தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள எண்டப்புலி கிராமத்தில் பொது இடத்தில் வைத்து, பட்டப்பகலில் சாதி இந்துக்களால் தலித் துப்புரவுத் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த நபர்களை கைது செய்யாமல், காவல் துறை தப்பிக்க வைத்துள்ளது. சாதி இந்துக்களின் மிரட்டலால் உள்ளூர் காவல் துறை, கொலை நடந்த கிராமத்திற்குச் சென்று நேரடி விசாரணையை நடத்தாமல் உள்ளது. 10.8.2006 அன்று இக்கொலையை கேள்வியுற்ற ‘மக்கள் கண்காணிப்பகம்' என்ற மனித உரிமை அமைப்பு, 11.8.2006 அன்று இவ்விடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது.

எண்டப்புலி கிராமத்தில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சங்கிலி (65), கடந்த 40 ஆண்டுகளாக அவ்வூரில் உள்ள சாதி இந்துக்கள் நிர்ணயிக்கும் வேலையைச் செய்து, தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். கொலை நிகழ்ந்த அன்று (9.8.2006) சங்கிலியின் முதல் மகன் மாணிக்கம், மெயின் ரோட்டில் உள்ள சுவரொன்றில் திருமண விழா போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தார். இதுபோன்ற சுவரொட்டிகளை எந்தவொரு தலித்தும் அப்பகுதியில் ஒட்டக்கூடாது என்பது, அப்பகுதி சாதி இந்துக்களின் எழுதப்படாத விதியாக உள்ளது.

சுவரொட்டி ஒட்டுவதை அறிந்த சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன், தகாத வார்த்தைகளால் மாணிக்கத்தையும் அவரது சாதியையும் நேரடியாகத் திட்டினார். இப்படித் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ளாத மாணிக்கம், இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்க, உடனடியாகப் பதில் சொன்னதை பொறுத்துக் கொள்ளாத செல்லப்பாண்டியன், மாணிக்கத்தை தாக்க ஆராம்பித்தார். தாக்குதலிலிருந்து தப்பித்து, ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் ஏறினார் மாணிக்கம். பின் தொடர்ந்து ஓடிய செல்லப்பாண்டியன், பேருந்தில் ஏறி பொதுமக்கள் முன்னிலையில் கீழே தள்ளி சோடா பாட்டிலை உடைத்து, மாணிக்கத்தின் இடது கையில் குத்தினார். ஆனால், இதை சமாளித்த மாணிக்கம் அதிலிருந்து தப்பி அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு ஓடினார்.

அதே நேரம் இச்சம்பவம் நடந்த பகுதியின் டீக்கடைப் பகுதிக்கு மாணிக்கத்தின் அப்பா சங்கிலி வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் மாணிக்கம் அருகிலிருந்த காவல் நிலையத்தை அடைந்து விட்டார். இதையறிந்த மாணிக்கத்தின் தந்தை, கடந்த 40 ஆண்டுகளாக தான் வேலை பார்த்து வந்த மூக்கையா (தேவரிடம்) இது குறித்து முறையீடு செய்வதற்குச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்த செல்லப்பாண்டியன், சின்னச்சாமி, முருகன், பொன்னையா மற்றும் செல்லம் ஆகியோர் மூக்கையாவின் வீட்டிற்குச் சென்றனர். அங்கேயே நீண்ட கூர்மையான கத்தியை வைத்து சங்கிலியை சாதி இந்துக்கள் குத்தினர். சாதி இந்துக்களால் தன் கண்முன் நடந்த இக்கொலையை, தந்தையை தேடிச்சென்ற சங்கிலியின் இரண்டாவது மகன் மகேந்திரன் நேரடியாகப் பார்த்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற காவல் துறை, கொலை செய்யப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. 9.8.2006 அன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெரிய குளம் வடகரை காவல் நிலையத்தில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டம் 320, 302, 341 மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்க்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989, 3(2) (V) இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று முழுவதும் முன்னாள் எம்.எல்.ஏ. மூக்கையாவின் பாதுகாப்புடன் குற்றவாளிகள் இருந்துள்ளனர். 11.8.2006 அன்று குற்றவாளிகள் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

‘மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் உண்மை அறியும் குழு கண்டறிந்த தகவலின்படி, மாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கீழ்க்கண்ட பரிந்துரைகளை முன்வைக்கிறது: 9.8.2006 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் குற்ற எண் 228/06 மற்றும் 229/06 இல் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள செல்லப்பாண்டியன், சின்னசாமி, முருகன் மற்றும் செல்லம் என்கின்ற நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

 காலம் காலமாக அங்கு நடைபெற்று வரும் சாதியத் தீண்டாமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆதிக்கச் சாதியினர் வாழும் பகுதிக்கு செருப்பு அணிந்து செல்லத் தடையை நீக்க வேண்டும். டீக்கடைகளில் தலித்துகளுக்கென்று தனி டம்ளரில் டீ வழங்கும் தீண்டாமைக் கொடுமையைத் தடை செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் மரியாதையின் சின்னமாக கருதப்படும் தோளில் துண்டு அணிந்து வருவதைத் தடுக்கும் ஆதிக்க சாதியினர் தண்டிக்கப்பட வேண்டும்.

 வலுக்கட்டாயமாக தலித்துகள் ஆதிக்க சாதியினரை சாமி என்று அழைக்க நிர்பந்திக்கப்படுவதைத் தடை செய்ய வேண்டும்.

 தீண்டாமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 இல் குறிப்பிட்டுள்ளபடி மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஆர்.டி.ஓ., கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

 தொடர்ச்சியாக இந்த கிராமத்தில் தீண்டாமைக் கொடுமை நிகழ்ந்து கொண்டே உள்ளது. தீண்டாமை தடுப்புச் சட்டத்தின்படியும், 1995 இல் கொண்டு வரப்பட்ட விதிகளின் படியும் உடனடியாக அந்த கிராமத்தை அடையாளம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி முன் தொகை 1,50,000 ரூபாயும், பின்னர் 75,000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும். 

மாணவர்களையும் ஆட்கொள்ளும் ஜாதி
தேனி மாவட்டம் எண்டப்புலி புதுப்பட்டியில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 17 அருந்ததியர் மாணவர்கள், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருந்ததியர்கள் தங்கள் பகுதிக்குள் வந்தால் தாக்க வேண்டும் என்கிற வெறியோடு கள்ளர்கள் இருந்ததால், அருந்ததியர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். மாவட்டக் கல்வி அதிகாரி தலையிட்டு, பெரிய குளத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மேற்கண்ட 17 அருந்ததியர் மாணவர்களையும் சேர்த்தார். அந்த மாணவர்களைச் சந்தித்தபோது, அரசு கள்ளர் உயர் நிலைப் பள்ளியில் மாணவர்களாலும், ஆசிரியர்களாலும் தாங்கள் சந்தித்த வந்த வன்கொடுமைகளைப் பட்டியலிட்டனர்.

சத்துணவில் சாப்பாடு வாங்கிக் கொண்டு வரும்போது, சோற்றில், கள்ளர் மாணவர்கள் எச்சில் துப்புவார்கள். செருப்பணிந்து சென்றால், செருப்பை கரும்புத் தோட்டத்தில் வீசி விடுவார்கள். வெள்ளை சட்டை அணிந்து சென்றால், சட்டையில் பேனா மையை அடித்து விடுவார்கள். இரண்டாவது படிக்கும் கள்ளர் சமூகச் சிறுவர்களைக்கூட, 8 ஆவது படிக்கும் அருந்ததியர் மாணவர்கள் ‘அப்பா' என்றுதான் அழைக்க வேண்டும்.  8ஆவது வகுப்பு, சமூகஅறிவியல் புத்தகத்தில் இருக்கின்ற அம்பேத்கர் அட்டைப் படத்தில் அம்பேத்கர் முகத்தை அடித்துவிட்டு ‘தேவர் வாழ்க' என்று எழுதி வைப்பார்கள். "சக்கிலியன்னா பொதுச் சொத்து. யார் வேண்டுமானாலும் அடிப்போம்'' என்பார்கள்; அடிப்பார்கள். இது குறித்து ஆசிரியரிடம் முறையிட்டால், "ஏண்டா வெளிக்காயம் படும்படி அடிக்கிறீங்க. உள்காயம் படும்படி அடிங்கடா'' என்பார்கள். ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டும்போது "ஏண்டா சக்கிலியப் பய மாதிரி இருக்கீங்க'' என்பார்கள்.

பள்ளிகளிலேயே இன்றும் தீண்டாமை தொடர்கிறது என்பதற்கு ‘எண்டப்புலி' ஒரு சாட்சி. தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கையில் இறங்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர், அருந்ததியர் மாணவர்கள் படிக்கின்ற பள்ளியைத்தான் மாற்ற முடிந்தது. கள்ளர்களின் சாதிவெறியை எதுவும் செய்ய முடியவில்லை. இன்றைய சூழலில், அருந்ததியர்கள் வேலையை இழந்து, அன்றாடம் பிழைப்பு நடத்தவே சிரமப்படுகிறார்கள். பள்ளி மாறிய மாணவர்களுக்கு சீருடைகூட எடுத்துத்தர முடியவில்லை. அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு, இம்மாணவர்களுக்கு சீருடை கொடுத்து உதவியது.
Pin It