கல்வி, உயர்வு, மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் போன்றவற்றிற்கு அடிமை முறையில் வாய்ப்புள்ளது. ஆனால், தீண்டாமையில் இத்தகைய வாய்ப்புகள் துளியும் இல்லை. அதுமட்டுமல்ல, நிர்பந்தங்கள் அடங்கிய கொடூரமான வாழ்க்கையையே தீண்டாமை தருகிறது. எனவே, அடிமையினும் கொடுமையானது மட்டுமல்ல; கேவலமானதும் தீண்டாமைதான்.

-டாக்டர் அம்பேத்கர்

மீரட்டும் குஜராத்தும்

Victim's mother
குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலையைப் போன்று பேசப்பட்டது மீரட் கலவரம். இக்கலவரத்தையொட்டி, ஹசிம்புரா என்ற பகுதியில் 1987, மே 22 அன்று 35 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து, தற்பொழுதுதான் விசாரணை நடைபெறத் தொடங்கியுள்ளது. இப்படுகொலை நிகழ்ந்த அன்று ஏறக்குறைய 300 ஆண்கள் ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, அதில் திடகாத்திரமாக உள்ள 42 பேர் மட்டும் காசியாபாத் மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஓடைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இவர்களை வரிசையாக நிறுத்தி ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இன்னும் சிலர் ராணுவ வண்டியிலேயே சுடப்பட்டனர். அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து சி.பி.சி.அய்.டி. தனது அறிக்கையை அளித்தது. ஆனால், இவ்வறிக்கையை வெளியிடக் கோரி 1995 இல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டும், இன்றுவரை அது நிலுவையில் உள்ளது. குற்றவாளிகள் சுதந்திரமாகப் பிணையில் திரிகின்றனர். "நாங்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடுமையாகப் போராடினாலும் இங்கு முஸ்லிம்களைக் கண்டுகொள்ள யாருமே இல்லை'' என்கிறார், அமீனா பீ. இவர் தமது மூன்று மகன்களைப் பறி கொடுத்தவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இனப்படுகொலைக்கே இன்னும் தண்டனை கிடைக்காத நிலையில், 2002 இல் நிகழ்ந்த "குஜராத் இனப்படுகொலைக்கு” மட்டும் தண்டனை கிடைத்துவிடுமா?

நேர்மை X ஆரியம்

இந்திய ஜாதிமுறை என்ற முழு பூசணியை சோற்றில் மறைத்து "ஆப்பிரிக்காவில் சாதிமுறை” என்றொரு கட்டுரையை "காலச்சுவடு' (இதழ் 81) வெளியிட்டுள்ளது. பிரவாஹன் என்ற சவுமிய நாராயணன்தான் இதன் "கர்த்தா”. சாதி குறித்த அம்பேத்கர் - பெரியார் கருத்துகள், கல்லின் மேல் செதுக்கப்பட்ட ஆதாரங்களாய் அணிவகுத்து நின்றாலும், பார்ப்பனியம் புனைவுகளில் ஈடுபடுவதற்கு சளைப்பதில்லை. இம்மேதாவி கட்டுரையாளரின் நோக்கம், கேடுகெட்ட சாதியை ஒழிப்பது அல்ல; அதை பார்ப்பனர்கள் உருவாக்கவில்லையாம். எங்கோ ஆப்பிரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும்தான் அது உருவானதாம். எனவே, இதுகுறித்து மீளாய்வு செய்ய வேண்டுமாம்! இப்புரட்டுகளைப் படித்த பாமரர்கள் ஏமாறுவதற்கு 20 ஆங்கில நூல் குறிப்புகள். "நான்கு வர்ணத்தை நானே உருவாக்கினேன்” என்று கிருஷ்ணன் யாரிடம் சொன்னான் என்று கேட்டால், இவர்களே உருவாக்கிய பகவத் கீதையை மேற்கோள் காட்டுவார்கள். அதன் தொடர்ச்சியாக "பிரவாஹன்”கள் இப்படி ஊற்றெடுக்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அங்கு ஜாதி இருக்கிறது எனில், அதற்கு மத அங்கீகாரம் இருக்கிறதா? உலகில் எங்குமே இல்லாத புனிதப்படுத்தப்பட்ட இனவெறிதானே இங்கு இந்து மதமாக உலவிக் கொண்டிருக்கிறது. நேர்மையாக இருப்பவர்கள், அதைத் தன்னால் இயன்ற பலத்தைக் கொண்டு தாக்கி சமன்படுத்த முன்வருவார்கள். அதைத்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் செய்கிறார்கள். ஆனால், பார்ப்பனர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா?

எல்லையற்றப் படிநிலையும் - பிரிவினையும்

சாதிப் படிநிலையின் கடை கோடியில் அருந்ததியர்கள் உழல்கின்றனர் என்பது அனைவர்க்கும் தெரிந்த செய்தி. ஆனால், அவர்களுக்கும் கீழ் "துரும்பர்கள்” என்று அழைக்கப்படும் புதிரை வண்ணார்கள்' உள்ளனர் என்பது பலரும் அறியாத செய்தி. சேலம் மாவட்டத்தில் கூட்டத்துப்பட்டி என்ற கிராமத்தில், தலித் மக்களாலேயே (மூன்று பிரிவு மக்கள்) தங்கள் மீது தீண்டாமைக் கொடுமை ஏவப்படுகிறது என்று துரும்பர்கள் குமுறியிருக்கிறார்கள் என்று "தி இந்து” ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. "தலித் முரசில்” இது குறித்து 2001லேயே அட்டைப்படக் கட்டுரை வெளிவந்தது குறிப்பிடத்தகுந்தது. "துரும்பர் விடுதலை இயக்க” அமைப்பாளர் அருள்வளன், தமிழகத்தில் 12 லட்சம் துரும்பர்கள் சேரிகளில் புறந்தள்ளப்பட்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்து மதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் வரை, தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்கும் மக்களே தீண்டாமைக் கொடுமையை நிகழ்த்தும் கொடூரங்களைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. இன்னும் சில காலங்கள் கழித்து, துரும்பர்களிடையே உட்சாதிகளும் உருவாகி, அவர்களுக்குள்ளும் ஜாதிகள் தோன்றும். அதனால்தான் இந்து மதத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக, படுகொலைகளில் ஈடுபடுகின்றன இந்து பயங்கரவாதக் கட்சிகள்.

தலித் இயக்கத்தில் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று அவர்கள் தனி இயக்கம் கண்டனர். இன்று துரும்பர். படிநிலைப்படுத்தப்பட்ட சாதி முறைக்கு எல்லைகள் இல்லை. ஆக, தங்களுக்கு மேலிருக்கும் சாதியை மட்டுமே ஒட்டுமொத்த சாதி அமைப்பு உயிரோடு இருப்பதற்குக் காரணம் என்று கருதுவது, மீண்டும் மீண்டும் ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே மோதலையே வளர்த்தெடுக்கும். "பிரமிடு” போன்ற சாதி அமைப்புறையில் ஒன்றிரண்டு சாதிகள் வெளியேறினால்கூட, அந்த அமைப்பு அப்படியேதான் இருக்கும். பாதிப்பிற்குள்ளாகும் அனைவரும் வெளியேறுவதற்காக இடையறாது பிரச்சாரம் செய்வது ஒன்றே நம்முள் ஒற்றுமையை ஏற்படுத்தும். அதற்கு முதலில் இந்து அடையாளங்களிலிருந்து மீண்டெழ வேண்டும்.

Pin It