சென்னையில் பேனர் வைக்கத் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஆளும் கட்சியினருக்கு அது பொருந்தாது. அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வீட்டுத் திருமணத்துக்கு வைத்திருந்த பேனர் சரிந்து வேளச்சேரி பகுதியில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பொறியாளர் உயிர்ப் பலியாகிவிட்டார். ஸ்கூட்டரில் வந்த அந்தப் பெண் மீது பேனர் விழ, பெண் கீழே விழ, எப்போதும் ‘உயிர்க் கொல்லி’யாகப் பறக்கும் தண்ணீர் லாரி, அந்தப் பெண் மீது ஏறி உயிரிழந்து விட்டார். நெஞ்சை உலுக்கி விட்டது கொடூரமான இந்த இளம் பெண்ணின் மரணம்.

‘பேனரை’ அச்சடித்துக் கொடுத்த அச்சகத்துக்கு சீல் வைத்திருக்கிறது, தமிழகக் காவல் துறை. பேனரைத் தயாரித்துக் கொடுத்த அச்சக உரிமையாளருக்கு அது சாலையில் சட்ட விரோதமாக வைக்கப்பட இருக்கிறது என்பது எப்படி தெரியும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. துணி பேனரை அச்சடிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவரை தேடிப் பிடித்து கைது செய்யாமல் விட்டார்களே, என்று நிம்மதி அடைய வேண்டியதுதான். பேனர்கள் வைக்கக் கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள், வரவேற்க வேண்டியதுதான்.

ஆனால், ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது. பேனர்கள்கூட தற்காலிகமானவைதான். ஆனால் நிரந்தரமாக போக்குவரத்துக்கு இடையூறாக விபத்துகளை உருவாக்கும் நடைபாதைக் கோயில்களைக் கட்டி வைத்திருக்கிறார்களே! அவற்றை அப்புறப்படுத்த வேண்டாமா? இந்தக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆண்டுகள் பல ஓடி விட்டன. உச்சநீதி மன்றத்தை அவமதிப்பதுபோல் நடைபாதைக் கோயில்களை அகற்ற ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. அப்படியே ஒரு சில இடங்களில் அகற்ற முயற்சித்தாலும் அங்கே ‘இந்து மதக் காவலர்கள்’ என்ற போர்வையில் ‘ஜெய் ஸ்ரீராம்; ஜெய் காளி’ என்று கூச்சல் போட்டுக் கொண்டு ஒரு கும்பல் ஓடி வந்து கலவரம் செய்து தடுக்கிறது.

போக்குவரத்துக்கு இடையூறாக, நடைபாதையில் இந்து கோயில்களைக் கட்டலாம் என்று சாஸ்திரமோ ஆகமமோ கூறுகிறதா?

பேனர்களை வைக்கக் கூடாது என்று கட்சிக்காரர்களுக்கு அறிவுறுத்தும் தலைவர்கள் நடைபாதைக் கோயில்களையும் கட்டாதீர்கள்; அதற்கு வசூல் வேட்டை நடத்தாதீர்கள் என்று ஏன் அறிவுறுத்தக் கூடாது? பக்தி என்று வந்து விட்டால் சட்டம் கட்சிகளையும் வாயடைக்கச் செய்து விடுமா?

Pin It