கடந்த இரு இதழ்களில் வெளிவந்த டாக்டர் கே. பாலகோபால் அவர்களுடைய நேர்காணல், இவ்விதழில் நிறைவடைகிறது.

Balagopal
தலித் இயக்கங்கள் அரசியல் அதிகாரத்திற்கு முன்னுரிமை அளிப்பது ஏன்?

ஆந்திராவில் உள்ள தலித் சிந்தனையாளர்களில் மிகப் பெரும்பாலானோர் முன்னாள் மார்க்சிஸ்டுகளாக இருந்தவர்கள். அதனால்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, சாதியையும் வர்ணாசிரம தர்மத்தையும் எளிதில் ஒழித்துவிடலாம் என்ற கருத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனர். இன்றைய பரவலான நிலை என்னவெனில், கிராம அளவில் தங்கள் போராட்டத்தை நடத்திவரும் உள்ளூர் அம்பேத்கர் சங்கங்களும், அதற்கடுத்த அனைத்து நிலைகளிலும் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் தலித் தலைவர்களும் பெருகியிருக்கின்றனர். தலித் அரசியலை முதன்மைப்படுத்தி செயல்படுபவர்கள் வெகுசிலரே. இதனால் விளைந்த ஒரு நன்மை என்னவெனில், தற்பொழுது சாதிப்பாகுபாடுகள் பற்றியும், சாதி ஆதிக்கத்தைப் பற்றியும் யாரும் ரகசியமாகப் பேசுவதில்லை. பார்ப்பனியத்தை அதன் சரியான பெயர் சொல்லி குறிப்பது, அதிசயமாக இல்லை.

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தலித் சமூகத்திற்குள்ளேயே ‘மாதிகா'வினர், தாங்கள் சமமாக நடத்தப்படவில்லை என்ற பிரச்சினையை எழுப்பி, பட்டியல் சாதியினர் ஒதுக்கீட்டிலேயே உள் ஒதுக்கீடு (வேலைவாய்ப்புகளிலும் கல்லூரிப் படிப்புகளிலும்) வேண்டும் என்று போராடியபோது, தலித் இயக்கம் பெரியதொரு நெருக்கடியைச் சந்தித்தது. இத்தகைய நெருக்கடிகளிலிருந்து மீண்டும் தலித் இயக்கம் மக்களிடையே நம்பகத் தன்மையைப் பெற்றது என்று நேர்மையாக யாரும் ஒப்புக் கொள்ள முடியாது. பட்டியல் சாதியினரிடையே நிலவும் ஏற்றத்தாழ்வை யாரும் தீவிரமாக மறுக்கவில்லை. ஆனால், தலித்துகளிலேயே முன்னேறிய பிரிவினர் குறிப்பாக, மாலா மற்றும் ஆதி ஆந்திரா சமூகத்தினர், மாதிகாவினரின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இவர்கள் தலித் சமூகத்தில் நிலவும் சமமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு, பட்டியல் சாதியினர் இடஒதுக்கீட்டில் மாதிகா பிரிவினர் முன்வைக்கும் இடஒதுக்கீடு போராட்டத்தை பெருந்தன்மையோடு ஆதரித்திருந்தால், தலித் சமூகத்தையும், தலித் இயக்கத்தையும் நெருக்கடியிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் சூழலின் தன்மை புரிந்து செயல்படவில்லை.

உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் சூழலில், மனித உரிமைப் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி சொல்லுங்கள்.

உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் தவிர்க்க முடியாதவை என்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. தங்கள் பேராசைகளை நியாயப்படுத்துவதற்கான காரணத்தைத் தேடி அலையும் உயர்தட்டு மக்கள், அவர்களின் குற்ற உணர்ச்சிக்கான (அப்படி ஒன்று இருக்குமாயின்) வடிகாலாக மனித உரிமை அமைப்புகளை நடத்துகின்றனர். மனித உரிமை அமைப்புகள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை எதிரொலித்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் போராடுவதாகக் கூறினாலும், இவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் அதிகார வர்க்கத்தை நோக்கியே அமைந்திருக்கின்றன. உண்மையில் மனித உரிமைகளைப் பொருத்தவரையில், உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் ஒரு பெருந்தடையாகவே இருக்கின்றன. வாழ்வியல் உரிமைகள், கல்வி உரிமைகள், சுகாதார உரிமைகள் மற்றும் அது தொடர்பான பிற உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலை அது நடத்துவதோடு, உலக அளவில் மனித உரிமைகளின் அடிப்படைத் தேவையாகக்கூட அது ஏற்றுக் கொள்வதில்லை. இக்காலத்தில் மனித உரிமைகளுக்கானப் போராட்டத்தை உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கடுமையான சிக்கல்களுக்குள்ளாக்குகின்றன. மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், பல முனைகளிலும் போராட வேண்டியிருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு அளிப்பதில், நீதிமன்றத்தின் தலையீடு பற்றி தங்கள் கருத்தென்ன?

நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்கள், சமூகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதில் பெருமளவு பிற்போக்குத்தனமாக உள்ளன. எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் நீதிமன்றங்களின் மனோபாவம் ஆக்கப்பூர்வமான மாறுதல்களைப் பெற்றது என்ற கருத்து நிலைப்பெற்றிருந்த காலத்தில்கூட, அது ஒரு சில நீதிபதிகளிடமே ஏற்பட்ட மாற்றங்களாகும். மேலும், இந்த மனோபாவம் நிலையாக இருந்தது என்றும் சொல்ல முடியாது. தற்பொழுது நீதிமன்றம் நவீன தாராளமயத்திற்கு ஆதரவாகிவிட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதியான சத்யபிரதா சின்கா போன்ற நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு ஒரு ஏற்புடைய அரசுக் கொள்கையின் உள்ளடக்கங்கள் குறித்து என்ன நோக்கம் இருந்திருப்பினும், காலத்தின் மாறுதல்களுக்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

இடஒதுக்கீடு குறித்த நீதிமன்றங்களின் அணுகுமுறை இதற்கு ஒரு சான்று. காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேகத்தில், கடந்த 50 ஆண்டுகளாக அவர்களே சொன்னதற்கு முரண்பாடான வகையிலேயே தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்' தீர்ப்பின் சாரம், கல்லூரி நிறுவனத்தின் மிகச் சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் வாதம்தான். அரசு நிதி உதவி பெறாத கல்வி நிறுவனத்தின் உரிமையாளர், நிதிக்காக அரசை சார்ந்திராதபோது, அரசு பரிந்துரைக்கும் மாணவர்களுக்கு அல்லது குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அவர் ஏன் இடங்களை அளிக்க வேண்டும்? இதற்கு முன்பும் இதேபோல வாதிடப்பட்டது. ஒரு தனியார் தொழிற்சாலையின் உரிமையாளர், நிதிக்கென அரசை சார்ந்திராத பட்சத்தில், தனியார் நியமித்திருக்கும் ஊழியர்களுக்கு, அரசின் விருப்பத்திற்கு ஏற்ப லாபத்தில் ஏன் பங்கு கொடுக்க வேண்டும்? தனது ஊழியர்களை நீக்குவதற்கு ஏன் அரசின் அனுமதி பெற வேண்டும்?

தொழிலாளர்களின் நலம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் இத்தகு வணிக ரீதியான தர்க்க விவாதங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரு தனியார் நிறுவனம், வெறும் வணிகரீதியான தர்க்கத்துடன் கேள்விகள் கேட்க முடியாது; மாறாக சட்டத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. சட்டப்படி, வணிகம் என்பது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதே. பொது மக்களின் நலன்களின் அடிப்படையில் அது வரம்பிற்குட்பட்டதே.அந்தக் கருத்தே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை நிர்ணயிப்பதாக உள்ளது. அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களும் இந்த அடிப்படையில்தான் முன்னிறுத்தப்படுகின்றன. இதே தர்க்கம் ஏன் இடஒதுக்கீட்டுக்கும் பொருந்தவில்லை?

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கின் சாரம் இதுதான். பொதுவாக இரண்டு இந்துக்கள் எங்கே சந்தித்துப் பேசினாலும் அவர்கள் விதிவிலக்கின்றி, முஸ்லிம்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனத்தைக் குறித்தும் குறிப்பாக அவர்கள் தங்கள் குழந்தைகளை நவீன பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பதில் ‘மதராசாக்'களுக்கு அனுப்புகின்றனர்; தங்கள் வீட்டுப் பெண்களை தனிமைப்படுத்தி வீட்டுக்குள் சிறைவைக்கின்றனர்; எல்லாவற்றுக்கும் ‘ஷரியத்'தின் அடிப்படையிலேயே தீர்வு காண்கின்றனர்; அறிவியலாளர்களின் கருத்துகளுக்குப் பதில் ‘முல்லா'க்களின் கருத்துகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்று பேசுகின்றனர்.

Balagopal
ஆனால், முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்ட நிலையிலிருந்து மீண்டுவர அரசு உதவி செய்யத் தொடங்கிய அடுத்த கணமே, ஒட்டுமொத்த இந்து சமூகமும் திரண்டு முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல என்று கூக்குரலிட்டது. அதிலும், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் இருவர் ஏதோ பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது, நீதித் துறையால் நிர்ணயிக்கப்படுவதுபோல, இஸ்லாமியர்கள் ஒரு சமூகமாக பிற்படுத்தப்பட்டவர்கள் அல்ல என்று அறிவித்தனர்.

நீங்கள் நடத்திய சில முக்கிய வழக்குகள் பற்றிச் சொல்லுங்கள்.

பட்டியல் சாதியினரின் உள்இடஒதுக்கீட்டுக்காக உயர்நீதிமன்றத்தில் வாதாடினேன். அனைத்து தலித் சமூகத்திற்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதே என்னுடைய நோக்கமாக இருந்தது. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் வாதாடினேன். மு தல் வழக்கில் வெற்றியும் பெற்றேன். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் ‘பென்ச்' உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைகீழாக மாற்றிவிட்டது. அந்தத் தீர்ப்பை நான் விமர்சித்து ‘எக்கனாமிக் அண்டு பொலிடிக்கல் வீக்லி' என்ற ஆங்கில வார ஏட்டில் எழுதினேன். இத்தீர்ப்பு வழக்கத்திற்கு மாறாக மோசமாக எழுதப்பட்ட தீர்ப்பாகும். இரண்டாவது வழக்கிலும் நான் தோல்வி அடைந்தேன். இருப்பினும் இந்த இரு வழக்குகளிலும் வாதாடிய பலரில் நானும் ஒருவன்.

ஆனால், நான் தனியொருவனாக வாதாடி வெற்றி பெற்ற வழக்கு ஒன்றைச் சொல்ல முடியும். அதன் மூலம் நான் தனிப்பட்ட அளவிலும் தொழில் ரீதியாகவும் முழு நிறைவடைந்தேன். ஆந்திரப் பிரதேசத்தில் கணிசமான அளவிற்குப் பட்டியல்படுத்தப்பட்ட பகுதிகள் (அரசமைப்புச் சட்டத்தின் அய்ந்தாவது பிரிவின்படி) உண்டு. எண்பதுகளின் இறுதியில் மாநில அரசு (சொல்லப்போனால் ஆளுநர்), பட்டியல்படுத்தப்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறைகளிலும் உள்ள கடைநிலைப் பணிகளை உள்ளூரில் உள்ள பழங்குடியினருக்கு வழங்கியது. பழங்குடி மக்களின் நலன்களுக்காக வேலை செய்வதற்குப் பழங்குடி அல்லாத மக்களைப் பணிக்கு அமர்த்தினால், அவர்கள் பழங்குடியினர் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இந்த பட்டியல்படுத்தப்பட்ட பகுதிகளில் 100 சதவிகித ஆசிரியர் பணியிடங்கள், அனைத்துப் பள்ளிகளிலும் உள்ளூர் பழங்குடியினருக்கே ஒதுக்கப்பட்டன. இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் பழங்குடியினர் அல்லாத ஆசிரியர்கள், மாநில நிர்வாகத் தீர்ப்பாயத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை சென்று 15 ஆண்டு காலம் இதற்கு முட்டுக்கட்டைப் போட்டனர். இறுதியில் உயர் நீதிமன்றத்தின் முழு ‘பெஞ்ச்' இதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. மாநில அரசு தன்னுடைய அரசாணைக்கு ஆதரவாக அக்கறையுடன் செயல்படவில்லை. என்னுடைய வாதமே அன்று முக்கியத்துவம் பெற்றது.

நேர்காணல் : கோ. சுகுமாரன் .
Pin It