Ambedkar
பவுத்தத்தை இந்துயிசத்துடன் ஒப்பிட்டதைப் போல, இந்து அல்லாத பிற மதங்களுடன் ஒப்பிட்டால், பவுத்தத்தின் நிலை என்ன? இந்து அல்லாத பிற மதங்கள் ஒவ்வொன்றையும் விரிவாக பவுத்தத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இயலாதது. எனவே, என்னுடைய முடிவுகளை நான் தொகுத்து தருவதே சரியாக இருக்கும்.

(i) ஒரு சமூகத்தை ஒன்றிணைக்க சட்டத்தின் அனுமதியோ, ஒழுக்க நெறிகளோ கண்டிப்பாகத் தேவை. இவையிரண்டும் இல்லையெனில், சமூகம் பிளவுண்டு போகும். எல்லா சமூகங்களிலும், சட்டம் மிகச் சிறிய அளவிலான பங்கையே வகிக்கிறது. அது, சிறுபான்மையினரை சமூக ஒழுங்கமைவுக்குள் வைத்திருப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்களின் சமூக வாழ்க்கை, ஒழுக்க நெறியுடன் இருப்பதைப் போன்று கொள்ளப்படுகிறது. எனவே, ஒவ்வொரு சமூகத்திலும் ஒழுக்க நெறி என்ற பொருளில், மதம் எல்லா மக்களையும் கட்டுப்படுத்தும் கொள்கையாக இருக்கிறது.

(ii) அவ்வாறு வரையறுக்கப்பட்ட மதம், முதலில் அறிவியல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். மதம் அறிவியலோடு பொருந்திப் போகவில்லை எனில், அது தன்னுடைய மதிப்பை இழக்கிறது; கேலிக்குரியதாகிறது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் கொள்கையையும் அது இழந்து விடுகிறது. இறுதியாக, சில காலம் கழித்து அது சிதைந்து முடிவுக்கு வந்துவிடும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், மதம் இயங்க வேண்டும் எனில், அது பகுத்தறிவோடு இருக்க வேண்டும். அதற்கு மற்றொரு பெயர்தான் அறிவியல்.

(iii) சமூக ஒழுக்க நெறிக்கு வித்திடும் மதம், மற்றொரு பரிசோதனைக்கும் ஆட்பட வேண்டும். மதம், வெறும் ஒழுக்க நெறிகளைக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதன் ஒழுக்க நெறிகள் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த மூன்று அடிப்படைக் கொள்கைகளை, சமூக வாழ்க்கையின் கோட்பாடாகக் கொண்டிருக்கவில்லை எனில், அம்மதம் அழிந்துவிடும்.

(iv) மதம் வறுமையைப் புனிதமானதாகவோ, உன்னதமானதாகவோ ஆக்கக் கூடாது. செல்வத்தை வைத்திருப்போர் அத்தகைய செல்வங்களைத் துறப்பது வேண்டுமானால், வாழ்த்துக்குரியதாக இருக்கலாமே தவிர, வறுமை வாழ்த்துக்குரியதாக இருக்கவே முடியாது. வறுமையைப் புனிதப்படுத்துவது, அந்த மதத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும்; மதத்தை ஒழுக்கமற்ற குற்றத்திற்குரியதாக ஆக்குவதாகும்; இப்புவியை ‘நரக'மாக்குவதற்கு ஒப்பாகும்.

எந்த மதம் இவற்றையெல்லாம் நிறைவேற்றுகிறது? இக்கேள்விக்கு விடையளிக்கும்பொழுது, ‘மகாத்மா'க்கள் எல்லாம் மறைந்து விட்டார்கள்; எனவே இவ்வுலகம் இன்னொரு புதிய மதத்தைக் காண முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். தற்பொழுது நிலவுகின்ற மதங்களிலிருந்துதான் நாம் தேர்ந்தெடுக்க முடியும். எனவே, தற்பொழுதுள்ள மதங்களைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்பொழுது நிலவும் மதங்களில் ஒரு மதம் இத்தகைய பரிசோதனைகளை நிறைவு செய்கிறது. ஆனால், கேள்வி என்னவெனில், அனைத்து சோதனைகளையும் நிறைவு செய்யும் மதம் இருக்கிறதா என்பதுதான். எனக்குத் தெரிந்த வரையில், இவ்வகையான அனைத்துப் பரிசோதனைகளையும் நிறைவு செய்யும் ஒரே மதம் பவுத்தம்தான். வேறு வகையில் சொன்னால், உலகம் ஏற்கக்கூடிய ஒரே மதம் பவுத்தம்தான். ஒரு புத்துலகம் பழைய உலகிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று உணரப்பட்டால் அதற்கு ஒரு மதம் தேவைப்படுகிறது. அந்தப் புத்துலகத்திற்குப் பழைய உலகம் கொண்டிருந்ததைவிட மேலான ஒரு மதம் தேவைப்படுகிறது. அந்த மதம் புத்தரின் மதமாக மட்டுமே இருக்க முடியும்.

இவை அனைத்தும் கேட்பதற்கு முற்றிலும் விந்தையாகத் தோன்றலாம். இதற்குக் காரணம், புத்தரைப் பற்றி எழுதியவர்களில் பெரும்பான்மையினர், புத்தர் ‘அகிம்சை'யை மட்டுமே அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டிருப்பதுதான். இது, மாபெரும் தவறு. புத்தர் ‘அகிம்சை'யை அறிவுறுத்தினார் என்பது உண்மைதான். அதன் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அது மாபெரும் கோட்பாடு. அதைக் கடைப்பிடிக்காவிட்டால், உலகத்தைக் காப்பாற்ற முடியாது. நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது என்னவென்றால், அகிம்சையோடு புத்தர் பல்வேறு கொள்கைகளை அறிவுறுத்தியிருக்கிறார். அவருடைய மதத்தின் ஒரு பகுதியாக சமூக சுதந்திரம், அறிவுச் சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றையும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

புத்தர் சமத்துவத்தை அறிவுறுத்தும்போது, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மட்டும் சமத்துவத்தை வலியுறுத்தவில்லை; ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலும் சமத்துவத்தை வலியுறுத்துகிறார். புத்தரின் அறிவுரைகள் மிகவும் நவீனமானவை; அது மக்களின் சமூக வாழ்க்கையில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. அதனுடைய முக்கிய நோக்கம், மனிதன் பூமியில் வாழும்போது அவனுக்கு விடுதலையை கொடுப்பதேயன்றி, அவன் இறந்த பிறகு ‘சொர்க்க'த்தில் அவனுக்கு விடுதலையை உறுதிப்படுத்துவது அல்ல. புத்தருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு ஒரு மதப் பிரச்சாரகரை நாம் காண்பது அரிது.

IV

பவுத்த கொள்கைகளை எப்படிப் பரப்புவது? மூன்று வழிமுறைகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன : 1. பவுத்த பைபிளை உருவாக்குவது 2. பிக்கு சங்கத்தின் அமைப்பு, நோக்கம் மற்றும் செயல் திட்டங்களில் மாற்றங்கள் செய்வது 3. உலக பவுத்த பிரச்சார செயல்பாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பது.

பவுத்த பைபிள் ஒன்றை உருவாக்குவதுதான் முதலும் முக்கியமுமான தேவையாக இருக்கிறது. பவுத்த நூல்கள் மிகவும் பரந்துபட்டவை. பவுத்தத்தின் சாரத்தை அறிந்து கொள்ள முயலும் ஒருவர், கடல் போன்ற பவுத்த இலக்கிய நூல்களில் நுழைந்து செல்ல வேண்டும். பவுத்தம் தவிர பிற மதங்களில் உள்ள மாபெரும் வாய்ப்பு என்னவெனில், ஒவ்வொரு மதத்திலும் ஒரு நூலை கையில் எடுத்துச் சென்று, எங்கு வேண்டுமானாலும் சென்று படிக்கக்கூடிய அளவில் அது கைக்கு அடக்கமாக உள்ளது. பவுத்தத்திற்கு அத்தகைய கையடக்க நூல் இல்லாதது, ஒரு குறையாகவே இருக்கிறது. இந்திய ‘தம்மபதம்' பைபிள் போன்று இல்லை. எல்லா மதங்களும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளன. தத்துவங்கள் மற்றும் கற்பனையான சித்தாந்தங்கள் வடிவில் சொல்லப்பட்டால், அந்த நம்பிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாது. அந்தக் கற்பனை, சில மாயை அல்லது காப்பியம் அல்லது பைபிள் போல இருக்க வேண்டும். இதை இதழியலில் ஒரு ‘கதை' என்பார்கள். ‘தம்மபதம்' ஒரு கதையாகப் போற்றப்படவில்லை. கற்பனை சித்தாந்தங்களைக் கொண்டு அந்த நம்பிக்கை கட்டப்பட்டுள்ளது.

பவுத்த நற்செய்தி - (i) புத்தரின் சுருக்கமான வாழ்க்கையைக் கொண்டிருக்க வேண்டும் (ii) சீனாவின் தம்மபதம் (iii) புத்தரின் சில முக்கிய வசனங்கள் (iv) பவுத்த நிகழ்வுகள், பிறப்பு, தொடக்கம், திருமணம் மற்றும் இறப்பு. ஒரு நற்செய்தி நூலை உருவாக்கும்போது, அதன் மொழிநடையை கவனத்தில் கொள்ள வேண்டும். சொல்லப்படும் செய்தி, மொழியை உயிர்ப்புள்ளதாக மாற்ற வேண்டும். அது ஒரு கட்டுரையாகவோ, நெறியை விளக்குவதாகவோ இல்லாமல், எழில் பொங்கும் நடையுடன் இருக்க வேண்டும். தெளிந்த நீரோடையாக, உயிர்ப்புடனும் ஒருவித வசியத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.

தமிழில் : புலேந்திரன்

- வளரும்
Pin It