இடஒதுக்கீடு சரிதான். ஆனால் இன்னும் எவ்வளவு காலத்துக்கு என்று வினா எழுப்புவோருக்கு நாம் ஒரு வரலாற்றுச் செய்தியை நினைவூட்டுவோம்.

“அமெரிக்க அதிபர் அடிமை முறைக்காக மன்னிப்பு கோரியபோது “டைம்” பத்திரிகையில் (சூன் 30, 1977) ஜாக் ஈவெஸ்ட் என்ற கறுப்பினப் பத்திரிகையாளர் எழுதினார், வரலாற்றில் நடந்த தவறுக்காக மன்னிப்பு கோரினால் மட்டும் போதாது, இழப்பீடும் தரவேண்டும்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிந்ததும் விடுதலை செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் பதினாறு எக்டேர் நிலமும் ஒரு கோவேறுக் கழுதையும் தருவதாகக் கூறினார். எங்கே எனது 16 எக்டேர் நிலம்? நீங்கள் தர வேண்டியதைக் கணக்கிட்டால் முதல் அடிமை காலை எடுத்து வைத்தது 1619 ஆம் ஆண்டில். அடிமை முறை ஒழிக்கப்பட்டது 1863-ல். இதற்கிடையே 244 ஆண்டுகள் ஏறத்தாழ 10 மில்லியன் (ஒருகோடி) அடிமைகள் ஊதியமின்றி உழைத்திருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 25 சென்ட் கூலியாக வைத்தாலும்கூட அது 222 பில்லியன் ஆகிறது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி). இதற்கு 3 சதவீதம் வட்டி போட்டால், ஒழிக்கப்பட்டு 132 ஆண்டுகள் ஆகிறது. அவற்றுக்கும் கணக்குப் போட்டுப் பார்த்தால் 24 டிரில்லியன் டாலர் ஆகிறது. (ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் கோடி. ஒரு டாலர் மதிப்பு இன்று ரூ.48 என்றால் 24 x 1000 x 1000 x 1000 x 48 நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்) அடுத்த 244 ஆண்டுகளுக்கு அதைப் பிரித்துக் கொடுத்தாலும் தீராது என்றார். இதே அடிப்படையில் பார்த்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னும் எவ்வளவு நாள் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கல்வி, வேலை வாய்ப்பு, நிலம், வீடுகள், ஆலைகள் இதர சொத்துகள் இவற்றை எஸ்.சி./எஸ்.டி./எஸ்.டி./ஓ.சி./எம்.பி.சி./எப்.சி. என பாகப் பிரிவினை செய்தால் மேல்சாதியினர் இழப்பதற்கு அதிகமிருக்கும். மற்றவர்கள் பெறுவதற்கு அதிகமிருக்கும். இப்போது சொல்லுங்கள் இடஒதுக்கீடு எவ்வளவு நாட்கள் தேவை?