ஐங பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு
51. வெறும் அமைப்பு ஒரு கட்சியாகி விடாது. ஒரு கட்சி என்பது, கொள்கைகளால் பிணைக்கப்பட்ட மக்களின் அமைப்பு. ஒரு கட்சி, கொள்கையின்றி கட்சியாக செயல்பட இயலாது. ஏனெனில், கட்சியின் உறுப்பினர்களைப் பிணைப்பது கொள்கையைத் தவிர, வேறு எதுவும் இல்லை. கொள்கையற்ற கட்சி, ஒரு மாட்டுக் கொட்டகைப் போன்றதே. ஆகையால், தனது கொள்கைகளை வரையறுக்காத, அக்கொள்கை வழி நிற்கும் உறுதிமொழியை தனது உறுப்பினர்களிடம் பெறாத, கூட்டமைப்பின் கொள்கைகளுடன் முரண்படும் கொள்கைகள் உடைய எந்தக் கட்சியுடனும் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு இணைந்து செயல்படாது.
52. அரசியல் கொள்கைகள் மட்டும் போதாது. அக்கொள்கைகளின் வெற்றிதான் முக்கியம். அப்படியான கொள்கை வெற்றி என்பது, ஒரு கட்டுப்பாடான கட்சியின் மூலம்தான் சாத்தியமே ஒழிய, தனி மனிதர்களால் அல்ல. இந்தக் காரணங்களால் கூட்டமைப்பு தனித்துவமான காரணங்கள் இருந்தால் ஒழிய, எந்தக் கட்சியையும் சாராத சுயேச்சை வேட்பாளர்களை ஆதரிக்காது.
53. இரண்டாவதாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. ஏனெனில், அவர்களும் ஏறத்தாழ பட்டியல் சாதியினரின் நிலையிலேயே இருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பினரின் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளால், பட்டியல் சாதிகள் பெற்றிருக்கக் கூடிய அரசியல் விழிப்புணர்வை, இந்த வகுப்பினர் போதுமான அளவு பெறவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பட்டியல் சாதியினர் ஆகியோரை நாட்டில் பெரும் அதிகாரம் படைத்தவர்களாக ஆக்கியிருக்கிறது. இதுவரையில், சிறுபான்மையினராக இருந்த சாதி இந்துக்கள், தங்களை நாட்டை ஆள்பவர்களாக ஆக்கியிருந்தனர். போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பழங்குடியினரும், சிறுபான்மை சாதி இந்துக்களின் சதி வலையில் விழுந்து, அதனால் தாங்கள் அதிகாரம் படைத்தவர்களாக ஆவதற்குப் பதிலாக, அவர்களின் அடிமைகளாகத் தொடர்ந்து விடுவார்களோ என்பதுதான் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் கவலையாகும்.
பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் முதல் அக்கறை, இந்த வகுப்பினரை அவர்கள் சொந்தக் காலில் நிற்க வைப்பதேயாகும். அவர்கள் விரும்பினால், ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' தனது பெயரை ‘பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் கூட்டமைப்பு' என மாற்றி அதன் மூலம் இரு வகுப்பினரும் ஒரே பொது அமைப்பில் இணைந்து செயலாற்ற வழி வகுக்கத் தயாராக உள்ளது. இதற்கு வாய்ப்பில்லை எனில், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு அத்தகு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக உள்ளது.
54. பிற அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் நிலை எளிதாக வரையறுக்கத்தக்கது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, இந்து மகாசபை அல்லது ஆர்.எஸ்.எஸ். போன்ற எத்தகைய பழமைவாதக் கட்சிகளுடனும் எந்த உறவும் வைத்துக் கொள்ளாது.
55. தனிமனித சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை அழித்து, அந்த இடத்தில் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவதை தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகளுடன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, எந்த உறவும் வைத்துக் கொள்ளாது.
56. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு மய்ய அதிகாரக் குவிப்பில் (Totalitarianism) நம்பிக்கை இல்லை. அதனால் ஏற்கனவே மய்ய அதிகாரக் குவிப்பை கொண்டிருக்கக் கூடிய பிற அரசியல் கட்சிகளை வளர விடாத எந்த அரசியல் கட்சியோடும் இணைந்து செயல்படாது.
57. அதே நேரத்தில் பல அரசியல் கட்சிகள் உருவாவதையும் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு எதிர்க்கிறது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் திட்டம், இரு கட்சிகள் அமைப்பே. அது மட்டுமே நிலையான தன்மையையும் தனி மனித சுதந்திரத்தையும் அளிக்க இயலும். இரு கட்சிகள் ஜனநாயக முறையை அமைக்க, கூட்டமைப்பு பாடுபடும். இருப்பினும், இந்தத் திட்டம் வரும் தேர்தலுக்கு முன் இருக்கக் கூடிய இந்தக் குறைந்த காலஅளவில் நிறைவேற்றக் கூடியது அல்ல. அதனால் தற்போதைக்கு தனிமனிதர்கள் அல்லாமல், ஒரே விதமான அடிப்படை அரசியல் கொள்கைகளைக் கொண்ட, பொதுவான அரசியல் நெறிமுறைகளைக் கொண்ட, ஆனால் தனது உள்ளாட்சியில் சுயாட்சி யுடைய, பல அரசியல் கட்சிகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அகில இந்திய கட்சியை அமைத்து, ஒரு குழுவின் ஒப்புதலுடன் ஒரு பொதுவான ஒப்பந்தத்தில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, கடமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். சுருக்கமாக, கூட்டதிகாரக் கட்சியான பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியைப் போன்றதாக அது இருக்க வேண்டும்.
58. கே.எம்.பி. கட்சி, சோசலிச கட்சி, நீதிக் கட்சி போன்ற கட்சிகளை உள்ளடக்கிய அத்தகு கூட்டதிகாரக் கட்சியின் உறுப்பினராக இருக்க, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு தயாராக உள்ளது. அந்த கூட்டதிகாரக் கட்சியின் உறுப்புக் கட்சிகள், கீழ்க்காணும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்:
(1) அத்தகு கூட்டணிக்கு உட்பட்ட ஒவ்வொரு கட்சியும் அதனுடைய கொள்கைகளைத் தெளிவாக வரையறுத்திருக்க வேண்டும்.
(2) அந்தக் கட்சிகளின் கொள்கைகள் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது.
(3) கூட்டணியைக் கோரும் கட்சிகள் பட்டியல் சாதியினரின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவ உறுதியளிக்க வேண்டும்.
(4) பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் உள்கட்சி விவகாரங்களில் கூட்டமைப்பு சுதந்திரமாக செயல்பட அந்தக் கட்சி ஒப்புக் கொள்ள வேண்டும்.
(5) கூட்டதிகாரக் கட்சியின் உறுப்பினராக அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு கட்சியுடனும் உறுப்பினர் கட்சி எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது.
59. தேர்தலில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் ஆதரவை நாடும் தனி நபர்கள், கூட்டமைப்பின் நட்பு உறுப்பினர்களாக ஆக வேண்டும். மேலும், கொள்கைகள், திட்டங்கள், நெறிமுறைகளை ஒத்துக் கொண்டு உறுதிமொழி அளிக்க வேண்டும்.
முற்றும்
தமிழில் : பூங்குழலி
ஈடு இணையற்ற தேர்தல் அறிக்கை!
அகில இந்திய பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம், புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் வீட்டில் 6.10.1951 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து முடிவெடுக்க, டாக்டர் அம்பேத்கர், என். சிவராஜ் மற்றும் பாபுசாகேப் ராஜ்போஜ் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மேலும், இச்சிறப்புக் குழுவே முறைப்படி அனைத்து முடிவுகளையும் மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டமைப்பு தயாரித்த இத்தேர்தல் அறிக்கை, ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 7.10.1951 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை, இந்திய, மேற்கத்திய ஏடுகள் வரவேற்றன. இவ்வறிக்கை தனித்தன்மை வாய்ந்ததாகவும், ஈடு இணையற்ற ஒன்றாக இருப்பதாகவும், மிகவும் வெளிப்படையாக அமைந்திருப்பதாகவும் அவை குறிப்பிட்டிருந்தன.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17, பகுதி : 1 பக்கங்கள் : 385 - 403

Ambedkar

வாக்களிப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும் என்று எண்ணும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும், தன் நலனைவிட, பொதுநலனே முக்கியம் என்பதை நம்பும் இந்தியாவின் அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும்,

பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, பட்டியல் சாதியினருக்காக நிறுவப்பட்ட அகில இந்திய அரசியல் கட்சியாகும். இனி வரும் பக்கங்களில் அதன் கோட்பாடுகள், கொள்கை, செயல் திட்டங்கள், பிற அரசியல் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறித்த அடிப்படைகள் ஆகியவற்றை விளக்க முற்பட்டிருக்கிறோம்.

சென்ற இதழின் தொடர்ச்சி......

II - புதிய பிரச்சினைகள்

20. இதுவரை, ஆங்கிலேயர் இந்தியாவில் விட்டுச்சென்ற பழைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பது குறித்துப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கண்டோம். சுதந்திரத்திற்குப் பிறகு புதிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. அவை இரண்டு வகையானவை :

(அ) உள்ளாட்சி நிர்வாகப் பிரச்சினைகள் மற்றும்
(ஆ) வெளிநாட்டு உறவுகள் குறித்த பிரச்சினைகள்

அ உள்ளாட்சி நிர்வாகப் பிரச்சினைகள்

21. உள்ளாட்சி நிர்வாகப் பிரச்சினைகளில் முக்கியமானவை:

(1) மொழிவழி மாகாணங்களின் பிரச்சினை

(2) நிர்வாகத்தில் தூய்மை குறித்த பிரச்சினை

(3) கறுப்புச் சந்தை மற்றும் கட்டுப்பாடு பிரச்சினைகள்

(4) பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் ஏற்படும் தொய்வினால் ஏற்படும் பிரச்சினைகள்

22. மொழிவழி மாகாணங்களின் பிரச்சினை, மிகுந்த அவசரத் தன்மையுடையது. சென்னை, மத்தியப் பிரதேசம், பம்பாய் ஆகிய இடங்களில் மொழிவழி குழுக்களிடையே நடைபெறும் மோதல்கள், ஜனநாயகத்தையே செயல்பட விடாமல் முடக்கிவிட்டன. முற்றிலும் அரசியல் முக்கியத்துவங்களுக்காக நமது அரசியல் சட்டம் செயல்பட வேண்டுமெனில், மொழிவழி குழுக்களிடையே சமூக அமைதி நிலவ வேண்டும். இதற்கு மொழிவழி மாநிலங்களை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாக இருக்க முடியும். மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதைக் கூட்டமைப்பு வலியுறுத்தும்.

23. நிர்வாகத்தில் காங்கிரஸ்தான் ஊழலை உருவாக்கியது எனப் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு நம்புகிறது. ஊழல்வாதிகளைத் தண்டிப்பதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை. ஒரு மாநிலத்தில் அல்ல, பல மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து, காங்கிரஸ் உறுப்பினர்களே குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். இதன் மீது ஒரு விசாரணையை மேற்கொள்வதைக்கூட காங்கிரஸ் மேலிடம் அவசியமாகக் கருதவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்தி தவறு செய்தவர்களைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, காங்கிரஸ் மேலிடம் அக்குற்றச்சாட்டுகளை எழுப்பியவர்களை அடக்கி, அதன் மூலம் தவறு செய்தவர்களுக்கும், நேர்மையற்றவர்களுக்கும் வெளிப்படையாகவே பாதுகாப்பு அளிக்கிறது. மேலே உள்ள அமைச்சர்களே ஊழல் செய்யும்போது, அவர்களுக்கு கீழே உள்ள அதிகாரிகள் எவ்வாறு ஊழலற்றவர்களாக இருக்க முடியும்? ஊழலில் ஈடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக, கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதன் மூலம், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிர்வாகத் தரத்தை மேம்படுத்தும்.

24. காங்கிரசுக்கும் பெரு முதலாளிகளுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பே, பொருட்கள் கட்டுப்பாடு மற்றும் கறுப்புச் சந்தை பிரச்சினைக்குக் காரணமாகும். காங்கிரசின் தொடக்க காலம் முதல் அதற்குப் பெரு முதலாளிகளே நிதியுதவி அளித்து வந்தனர். அத்தகு பெருமுதலாளிகளின் ஆதரவிலேயே காங்கிரஸ் வளர்ந்து வந்துள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், காங்கிரசிற்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையிலான அந்தத் தொடர்பு தொடரும் எனத் தெரிகிறது. தேர்தல் நிதிக்காக பெரு முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. காங்கிரஸ் தேர்தலை சந்திக்க பெரு முதலாளிகள் உதவுவதன் மூலம் அதிகாரத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளனர்.

இதற்கானத் தீர்வு வாக்காளர்களின் கைகளில் உள்ளது. வாக்காளர்கள் பெரு முதலாளிகளின் பின்புலத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என முடிவெடுத்தால், இந்தப் பிரச்சினை தீர அது பெரிதும் உதவும். பெரு முதலாளிகளிடமிருந்து வெகுவாக விலகி நிற்கும் கூட்டமைப்பு, நாட்டின் அரசாங்கத்தைப் பெரு முதலாளிகளின் கையில் ஒப்படைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும்.

25. பணவீக்கப் பிரச்சினை நிரந்தரமாகிவிட்டதாகத் தோன்றுகிறது. அது மக்களின் வாழ்வை நாசப்படுத்துகிறது. அதற்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் தரப்படவில்லை. இதற்கான உடனடித் தீர்வை கூட்டமைப்பு வலியுறுத்தும்.

ஆ வெளிநாட்டு உறவுகள் குறித்த பிரச்சினைகள்

26. இந்தியா விடுதலை பெற்ற அன்று, அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு நண்பர்களாக இருந்து இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்தன. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்தியாவிற்கு நண்பர்களே இல்லை. எதிரிகளாக இல்லாவிட்டாலும் எல்லா நாடுகளும் இந்தியாவிற்கு எதிர் நிலையிலேயே உள்ளன. இந்த நேர் எதிரான மாற்றத்திற்கு காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கையே காரணமாகும். காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு; கம்யூனிச சீனாவை அய்க்கிய நாடுகள் அவையில் இடம்பெறச் செய்வது; கொரியப் போர் ஆகியவற்றில் இந்தியாவின் நிலைப்பாடுகளாலேயே கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது.

27. காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு கடைப்பிடிக்கும் கொள்கையில், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பிற்கு உடன்பாடு இல்லை. இந்தக் கொள்கை தொடரும் எனில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நிரந்தரப் பகைமை ஏற்படுவதோடு, இரு நாடுகளுக்குமிடையே போர் மூளவும் கூடும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், இரு நாடுகளின் நன்மைக்காக இரு நாடுகளும் நல்ல, நட்பான அண்டை நாடுகளாக விளங்க வேண்டும் எனக் கருதுகிறது. இந்த நோக்கத்திற்காக, பாகிஸ்தான் குறித்த கொள்கை என்பது இரண்டு அடிப்படைகளைக் கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.

(1) பிரிவினை குறித்த எந்த ஒரு பேச்சும் இருக்கக் கூடாது. பிரிவினை முடிந்து போன ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அப்பிரச்சனை மீண்டும் விவாதிக்கப்படாமல், இரு நாடுகளும் இரண்டு தனியான குடியரசுகளாகக் கருதப்பட வேண்டும் (2) காஷ்மீர் பிரிக்கப்பட்டு இசுலாமியப் பகுதி பாகிஸ்தானுக்குப் போக வேண்டும். (இது பள்ளத்தாக்கில் வாழும் காஷ்மீரிகளின் விருப்பத்தின் பேரில் செயல்படுத்தப்பட வேண்டும்). இந்தியாவிற்கு இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வாழும் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகள் வர வேண்டும்.

28. இந்தக் கொள்கை இரு நாடுகளுக்கிடையே ஒரு நட்புறவை ஏற்படுத்த சிறந்த வாய்ப்பை அளிக்கும். அதனால், பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு இதனை ஒப்புக் கொள்ள வலியுறுத்தும்.

29. நமது வெளிநாட்டுக் கொள்கையில் பிற நாடுகள் நம்மை எதிரியாகக் கருத காரணமான மற்றொரு பிரச்சினை சீனா பற்றியதாகும். அய்க்கிய நாடுகள் அவையின் நிரந்தர உறுப்பினராக சீனா ஆவதற்கு இந்தியா போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு அசாதாரணமான செயலாகும். தனக்கானப் போராட்டத்தை நடத்தும் வலிமை சீனாவிற்கே இருக்கும்போது, இந்தியா ஏன் சீனாவிற்காகப் போராட வேண்டும்? கம்யூனிச சீனாவிற்காக இந்தியா எடுத்திருக்கும் இந்த நிலைப்பாடே, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவிற்குக் காரணம். இதனால் அமெரிக்காவிடமிருந்து இந்தியா எவ்விதப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

30. நாம் ஆங்கிலேயே ஆட்சிக்கு உட்பட்ட அரசதிகாரத்தை மறுத்தோம். நாம் சுதந்திர நாடாகி விட்டோம். தொடர்ந்து, பிரித்தானிய காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க ஒப்புக் கொண்டோம். இருப்பினும், பிற நாடுகளுடனான நமது உறவு, நட்பு முறையில் இல்லை.

31. நம்முடைய வெளிநாட்டுக் கொள்கையில், முதலாளித்துவத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் இடையே வேறுபாடுகளைக் காண நம்மால் இயலவில்லை. முதலாளித்துவத்தை விரும்பாதிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனமடைந்து சர்வாதிகாரம் வளர உதவிடும் சூழல் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இல்லை எனில், ஆற்றில் மூழ்கும் குழந்தையைக் காப்பதற்காக, அதை எடுத்து சேற்றில் எறிவது போலாகி விடும்.

32. இந்தியாவின் முதல் கடமை தனக்கு உண்மையாக இருப்பதே. அய்க்கிய நாடுகள் அவையில் கம்யூனிச சீனாவை நிரந்தர உறுப்பினராக்கப் போராடுவதற்கு பதில், அய்க்கிய நாடுகள் அவையின் நிரந்தர உறுப்பினராகத் தான் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்தியா போராட வேண்டும். அதற்குப் பதிலாக சியாங்காய் ஷேக்கிற்கு எதிராக மாவோ நடத்தும் போராட்டத்தை இந்தியா நடத்துகிறது. எல்லோருக்கும் நல்லவராக இருந்து உலகை காக்க நினைக்கும் இந்தக் கொள்கை, இந்தியாவை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லப் போகிறது. இந்த தற்கொலை கொள்கை, கூடிய விரைவிலேயே இந்தியா மீது எதிர் விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது. ஆசிய நாடுகளின் வளர்ச்சிக்குப் போராடும் முன், இந்தியா தனது ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு செயலிலும், தன்னை வலிமையாக்கிக் கொள்ள வேண்டிய உதவிகளை முதலில் பெறப் போராட வேண்டும். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு வலியுறுத்தும் வெளிநாட்டுக் கொள்கை இதுவாகத்தான் இருக்கும்.

வளங்கள் குறித்த கேள்விகள்

33. திட்டமிடுதல் என்பது வெறும் வார்த்தைகளோ, சிந்தனைகளோ மட்டும் அல்ல. திட்டங்களை செயல்படுத்த வேண்டுமெனில், அதற்கான பொருளாதார வழிமுறைகளைக் காண வேண்டும். செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களைக் காட்டாமல் கட்சியின் செயல் திட்டங்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

34. கூட்டமைப்பின் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவையான தொகை குறைந்தது அல்ல என்ற போதும் சமாளிக்க முடியாதது அல்ல. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது:

(1) ராணுவ செலவினங்களைக் குறைத்தல்

(2) உப்பு மீது மீண்டும் வரி விதித்தல்

(3) மதுவிலக்கு ஒழிக்கப்படுவதன் மூலம் கலால் வருமானத்தை அதிகரித்தல்

(4) காப்பீடு தொழிலை தேசியமயமாக்குதல்

35. இந்திய அரசின் மொத்த வருமானம் 350 கோடி ரூபாய். இதில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை அல்லது ஆண்டுக்கு ஏறத்தாழ 180 கோடி ரூபாய் ராணுவத்திற்காக செலவிடப்படுகிறது. பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், ராணுவத்தின் மீதான இந்த செலவு மிகவும் ஆடம்பரமானதாகும். இந்த அறிக்கையில் பரிந்துரைத்தபடி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் வெளிநாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டால், ராணுவ செலவுகளை ஆண்டுக்கு 50 கோடி வரையில் குறைப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.

36. உப்பு வரி மீண்டும் விதிக்கப்படாததற்கு எந்தக் காரணமும் இல்லை. உப்பு வரி நீக்கப்பட்டது வெறும் உணர்ச்சி வசப்பட்ட முடிவாகும். அது உப்பின் விலையைக் குறைக்கவில்லை. மாறாக, உப்பு மிகவும் அரிதான பொருளாகி விட்டது. இதனால் விளைந்த ஒரே பலன், ஆண்டுக்கு ஏறத்தாழ 11 கோடி ரூபாய்கள் பெற்றுத் தந்த ஒரு நிதி ஆதாரத்தை அரசு இழந்துவிட்டது. இது, நாட்டின் வளர்ச்சியைப் பெருமளவில் முடக்கி இருக்கிறது. ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் ஈட்டித் தரும் அளவிற்கு வரி விதித்தால்கூட, அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

37. மதுவிலக்கு முட்டாள்தனமானது. அது உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். ஏனெனில், அது தடுக்க நினைத்த கேடுகளைவிட, அதனால் விளைந்த கேடுகளே அதிகம். சாராயம் காய்ச்சுதல் ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. முன்பு ஆண்கள் மட்டுமே மது அருந்தினர். தற்போது பெண்களும் குழந்தைகளும்கூட மது அருந்துகின்றனர். ஏனெனில், அது அவர்கள் கண் முன்பு வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களிடையே பண்பாட்டுச் சீரழிவையும், கூடுதலான குற்றச் செயல்களையும் இது ஏற்படுத்தியுள்ளது.

38. அரசின் வளங்களைப் பாதுகாப்பது என்ற நோக்கில் இது பெரும் வீண் ஆகும். பகுதி ‘அ' மாநிலங்களில் 1945-46 ஆண்டில் கிடைத்த கலால் வரி வரவு 51.67 கோடி ரூபாய். 1950-51இல் 25.23 கோடி. 1951-52 இல் 24.95 கோடி எதிர்பார்க்கப்படுகிறது. 1945-46 ஆம் ஆண்டிற்கான தொகை, பிரிக்கப்படாத பஞ்சாப் மற்றும் வங்காளத்தை உள்ளடக்கியது. பகுதி "அ' மாநிலங்களில் மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பு, ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் ஆகும். இது, மது விலக்கு ஒழிக்கப்பட்டால் கிடைத்திருக்கக் கூடிய வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத நிலையில் ஆகும்.

39. பம்பாய்க்கு 1946-47இல் கிடைத்த கலால் வருமானம் 9.74 கோடி ரூபாய். 1950-51இல் 1.20 கோடி மற்றும் 1951-52க்கான எதிர்பார்ப்பு 1.05 கோடி. ஆக, கலால் வருமானத்தில் இழப்பு ஏறத்தாழ ஆண்டிற்கு 8.7 கோடி ரூபாய்.

40. சென்னைக்கு 1945-46இல் கிடைத்த கலால் வருமானம் 16.80 கோடி ரூபாய். 1951-51இல் அது 50 லட்சமாக குறைந்தது. 1951-52க்கான எதிர்பார்ப்பு 36 லட்சம். ஆக, மதுவிலக்கினால் ஏற்பட்ட இழப்பு 16 கோடி ரூபாய்.

41. உத்திரப் பிரதேசத்தில் 1947-48 இல் 7.06 கோடி ரூபாய் கலால் வருமானம். 1950-51இல் அது 5.93 கோடியாக இருந்தது. 1951-52க்கான எதிர்பார்ப்பு 5.84 கோடி. இழப்பு 1.2 கோடி.

42. மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் வங்காளத்திலும் கலால் வருமானத்தில் சரிவு காணப்படுகிறது.

43. மும்பை மற்றும் சென்னையில் மட்டும் கலால் வருமானத்தில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, ஏறத்தாழ 25 கோடி ரூபாயாகும். ஏறத்தாழ அதே அளவுதான் பகுதி ‘அ' மாநிலங்களின் ஒட்டுமொத்த கலால் வருமான இழப்பாகும்.

44. இந்தப் புள்ளி விவரங்கள் முழுமையானவை அல்ல. இவற்றில் பகுதி ‘ஆ' மாநிலங்களைப் பற்றிய தகவல்கள் இல்லை. ஏனெனில், அவை கிடைக்கவில்லை. மேலும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காக செய்யப்படும் செலவினங்கள் குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.

45. சமபங்கு என்ற நோக்கிலும் மதுவிலக்கு நியாயமற்றதேயாகும். மதுவிலக்கிற்கான செலவினங்கள் பொது மக்கள் மீதே விழுகின்றன. ஒன்று அல்லது இரண்டு லட்சம் திருத்தப்பட இயலாத குடிகாரர்களைத் திருத்துவதற்கான செலவை, ஏன் பொது மக்கள் ஏற்க வேண்டும்? மக்களின் பிற தேவைகளான கல்வி, குடியிருப்பு, சுகாதாரம் போன்றவற்றிற்கு வழி இல்லாத நிலையில், ஏன் பொது மக்கள் மதுவிலக்கிற்கான செலவை ஏற்க வேண்டும்? ஏன் அந்தப் பணத்தை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது? யாருக்கு கூடுதல் முக்கியத்துவம் குடிகாரருக்கா? பசியால் வாடுபவருக்கா? சிந்திக்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன. ஆனால், அவற்றிற்கு வறட்டுப் பிடிவாதத்தைத் தவிர வேறு எந்த பதிலும் இல்லை. என்ன நடந்தாலும் மதுவிலக்கு கொள்கை மாற்றப்பட வேண்டும். மக்கள் பணம் இப்படித் தேவையற்று செலவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பயன்படுத்தப்படும் வளங்கள், பொதுநலனை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட வேண்டும்.

46. காப்பீடு தொழிலை தேசியமயமாக்குதல் என்பதில், கீழ்க்காணும் புள்ளி விவரங்கள் மூலம் அதுதான் மிகுந்த வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில் என்பதைக் காணலாம்.

47. மேற்கண்ட தகவல்களின் மூலம் ஓராண்டில் காப்பீட்டு நிறுவனங்களிடம் உள்ள தொகை 37 கோடி என்பது தெரிகிறது. வங்கி வைப்பைப் போல, இது கேட்டால் கிடைக்கும் வைப்பு நிதி அல்ல. அதனால் அவை நீண்டகால வளர்ச்சித் திட்டங்களில் முமுதலீடு செய்யப்படலாம். காப்பீட்டு நிறுவனங்கள் அரசு பத்திரங்களில் தங்கள் பணத்தை முமுதலீடு செய்கின்றன என்பது உண்மைதான். அந்த அடிப்படையில் இறுதியில் காப்பீட்டு நிதி அரசுக்கே வந்து சேர்கிறது என்று கூறலாம். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்குவதற்கு இது சரியான பதில் அல்ல.

ஏனெனில், அரசு பத்திரங்களில் முமுதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகை மிகவும் குறைவானது : 37 கோடியில் வெறும் 9 கோடி மட்டுமே. இரண்டாவதாக, இந்த பத்திரங்களுக்கு அரசு வட்டி செலுத்த வேண்டும். அது வரி செலுத்துபவர்கள் மீதான தேவையற்ற கூடுதல் சுமையாகும். மூன்றாவதாக, பிரிமியம் வருமானத்தில் ஏறத்தாழ 29 சதவிகிதத்தை காப்பீட்டு நிறுவனங்கள் விழுங்கி விடுகின்றன. 1949 இல் இது 37 கோடியில் 11 கோடியாகும். இது, ஏற்றுக்கொள்ள முடியாத பண விரயமாகும். இவை அனைத்தையும் தேசியமயமாக்குதல் மூலம் தடுக்கலாம்.

48. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, காப்பீட்டுத் தொழிலை தேசியமயமாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அனைத்து அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு காப்பீட்டை கட்டாயமாக்கும். கட்டாய காப்பீடு தனி நபர்களுக்கு பாதுகாப்பைத் தருவதோடு, அரசு நிதியைப் பெருக்கி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

49. சுருக்கமாக, கூட்டமைப்பின் திட்டப்படி நாட்டின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்கள் வருமாறு:

50. மேலே குறிப்பிடப்பட்ட நிதி ஆதாரங்கள், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைத் தரும் என்பதை உறுதியாக நம்பலாம்.

Pin It