய்துள்ளது. கிராமப்புற உள்ளாட்சியைப் போல நகர்ப்புற உள்ளாட்சியிலும் பங்கேற்பு ஜனநாயகத்தை முன்னெடுக்க கிராமசபைபோல், பகுதி சபை என்று உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு பங்கேற்பு மக்களாட்சியை உருவாக்கிட முடியும். இதை உருவாக்கிய விதத்தில் சில குறைகள் இருந்தபோதும், ஒரு புதிய வாய்ப்பு மக்கள் பங்கேற்று அவரவர் குறைகளை எடுத்து வைத்து விவாதிக்க வாய்ப்பு வந்துள்ளது. இரு ஒரு விவாத ஜனநாயகத்தை முன்னெடுக்க ஒரு வாய்ப்பு. அதை நம் உள்ளாட்சித் தலைவர்கள் புரிந்து செயல்பட முனைந்திட வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சிக்கு புதிய சட்டம் சட்டமன்றத்தால் 1994இல் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. அதைப்போல் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான புதிய சட்டம் 74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 1996இல் கொண்டு வந்தாலும், அந்தச் சட்டத்தை இன்றுவரை அமுல்படுத்தவில்லை. ஆகையால்தான் மாநகராட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனிச் சட்டங்கள், அதுபோல் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தனிச் சட்டங்களின் மூலம் நிர்வாகம் நடைபெறுகிறது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான புதிய சட்டத்தை விரைந்து கொண்டு வர வேண்டும் என மாநில அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான நகர்ப்புற உள்ளாட்சிச் சட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்றால், அது அரசியலுக்கான அவமதிப்பாகும். இதனை எடுத்துக்கூற வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சித் தலைவர்களுக்கு பயிற்சியளிக்க மறைமலை நகரில் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் பயிற்சி நிறுவனமும் அத்துடன் பல பகுதிகளில் அதனுடன் இணைந்த வட்டார பயிற்சி நிறுவனங்களும் இயங்குகின்றன.

அதேபோல் மாவட்டந்தோறும் மாவட்ட பஞ்சாயத்து மனிதவள நிறுவனமும் செயல்படுகின்றன. இவைகள் அனைத்தும் பயிற்சிக்கு உதவுகின்றன. இந்த நிறுவனங்களில் பல அடிப்படை வசதிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் தரமான பயிற்சியளிக்க போதுமான பயிற்சியாளர்கள் இல்லை என்ற குறைபாடும் சுட்டிக் காட்டப்பட்டு பல பயிற்சிகள் குஜராத்தில் உள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், ஆந்திராவில் உள்ள மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்திலும் தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்களுக்கு அப்படிப்பட்ட பயிற்சியளிக்கும் பெரிய நிறுவனங்களும், தரமான பயிற்சியாளர்களும் இல்லை என்பது பலரால் அறிவுத் தளத்தில் விவாதிக்கப்பட்டாலும் அந்தக் குறைகளைப் போக்கிச் செயல்பட முனைப்புக்கள் தமிழக அரசால் எடுக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படவே இல்லை.

பொதுவாக பயிற்சி நிறுவனங்கள் என்றால் நிபுணத்துவ ஆற்றலை உயர்த்தும் நிறுவனங்கள் என்று பெயர். எனவே, அந்த நிபுணத்துவ ஆற்றல் வளர்க்கும் கொள்கையினை உருவாக்கி பயிற்சி நிறுவனங்கள் நடத்தப்படல் வேண்டும். நம் நாட்டில் அப்படிப்பட்ட கொள்கையும் கிடையாது, பயிற்சி நிறுவனத்தை நிபுணத்துவம் வளர்க்கும் நிறுவனம் என்று பார்க்கும் பார்வையும் கிடையாது. இதன் விளைவுதான் திறன் வளர்ப்பு, என்ற பெயரில் பண விரயமும் நேர விரயமும் நடைபெறுகிறதேயன்றி நிபுணத்துவ பயிற்சி என்ற பெயரால் ஒரு நிகழ்வு மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. அந்த நிகழ்வுகளால் உருவாக்கப்பட வேண்டிய விளைவுகள் உருவாக்கப்படுவதே இல்லை. இதைப்பற்றிய பல ஆய்வுகளும் அறிக்கைகளும் வந்தபோதும் அந்தக் குறைகளை நிவர்த்திக்க நடவடிககை எடுக்கப்படவில்லை.

அடுத்து தரமான நிர்வாகத்திற்கு உள்ளாட்சித் தலைவர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஆளுகை மற்றும் நிர்வாகத்திற்கான கையேடு தயாரித்து தரப்படல் வேண்டும். தமிழகத்தில் முதன் முதலில் அப்படி ஒரு கையேட்டை காந்திகிராமப் பல்கலையில் தயாரித்து தமிழில் தலைவர்களுக்கும் ஆங்கிலத்தில் அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதுதான் முன் மாதிரி.

கேரள மாநிலம் தயாரிப்பதற்கு முன்பே நாம் தயாரித்துத் தந்தோம். அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு ஒரு பொதுவான நிர்வாகக் கையேட்டை முன்மாதிரியாக என் தலைமையில் மத்திய அரசு தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி நிர்வாகக் கையேடு தயாரிக்கக் கேட்டுக்கொண்டது. அந்த நிலையில் தமிழகத்தில் இன்றுவரை நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி ஒரு நிர்வாகக் கையேடு தயாரித்து அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் தரவேண்டும். இந்தக் கையேடு என்பது எளிய தமிழில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சிக்கும் கிராமப்புற உள்ளாட்சிக்கும் தனித்தனியே தயாரித்து செயல்படுத்த முனைந்திட வேண்டும்.

இதையடுத்து நகர உள்ளாட்சியிலும், கிராமப்புற உள்ளாட்சியிலும் ஆளுகை மற்றும் நிர்வாகமும் செயல்படுவதைக் கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்படல் வேண்டும். அந்த அதிகாரிகளின் தொடர் ஆய்வு அறிக்கைகளின் மூலம் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகள் நிர்வாகத்திலும் ஆளுகையிலும் எடுக்கப்படல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசை நிர்பந்திக்க வேண்டும்.

நிர்வாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இன்று உள்ள தீர்ப்பாயத்தை (ஆம்புட்ஸ்மென்) விரிவாக்கி கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சிகள் அனைத்தையும் கேரளாவில் இருப்பதுபோல் தமிழகத்திலும் கொண்டுவர மாநில அரசை வற்புறுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஒரு முன்மாதிரிச் செயல்பாடு வழக்கத்தில் இருந்தது. கிராமப்புற உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டமைப்பு ஒன்றை நடத்தி வந்தனர். அவர்கள் அந்தக் கூட்டமைப்பின் வாயிலாக தாங்கள் சந்தித்து வருகின்ற பிரச்சினைகளைப் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சென்று சந்தித்து முறையிட்டு தீர்த்துக் கொள்வார்கள். அதேபோல் மாநில அளவில் உள்ள துறைச் செயலர் போன்ற அதிகாரிகளைச் சந்தித்து விவாதித்து நிவாரணம் தேடுவார்கள். அவ்வப்போது மாநாடுகள் நடத்துவார்கள், மாநில அமைச்சர், துறைச் செயலர் போன்றவர்களை அழைத்து தங்கள் பிரச்சினைகளை முன் வைப்பார்கள். பல பிரச்சினைகளை அமைச்சர்கள், செயலர்கள், துறை இயக்குநர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவிடுவார்கள். அதற்கு தமிழகம் முன் மாதிரியாக விளங்கியது.

இந்த நிகழ்வுகளுக்கு காந்திகிராமப் பல்கலைக்கழகமும் சென்னையில் இயங்கும் மனித உரிமை இயக்கமும் பெருமளவில் உதவி புரிந்தன. இதனை முன்மாதிரியாக வைத்து பல மாநிலங்களில் இப்படிப்பட்ட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் நடைபெற்ற இந்த முன் மாதிரி செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு பல ஆய்வு அறிக்கைகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த முன் மாதிரிச் செயல்பாடுகள் இன்று தமிழகத்தில் நடைபெறாததன் விளைவு உள்ளாட்சித் தலைவர்களுக்கும் மாநில பொது நிர்வாக அமைப்புக்கும் ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், கேரளத்தில் உள்ளாட்சித் தலைவர்களின் கூட்டமைப்பு என்பது உருவாக்கப்பட்டு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு உள்ளாட்சித் தலைவர்கள் தங்கள் நிர்வாகம், ஆளுகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்து அறிக்கைகள் தயார் செய்து மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பித்து தீர்வு தேடுகின்றார்கள். அங்கு கட்சிகள் பேதமற்று அந்த அமைப்புக்கள் இயங்குகின்றன. அதுபோல் மக்களுக்குத் தரமான சேவைகளைத் தந்திட நம் மாநிலத்திலும் அப்படிப்பட்ட அமைப்புக்களை உருவாக்கி ஆக்கபூர்வ செயல்பாடுகளில் உள்ளாட்சித் தலைவர்களை இயக்க முனைவது என்பது காலத்தின் கட்டாயமாகிறது. இந்த அமைப்புக்களை உள்ளாட்சியை வலுப்படுத்தி, மக்கள் சேவையை வலுவாக முன்னெடுக்க உதவிடும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் உள்ளாட்சிகளுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் ஒரு உயிரோட்டமான தொடர்புக்கு வழி வகுக்கும். அந்த முயற்சியை தலைவர்கள் முன்னெடுக்கும்போது அதற்கு மாநில அரசு ஆதரவு அளிப்பது பெருமளவில் மாநில அரசுக்கு உதவியாக இருக்கும்.

உள்ளாட்சிகளுக்கு ஊக்கமளித்து தரமான சேவைகளை பொதுமக்களுக்கு செய்திடவும், அரசுத் திட்டங்களை முறையாக மக்களுக்குக் கொண்டு சேர்த்திடவும் உள்ளாட்சி சீர்திருத்தம் என்பது ஓர் தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். இதற்கு நிபுணர்கள் அடங்கிய குழு அரசுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்க ஏதுவாக உள்ளாட்சியில் தொடர்ந்து செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ளாட்சியை ஓர் இயக்கமாக்கி நல்லாட்சி வழங்கிட நாம் முனைப்புக்காட்ட வேண்டும். இதற்கான பார்வையை முதலில் உள்ளாட்சித் தலைவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

- க.பழனித்துரை, காந்தி கிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)

Pin It