சாதி அமைப்பு என்ற அடித்தளத்தின் மீதுதான் - மலத்தைக் கையால் அள்ளும் கொடிய வழக்கம் நிலைத்து நிற்கிறது. தீண்டாமை, தூய்மை - மாசுபாடு, தர்மம், தலைவிதி என்று சாதி அமைப்பு தோற்றுவித்த நம்பிக்கைகளின் மிக மோசமான வெளிப்பாடே கையால் மலமள்ளுவது. சாதி அமைப்புக்கும், கையால் மலமள்ளுவதற்கும் தொடர்பில்லை என்று சாதி இந்துக்கள் மறுக்கலாம். இந்த அமைப்பில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என அவர்கள் வாதிடலாம். படிநிலைப்படுத்தப்பட்ட சாதி அமைப்பைத் தகர்க்காமல், கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். ஆனால், இதைச் செய்ய சாதி இந்துக்கள் அஞ்சுகிறார்கள்.

Arunthathiyar
ஆந்திர மாநிலம் நிஜாமாபாத்தின் நகர நீதிமன்றத்தில் திறந்தவெளிக் கழிப்பிடம் உள்ளது. ‘இக்கழிப்பிடத்தை கையால் மலமள்ளும் சங்கத்தினர் அகற்றக் கூடாது' என்ற அரசாணையை நான் வேறு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? திறந்தவெளிக் கழிப்பிடங்கள் நமது இறந்த காலத்தின் வேதனைக்குரிய அடையாளம் மட்டுமல்ல; அது நம் நிகழ்காலத்தின் அடையாளமும்கூட! எதிர்காலமாவது இதை உள்வாங்காமல் இருக்கட்டும்.

‘கையால் மலமள்ளுவோர் பணி நியமனம் மற்றும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் (தடுப்பு) சட்டம் - 1993' இந்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், இந்நாள் வரை 13 லட்சம் தலித் மக்கள் நாடு முழுவதும் கையால் மலமள்ளும் வேலைக்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர் (மய்ய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2002 - 03இல் இந்தியா முழுவதும் கையால் மலமள்ளுவோர் எண்ணிக்கை 6.76 லட்சம்). இதில், தனியார் நிறுவனங்கள், நகராட்சி நிர்வகிக்கும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள், ரயில்வே மற்றும் ராணுவம் போன்ற பொதுத் துறைகளும் அடங்கும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 1,600 பொது திறந்தவெளிக் கழிப்பிடங்களிலும், 1.5 லட்சம் தனி நபர் திறந்தவெளிக் கழிப்பிடங்களிலும் கையால் மலமள்ளுவோர் 8,330 பேர் பணியாற்றுகின்றனர்.

நம் நாட்டின் நிலப்பரப்பு மற்றும் வளங்களைப் பொறுத்தவரை, கையால் மலமள்ளுவதை ஒழித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது ஒன்றும் முடியாத செயல் அல்ல. இப்பிரச்சினையின் பல்வேறு கோணங்களைக் கண்டறிய, பல குழுக்கள், ஆணையங்கள் மற்றும் செயல்பாடுகளை அரசு மேற்கொள்கிறது; இக்குடிமைச் சமூகத்தை சுகாதாரம் மற்றும் துப்புரவு போன்றவற்றில் விழிப்புணர்வூட்டப் பெருமளவில் நிதி ஒதுக்குகிறது; மேற்கத்திய கழிவறைகளைக் கட்ட, மானியங்களை அளிக்கிறது. ஆனால், ஒருவர்கூட சட்டத்திற்குப் புறம்பாக கையால் மலமள்ளும் வேலைக்கு அமர்த்தியதற்காக குற்றம் சாட்டப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை. இவ்வழக்கம் சட்டப்படி தடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழிந்த பிறகும் அரசோ, குடிமைச் சமூகமோ மன சாட்சியுடன் நடந்து கொள்ளவில்லை.

இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு அக்கறை காட்டவில்லை. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதும், 1997 வரை இந்திய அரசிதழில் (Gazette of India) இது குறித்து அறிவிக்கப்படவில்லை. 2000 ஆம் ஆண்டுவரை, எந்த மாநில அரசும் இது குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. கையால் மலமள்ளுவதை ஒழிக்க வேண்டும் எனில், இதற்காக ஏற்படும் கடும் நிதிச் செலவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் கூறுவதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? திறந்தவெளிக் கழிப்பிடங்களைக் கட்டி, அதைத் தூய்மைப்படுத்த தொழிலாளர்களை நியமிக்கும் நகராட்சிகளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

Gita
‘நீதிமன்ற வளாகத்தில் உள்ள திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அரசாங்கத்துடைய சொத்து; எனவே அதை இடிக்கக் கூடாது' என்று நீதிமன்றம் விடுத்துள்ள எழுத்துப்பூர்வமான ஆணையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? இக்குடிமைச் சமூகத்தில் உள்ள பலர், ‘கையால் மலமள்ளுவோருக்குப் போதிய சம்பளம் கொடுத்தாலும், அவர்கள் இந்த வேலையை சுத்தமாக செய்ய மறுக்கிறார்கள்' என்று குற்றம் சுமத்துகின்றவர்களை - நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

இவ்வழக்கத்தை ஒழிப்பதற்குத் தடையாக நிற்பது - தொழில்நுட்பக் குறைபாடுகளோ, நிதிப்பற்றாக்குறையோ அல்லது சட்ட ரீதியான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாததோ அல்ல. சமூக ஒதுக்குதல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ள நமது ஜாதி உளவியலே இவ்வழக்கத்தை ஒழிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

நான், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் இரண்டு தலைமுறைகளாக தங்கச் சுரங்கத்தில் பணிபுரியும் சமூகத்தில் பிறந்த - கையால் மலமள்ளும் ஒரு தொழிலாளியின் மகன். நான், மக்களின் துன்ப துயரங்களைப் புரிந்து கொண்ட பருவத்தில், மலக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் கதறிக் கதறி அழுதேன். ஆனால், கையால் மலமள்ளுவதைப் புகழ்ந்து, அதை ஒரு தாய் தமது குழந்தைகளுக்குச் செய்யும் சேவையுடன் ஒப்பிட்டுப் பேசிய காந்தியை - என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. புழுக்கள் நெளியும், கொடிய நாற்றமெடுக்கும் லட்சக்கணக்கானோரின் மலக்கழிவை - நாள்தோறும் தூய்மைப்படுத்தும் வேலையை செய்யும் ஒருவர், தன் தொழில் குறித்து எப்படிப் பெருமை கொள்ள முடியும்?

மூக்கைப் பொத்திக் கொண்டு, கழிவறைக்குள் நுழைவதற்கு முன்பு உள்வாங்கும் தூய்மையான காற்றை நெஞ்சில் அடக்கிக் கொண்டு பணியாற்றும் எங்கள் மலமள்ளும் தொழிலாளர்கள், மிகக் கடுமையான அளவுக்கு மூச்சு தொடர்புடைய நோய்களாலும் தோல் நோய்களாலும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த நூலின் அட்டையில் உள்ள நாராயணம்மாவைப் போல, பெரும்பாலானவர்கள் எட்டு அல்லது பதினோறு வயதிலேயே எப்படி இந்த வேலைக்கு வந்தார்கள்; எத்தனை நாட்களுக்கு சாப்பிட முடியாமல் திணறினர்; மலக்கழிவின் கொடிய நாற்றம் தங்கள் மூக்கை விட்டு அகலாத கொடுமை; தங்களின் சிறுகுடல்கள் வெளியே தள்ளப்படும் அளவுக்கு வாந்தி, குமட்டல்; நிரந்தரமாக அவமானப்பட்டு கூனிக்குறுகி இருப்பதை கதை கதையாகச் சொல்வார்கள். இதைவிட வருத்தத்திற்குய உண்மை என்ன தெயுமா? கையால் மலமள்ளும் வேலையைச் செய்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

Arunthathiyar
"கையால் மலமள்ளும் வேலையைச் செய்வதில் எந்தப் பெருமையும் இல்லை. இந்த வழக்கத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்' என்று முழங்கிய பாபாசாகேப் அம்பேத்கரை, நமது தலைவராக கையால் மலமள்ளுவோராகிய நாம் ஏற்றுக் கொள்ளாதது, இன்னொரு வருத்தத்திற்குரிய செய்தியாகும். நம்மிடையே பிரிவினைகளை வகுத்துக் கொண்டு, நம் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆதரவு தெரிவிக்க, பிற தலித் இயக்கங்களை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, கடந்த இருபது ஆண்டுகளாக உழைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும், கடந்த பத்து ஆண்டுகளாகக் கையால் மலமள்ளுவோர் சங்கங்களை ஒருங்கிணைத்து வருகிறவன் என்ற அடிப்படையிலும் சொல்கிறேன் : நாம், இந்தியக் குடிமைச் சமூகம், இந்த ஜாதிய உளவியலில் இருந்து விடுதலை பெறாதவரை கையால் மலமள்ளுவதை ஒழிக்கவே முடியாது; கையால் மலமள்ளுவோரும் விடுதலை பெறவே முடியாது. இது என் முடிந்த முடிவு.

தலித்துகளும், தலித் அல்லாதவர்களும், ஏன் கையால் மலமள்ளுவோரும்கூட, என்னிடம் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர் : ""இதற்கு என்ன மாற்று இருக்கிறது? இந்தத் தொழில் இல்லை எனில், அவர்கள் எப்படி வாழ முடியும்?'' நான் உறுதியாகச் சொல்கிறேன். எமது வாழ்வியலைப் பற்றி அக்கறை கொண்டு எழுப்பப்படும் கேள்விகள் அல்ல இவை. ஜாதி உளவியலும் ஜாதிய மதிப்பீடுகளுமே இத்தகைய கேள்விகளை எழுப்புகின்றன.

இந்நாட்டின் குடிமகன் என்ற வகையில், பாரம்பயம் மிக்க செழுமைமிக்க நாகரீகமுகங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வகையில், நான் உங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான் : இத்தகைய உளவியலில் இருந்து நாம் விடுதலை பெற்றால்தான் நமது சகோதரர்களும் சகோதரிகளும் இயல்பாகவே விடுதலை பெறுவர். இப்பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, விடுதலைக்கான இப்போராட்டத்தில் எம்முடன் இணைந்து கொள்ள, நாங்கள் இன்னும் அதிகளவு நண்பர்களை வரவேற்கிறோம்.

- 'இந்தியா நாறுகிறது' என்ற நூலுக்கு பெசவாடா வில்சன் எழுதியுள்ள முன்னுரை
Pin It