சாதி - தீண்டாமைக் கொடூரங்கள் பரவலாக ஊடகங்கள் மூலமும், வெளியீடுகள், போராட்ட நடவடிக்கைகள் வழியாகவும் மக்களுக்குத் தெரிய வந்துள்ளன. ஆனால், இன்றைய சூழலில் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்ள இயக்க ரீதியாக போதுமான தயாரிப்புகளும் நடவடிக்கைகளும் வளர்க்கப்படவில்லை. எனவேதான் மாமனிதர் அம்பேத்கர் வழிநடத்திய இயக்க நடவடிக்கைகளால் வலுவாக இருந்த மராட்டிய மாநிலத்திலும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் (கயர்லாஞ்சி படுகொலை) அண்மையில் நடந்தேறின.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் வட்டத்தில் உள்ள நக்கலமுத்தான்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் ஜக்கையன் 22.11.06 அன்று அடித்துக் கொல்லப்பட்டார். அருந்ததியரான ஜக்கையன் கொல்லப்பட்ட வழக்கில் அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியை ஆய்வு செய்த வழக்கறிஞர் குழு, இது பற்றி விளக்கமான கடிதம் மூலம் மேல்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு வைத்துள்ளது. கூடுதல் புலன் விசாரணை செய்து, விடுபட்டுள்ளவர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு முன்பு ஜக்கையனுக்கு நேரடியாக மிரட்டல்கள் வந்ததைப் போலவே இன்னும் இரண்டு ஊராட்சி மன்ற தலித் தலைவர்களுக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு அருகில் உள்ள இளையரசனேந்தல் ஊராட்சி மன்ற தலித் தலைவராக உள்ள சுந்தர் ராஜாவை முன்னாள் தலைவர் கொலை செய்யும் அளவுக்கு மிரட்டுவதாகவும், பயந்து போன அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் அழகுமுத்து பாண்டியன் மற்றும் தோழர்களின் ஒத்துழைப்போடு பாதுகாப்பாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அடுத்து, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்ட புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 8.7.2003 அன்று, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியும், தலித் சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான முருகேசனும் சாதி மறுப்புத் திருமணம் செய்ததைக் கண்டித்து, பெரும் கூட்டமாகத் திரண்ட ஆதிக்க சாதியினர் - இருவருக்கும் விஷத்தை ஊற்றி, கொன்று எரித்தனர். ஆனால் காவல் துறை, முருகேசனின் தந்தை மற்றும் உறவினர் மூவரையும் கொலை செய்ததாக சிறைக்கு அனுப்பினர். குற்றப்பத்திரிகையை கண்ணகியின் தந்தை மற்றும் உறவினர்கள் மீதும் - முருகேசன் மற்றும் உறவினர்கள் மீதும் தாக்கல் செய்தனர். இரு கொலைகளையும் கண்ணகியின் உறவினர்களே செய்திருந்தனர் என்பது, காவல் துறையினருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தும் ஊழல் சுகத்தால் சட்ட விரோதமாக செயல்பட்டனர்.

மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துள்ள அதிரடி நடவடிக்கைகள் அதிர்ச்சி தருபவை மட்டுமல்ல; நீதிமுறையையே அவமானப்படுத்துபவையாகும். குற்றம் பதியப்பட்ட 23 நாளில் முதல் குற்றவாளியான துரைசாமிக்கு ஜாமீன் கொடுக்கும்படி, அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார். ஊராட்சிமன்றத் தலைவரான துரைசாமியின் பதவி, அவர் முப்பது நாள் சிறையிலிருந்தால் பறிக்கப்படும் எனச் சுட்டிக் காட்டினார் அவர். நீதிபதியும் இந்த கோரிக்கையில் நியாயம் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவருக்கு ஜாமீன் கொடுப்பதாக உத்தரவில் தெரிவித்துள்ளார். இப்படி, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தால் அனைவருக்கும் ஜாமீன் கொடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு மனுபோட்டு, மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் சி.பி.அய். விசாரணைக்கு உயர் நீதிமன்றம் 22.4.04 அன்று உத்தரவிட்டது.

புலன் விசாரணை செய்த சி.பி.அய்.யும் தன் பங்கிற்கு ஆதிக்கத்திற்கு துணை புரிந்துள்ளது. முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை 4ஆவது குற்றம் சாட்டப்பட்டோர் பட்டியலில் அது பொய்யாக சேர்த்துள்ளது. சி.பி.அய்.யின் கண்காணிப்பாளரான வெங்கட்ராமன், புலன் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது, அய்யாசாமி முருகேசனுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை ஊற்றினார் என்று யாரும் சொல்லவே இல்லை. அவர் ஊழல் எதிர்ப்புத் துறைக்கு மாற்றலாகிய பின்னர், புலன் விசாரணை திசை மாறியது.

வழக்கில் முருகேசனின் சித்தப்பாவை கொலைக்குற்றம் சாட்டினால், தலித் மக்கள் நிலைகுலைந்து ஆடிப் போவார்கள் என்றும், இது இருதரப்பினரும் சமாதானம் செய்து கொள்ள, தலித் மக்களுக்கு தவிர்க்க முடியாத நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் தவறான கணிப்பில் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.

கண்கண்ட சாட்சிகள் யாரும் உண்மையைச் சொல்ல முன்வராத காரணத்தால், அய்யாசாமியை 4ஆவது நபராக குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளதாகவும் அவர் ‘அப்ரூவர்' ஆகிவிட்டால் வழக்கு வலுவாகிவிடும், அவருக்கும் தண்டனை இல்லாமல் மன்னிப்பு கிடைத்துவிடும் என புதுக்கரடியை அவிழ்த்துவிடுகிறார்கள் சி.பி.அய். அதிகாரிகள். கண்கண்ட சாட்சிகளாக முருகேசனின் சித்தியும், அத்தையும் உள்ளனர். ஆனால், அவர்களது சாட்சியத்தை முழுமை யாக, விவரமாக பதிவு செய்யாமல் தவிர்த்துள்ளனர். அதேபோல் அய்யாசாமியின் உண்மையான வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்திருக்கலாமே! அவர் மாறிப்போனாலும் அந்த பதிவான வாக்குமூலம் வழக்கை வலுவாகவே காப்பாற்ற முடியுமே என வழக்கறிஞர் குழு சுட்டிக்காட்டியபோது தடுமாறுகிறார்கள் சி.பி.அய். அதிகாரிகள்.

இது ஒருபுறம் இருக்க, குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆதிக்க சாதியினரின் நலனில் அக்கறை கொண்டோர் சிலர், தொடர்ந்து சமாதானப்படுத்தி வழக்கை தள்ளுபடி செய்ய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களும் அடிக்கடி முருகேசனின் தந்தை, உறவினர்கள் ஆகியோரிடம் சமாதானம் செய்யும்படி பலவிதமான அணுகுமுறைகளைக் கையாள்கிறார்கள். இத்தகைய போக்குகள் ஒருவித நெருக்கடியைத்தான் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது ஏற்படுத்தி வருகிறது.

தலித் மக்களின் விடுதலை உணர்வை சாதி இந்துக்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்பது எதார்த்தம். ஆனால், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக அமைப்பு நடத்துவதாக சொல்லி, பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரான வேலைகளைச் செய்வது தமிழ் நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்த இரட்டை வேடம் தலித் மக்களின் விடுதலை உணர்வை காயப்படுத்துகிறது. கட்டைப் பஞ்சாயத்து பரவலாகி, தலித் மக்கள் மிரண்டு போகிற சூழலை பதவி சுகத்தையும் பணம் தரும் பலன்களையும் அனுபவிப்போர் உருவாக்கியுள்ளனர். இந்தச் சூழல், விடுதலை உணர்வை வலுப்படுத்தும் அக்கறையுள்ள தோழமைச் சக்திகளை ஒருங்கிணைப்பதையும் செயல்திட்டத்துடன் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.
Pin It