புரட்சி பெரியார் முழக்கம்

ஆண்டுக்கட்டணம் ரூ.150/-
தொடர்புக்கு:  ஆசிரியர், 29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவள்ளுவர் நகர்,  திருவான்மியூர், சென்னை-41.

 

தமிழக வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி முதுகுளத்தூர் கலவரம். அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணி இதுதான்.

•       1945 இல் எஸ்.எஸ்.எல்.சி.யை முடித்த ‘தேவேந்திரர்’ சமூகத்தைச் சார்ந்த இமானுவேல் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் தனது சமூக மக்கள் இந்துக் கலாச்சாரத்தில் மூழ்கிக் கிடப்பதையும் சாதி இழிவுக்கு உள்ளாக்கப்படுவதையும் கண்டு வேதனை அடைந்தார். 1952 இல் தனது அவில்தார் பதவியை ராஜினாமா செய்து விட்டு சமூகக் களத்தில் இறங்குகிறார்.

•       தேவேந்திரர்கள் செருப்பு அணியக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டக் கூடாது; பெண்கள் ரவிக்கை அணியக் கூடாது போன்ற எட்டு தடைகளை மறவர்கள் தேவேந்திரர்கள் மீது சுமத்தி இருந்தனர்.

•       1957 இல் நடந்த பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதிக்கும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் பார்வர்டு பிளாக் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டார். இவைகள் இரட்டை உறுப்பினர் தொகுதி. தனித்தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் பொதுத் தொகுதிக்கு ஒரு வேட்பாளரையும் தேர்வு செய்ய வேண்டும். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களை இமானுவேல் தீவிரமாக ஆதரித்தார்.

•       போட்டியிட்ட இரண்டு பொதுத் தொகுதிகளிலும் முத்துராமலிங்கத் தேவர் வெற்றிப் பெற்றுவிட்டார். ஆனால், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத்துக்கான தனித் தொகுதியில் - பார்வர்டு பிளாக் சார்பாக முத்து ராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் தோல்வி அடைந்துவிட்டார். முத்துராமலிங்க தேவருக்கு அப்பகுதியில் கிடைத்த முதல் தோல்வி இதுதான். அதோடு இத் தொகுதியில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ‘தேவேந்திர’ வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்கு, தேவர் பெற்ற வாக்குகளைவிட 1.5 லட்சம் கூடுதலாக இருந்தது. தேவரின் சாதி ஆதிக்கத்துக்கு சவால் வந்துவிட்டது என்பதை உணர ஆரம்பித்தனர். தேவர் - தேவேந்திரர் பகைமை முற்றியது.

•       தொடர்ந்து காடமங்கலம், சாக்குளம், கொண்டுலாவி, பூக்குளம், கமுதி ஆகிய ஊர்களில் தேவேந்திரர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, தேவர்கள் தாக்க, தேவேந்திரர்களும் திருப்பித் தாக்க கலவரங்கள் நடந்தன.

•       இரண்டு தொகுதிகளில் வெற்றிப் பெற்ற முத்துராமலிங்க தேவர் - முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவே அங்கு இடைத் தேர்தல் வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் - மோதல் வலுக்கிறது.

•       இரு பிரிவினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகி யோர் 1957 செப்டம்பர் 10 ஆம் தேதி அமைதிக் கூட்டத்தைக் கூட்டினர். தேவேந்திரர்கள் சார்பில் இமானுவேலும் கலந்து கொண்டார். 9 மணிக்கு நடக்க இருந்த கூட்டத்துக்கு தேவர் 10 மணிக்கு வந்தார். அனைத்து அதிகாரிகளும், பிரமுகர்களும் ஒரு மணி நேரம் தேவருக்காக காத்திருந்தனர்.

•       தேவரைப் பார்த்தவுடன் எழுந்து நின்று ‘எஜமான் வணக்கம்’ என்று எல்லோரும் சொல்ல வேண்டும் என்ற வழக்கம் - அப்போது கட்டாயத்திலிருந்தது. அமைதிக் கூட்டத்துக்கு வந்தவர்கள் அப்படியே கூறினர். ஆனால் இமானுவேல் அப்படிக் கூறாமல் இருந்தார்.

•       பல பிரச்சினைகளில் இமானுவேலுக்கும் தேவருக்கும் கூட்டத்தில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இறுதியாக சமசர ஒப்பந்தம் தயாரானது. ஒப்பந்தத்தில், தேவேந்திரர்களின் பிரதிநிதியாக தனக்கு சமமாக இமானுவேலை ஏற்க முடியாது என்று கூறி, தேவர் கையெழுத்திட மறுத்தார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு - அதிகாரிகள் வற்புறுத்தலுக்குப் பிறகே தேவர் கையெழுத்திட்டார்.

•       அடுத்த நாள் - செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடி அருகே எமனேசுவரர் எனும் ஊரில் பாரதி நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிவிட்டு பரமக்குடியிலுள்ள தமது இல்லம் திரும்பி, உணவு அருந்திவிட்டு, 50 அடி தூரத்தில் உள்ள பெட்டிக் கடைக்குப் பொருள் வாங்கப் போனார் இமானுவேல். அப்போது இரவு 8.30 மணி. பேருந்திலிருந்து இறங்கிய கும்பல் ஒன்று கடை வாசலில் இமானுவேலை வெட்டிச் சாய்த்தது. தனது 33வது வயதில் தான் ஏற்றுக் கொண்ட சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக இமானுவேல் மரணத்தைத் தழுவினார்.

Pin It

சேலம் மாவட்டம் காடையாம் பட்டி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் சத்துணவுக் கூடங் களில் சமையல் பணியில் ஈடுபடும் தலித் பெண்கள், சாதி வெறியர் களால் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். பார்ப்பனி யத்தில் ஊறிப் போன சாதி இந்துக் கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளை சத்துணவுக் கூடத்துக்கு அனுப்ப மறுத்து பகிரங்கமாக தீண்டாமையை வெளிப்படுத்துகின்றனர்.

“இந்தப் பெண்கள் சமைத்த உணவை சாப்பிடுவது பாவம்” என்று, அவர்கள் கூறுவதாக ‘இந்து’ நாளேடு (செப்டம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1300-லிருந்து 3000 வரை குறைந்த ஊதியத்தில்தான் இந்தப் பெண்கள்  பணிக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுந்தர வனிதா என்ற தலித் பெண், 2012 ஆகஸ்டு 16 ஆம் தேதி பணிக்கு நியமிக்கப்பட்டார். பணி நியமன நாளிலிருந்தே, அவர் சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்.  “நான் அவமானத்தால் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளரிடம் கண்ணீர் மல்க அவர் கூறினார்.

முதல் நாளிலிருந்தே என்னை கேவலமாகப் பேசுவதும், துன்புறுத்துவதும் தொடங்கிவிட்டது. ராசிபுரத்தான் காட்டு வலவு எனும் கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் நான் பணி நியமனம் செய்யப்பட்டேன். வன்னியர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் தலித் பெண் சமைத்த மதிய உணவை சாப்பிடுவதை அவமானமாகக் கருதுகிறார்கள். கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், ‘இதில் தான் ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து  இந்தப் பெண் அவரது சொந்த கிராமமான மூக்கனூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சொந்த கிராமம் என்பதால், இவரது சாதி அடையாளம் தெரியும் என்பதால் அங்கே மேலும் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளானார். இவரைப் போல் சத்துணவு சமையல் கூடங்களுக்கு நியமிக்கப்பட்ட தலித் பெண்கள் அனைவரும் இதே போன்ற புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்று ‘இந்து’ நாளேட்டின் செய்தி கூறுகிறது. தீண்டாமையை வெளிப்படையாகப் பின்பற்றும் சாதி ஆதிக்கவாதியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், ஆட்சியோ நிர்வாகமோ அதற்குத் தயாராக இல்லை. தமிழக கிராமங்களில் பார்ப்பன ‘மனுதர்மமே’ ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது. சட்டங்களுக்கு சாதி வெறியர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாதி ஒழிப்புப் போராளி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான 11.09.12 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சத்துணவுத் திட்டத்தைக்குலைக்கும் சாதிவெறியர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யக்கோரி திராவிடர் விடுதலைக் கழகம் முதற்கட்டமாக தொடர்முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகள் அனைவரையும் இதில் பங்கேற்க வைக்குமாறு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி 05.09.12 அன்று சேலத்தில் அறிவித்தார்.

தென்மாவட்டங்களின் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் திருப்பூர் மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமையில் மாநில பரப்புரைத் தலைவர் தூத்துக்குடி பால்.பிரபாகரன், மாநில அமைப்புச் செயலாளர் தி.தாமரைக்கண்ணன், மதுரை மண்டல அமைப்புச் செயலாளர் இராவணன், கோவை மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன், திருச்சி மண்டல அமைப்புச்செயலாளர் புதியவன் ஆகியோர் உட்பட பல மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடம் சென்று அங்கு ஜாதிஒழிப்பு உறுதியேற்க உள்ளனர் என்றும் தோழர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

Pin It

2008 ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர் ஏ.கே.கங்குலி, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு உட்பட பல வழக்குகளில் முக்கிய தீர்ப்பளித்தவர். இப்போது மேற்கு வங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவர், ‘பிரண்ட்லைன்’ பத்திரிகைக்கு அவர் தூக்குத் தண்டனை தொடர்பாக அளித்த பேட்டியில் வெளியிட்ட சில முக்கிய கருத்துகள்.

•              ‘அரிதிலும் அரிதான’ வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்க முடியும் என்று ‘பச்சன்’ வழக்கில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் வலியுறுத்தப்பட்ட நெறிமுறை மீறப்பட்டு பல வழக்குகளில் தவறாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது உண்மை. இருந்தவரை நான் ஒப்புக் கொள்கிறேன்.

•              கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டால் அதனடிப் படையிலேயே தூக்குத் தண்டனையை ரத்து செய்யலாம் என்ற கருத்தை நான் ஏற்கிறேன். உச்சநீதிமன்றமே, இந்த அடிப்படையில் தண்டனையை ரத்து செய்துள்ளது.

•              (பம்பாய் குண்டு வெடிப்பில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள) அஜ்மல் கசாப்பின் இளம் வயது அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக இழைத்த குற்றம் என்ற இரண்டு அடிப்படையில் அவரை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கலாம். ஆனாலும், நீதிபதியின் மனசாட்சிதான் இதில் தீர்ப்பாக இருக்க முடியும். வழக்கு விசாரணையில் இருக்கும்போது நான் இதில் உறுதியாக கருத்து கூறுவது நீதிமன்றத் தலையீடாகிவிடும்.

•              ‘தீவிரவாத இயக்கத்தோடு’ தொடர்புடையவர்கள் என்றும், அந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்கள் என்றும் அதன் காரணமாகவே ஏனையோருக்கு வழங்கப்படும் ‘தண்டனைக் குறைப்பை’ அனுமதிக்க முடியாது என்றும் கூறுவது சரியான கருத்து அல்ல. தண்டனைக் குறைப்புக்கு சட்டபூர்வமான விதிகள் ஏதும் கிடையாது. தண்டனைக் குறைப்பு கோருவோரின் நடத்தை, குற்றமிழைத்ததற்கான சூழ்நிலை, கடந்தகால குற்றச் செயல்கள், சமூக மற்றும் குடும்பப் பின்னணி போன்றவை கவனத்தில் எடுத்துத்தான் தண்டனைக் குறைப்பு வழங்கப்படுகிறது.

•              1967 ஆம் ஆண்டு 35வது சட்ட ஆணையத்தின் அறிக்கையில் இந்தியா போன்ற பெரிய பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் மரண தண்டனை தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் ஜெகமோகன் வழக்கில் மரணதண்டனை சட்டபூர்வமாக நிலைநிறுத்தப்பட்டது. 1980 இல் பச்சன்சிங் வழக்கில் அரிதிலும் அரிதான வழக்குக்கு மட்டுமே மரணதண்டனை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் அதே சட்ட ஆணையத்தின் பரிந்துரை தான் சுட்டிக்காட்டப்பட்டது. 1967க்குப் பிறகு உலகில் பல நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. மாறி வரும் சர்தேச சூழலைக் கருத்தில் கொண்டு இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

•              ஆயுள் தண்டனை என்றால் வாழ்நாள் இறுதி வரை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தண்டனைக்கான நடைமுறைகளை நீதிமன்றமே வகுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கெல்லாம் சட்டங்கள் கிடையாது. வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது, ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். சட்டத்தின் 72வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரிடமோ, 161வது பிரிவின் கீழ் மாநில ஆளுநரிடமோ தண்டனைக் குறைப்போ அல்லது பொது மன்னிப்பையோ கோரும் உரிமையை இதனால் ஒரு கைதி இழந்து விடுகிறார். இது 21வது அரசியல் சட்டப் பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது.

•   தூக்குத் தண்டனை வழங்கும் வழக்குகளை குறைந்தது மூன்று நீதிபதிகள் விசாரிக்க வேண்டும். அனைவரும் ஒருமித்து தீர்ப்பு வழங்கினால் மட்டுமே தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; தீர்ப்புகள் மாறுபட்டிருந்தால் தூக்குத் தண்டனை அளிக்கக் கூடாது என்பதே என் கருத்து.

•  காந்தி, தாகூர், அம்பேத்கர், நேரு போன்ற மகத்தான தலைவர்களின் கொள்கைகளை உண்மையாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் செழுமையடையும். அவர்களின் படங்களுக்கு மாலை அணிவிப்பதால் மட்டும பயனில்லை. காந்தியை தேசத் தந்தையாக நாம் ஏற்கிறோம். ஆனால், தூக்குத் தண்டனை தேசத் தந்தை கொள்கைக்கு எதிரானது அல்லவா?

Pin It

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வையுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை உறுதிப்படுத்திவிடும். ஏற்க மறுத்தால், குற்றவாளிக்கு சாதகமாக அமையும். இந்த நிலையில், வழக்கை சென்னை மாகாண உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகள் விசாரிக்கக்கூடிய மேல் அமர்வு விசாரணைக்கு அனுப்பியது. ‘மேல் அமர்வு’ ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்கலாம் என்று தீர்ப்பளித்தது.  இத் தீர்ப்பு பிரிட்டிஷ் இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி முழுதும் அமுலாக்கப்பட்டு, பல குற்றவாளி களில் தூக்கிலிடப்பட்டனர்.

1945 ஆம் ஆண்டு இதே போன்ற பிரச்சினை மீண்டும் சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தின் முன் வந்தது. இது புலுக்கரி கோட்டயா உள்ளிட்ட 7 பேருக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்காகும். மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை உயர்நீதிமன்றம் ‘அத்தப்பா கவுண்டன்’ வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் உறுதி செய்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வழக்கை லண்டனில் உள்ள ‘பிரிவிக் கவுன்சிலுக்கு’ மேல் முறையீடு செய்தனர். பிரிவி கவுன்சிலில் இடம் பெற்றிருந்த பிரிட்டிஷ் நீதிபதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்பது தவறு; சாட்சிகள் சட்டத்தின் 27 பிரிவுக்கு இது எதிரானது என்று அறிவித்தனர்.

பிரச்சினை இத்துடன் முடியவில்லை. ஏற்கனவே ‘கவுண்டன்’ வழக்கு அடிப்படையில் பலர் தூக்கி லிடப்பட்டு விட்டனர். இன்னும் ஏராளமானோர், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் சென்னை மாகாண ஆட்சி நிர்வாகம், ஆணையம் ஒன்றை அமைத்து, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் பரிசீலித்தது. அதனடிப்படையில் ‘அத்தப்பா கவுண்டன்’ தீர்ப்பு அடிப்படையில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைவருமே பிரிவி கவுன்சில் உத்தரவின்படி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டனர்.

இது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வழங்கப் பட்ட நீதியாகும். ஆனால், இந்திய பார்ப்பன ஆட்சியில் என்ன நடக்கிறது? ‘ராவ்ஜி’ குழுவினர் தவறான தீர்ப்பால் தூக்கிலிடப்பட்டும்கூட உச்சநீதி மன்றம் இந்த தவறான தீர்ப்பை முன்னுதாரணமாக 9 ஆண்டுகளாக பின்பற்றியுள்ளது. இதை உச்சநீதி மன்றமே ஒப்புக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி, கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவர்களுக்கும் ஏராளமான முறையீட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. ஆனால், எவரும் இது குறித்து கவலைப்படவே இல்லை. “தூக்கில் போடு; தூக்கில் போடு” என்ற வெறிக் கூச்சல்களே உரத்துக் கிளப்பிக் கொண்டிருந்தன.

தவறான தீர்ப்பின் அடிப்படையில் தூக்கில் போட்டுவிடக் கூடாது என்று இந்தியர்கள் மீது கவலை எடுத்துச் செயல்பட்டது 72 ஆண்டுக்கு முந் தைய பிரிட்டிஷ் ஆட்சி. ஆனால், சுதந்திர இந்தியா....?

தவறான தீர்ப்புகளுக்குப் பிறகும், ‘குடிமக்களை’ தூக்கிலிட்டுக் கொண்டே இருந்தது.

Pin It

நண்பர்களே, முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்குப் போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதியிருந்தது. மற்றும் சிலரைப் பற்றியெல்லாம் எழுதி இருந்தது.

நண்பர்களே என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய்ச் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ, தெய்வத் தன்மைப் பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதைவிட, கருதுவதைவிட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும் சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகிறேன்.

ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மாவோ, மற்றும் தெய்வத் தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார் என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ, எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பேரில் விக்கிரகம் செய்து பூஜை, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.

ஏனெனில், வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்கன், நாடார் என்று சொல்லப்பட்ட இழிகுல மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப்பட்டும் நாட்டுக்கோ அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன். அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றார்கள். சிலர் சோம்பேறிகளாய் வாழ்கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அதுபோலவே இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்த சுவாமிகள்; இராமலிங்க வள்ளலார் என்கிற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்குத் தெரியும். 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100க்கு ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில்  இருக்கும் காந்தி மகாத்மாவும், திருப்பாலக்குடி மஸ்தான் வணங்கப்படுவதும், அவதாரமாகவும் நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது மலம் முதல் சுவாசக்காற்று வரை மதிக்கப்படுவதும் எனக்குத் தெரியும்.

திரு.காந்தியைவிட மஸ்தான் சாயுபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு.காந்தியை மனிதராகக் கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்திற்கும், வயிற்று வளர்ப்புக்கும் திரு.காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடி சாயபுவை உண்மையிலேயே தெய்வத் தன்மை பொருந்தியவராக மதித்துப் பூஜித்து வருகிறார்கள். எங்கள் ஊரிலிருந்து அநேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த சாதியார் பிராமணர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால், இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கிறேன்.

திருப்பாலக்குடி சாயுபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால் அவரது எச்சில் கலந்த தண்ணீரைக் குடித்து லாபம் பெறலாம் என்று கருதி மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே திரு.காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்கு மாறாகக் கருப்பட வேண்டியதாயிற்று. ஆனால், என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடைய வேண்டாம். எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகுஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால் நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக இன்றைய கீதை என்பதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப் பின் முரண், மக்களை மக்கள் இழிவுபடுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்குகின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றோ எதற்காகச் சொன்னான் என்றோ உணர முடியாமல், பகவான் சொன்னார் என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லோருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக்கூடிய அளவுக்குப் புகழப்படுகின்றது. அதுபோலவேதான் புராணங்கள், சாத்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.

ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப்பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப் பெற வேண்டுமானால், நான் அயோக்கி யனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும் கருதும்படியாகப் பிரச்சாரம் செய்பவர்கள். உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.

தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் ‘இராமசாமிக் கழுதைக்கு செருப்படி’ என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் ‘இராமசாமி கழுதை செத்துப் போய்விட்டது’ என்றும், ‘இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி’ என்றும் எழுதி இருந்தது.

இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன்பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்பட வேண்டும். ஆகவே அதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளிலிருந்து ஒரு அளவுக்கு நான் வெற்றிப் பெற்றுவிட்டேன் என்பதை மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதி இருந்தாலும் நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனேயாவேன்.

- பெரியார், ‘குடிஅரசு’ 11.10.931

Pin It

உட்பிரிவுகள்