இந்தியத் துணைக்கண்டத்தில் மக்களிடையே மதவெறியெனும் நச்சு விதையைத் தூவிவரும் சங் பரிவாரங் களின் சதி வரலாறுகளை அம்பலப் படுத்தும் விதமாக கடந்த 30.01.2015 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்திலுள்ள பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ``காந்தியைப் படுகொலை செய்து கீதை உபதேசம் செய்யும் கோட்சே வகையறாக்களைக் கண் டித்து'' எனும் தலைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மதவெறிக்கெதிரான பாடல்களைத் தோழர். சமர்ப்பா பாடினார். தோழர்கள் ஆ.ஆனந்தன், கி.வேலன், கோ.சேனாபதி, கு. உதயகுமார் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு புதுவை மாநில திவிக செயலாளர் ஏ.சிவானந்தம் தலைமை வகித்தார். பார்ப்பனர்களின் சதிகளை அம்பலப்படுத்தும்விதமாக தொடக்க வுரையாற்றினார் புதுவை மாநிலத் தலைவர் லோகு.அய்யப்பன்.

அவரைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் காந்தியார் பார்ப்பனன் நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டதற்கான காரணங்களை விளக்கினார். "காந்தி எப்பொழுது பார்ப்பனர்களை மதப்பிரச்சனைகளை விட்டுவிட்டு மனிதர்களிடையே சமத்துவத்தைப் பேணச்சொன்னாரோ அப்பொழுதே ஆர்.எஸ்.எஸ் என்ற பார்ப்பனர்களின் அமைப்புத் தலைவர்களின் ஒருவரான சாவர்க்கரின் அறிவுறுத்தலின் பேரில் காந்தியைக் கொல்லச் சதிசெய்யத் தொடங்கிவிட்டனர்”. பார்ப்பனர்களால் வீரர் எனப் போற்றப்படும் இந்த சாவர்க்கர் ஆங்கிலேயரின் ஆட்சியில் ஐந்து முறை அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர், இவரைத்தான் வீரர் எனப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பனர்கள்” என்றார்.

மேலும் கூறுகையில், "தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு எதிராக டெல்லியில் கண்டன ஊர்வலம் நடத்தப் போவதாக காமராசரை மிரட்டியபோது "உங்களுக்குத் தைரியம் இருந்தால் உங்களின் ஊர்வலத்தைச் சென்னையில் நடத்திப் பாருங்கள்" என்றார் காமராசர். அவ்வாறு அவர் கூறியதற்குக் காரணம் பெரியாரின் கொள்கைகள் விதைக்கப்பட்டுள்ள தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் எதிர்ப்பு எடுபடாது என்ற காரணத்தினால்தான். அந்த அளவிற்கு பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் நாட்டில் இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பார்ப்பனர்கள் டெல்லியில் காமராசரின் வீட்டிற்குத் தீ வைத்து அவரைக் கொல்ல முயற்சி செய்தனர்”.

"மொகலாயர்கள் இந்தியாவில் படையெடுத்தனர் என்று கூறும் பார்ப்பனர்கள், ஆரியர்களின் படைபெடுப்பை மறைத்து ஆரியர் வருகை என்று வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தவறான கருத்துக்களைத் திணிக்கின்றனர். அதே போல் இராசீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் எனக் கூறும் பார்ப்பனர்கள், காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எனும் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். காந்தியைக் கொன்றது கோட்சே என்றால் இராசீவ் காந்தியைக் கொன்றது தானு என்றதான் கூறவேண்டும். ஆனால் பார்ப்பனர்கள் அவ்வாறு கூறுவதில்லை” எனக் குறிப்பிட்டார். தற்போது பார்ப்பனர்கள் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளின் போதுகூட தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை மிகத் தீவிரமாகப் பேசி வருகிறார்கள். இன்றைய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே விரைந்து இந்தித் திணிப்பு, வரலாற்றுத் திரிபுகள், சமஸ்கிருதத் திணிப்பைச் செய்துவிட வேண்டுமென்ற முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், நாம் அதைத் தடுத்தாக வேண்டும்” என்று கூறினார்.

சிறப்புரைக்கு முன்பாக கூட்டத்தின் தொடக்கத்தில் தோழமை அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். தோழர்களும் பொதுமக்களுமாக ஏறத்தாழ ஐந்நூறு பேர் இந்தக் கண்டனப் பொதுக்கூட்த்தில் கலந்துகொண்டனர். கூட்டத் தின் முடிவில் இளைஞரணிச் செயலாளர் தோழர். இரா.இராசா நன்றி கூறினார்.

Pin It