டாக்டர் என். ஜெயராமன் அவர்களின் பேட்டி இந்த இதழிலும்

Dr.Jayaraman
சமூகப் பணிகளில் உங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்வது, உங்களின் மருத்துவப் பணிக்கு உதவிகரமாக உள்ளதா?

டாக்டர் ஜெயராமன் என்பவர், தலித் சமூகப் பணிகளில் ஆர்வமுள்ளவர் என்பதை தலித் அல்லாத அனைவரும் அறிந்துதான் உள்ளனர். மருத்துவத் துறையில் நான் திறமையானவன் என்பதையும் இவர்கள் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதால், எனக்கு அது எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை. இன்னமும் தலித் அல்லாத ஆதிக்க சாதியினரின் நன்மதிப்பைப் பெற்றவன் நான். நல்ல மருத்துவரைத் தெரிவு செய்வதில் பொதுவாக மக்கள் சாதி பார்க்க முடியாது. இன்றைக்கு புதுக்கோட்டையில் மருத்துவ சேவையில் மட்டுமல்ல, ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் தலித்துகள், மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். அவர்களில் நானும் ஒருவன்.

தலித் மக்களின் சுய வளர்ச்சிக்கு தாங்கள் முன்வைக்கும் திட்டங்கள் என்ன?

தலித் மக்கள் தங்களை வளர்த்துக் கொள்வதில் நேர்மையாகவும், திறமையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும். தலித்துகள் விசயத்தில் சாதிதான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது. மற்றவர்களுக்கு இந்த அவலம் கிடையாது. எனவே, தலித்துகள் எப்போதும் தங்கள் சமூகத்தின் ஆளுமையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தனி நபரையும், சமூகத்தையும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனியாகப் பிரித்துப் பார்க்கவில்லை. ஒவ்வொரு தலித்தும், கடமையுணர்வுடனும், குறிக்கோளுடனும் பணியாற்ற வேண்டிய தருணம் இது.

தலித் மக்களிடம் தங்கள் சமூகம் பற்றிய மனநிலை எவ்வாறு உள்ளதாக நீங்கள் கருதுகிறீர்கள்?

படிக்காத தலித்துகள் சரியான வழிகாட்டுதலின்றி முறைப்படுத்தப்படாமல் சிதறுண்டு கிடக்கிறார்கள். நாம் இப்படி அடிமைப்பட்டு வாழவே பிறந்திருக்கிறோம் என்றெண்ணி வாழ்ந்து வருகிறார்கள். தங்கள் வீடுகளுக்குள்ளேயே படித்த உத்தியோகம் பார்க்கும் தலித்துகள், படிக்காதவர்களைப் புறக்கணிக்கும் நிலை உள்ளது. இதுவும்கூட ஒரு வகையில் வன்கொடுமைதான். படித்தவர்களில் பெரும்பாலோர் இந்த சமூகத்தில் பிறந்துவிட்டதற்காக வெட்கப்பட்டுக் கொண்டு, இயன்ற வரை தங்களை மறைத்துக் கொண்டு, போலி அடையாளங்களையே தமதாக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையை மாற்றுவதற்கு இவர்களுக்குப் போதிய தலித்தியக் கல்வி தேவை.

அரசுப் பணியில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேரும் ஒரு தலித்கூட, தன் சாதியை மறைத்துக் கொண்டு தன்னை ஆதிக்க சாதியினரின் அனைத்து வக்கிரங்களுக்குள்ளும் உட்படுத்திக் கொண்டு வாழும் சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில், சிவகாமி மற்றும் கிருத்துதாசு காந்தி போன்றவர்கள், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். இதர 99 சதவிகித தலித்துகள் போலவே இவர்களும் இருந்திருக்கலாம். தலித் சமூகத்திலிருந்து உயர்ந்த பதவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புள்ள அனைவரும் இவர்களைப் போல, தன் சமூகத்தினை அடையாளப்படுத்திக் கொள்பவர்களாக, தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கையிலெடுப்பவர்களாக வெளியே வர வேண்டும். இவர்களின் பாதை, மற்ற தலித்துகளுக்கு சரியான வழிகாட்டுதலாகவும், தூண்டுதலாகவும் இருக்கிறது.

அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் இம்மூன்றும் எவ்வாறு தலித் விடுதலைக்கு உதவும் என்று எண்ணுகிறீர்கள்?

மார்க்சியம் உலகளாவிய மனித ஏற்றத்தாழ்வுகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. கருத்து முதல் வாதம் சமூக விடுதலைக்கு எதிரானது மட்டுமல்ல; சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு மூலமானதும் கூட. மதம் அபின் என்றார் மார்க்ஸ். தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமைக்கு அடிப்படை சாதி, சாதிக்கு அடிப்படை கடவுள், கடவுளுக்கு அடிப்படை இந்து மதம், இந்து மதத்திற்கு மூலம் மநுவும் பார்ப்பானும். எனவே, பார்ப்பானை ஒழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்றார். டாக்டர் அம்பேத்கர் எல்லா இழிவிற்கும் காரணம் இந்துமதம். இந்து மதம் வாழும் வரை சாதி ஒழியாது. இதற்குள் இருந்துகொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்று கூறினார். இம்மூன்று சித்தாந்தங்களுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மய்யப்படுத்துகின்றன. எனவே, இம்மூன்றையும் முழுமையாகச் செயல்படுத்தும்போது, தலித் விடுதலை பிறக்கும் என நான் நம்புகிறேன்.

ஒடுக்கப்பட்டுள்ள அனைத்து தேசிய இன விடுதலைக்கும், பெண் விடுதலை என்பது மய்யப்பொருள். மொழி, இனம், சாதி அனைத்தையும் கடந்து உலகளவில் ஒடுக்கப்படும் ஓர் இனம் பெண்ணினம்தான். தன்னை ஒரு பெண்ணியவாதி என்று கூறிக் கொள்வதை, இன்றைய சமூக சிந்தனையாளர்கள் பெருமையாக்கிக் கொண்டுள்ளார்கள். உண்மையில் பெரியார் கூறுவது போல், ‘‘ஆண்கள் பேசும் பெண் விடுதலை, பெண்களை முழுமையாக ஏமாற்றும் ஒரு உத்திதான்.'' தலித் சமூகத்துப் படித்த ஆண்கள்/பெண்கள் முழுமையாகத் தங்களை இந்துத்துவத்திலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தெளிவும், பகுத்தறிவும் பெறும்போது முழு விடுதலை கிடைக்கும். தலித் விடுதலையில், தலித் பெண்களின் பங்களிப்பு ஆண்களைவிட அதிகமானதாகும். ஆனால், கல்வி பயின்ற தலித் ஆண்களாலும் பெண்களாலும் இன்று தலித் விடுதலை மேலும் இறுக்கமடைகிறது. இந்துத்துவ வழிபாடுகளிலும், சடங்குகளிலும் அவர்களின் ஈடுபாடு அதீதமாக உள்ளது. அது, மற்ற ஆதிக்கச் சாதியினரின் தொடர்பால் ஏற்படும் பாதிப்பு. அவர்களை மீட்டெடுப்பதற்கு, நாம் மிகக் கடுமையான அறிவுப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டும். அதற்கு முன் ஆண்கள் பெண்ணிய சிந்தனையாளர்களாக மாற வேண்டும். பிற இயக்கங்களைப் போலவே, தலித் இயக்கங்களும் ஆண்களின் இயக்கமாக உள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் தொடங்கியுள்ள டாக்டர் அம்பேத்கர் பட்டயப் படிப்பில் சேர்ந்து நீங்கள் பயின்றதோடு, அதற்கான தகவல் மய்யத்தையும் புதுக்கோட்டையில் நடத்தி வருவதாக அறிந்தோம். அதுபற்றி சொல்லுங்கள்.

தலித் மக்கள் டாக்டர் அம்பேத்கரை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கின்றார்கள். மற்றவர்கள் அவர் இந்திய அரசியல் சட்டத்தை எழுதியவர் என்ற அடைப்புக்குள் நிறுத்திவிடுகின்றனர். அவர் எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்தி 50 ஆண்டுகள் ஆன பிறகும்கூட இந்தியாவில், இன்றுள்ள அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்திற்கும் அவருடைய எழுத்துகள் தீர்வளிக்கின்றன. சமூக, பொருளாதார, மதவாத, அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டங்களை அவர் முன்வைத்திருக்கிறார். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை, தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினை, இந்திய ஜனநாயகத்தின் இறையாண்மை, சாதி ஒழிப்பு, ஏற்றத்தாழ்வான பொருளாதார வளர்ச்சி, அனைத்திற்கும் அவர் தெளிவான தீர்வினைக் கொடுத்திருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இன்று மூன்றாம் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் உலகமயமாதல் மற்றும் மத அடிப்படைவாத அரசியலுக்கானத் தீர்வுகளை அன்றே செழுமைப்படுத்திக் கொடுத்தவர்தான் டாக்டர் அம்பேத்கர். இன்றைய அரசியல்வாதிகள் காந்தியத்தை உயர்த்திப் பிடிக்கின்றார்களே தவிர, அம்பேத்கரை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இந்தியா எல்லாத்துறைகளிலும் சிறக்க அம்பேத்கரை ஆய்வு செய்ய வேண்டியது, ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமையாக இருக்கின்றது. ஏனெனில், அவர் தத்துவம், பொருளாதாரம், வரலாறு, மானுடவியல், சட்டம், அரசியல், சமூகவியல் ஆகிய அனைத்துத் துறையிலும் மேதை என்பதைவிட, தனது ஒட்டுமொத்த சிந்தனையையும் இந்திய மக்களுக்காக விட்டுச் சென்றிருக்கிறார். எனவேதான் அவரைப் பற்றிய கல்வியும், ஆய்வும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இன்றைய தேவையாக உள்ளது.

தலித் இயக்கங்களில் நீங்கள் உங்களை ஏன் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை?

அனைத்து தலித்திய இயக்கங்களையும் நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன். ‘‘ஒரு மனிதன் ஏதேனும் ஒருவகையில் யாருக்கேனும் ஒருவனுக்குப் பயனுள்ளவனாக இருப்பான்'' என்கிறார் இங்கர்சால். அதுபோலவே தலித்திய இயக்கங்கள் யாருக்கேனும் ஒருவருக்காவது உதவியாக இருக்கும். அது மகிழ்ச்சியானது தானே! ஒரே ஒரு இயக்கத்திற்குள் அய்க்கியமாகி விடுவதைவிட, எல்லா இயக்கங்களில் உள்ளவர்களுக்கும் துணையாக இருப்பது மேலும் நட்பை வளர்க்கும்; நமது பணி பரந்து விரிந்து செல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். எனவே, எல்லா இயக்கங்களும் என்னை ஏற்றுக் கொள்கின்றன; நானும் எல்லா இயக்கங்களையும் ஏற்றுக் கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உள்ள திரை விலக வழி என்ன?

சாதிகள் இருக்கின்றவரை சாதி மோதல்கள் இருந்து கொண்டேதான் இருக்கும். இங்குதான் பார்ப்பனியம் வெற்றி பெறுகின்றது. விதையை விதைத்தவர்கள், உச்சத்தில் நின்று கொண்டு அறுவடையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்தின் அடியாள் கூட்டம்தான் இன்றைய பிற்படுத்தப்பட்டவர்கள். வேதகால தீண்டாமையின் அத்தனை வகை இன்னல்களையும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இன்றைக்கும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான். பிற்படுத்தப்பட்ட மக்கள் நான்கு வர்ணத்தில் தங்களின் நிலை எங்கேயுள்ளது என்பதை அறியாமல், தங்களை உயர்ந்தவர்களாக நினைத்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி சுய இன்பம் காண்கிறார்கள். அவர்களின் தலைவர்களும் இதை அம்மக்களுக்கு எடுத்துரைக்கவில்லை. இது புரியாமல் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் நிரந்தரப் பகைவர்களாக இருந்து வருகின்றார்கள்.

நான் பேசுகின்ற கூட்டங்களிளெல்லாம் சாதி மோதல்கள் தீர கூறுகின்ற செய்தி ஒன்றுதான். பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் உயர வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்கள், தம் இன மக்கள் கல்வி பெறுவதற்குப் போராட வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் தங்களின் பொது எதிரியை அடையாளம் கண்டு அழிக்க முடியும். பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் சமூகம் மேம்பட உழைப்பதைத் தவிர்த்து, தலித் மக்களைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில் கவனம் செலுத்துவதில் இன்பம் காண்கிறார்கள். இது, அவர்களது சமூக வளர்ச்சியைப் பின்னுக்கு இழுப்பதை அவர்கள் அறியவில்லை.

தென் மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டமாக புதுக்கோட்டை இருந்தும், இங்கு ஏன் சாதி மோதல்கள் இல்லை. இதற்கான சமூகச் சூழ்நிலை என்ன?

தமிழ்நாட்டில் வன்கொடுமை அதிகமாக உள்ள மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. கள்ளர் சமூகத்திற்கு இணையாக அரசியலிலும் பொருளாதாரத்திலும் இங்கு முத்தரையர்கள் இருப்பது ஒரு முக்கியக் காரணம். தலித்துகளும் முத்தரையர்களும் கள்ளர் சமூகத்தினரின் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. அவ்வாறு விரிசல்கள் வரும்போது தலித்துகளுக்கு முத்தரையர்களும், முத்தரையர்களுக்கு தலித்துகளும் மறைமுகப் பின்புலமாக இருந்து வருவதால், கள்ளர் சமூகத்தின் தனிப்பட்ட ஆதிக்கம் என்பது இங்கு வெற்றி பெறவில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை உட்பிரிவுகள் இருந்தாலும், சமூக இயக்கங்களில் அனைவரும் ஓரணியில் பங்கு பெறுவது இம்மாவட்டத்தின் சிறப்பு அம்சம். உட்பிரிவுகளைப் பாராமல் இயக்கக் கட்டமைப்புகள் பலமானதாக இருப்பதால், சாதி இந்துக்கள் மத்தியில் இது அச்சத்தைக் கொடுத்து வருகின்றது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஒரு முன்னுதாரணமானதாகும். என்னைப் போன்றவர்களின் பங்களிப்பும் இதில் நிறைய உள்ளது.

அம்பேத்கர் தோற்றுவித்த ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு', இந்திய சுதந்திரக் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி ஆகியவற்றின் தொடர்ச்சியாக இன்றைய தலித் இயக்கங்கள் இருக்கின்றனவா?

டாக்டர் அம்பேத்கர் ஏற்படுத்திய இந்த மூன்று அமைப்புகளையும் இன்று உள்ள இயக்கங்களோடு தொடர்புபடுத்த முடியாது. சமூக மாற்றத்தை உருவாக்கும் பண்பாட்டுப் புரட்சியின் மூலம் பெறப்படும் அரசியல் அதிகாரம் மட்டும்தான் இம்மக்களின் அவலங்களைப் போக்கும்; இம்மக்களை விடுதலை செய்யும் என்றார் டாக்டர் அம்பேத்கர். அதைத்தான் அவர் ‘கற்பி, போராடு, ஒன்று சேர்' என்றார். இன்றைய இயக்கங்கள், அவர் கூறிய கடைசித் தீர்வான அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயக்கங்களை நடத்துகின்றன. ஒருவேளை அரசியல் அதிகாரம் என்ற வாய்ப்பு கிடைத்தால்கூட, சமூக மாற்றம் நிகழ வாய்ப்பே கிடையாது. அது வெறும் அதிகாரப் பகிர்வாக மட்டுமே இருக்கும். சமூக, சமத்துவம் ஏற்பட அதில் முழு வாய்ப்பில்லை.

டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டிற்கு முன்புவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த தலித் இயக்கங்கள், தற்போது பட்டிதொட்டிகளில் எல்லாம் விரிவடைந்திருக்கின்றன. இயக்கங்களின் எண்ணிக்கை பலவாகப் பெருகியிருக்கின்றது என்பது வளர்ச்சிதான். வீழ்ச்சி அல்ல. ஆனால், அன்று தொடங்கப்பட்ட இயக்கங்கள் அனைத்தும் பார்ப்பனியக் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்கான இயக்கங்களாகச் செயல்பட்டன. இன்றைய இயக்கங்கள் அதிகாரப் பகிர்விற்காக, இந்துத்துவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சுயமிழந்து நிற்கின்றன. டாக்டர் அம்பேத்கர், மக்கள் நலன் புறக்கணிக்கப்படும் போதெல்லாம் அரசியல் அதிகாரத்தைத் துச்சமெனத் துறந்தார். ஆனால், இன்றைய தலித் தலைவர்கள் மக்கள் நலனை காவு கொடுத்து, அரசியல் அதிகாரத்தை மய்யப்படுத்துகின்றனர். தலித் விடுதலையை முன்னிறுத்தும் பெரும்பாலான இயக்கங்கள், அம்பேத்கரை இன்னும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. தலித் தலைவர்களில் வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் டாக்டர் அம்பேத்கரை முழுமையாகப் படிக்கவில்லை.

சந்திப்பு: அ.த. யாழினி
பேட்டி அடுத்த இதழிலும்
Pin It